அத்தியாயம் – 01
நவம்பர் கடைசியில் இருக்கும் குளிருடன் சேர்த்து வருணனும் தன் ஆதிக்கத்தை கோவை மாநகரத்தில் செலுத்திக் கொண்டிருந்த நேரம்.
சூரியனின் தரிசணத்திற்காக காத்திருந்த பலரும் தங்களை மறந்த நிலையில் மழையவனை ரசித்துக்கொண்டும், சிலர் சபித்துக்கொண்டும் இருந்த பின்மாலை பொழுது.
மேகங்கள் சூழ வெளிச்சத்தில் சிறிதே கருமையை கலந்துவிட்டவாறு இருந்த வானிலையில், மழையவனின் அபிஷேகத்திலும் மின்னலின் ஜொலிப்பினாலும் மின்னியது அந்த கல்லூரி.
சற்று நகரத்திற்கு ஒதுக்குப் புறமாக இருந்தாலும் நல்ல ஒரு பெரும் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது அந்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
சுற்றிலும் மரங்களுக்கு பதிலாக உயர் கான்கிரீட் கட்டிடங்களும் சில பெயர் நுழையா குட்டை செடி வகைகள் சூழ் கண்ணாடி முலாமில் மின்னியது அந்த கல்லூரி.
அதில் மழையும் சேர்ந்து கொள்ள, ‘ஒரு மரங்கூடவாடா விட்டு வைக்காம எல்லாத்தையும் வெட்டி வைப்பீங்க’ என்று மனப் பொறுமலுடன் மழையில் நனையாதவாறு ஆஃபிஸ் ரூமில் நின்றிருந்தார், வேதாச்சலம்.
முகம் அப்பட்ட கோபத்தைக் காட்ட, அவர் அருகே அவரின் மறு பிரதியாய் நின்றிருந்தாள் அவரின் மகள்.
மழை, அச்சொல்லே அத்தனை ஆனந்தத்தை தரும் அல்லவா. அந்த ஆனந்த களிப்புடன் தான் அவளும் நின்றிருந்தாள். ஆனால் மனதில் தந்தையின் கோபத்தை எண்ணியபடி தன் தோகையை விரிக்காமல் கண்களை மட்டும் அகல விரித்து அந்த மழையழகனை ரசித்தபடி நின்றிருந்தாள்.
அளவான உயரத்தில் நன்கு பூசிய உடல்வாகுடன், அவளின் கோதுமை நிறத்திற்கு ஏற்ப ஆரஞ்ச் மற்றம் பச்சை நிறம் கலந்த ஒரு குர்த்தியும் ஜெகின்ஸ்ஸும் அணிந்திருந்தவள் கண்கள் மட்டும் செம்பழுப்பு நிறத்தில் பளீரிட்டது.
அவளை கடந்து செல்லும் யாவரும் அவளுக்காக இல்லாமல் அவள் விழியழகிற்காகவே திரும்பி பார்த்து செல்வர்.
வேதாச்சலத்திற்கு அந்த வரிசை கட்டிடங்களை பார்க்க பார்க்க ஆதங்கமும் கோபமும் சரி விகிதமாய் பொங்கி வழிந்தது.
வேதாச்சலம், ஒரு இயற்கை ஆர்வலர். ஆர்வலர் என்பதை விட காப்பாளர் என்பதே பொருந்தும். அதிலும் மரம், செடிகள் என்ற வந்தால் தன் பிள்ளைகளுக்கு நிகராக அதை அவர் கருதுவார்.
இதுவரை எத்தனையோ மரங்கள் வெட்டப்படுவதை அவர் தடுத்திருந்தாலும், எங்காவது மொட்டையாய் நிலம் காட்சி தந்தால் தன்னால் ஆன சில மரக்கன்றுகளை நட்டு அந்த நிலத்தின் தன்மையை மாற்றும் பணியும் மேற்கொள்வார்.
சுற்றிலும் பச்சை நிறமாக மரங்கள் தழைந்து நிற்க வேண்டும் என்று எண்ணுபவரின் மகள் இப்போது பெயருக்கு விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மரங்கள் இருக்கும் ஒரு கல்லூரியில் படிப்பாதா என்ற கேள்வி குடைய ஆரம்பித்திருந்தது அவர் மனதை.
