அனிச்சவிழி அழகினிலே காதல் – 1 (2)

அவனிற்கு அடுத்து, மாதங்கி. தந்தையும் அண்ணனும் போட்டி போட்டு தரும் அட்வைஸ் மற்றும் அன்பு மழையில் தனியாக நனையும் பதினெட்டு வயது யுவதி. தாயிடம் எப்போதும் உரிமை சண்டையிடும் சராசரி டேட்ஸ் லிட்டில் பிரின்ஸ்.

இரண்டு மாதத்திற்கு முன்பு தான் திருச்சியில் இருந்து மாற்றாகி கோவை வந்திருந்தார் வேதாச்சலம், அவருடன் மாதங்கியும்.

பெரும்பாலும் இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்களை இந்த இருபத்தி ஐந்து வருடத்தில் பணி நிமித்தமாக வேலையுடன் சேர்ந்து சுற்றியும் பார்த்துவிட்டனர் வேதாச்சலத்தின் குடும்பத்தார்.

அதில் ஒருவித சலிப்பும் தட்ட, துவாரகேஷ், மாதாங்கி இடைநிலை பள்ளியில் இருந்த போதே தன் சொந்த ஊரான கோவையில் தான் படித்த படிப்பிற்கு தக்க அண்ணனின் உதவியுடம் போட்டீக்கை துவங்கிவிட்டார் அன்னபூரணி.

அப்படியே வருடங்கள் செல்ல, வேதாச்சலம் மாதங்கியுடனும் ஊரூராக மாற்றல் வந்தால் சென்றுவிடவும், அன்னபூரணி துவாரகேஷுடனும் கோவையில் சிறிது காலமும் கணவருடம் சிறிது காலம் என்று சூழல, அச்சூழல் இப்போது இங்கு கோவையில் வந்து மையம் கொண்டிருக்கிறது.

‘துவாரமாது இல்லம்’ என்ற தங்க நிற பெயர் பலகை தந்தையும் மகளையும் வரவேற்றது.

லில்லிப்பூ மாலையிட்டு அதில் இருந்த சந்தன குங்கும பொட்டு சொல்லியது அப்பலகை இப்போது தான் வைக்கப்பட்டது என்று.

“வாவ்” என்று கூவலுடன் அதை மாதங்கி தடவி பார்க்க, அவள் கைவிரல் ரேகை அப்பலகையில் ஒட்டியது.

“அப்பா, நேம் ரொம்ப சூப்பரா செலக்ட் பண்ணியிருக்காங்க உங்க செல்லக்கிளி” என்று அத்தனை சந்தோஷமாய் சிரித்த மகளின் முகத்தைப் பார்த்த வேதாச்சலத்திற்கும் அம்மகிழ்வு கடத்தப்பட்டது.

நேற்று வரை  ‘A 204’ என்ற அடையாளத்துடன் இருந்த வீட்டிற்கு ‘துவாரகேஷ் இல்லம்’ அல்லது ‘பூரணி இல்லம்’ என்பதே பெயராக வைக்கப்படும் என்ற நினைத்தவளின் நினைப்புகளுக்கு அப்பார்பட்ட பெயரை அல்லவா அவள் அன்னை வைத்துள்ளார். அந்த ஆச்சரிய அதிசயம் அவள் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது!

மிட்டாய் கேட்டு அழுத குழந்தைக்கு ஒன்றிற்கு பதில் இரண்டாய் கிடைத்த மகிழ்வு அவளிடம்.

அவள் மனதோரம் இருந்த ஒருவித ஏக்கத்தின் வெளிபாடு என்றும் சொல்லலாம். அதை சரியாய் வேதாச்சலமும் புரிந்து கொண்டார்.

அவளின் முக உணர்வுகளை பார்த்தபடியே வந்த அன்னபூரணியின் மனதில் ஒருவித வலி‌! வலி என்பதைவிட தாயாய் அவரின் உள்ளம் பேரடி அடிவாங்கியது என்றே சொல்ல வேண்டும்.

“வாசல்லையே நின்னு அப்படி என்ன பேச்சு உங்களுக்கு? அட்மிஷன் கிடைச்சுதா மாது?” என்று கேள்விகளால் அவர்களை நிறைத்துக்கொண்டே முன்னேறி வந்தார், அன்னபூரணி.

“ம்மா, சூப்பரா இருக்கு நேம் செலக்சன்” என்று மீண்டும் அன்னையிடம் கண்களில் மெல்லிய நீர் படலத்துடன் முகம் விகசிக்க அவள் சொல்ல, முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார் பூரணி.

