
கீதம் 1
திருச்சியில் இருக்கும் அந்த புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர உணவு விடுதியில், ஒரு விழா கூடத்தில், இன்னும் இரு தினங்களில், திருமணம் செய்து கொள்ளப் போகும் காதல் ஜோடிகள், தங்கள் நண்பர்களுக்கு கேளிக்கை பிரம்மச்சாரி விருந்து (bachelor / spinster party) கொடுத்துக் கொண்டு இருந்தனர். அதிலும், மணமகன் தான், அந்த ஐந்து நட்சத்திர உணவு விடுதியின் உரிமையாளரின் மகன்.
மணப்பெண் ரிதன்யா, தனது நெருங்கிய தோழியான நவீனாவிடம், “லயாக்கு, போன் போட்டியா, இன்னும் காணும்?” என்று தனது மற்றொரு நெருங்கிய தோழியை பற்றிக் கேட்க,
“இப்போ வந்திருவா.. ப்ளைட் டிலேனு சொன்னா..! அதான் லேட். இங்கே நீ புக் செய்த ரூமில் தான், ரெப்ரெஷ் ஆகிட்டு இருக்கா.. எனி டைம் வந்துருவா.” என்று சொல்லிக் கொண்டிருந்த நவீனா, விரிந்த புன்னகையுடன், “இதோ வந்துட்டாளே!” என்றாள்.
ரிதன்யாவும் புன்னகையுடன் வாயிலை நோக்கித் திரும்ப, அங்கே வேலைபாடுகள் நிறைந்த ஆகாய வண்ண இளநீல நிறப் புடவையில், கழுத்து காது மற்றும் கரத்தில் ஒற்றை வைர நகைகளை அணிந்து, மெல்லிய ஒப்பனையுடன் தேவதையென விழா கூடத்தினுள் நுழைந்தாள், லயனிகாஸ்ரீ.
நடையில் சற்றே வேகத்தைக் கூட்டி, விரிந்த புன்னகையுடன் தோழிகளை நெருங்கிய லயனிகாஸ்ரீ, ரிதன்யாவை அணைத்து, “கங்க்ராட்ஸ் டியர்!” என்றாள்.
“தேங்க்ஸ் டார்லிங்!” என்ற ரிதன்யா, “நீ மாறவே இல்லைடி.” என்றாள்.
லயனிகாஸ்ரீ புருவம் சுருக்கிப் பார்க்க,
நவீனா மென்னகையுடன், “உன்னோட அவுட்ஃபிட் சொல்றா.” என்றாள்.
லயனிகாஸ்ரீ மெல்லிய முறைப்புடன், “ஏன் சரீயில்(saree) வந்தா என்ன? பார்ட்டினா, அங்கங்க காட்டுற மார்டன் ட்ரெஸ்ஸில் தான், வரணுமா என்ன?” என்றாள்.
இப்பொழுது தோழிகள் முறைத்தபடி, “நாங்க மட்டும் காட்டிட்டா இருக்கோம்!” என்று ரிதன்யாவும்,
“இவளோட லெகங்கா அண்ட் என்னோட பார்ட்டி வேர், டிசென்ட்டா இல்லையா?” என்று நவீனாவும் ஒன்றாக வினவினர்.
“ரெண்டு பேரும் இந்த ட்ரெஸ்ஸில் ப்ரிட்டியா இருக்குறீங்க.. அதுவும், ரிது பேபி.. ரதி மாதிரி ஜொலிக்கிறா…! உன் ஆள் கண்டிப்பா உன்னோட அழகில் மயங்கி இருப்பாரே! தண்ணி தெளிச்சு எழுப்பி தானே பார்ட்டியைத் தொடங்கி இருப்பீங்க!” என்று குறும்புப் புன்னகையுடன் கேட்டு கண் சிமிட்டினாள்.
ரிதன்யா, “ஹே! போடி.” என்று சிறு வெட்கத்துடன் அவளது புஜத்தில் தட்ட,
“உலக வரலாற்றில் முதல் முறையாக ரிது வெட்கப்படுறா!” என்று அதற்கும் கிண்டல் செய்தாள்.
