
இனிய காலை வணக்கம் தோழமைகளே!!!
தாமதத்திற்கு மன்னிக்கவும்.. தலை வலி காரணமாக தாமதமாக தான் எழுந்தேன்.. அப்புறம் பையனை ஸ்கூல் அனுப்பிட்டு வந்து போஸ்ட் போடுறேன்..
கீதம் 4
தயாளனின் கேள்வி மற்றும் நவீனாவின் முணுமுணுப்பில் மகிழ் கொற்றவன் மனதினுள்,
‘சென்னை ஏர்போர்ட்டில் வச்சு இந்த பெயரை லயனி சொன்னாங்களே! அவங்க ஒருமையில் பேசினது போல தானே இருந்தது. ஆனா, நவீனா சார்னு சொல்றாங்க! எது எப்படியோ? இப்போ இவரை வேற சமாளிக்கனுமே! இந்த எஸ்.ஐ முன்னாடி எதையும் இவர் உளறிடக் கூடாதே! இவர் லயனிக்கு யாருனு வேற தெரியலையே!’ என்று சிறு பதற்றத்துடன் நினைத்தாலும், வெளியே நிர்மலமான முகத்துடன் தான் நின்று இருந்தான்.
நவீனாவின் அந்த அதிர்வையும், மகிழ் கொற்றவனின் அமைதியையும் குறித்துக் கொண்ட சுதீப், “இவர் யார் மிஸ்டர் மகிழ்?” என்று கேட்டான்.
அவன், “இவர் தயா..” என்று ஆரம்பிக்கும் போதே,
“நான் தயாளன்.. லயனிகாஸ்ரீயோட வெல்விஷர்.” என்று தயாளன் கூறி இருந்தான்.
சுதீப் அழுத்தமான பார்வை மற்றும் குரலில், “நான் அவரைக் கேட்டேன்.” என்றான்.
தயாளனோ, “அதனால் என்ன? என்னைப் பற்றி நான் சொல்லக் கூடாதா?” என்று கேட்டான்.
அவனை முறைத்து விட்டு, மகிழ் கொற்றவனிடம் திரும்பி, “இப்போ நீங்க வாயை திறக்கக் கூடாது” என்ற சுதீப், நவீனாவைப் பார்த்து, “நீங்களும் தான்.” என்றான்.
பின் தயாளனிடம் மகிழ் கொற்றவனை சுட்டிக் காட்டியபடி, “இவர் யார்?” என்று கேட்டான்.
“எதுக்கு கேட்கிறீங்க? இங்கே என்ன பிரச்சனைனே நீங்க இன்னும் சொல்லலை…” என்றவன் மகிழ் கொற்றவனைப் பார்த்து, “மகிழ், பாப்பா எங்க? இங்க என்ன தான் நடக்குது?” என்று கேட்டு இருந்தான்.
தயாளன் மகிழ் கொற்றவனிடம் வெகு இயல்பாகப் பேசியதை கேட்டு, மூவரும் அதிர்ந்து தான் நின்று இருந்தனர். மகிழ் கொற்றவன் மற்றும் சுதீப் தங்கள் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு நிற்க, நவீனாவின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.
மகிழ் கொற்றவன் மெல்லிய குரலில், “நவீனா” என்று, அவளை இயல்பிற்குக் கொண்டு வந்தான்.
சுதீப், தயாளனிடம் தனது விசாரணையை தொடங்கினான்.
“பாப்பா யாரு?”
“லயா.. ஐ மீன் லயனிகாஸ்ரீ.. நான் எப்போதுமே அப்படி தான் கூப்பிடுவேன்.”
“இவரை உங்களுக்கு தெரியுமா?”
“என்ன கேள்வி இது? இவரை எப்படி எனக்கு தெரியாம இருக்கும்?”
“நிஜமா தெரியுமா?”
“எனக்கு இவரை தெரிவதில், உங்களுக்கு ஏன் அதிர்ச்சி?”
“எனக்கு ஒன்றும் அதிர்ச்சி இல்லை.. ஜஸ்ட் ஒரு சந்தேகம்…”
“என்ன சந்தேகம்?”
“இவர் யார் என்கிறதில் தான்..”
“முதல்ல நீங்க இங்க என்ன செய்றீங்கனு சொல்லுங்க? என்ன பிரச்சனை?”
“சொல்றேன்.. அதுக்கு முன்னாடி மிஸ்டர் மகிழ் யாருனு நீங்க தெளிவா சொல்லுங்க.”
“ப்ச்.. பாப்பாவோட ஹஸ்பண்ட்.”
மீண்டும் மூவரும் அதிர்ந்தனர்.
நவீனா ‘எத்தனை முறை தான்டா அதிர்ச்சி அடையறது!’ என்பது போல் நின்று இருக்க, மற்ற இருவரும் அதிர்வை மறைத்தபடி தான் நின்று இருந்தனர்.
சுதீப், “அவர் சாப்ட்வேர் இன்ஜினியரா?” என…
“மகிழ் ஒரு டாக்டர்.. இவ்ளோ நேரம் மகிழ் கிட்ட பேசியதில் இருந்து, உங்களுக்கே தெரிந்து இருக்குமே!”
“எனக்கு தெரிந்தது, உங்களுக்கு தெரியுதானு செக் செய்தேன்.”
“இந்த கிராஸ்-செக் எதுக்கு? என்ன பிரச்சனை?”
