அனிச்சவிழி அழகினிலே காதல் – 2 (2)

உடலிற்காக அல்லாது அவருக்கே இப்போது சுத்தமான ஆக்சிஜன் தேவைபடும் போல, ஒரு மூச்சடைக்கும் சூழலில் சிக்கிய உணர்வில் கால்களை விரைவாக அவரின் காரை நோக்கி எட்டு போட்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்திலேயே மகளைப் பார்க்க அவள் அறைக்குள் சென்ற பூரணியை வெற்று அறையே வரவேற்றது.

அங்கு, அவர்கள் நால்வரும் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒரு பெரிய சட்டத்தில் அடைத்து படுக்கைக்கு மேல் மாட்டப்பட்டிருந்தது.

நிமிடங்கள் கடந்தும் அந்த படத்தையே பார்த்தவாறு நின்றிருந்தார் அன்னபூரணி.

நால்வரும் சிரித்திருந்தனர் தான். ஆனால் அதில் பூரணி துவாரகனை பார்த்தவாறு இருக்க, துவாரகனும் வேதாச்சலமும் மாதங்கியின் இருபக்க கைகளைப் பிடித்தபடி அவளின் செம்பழுப்பு நிற கண்களைப் பார்த்தவாறு சிரித்துக்கொண்டிருந்தனர்.

அந்த கண்கள் பூரணியை ஏதோ செய்ய, கண்களை மூடி  மொத்தையில் அமர்ந்துவிட்டார்.

அவர் இப்போது வாழும் இந்த வாழ்க்கைக்கு விதையிட்ட மனிதரின் கண்களை நினைவுருத்தியது மாதங்கியின் கண்கள்.

என்ன முயன்று அந்த நபரின் முகம் அவர் நெஞ்சில் இருந்து எப்போதும் அழியாமல் ஆழமாய் புதையுண்டு இருப்பதை எண்ணி கண்ணோரம் சிறிது கண்ணீர் வழிந்தது அன்னபூரணிக்கு.

மூக்கை உறிஞ்சிய படி கிச்சன் சென்றவர் பாலை சுண்ட காய்ச்சி, பாதம் ஏலக்காயைத் தட்டி போட்டு மாதங்கியை வெளிபுறம் தேடி வந்தார்.

அங்கு, வருடும் தென்றலின் தாலாட்டில் தலை தாழ்ந்து உறங்கும் மகளைப் பார்க்க, தாய் பாசம் அதீதமாய் சுரந்தது.

“மாது குட்டி” என்று அவளை மெல்ல உசுப்ப, அந்த சப்தத்திற்கே எழுந்துவிட்டாள் அவள்.

“தூக்கம் வந்தா ரூம்ல படுக்கலாம்ல மாது. இங்க காத்துல வந்து உட்காந்துட்டே தூங்கினா கழுத்து, முதுகு எல்லாம் வலிக்காத” என்று கேட்டவாறு, தன்மேல் இருந்த துப்பட்டாவை மகளின் முதுகை சுற்றி போர்த்தி விட்டார் பூரணி.

இயல்பான ஒரு செயல். ஆனால் அது ஏதோ செயற்கையாக தோன்ற ஆரம்பித்தது மாதங்கிக்கு.

அவளின் நினைப்பால் மனதில் ஒரு திடுக்கிடல். அதன் வெளிப்பாடு பூரணியை அதிர்ந்து விழித்தாள் அவள்.

“என்ன மாது” என்று வாஞ்சையாய் அவர் கேட்டாலும், அவள் அதிர்ந்த பார்வை அவரை சுட்டது.

“இல்ல.. அப்பா எங்க ம்மா?” என்று முயன்று பேச்சை அவள் மாற்ற, அதுவும் வேலை செய்தது தான். ஆனால் இருவருக்கும் அவளின் திடுக்கிடல் வலியை கொடுத்தது என்பதே உண்மை.

இரவு மணி எட்டரை. இன்னும் பரபரப்பாகவே காணப்பட்டது கோவை.

வேலை முடிந்து வீடு திரும்பும் பலர் ரோட்டோர ஹோட்டல்களிலும் தள்ளு வண்டிகளிலும் நின்றிருக்க, கூட்டம் அலை மோதியது.