“ஏய்!”
நவீனா, “அவளை ஓட்டினது போதும்.. பேச்சை மாத்தாம கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு.”
“ஹும்ம்.. அதான!”
“உங்க ரெண்டு பேரு ட்ரெஸ்ஸும் டிசென்ட் தான்.. ஆனா, இப்பவும் உன்னோட இடுப்பு, வயிறு லேசா தெரியுது தானே!” என்று ரிதன்யாவிடம் கூறியவள்… நவீனாவிடம், “உன்னோட ட்ரெஸ் லென்த் முட்டுக்கு கொஞ்சம் கீழ வரை மட்டுமே இருக்குது, ஸோ.. உட்காரும் போது, ரொம்பவே கவனமா இருக்கணும்.” என்றாள்.
பின் பொதுவாக, “ஸோ எந்த ஒரு மொமென்ட்டிலும் டிஸ்கம்போர்ட் ஆகாம இருக்க, சரீஸ் தான் சரி.” என்று லேசாக தோளை குலுக்கியபடி முடித்தாள்.
நவீனா, “கவனம் தேவை தான். பட்.. டிஸ்கம்போர்ட் இல்லை.. நீ சொல்ற சரீயை கூட ஹாட்டா கட்டுற ஆட்களும் இருக்காங்க.. அண்ட் தப்பா பார்க்கிறவன், எப்படி இருந்தாலும் பார்க்கத் தான் செய்வான். ஸோ.. நமக்குப் பிடித்த மாதிரி ட்ரெஸ் செய்றதில் தப்பில்லை.” என்றாள்.
லயனிகாஸ்ரீ, “எஸ்.. தப்பான எண்ணம் இருக்கிறவன், எப்படி இருந்தாலும் தப்பா தான் பார்ப்பான். அது அவனோட கேடு கெட்ட நேச்சர். ஆனா.. அதற்கான சந்தர்ப்பத்தை நாமளே தரக் கூடாதுனு தான் சொல்றேன். அண்ட் உங்க அவுட்ஃபிட்டை தப்புனு நான் சொல்லவே இல்லை. எனக்கு அது செட் ஆகாதுனு தான் சொல்றேன்.”
ரிதன்யா, “தாய் கிழவி, உன்னையும் தன்னைப் போலவே ஓல்ட் பேஷனா வளர்த்து வச்சு இருக்குது.” என்று சிறு முறைப்புடன் கூற,
லயனிகாஸ்ரீ கோப விழிகளுடன், “பாட்டியை, தப்பா பேசாத..” என்றாள்.
நவீனா, “பின்ன என்ன! ஃபாரின் ரிடர்ன் மாதிரியா பேசுற? சும்மா பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசுற!” என்றாள்.
“ஃபாரின் போயிட்டு வந்தா, நம்ம கலாச்சாரத்தை விட்டுட்டு அவங்க கலாச்சாரத்தை தலை மேல் தூக்கி வச்சுட்டு ஆடணுமா என்ன?” என்ற லயனிகாஸ்ரீ, உதட்டோர நக்கல் சிரிப்புடன், “அப்போ, ஒருத்தன் கூட லிவ்-இன் ரிலேஷனில் இருக்கவா?” என்று கேட்டாள்.
தோழிகள் கடுமையாக முறைத்தபடி, “நாங்க ஒன்னும் அப்படி சொல்லல..” என்றும், “அந்த எக்ஸ்ட்ரீமும் வேண்டாம், இந்த எக்ஸ்ட்ரீமும் வேணாம்.. நடுவில் இரு, எங்களை மாதிரி.” என்றும் கூறினர்.
லயனிகாஸ்ரீ மெல்லிய புன்னகையுடன், “சரீயில் வந்ததுக்கு இந்த அக்கபோரா! நீங்க நினைக்கிற அளவுக்கு, நான் பழைய பஞ்சாங்கம் இல்லை.”