சுதீப் பேசும் முன் மகிழ் கொற்றவன், “அதை நான் சொல்றேன் தயா.. காண்ஃபரென்ஸ் முடிச்சிட்டு நான் பார்ட்டியில் ஜாயின் செய்றதா இருந்த பிளான் உங்களுக்கே தெரியும். ஆனா, பிரேக் டைமில் லயனிக்கு நான் போன் போட்டப்ப, அவ எடுக்கலை.. சரி நேரில் பார்க்கலாம்னு நான் வந்தப்ப, நித்தின்னு ஒரு ரோக் லயனிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தப் பார்த்தான்.. அவன் கிட்ட இருந்து லயனியை காப்பாத்தி கூட்டிட்டு வந்து ரூமில் படுக்க வச்சு இருக்கிறேன்.
ஆனா, இப்போ உடனே அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது பெட்டர்..! சரியா அந்த நேரம் நவீனாவும் லயனியைப் பார்க்க வரவும், ஹெல்ப் பண்ண இருக்கச் சொன்னேன்.. உங்களை கூப்பிட்டு விசயத்தைச் சொல்றதுக்குள், எஸ்.ஐ சுதீப்… அந்த ரோக் நித்தின் கூட வந்து கதை சொல்றார். அதை என் வாயால் சொல்லக் கூட எனக்கு பிடிக்கல… நவீனா, ப்ளீஸ் நீங்க சொல்லுங்க.” என்று முகத்தை கோபத்திலும், அருவருப்பிலும் சுளித்தபடி முடித்தான்.
இவ்வளவு நேரம் ‘எப்படி இப்படி ஸ்கிரிப்ட்டே இல்லாம இயல்பா கதை சொல்றார்! இந்த தயா சாரும், அவர் ஸ்கிரிப்ட்டில் நடிக்கிறார்! எப்படி? மண்டை காயுதே!’ என்று மனதினுள் புலம்பியபடி நின்றிருந்த நவீனா, இப்பொழுது சிறு பயத்துடன் தயாளனைப் பார்த்தாள்.
தயாளனின் கோபத்தைப் பற்றி, முழுமையாக லயனிகாஸ்ரீயின் தோழிகள் அறிந்தவர்களாயிற்றே! அதுவும், லயனிகாஸ்ரீக்கு ஒன்று என்றால், அவனது கோபத்திற்கு எல்லையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
கோபத்தை அடக்கியபடி நின்றிருந்த தயாளனின், “ஹும்ம்” என்ற ஒற்றை வார்த்தையில்,
நவீனா, “அவன் லயாவை அவனோட காதலி, வருங்கால மனைவின்னு சொல்றான்.. அவனிடம் இருந்து மகிழ் லயாவை கடத்திட்டதா சொல்லி, மகிழை அர்ரெஸ்ட் செய்துட்டு லயாவை அவனிடம் ஒப்படைக்கணும்னு சொல்றான்.” என்று கடகடவென்று ஒப்பித்து இருந்தாள்.
தயாளன் அப்பொழுதும் அடக்கப்பட்ட கோபத்துடன் நிதானமான குரலில், “அதற்கு, இந்த எஸ்.ஐ சார் என்ன சொல்றார்?” என்று கேட்டான்.
தயாளன் அமைதியாக இருப்பது போல் வெளியே தெரிந்தாலும், உண்மையில் அப்படி இல்லை என்பதை மகிழ் கொற்றவன் கண்டு கொண்டான். இயல்பிலேயே பிறரை சரியாக எடை போடும் ஆற்றல் கொண்ட மகிழ் கொற்றவனுக்கு, அவனது மருத்துவப் படிப்பும் கை கொடுக்க, ஒருவரின் முகம் மற்றும் உடல்மொழியை வைத்தே, அவர்களின் எண்ணப் போக்கை சரியாக கணித்து விடுவான்.
அந்த வகையில் தயாளன் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்கிறான் என்றதோடு, அவன் லயனிகாஸ்ரீக்கு மிகவும் நெருக்கமானவன் என்பதையும், கண்டு கொண்டான்.
நவீனா, “அவர்.. ரெண்டு பக்கமும் விசாரிச்சிட்டு இருக்கார்.” என்றாள்.
தயாளன் மகிழ் கொற்றவனைப் பார்க்க, அவனோ மறுப்பாகத் தலை அசைத்தான்.
நவீனா மனதினுள், ‘அய்யோ, இந்த தயா சாரை பற்றி தெரியாம இவர் உண்மையை புட்டு புட்டு வைக்கிறாரே! லயாக்கு ஒன்னுனா, இந்த தயா சார் போலீஸ்னு கூட பார்க்காம கையை நீட்டினாலும் நீட்டிடுவாரே!’ என்று புலம்பினாள்.
மகிழ் கொற்றவன் மற்றும் தயாளனின் பார்வை பரிமாற்றத்தைப் பார்த்த சுதீப்பின் மனதினுள், எச்சரிக்கை மணி அடித்ததோடு, சிறு பயமும் எழுந்தது.
மகிழ், “இவர் என்னை விசாரிக்கிறார்.. அவன் எகிறும் போது அடக்குறார். ஆனா, அவனை இது வரை விசாரிக்கலை.. விசாரணை என்ன? அவனிடம் ஒரு கேள்வி கூட கேட்கல…” என்றான்.