“மாது, நாம வேற காலேஜ் பார்க்கலாமா?” என்று அவர் மகளின் புறம் திரும்ப,
தந்தையின் கண்களை பார்த்தவாறே, “இதே இருக்கட்டும் ப்பா. வீட்டுக்கு பக்கம், நீங்களே வரலேனா கூட நா தனியா வர பயப்பட வேண்டாம். கோச்சிங் கூட பெட்டர்ன்னு தான் ப்ரவீண் சொன்னார். செகண்ட் செம் வேற தொடங்கப்போகுது. வேற எங்கையும் எடுக்க மாட்டாங்க ப்பா” என்று நிதானமாக வேதாச்சலத்திற்கு விளக்கம் கொடுத்து அவரை அவள் பார்த்திருக்க,
ஒரு பெரு மூச்சுடன், “சரி, ஆனா இங்க அம்பியன்ஸ் தான் எனக்கு பிடிக்கல. நல்ல கோச் பண்ணா போதும்” என்று அரை மனதாக பட்டென்று உரைத்தவரை சிரிப்புடன் பார்த்திருந்தாள், மாதங்கி.
எப்படி பேசினால் வேதாச்சலம் தன் முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற வித்தையை கற்றிருந்தவள், இப்போது அதில் முதல்முறையாக தேர்ச்சியும் பெற்றிருக்கிறாள் அல்லவா. அந்த சந்தோஷம் முகத்தில்.
“தேங்க்ஸ் ப்பா” என்றவள் மீண்டும் மழையைப் பார்க்க, அது சற்று தன் ஆதிக்கத்தைக் குறைத்து சிறு தூரலாய் நிலத்தை நனைத்தது.
கல்லூரி முடிந்து சிலர் தங்கள் வாகனங்கள் எடுத்துக்கொண்டு மிக மிக மெதுவாக இயக்கியபடி வெளியேறிக் கொண்டிருந்தனர். கட்டுப்பாடுகள் அதிகம் போலும்!
திரும்பி ஒருமுறை கல்லூரியை சுற்றியது வேதாச்சலத்தின் கண்கள். இப்போது ஒரு தந்தையாய் அதன் தரத்தையும் பாதுகாப்பு விசயத்தை கருத்தில் கொண்டு ஸ்கேன் செய்தது அவரின் கண்கள்.
ஆட்கள் நடமாட்டமும் மூன்றாம் கண்ணின் சர்வைலன்ஸ்ஸும் நிரம்பவே இருக்க, வேதாச்சலம் பின்பானதின் இருப்பில் திருப்திக் கொண்டு மாதங்கியுடன் வெளியேறினார்.
வாயிலில் கூட பத்திற்கும் மேற்பட்ட இருபாலர் செக்யூரிட்டிகள் இருந்தது அவருக்கு பிடித்திருந்தது.
பதினைந்து நிமிட பயணத்தில் அவர்கள் வசிக்கும் கேட்டர்ட் கம்யூனிட்டியின் உள்ளே நுழைந்தது வேதாசலத்தின் நீல நிற பலேனோ (Baleno).
‘Sunshine Villas’ என்ற பெரும் ஆர்ச் அவர்களை மிகுந்த பாதுகாப்புடன் வரவேற்றது. புதியதாய் கட்டபட்டடிருந்த அந்த கம்யூனிட்டியில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னின் தனி வீட்டை வடிவமைத்திருந்தார் மாதங்கியின் தாய், அன்னபூரணி.
வேதாச்சலம், ஐம்பதை கடந்த ஒரு மத்திய வங்கி மேலாளர். விவசாய குடும்பத்தை சார்ந்தவர் ஆதலால் ஊரில் நடக்கும் விவசாய குத்தகை பணம், கடை வாடகை பணம் என்று அதுவும் ஒருபுறம் வரவாய் வந்துவிடும். டென்னிஸ் வெறியர்.
அன்னபூரணி, ‘துவாரா’ஸ் நாட்’ என்ற ஃபேஷன் லைன்னை கோவையை மையமாக கொண்டு நடத்தி வருகிறார். அதை தவிர தையல், ஆரி, எம்ப்ராய்டரி போன்ற வகுப்புகளும் அதற்கென்றே தனியே ஒரு கடையும் வைத்து நடத்துகிறார்.
துவாரகேஷ் மற்றும் மாதங்கி என்ற இரு பிள்ளைகள் இருந்தாலும் அன்னபூரணிக்கு துவாரகேஷே பிரதானம்.
மாதங்கியை விட துவாரகேஷிடம் தான் அவருக்கு ஒட்டுதல் கூட. இருபத்தி இரண்டு வயதில் மணிபாலில் மேனேஜ்மென்ட் படிப்பு படிக்கிறான்.