அத்தியாயம் - 02
“எதுக்கு சின்னு அழுத? சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் எமோஷனல் ஆகக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல” என்று மாதங்கியிடம் ஆதங்கமாய் கேட்டான், துவாரகேஷ்.
“இல்ல.. அந்த நேம் பார்த்த உடனே என்னமோ..” என்றவள் இழுக்க, “திடீர்னு என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியல துவா” என்றாள் பட்டென்று.
கண்களை இறுக்க மூடி, தலை சாய்ந்து அமர்ந்துவிட்டான் துவாரகேஷ்.
சிறுவயது முதல் அவன் சொன்னதைக் கேளாமல் மாதங்கியைத் தவிக்கவிட்ட பூரணியின் வெளிப்படை பாசத்தின் விளைவு, இன்று மாதங்கியை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது.
“சின்னு, அவங்களப் பத்தி தான் உனக்கு தெரியுமேடா! அவங்கள அவங்களே மாத்திக்க ட்ரை பண்ணுறாங்க..” என்று பேசிக்கொண்டிருந்தவனை இடை நிறுத்தி,
“என்ன துவா ட்ரை பண்ணுறாங்க? என் மேல புதுசா பாசம் வைக்கவா? அவங்க பொண்ணு தானே நானும்” என்று அழுகைக்கு மாறிவிட்ட குரலில் அவள் உடன் பிறந்தவனிடம் கேட்க, பதிலில்லை அவனிடம்.
“நீ போ. நான் அப்புறம் கால் பண்ணுறேன். ஐ வான்ட் டூ க்ரை” என்று விசும்பியவளை என்ன சொல்லி தேற்ற என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் அவன்.
“சின்னு, இது தான் லாஸ்ட்டா நீ அழனும். நடந்ததையே நினச்சுட்டு இருக்கக் கூடாது, புரியுதா? அப்படி ஆகிடுச்சே, இப்படி நடந்துருச்சேன்னு இனி நினைக்காம நல்லா சத்தமா அழுதுட்டு அப்பா கூட போய் படுத்து தூங்கு” என்று நிதானமாக தங்கைக்கு புரியவைத்தான் துவாரகேஷ்.
“ஆனா அம்மா அவங்க கூட படுக்க விடமாட்டாங்களே” என்று கேட்டவளிடம்,
“அவங்க சொன்னாங்களா என்கூட வந்து படுக்காதேன்னு?” என்று சற்று சுடாகவே கேட்டான்.
“போ.. நீ அவங்களுக்குத் தான் எப்பவும் சப்போர்ட் பண்ணுவே. நான் அவங்க ரூம் போனாவே போய் படுன்னு தான் சொல்லுவாங்க” என்று சிறுபிள்ளையாய் அவள் அவனிடம் புகார் வாசிக்க,
“நீ போய் முதல்ல சொல்லு. திரும்பவும் அவங்க ரூம் போன்னு சொன்னா, ‘இது என் அப்பாம்மா ரூம். நான் போக மாட்டேன்னு’ திரும்ப சொல்லிட்டு அங்கையே படு. சரியா?”
“சரி” என்று இழுத்தவள்,
கண்ணைத் துடைத்துக்கொண்டு, “துவா, ஐ மிஸ் யூ அண்ட் லவ் யூ” என்று சொல்லிவிட்டு தொலைபேசியை அணைத்தால் மாதங்கி.
“லவ் யூ டூ மை பேபி” என்று தொலைபேசியில் தெரிந்த தங்கையின் முகத்தைப் பார்த்தபடி சொன்னவனுக்கு, பெருமூச்சே வந்தது.
சில மன புழுக்கங்களுக்கு நல்ல ஒரு நீண்ட அழுகை கூட மருந்தாய் மாறும் என்று நினைத்துக்கொண்டே துவாரகேஷும் படுத்துவிட்டான்.
சிந்தனைகள் வலை போல் பின்னி பிணைந்து அவன் மூளையை மூட்டை கட்டியிருக்க, அன்னபூரணியை நினைத்த மாத்திரம் ஏதோ ஒரு பெயரிட முடியாத ஒரு கோபமும் அவனுள் மூண்டது.
இங்கு மெல்ல அழுதவளுக்கு பாரம் சற்று குறைந்த உணர்வாக தோன்ற, முக கழுவிய கையுடன் தந்தையிடம் செல்ல முனைந்தவளைத் தடுத்தது அந்த நினைப்பு.
‘இத்தன வருஷம் அப்பா உன் கூட தான இருந்தார். அவங்களுக்கும் கொஞ்சம் பர்சனல் ஸ்பேஸ் கொடுக்கன்னும் மாது. தனியா இருந்துக்க பழகிக்கோ இனி’ என்று அவள் மனதே அவளுக்கு கடிவாளமிட, வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருந்த சிறு தோட்டம் போன்ற இடத்திற்கு சென்றாள் மாதங்கி.