“பிடிச்சிருக்கா மாது. நீங்க போன உடனே வந்துருச்சா, அதான் கையோட மாட்டிட்டேன்” என்று மகளை பார்த்தவாறே பூரணி சொல்ல,

“நீங்க துவாரா நேம் தான் வைப்பீங்கன்னு நினச்சேன். பட் இந்த நேம் புதுசா, யுனிக்கா நல்லா இருக்கு ம்மா” என்றாள் அந்த பலகையை தடவியபடி.

ஒரு மென்பூ பூரணியின் இதயத்தில் மொட்டு விட, அதை பெரிதாக வளர்த்தி திருமாலின் பாதத்தில் சேர்க்கும் ஆர்வம் பூத்தது அவரிடம்.

அவருக்கு நேர் எதிராக இருந்தது வேதாச்சலத்தின் மனநிலை. அத்தனை கோபம் மனைவியின் மீது. ஒரு சிறு செயலிற்கே மகள் இவ்வளவு கலங்குகிறாள் என்றால் அவள் மன ஏக்கத்தின் அளவு அவரை சுட்டது.

மனைவியை முறைத்தாலும் வெளிப்படை கோபத்தைக் காட்ட முடியவில்லை அவரால்‌. ‘பார்த்தியா’ என்று கண்களால் அவர் பூரணியை குற்றம் சாட்ட, இன்னும் அது பூரணிக்கு வலித்து.

“சரி உள்ள போங்க. காஃபி கொண்டா பூரணி” என்று மகளை தோளோடு அணைந்தவாறு வீட்டின் உள் சென்றார் வேதாச்சலம்.

“ப்பா, ஆம் ஓகே” என்று சிரித்த மகளின் மனநிலை புரிந்த போது, “அப்பா இருக்கேன்டா தங்கம்” என்றார் இதமாக.

அன்னையின் பாசம் தன் மீது துளியேனும் திரும்பாதா என்ற சிறு வயது ஏக்கபாசம் இப்போதும் மிச்ச சொச்சம் இருந்தாலும் தந்தையின் பரிபூரண பாச அன்பு என்னவோ அவளை முழுமையாக திளைக்க விடவில்லை.

இருந்தும், வேதாச்சலம் தான் அவளிற்கு அனைத்தும்.

தாய் – மகளுக்கு ஒருவகை மெல்லிய உறவு போராட்டம் என்றே சொல்ல வேண்டும்.

வேதாச்சலத்தின் வேலை தொட்டு, பூரணியின் தனி தொழில், மாதங்கியின் பள்ளி வாழ்க்கை, துவாரகேஷின் சில பல பேச்சுக்கள் தந்த தாக்கம் மனதால் அவள் பூரணியை தேடிய போது கிடைக்காத அவரின் முழு பாசம் இப்போது கிடைத்தும் பயனில்லாது தூரத்தில் அவளை அறியாது தள்ளி வைத்திருக்கிறாள், மாதங்கி.

“அம்மா, எனக்கும் காஃபி தாங்க” என்று கேட்டு வேதாச்சலத்தின் தோள் சாய்ந்தவள், கலைப்பு மிகுதியில் உறங்கியும் போயிருந்தால்.

நீண்ட நாட்களுக்கு பின்பான ஒரு மகிழ்வு அவள் மனதை கவ்வியதின் விளைவு.

சிறிதாக வாய் திறந்து தூங்கும் மகளையும் அவளை தோள் சாய்த்து தலை கோதிவிடும் கணவனையும் பார்த்த பூரணிக்கு அவர் இழந்த இழப்பின் விளைவு பெரிதாகவே தெரிந்தது.

மகளின் கலங்கிய முகம் பூரணிக்கு மீண்டும் அழுகையை தந்தது. கண்ணீரைத் துடைத்தபடியே இருவருக்கும் காஃபியை தயாரித்தவர் கூடம் நோக்கி செல்ல, இருவரும் ஒருவருக்கு ஒருவர் தான் மட்டுமே ஆதரவு என்ற நிலையில் துயில் கொண்டிருந்தனர்.

வெடித்து வரவிருந்த கேவலை கட்டுப்படுத்திக் கொண்டு வேதாச்சலத்தின் அருகே கூடு சேர்ந்த பறவையாய் இருவரையும் அணைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார், அன்னபூரணி.

error: Content is protected !!