அதில் ஒரு தெருவோர கடையருகே சென்று நின்றது வேதாச்சலத்தின் பலேனோ.

மிகுந்த கூட்டமாக இருந்த கடை, படு சுத்தமாகவே காட்சி தந்தது. வாகனங்கள் நிறுத்த இடமில்லாது ஒன்றிற்கு ஒன்று சிறிதும் இடைவேளை இன்றி பார்க் செய்யட்டு அதன் மீதே அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர் பலர்.

காளான், கோவையின் முக்கிய ஸ்ட்ரீட் புட். சுடச்சுட சிவப்பு கலரில் எண்ணெய் மின்ன அதை வாழையிலையில் வைத்து வெங்காயத்தைத் தூவியபடி  சாப்பிட அத்தனை அருமையாக இருக்கும். அதுவும், மழை பொழிந்த பின்னர், அது தேவாமிர்தம்!

அதற்கு அடுத்தபடியாக, பேல் பூரி, மசாலா பூரி, பானி பூரி, கச்சோரி, பேல் கட்லட், மிக்ஸ் காளான் பேல், மஸ்ரூம் பேல், குலோப் ஜாமூன் என்று விதவிதமான வட இந்திய சாட் ஐட்டங்கள் அங்கு மிக பிரசித்தம். அதை ரசித்து உண்ண வரும் மக்களும் மிக அதிகமானோரே.

இந்த வகை உணவுகள் வார நாட்களை காட்டிலும் விடுமுறை தினங்களில் இன்னுமே அதிக விலை போகும்.

மாதங்கிக்கு இந்த காளான் மீது ஒரு அலாதி ப்ரியம். நிறைய வெங்காயமும் கேரட்டும் கூட சில பூரிகளை உடைத்து போட்டும் தரும் போது, “பையா இன்னும் ஒரு ப்ளேட் தாங்க” என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாள்.

அவள் அதை சாப்பிடும் அழகை நினைத்தபடி, ஒரு சிறு புன்னகையுடன், “ஒரு பேல், ரெண்டு காளான், கச்சோரி நாலு பார்சல்” என்று ஆடர் சொல்லியபடி காரின் கதவை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் வேதாச்சலம்.

முழுதாய் அரைமணி நேரம் சென்றே அவர் கொடுத்த ஆடர் வர, வாங்கிய கையுடன் அவர் புறப்படும் போது,

“அங்கிள், கச்சோரிக்கு ஸ்வீட் சாஸ் வெச்சாங்களான்னு பார்த்துட்டு போங்க” என்ற குரல் கேட்டு திரும்பினார் வேதாச்சலம்.

கடையில் ஒளிர்ந்த குழல் விளக்கின் பயனால் மாநிறத்தில், நெடு நெடு உயரத்துடன், சற்று மிசை முளைக்கும் வயதில் இருந்த அந்த பையனை அவர் கேள்வியாக பார்க்க, “நீங்க கச்சோரி தான ஆடர் பண்ணிங்க?” என்று கொக்கியிட்டவனிடம், ஆம் என்று தலையசைத்தார்.

“அவங்க ஸ்வீட் சாஸ் தர மாட்டாங்க அங்கிள். நீங்க காரம் கம்மியா தானே ஆடர் சொன்னீங்க, அதான் சொன்னே. வாங்கிக்கோங்க” என்றவன் திரும்பி அவன் நண்பர்களிடம் சென்றுவிட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு, அவரும் அதை வாங்கியவுடன் அவனைத் தேட, சரியாக அவனும் சாப்பிட்ட தட்டுடன் அவரைக் கடந்து சென்றான்.

“தம்பி, உங்கள எங்கையோ பார்த்திருக்கேனே” என்று வேதாச்சலம் நியாபகப் படுத்த முயல, அவனோ அவரை சற்றும் கண்டுக்காமல் சென்றுவிட்டான்.

அவரை மதிக்காது சென்றவனின் செயல் அவருக்கு ஏதோ போல் ஆகிவிட, அதை புறம் தள்ளிவிட்டு கிளம்பினார் வேதாச்சலம்.

error: Content is protected !!