பௌர்ணமி இரவு. மழை பெய்த காரணத்தால் தெளிந்து, மேகங்கள் சற்று தள்ளித் தள்ளி மெல்ல ஊர்ந்து செல்வதைப் பார்த்தவாறு இருந்தவளின் நினைவில் வந்து நின்றான் அவன்.
பனியும் கூதல் காற்றும் அவளை சுற்றி வளைத்திருக்க, முயன்று அவனைப் புறம் தள்ள பார்த்தாள் பெண்ணவள்.
வரட்சியான ஒரு சிரிப்புடன் மனதில் பதிந்த அந்த பதின்பருவன் நினைப்புடன் சிந்தனைகளை புறம் தள்ளி நிலவிடமும் இயற்கையிடமும் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு அந்த நாற்காலியிலேயே தூங்கியும் போனால் மாதங்கி.
“ஆரம்பத்தில இருந்து நான் சொல்லிட்டே இருந்தேனா பூரணி. இப்போ பார், மாது எவ்வளவு ஏங்கி போய் இருக்கான்னு. ஒரு கண்ணுல வெண்ணையும் இன்னென்னுல சுண்ணாம்பும் வெச்சு பார்த்திருக்க” என்று படபடவென்று பொரிந்தார் வேதாச்சலம்.
“நீங்களும் இப்படி புரியாம பேசுறீங்களே”
“என்னடி புரியலை எனக்கு? அப்போ துவாரா மட்டும் தான உன் கண்ணுக்கு தெரிஞ்சான். அப்புறம் எதுக்கு இரண்டாவதா மாதுவ பெத்து, அந்த புள்ளைய இப்படி கஷ்டப்படுத்தின? எல்லாம் என்னைய சொல்லனும், ஆசை படுறியேன்னு நீ பண்ணதுக்கு எல்லாம் தலயாட்டி ஆட்டி தான் இப்போ என் பொண்ணு ஒரு சின்ன விஷயத்த கூட எவ்வளவு பெரிசா எடுத்துட்டு அழறா?
என்ன தான் நான் அப்பாவா அவளுக்கு பாசத்த அள்ளிக் கொடுத்தாலும் அவளுக்கு அம்மாவா உன் தேவை இருக்கும் போதும் சரி, பாசம் காட்டுறதுலையும் சரி நீ எதையாவது உருப்படியா செஞ்சியா?” என்று அவர் பேசிக்கொண்டே போக,
பூரணியும் பொங்கிவிட்டார்.
“நீ இருக்கேன்னு தான வேதா அவள விட்டுட்டு வந்தேன். அப்போவே என்னை நாலு அடி போட்டு கூடவே இருக்க வெச்சிருக்கலாமே” என்று கதறியவரை வெறுமையாக பார்த்திருந்தார், வேதாச்சலம்.
சொல்லியிருக்கலாம் தான். பார்த்து இருந்திருக்கலாம் தான். ஏன் பூரணியே மாதங்கியை கூடாவே வைத்திருக்கலாம் தான். எல்லாம் இருக்கலாம் என்ற காலம் கடந்த பின் அவர்கள் நினைத்த நினைப்புகளை அப்போதே அவளுடன் யாராவது இருந்திருக்கலாம் என்று இவர்கள் நினைத்த போது, அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
“எல்லாம் என் தப்பு தான். என் பொண்ணு அழறா வேதா, என்னால அழறா. நீ இருக்க, நீ பார்த்துக்குவேன்னு நானும் முட்டாள் மாதிரி எனக்கான அடையாளத்த தேடிட்டே இருந்து அம்மான்ற அங்கீகாரத்த கொடுத்த பிள்ளைய விட்டுட்டேனே.
என் துவாரா கூட என்கிட்ட இப்போலாம் பேசுறதில்ல வேதா. என் புள்ளைங்கள நான் மிஸ் பண்ணிட்டேன் வேதா” என்று நெஞ்சை பிடித்த படி அழுதவரை பார்க்கப் பார்க்க, வேதாச்சலத்திற்கும் என்னவோ போல் ஆனாது.
இருந்தும் மனதில் பூரணியின் மேல் இருந்த கோபம் மட்டும் அப்படியே தான் இருந்தது. அதில் ஒரு சதவீதம் கூட குறைந்திருக்கவில்லை இத்தனை காலத்தில்.
பூரணியின் அழுகை கூட, அறையில் இருந்து வெளியேறினார் வேதாச்சலம்.
புதியதாய் அடித்த டிஸ்டம்பரின் மணம் அவருக்கு ஏதோ செய்ய, வெளிபுற காற்றை சுவாசிக்க அவரின் நுரையீரல் உந்தியது.