“இஸ் இட்!” என்ற நவீனா, “அப்போ இன்னைக்கு பார்ட்டியில் டான்ஸ் ஆடுவியா?” என்று சவாலிடும் குரலில் கேட்டாள்.
அப்பொழுதும் வாடாத மெல்லிய புன்னகை உடன், “எனக்கும் பார்ட்டியில் ஜோடியா ஆடப் பிடிக்கும். ஆனா, அது என்னோட கணவனா இருக்கும் பட்சத்தில்!” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“உன்னை திருத்த முடியாது.”
“திருத்தும் அளவுக்கு, என் கிட்ட எந்த தவறும் இல்லை. ஓகே, ஓகே.. இந்த டிஸ்கசன் போதும். இது ரிதுவோட ஹாப்பி மொமென்ட்.. நோ மோர் ஆர்கியுமென்ட்ஸ்.” என்றாள்.
ரிதன்யா, “சரி இதை விடு.. இந்த ஒரு மாசமா, எங்கே இருந்தனு முதல்ல சொல்லு.” என்றாள் முறைப்புடன்.
நவீனாவும், “நீ படிக்க அப்ராட் போனதில் இருந்தே, நாம நேரில் சந்திச்சுக்கவே இல்லை. வீடியோ காலில் தான் பார்த்து பேசிக்கிட்டோம். நீ வந்த அப்புறமும் நீ ஸ்கூல், இவ கம்பெனி, நான் ஜுவெல்லரி ஷாப்னு அட்மினிஸ்ட்ரேஷனில் பிஸி ஆகிட்டோம். கூடுதலா, மேடம் லவ்வில் பிஸி..! ஸோ வீக்-எண்டு மீட் செய்ய பிளான் செய்தா, யாராவது ஒருத்தர் வர முடியாம தள்ளிப் போய்கிட்டே இருந்தது. எப்படியாவது டிரெக்டா மீட் செய்தே ஆகணும்னு நான் பிளான் செய்துட்டு இருந்தா, நீ சொல்லாம கொள்ளாம எஸ் ஆகிட்ட!”
“சொல்லிட்டு தானே போனேன்!”
இருவரும் கடுமையாக முறைத்தனர். ரிதன்யா கூடுதலாக, “வாய்ல நல்லா வருது.” என்று கூற, லயனிகாஸ்ரீ சிரித்தாள்.“சிரிக்காதடி…” என்று கடுப்புடன் கூறியவள், “திடீர்னு ஒரு நாள் காலையில் முழிச்சு பார்க்கிறச்ச, ‘ரெண்டு மாசத்துக்கு என்னை தேடாதீங்க. நான் சேஃபா தான் இருப்பேன். நானே உங்களை காண்டக்ட் செய்றேன்.. ஏதும் அவசரம்… இல்லை, முக்கியமான விஷயம்னா மட்டும்.. தயா சாரை காண்டக்ட் செய்யுங்க. அதுவும் மெயில் மூலமா மட்டும்’னு மொட்டையா ஒரு மெசேஜ். அதுக்கு அப்புறம் உன் போன் ஸ்விட்ச் ஆஃப்..! அந்த தாய் கிழவி.. சரி, கரஸ்(correspondent) பாட்டியை போய் பார்த்துக் கேட்டாலும், நீ சொன்னதையே தான் சொன்னாங்க. என்னோட மேரேஜ் பத்தி தயா சாருக்கு மெயில் செய்ததுக்கு, வாழ்த்தோடு.. 3 நாளைக்கு உனக்கும் தயா சாருக்கும் இங்கேயே ரெண்டு ரூம் போடச் சொல்லி, ரெண்டு வரியில் மெயில்..! அதுவும் தயா சார் கிட்ட இருந்து.. என்ன தான்டி நடக்குது? கரஸ் பாட்டி, இங்க தானே இருக்காங்க! அப்புறம் ஏன் உன்னோட வீட்டுக்குப் போகாம, இங்கே ரூம் போடச் சொன்ன? முதல்ல நீ எங்க போன? அப்படி என்ன வேலை?” என்று அக்கறை கலந்த கோபத்துடன் கேட்டாள்.