சைதன்யாவும் பிரதீஷூம் கிளம்பியதும் பரமசிவம் வீட்டிலிருந்த உறவினர்கள் அவரவர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள். உறவினர்களில் பலர் உள்ளூர் என்பதால் அவர்கள் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள். வெளியூரில் இருப்பவர்கள் உள்ளூரிலிருக்கும் மற்ற உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள். மணமக்கள் வரும் போது வருகிறோம் என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.
அருணாவிற்கு இரண்டு அக்காக்கள். அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சதாசிவம், அருணா மற்றும் வினய் மூவரும் கிளம்பிவிட்டார்கள்.
அனைவரும் கிளம்பிய பின் வீடே வெறிச்சோடி இருந்தது. பரமசிவமும் திலகாவும் அவர்களின் அறையில் தஞ்சம் புக, அனாஹா அவளின் அறைக்குச் சென்று விட்டாள். படுக்கையில் வந்து விழுந்த அனாஹாவின் நினைவுகள் திலகாவிடம் சண்டைப் போட்ட நாளிற்குச் சென்றது. அதாவது திலகா, சதாசிவம், அருணா மற்றும் பரமசிவத்திடம் பிரதீஷை பற்றிப் பேசிய இரண்டு நாட்களுக்கு முன்பு.
அன்று அனாஹா எப்போதும் போல் திலகாவிற்குச் சமையலில் உதவிச் செய்து விட்டு அவளது கைப்பேசியை எடுத்துக் கொண்டு உட்கார அப்போது அவளிற்கு அழைப்பு வந்தது. அதைப் பார்த்ததும் வேகமாக மாடிக்குச் செல்ல, இதைப் பார்த்த திலகா அவளின் முக பாவனையில் சந்தேகம் வந்துப் பின்னால் செல்ல, அவள் பேசியதைக் கேட்டு விட்டார். அதில் அவரிற்கு அத்தனை அதிர்ச்சி. இதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை அவர். அப்படியே வந்தது போல் அமைதியாகக் கீழே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் பேசிவிட்டு கீழே வந்த அனாஹா பார்த்தது கோபத்துடன் அமர்ந்திருந்த திலகாவைத் தான். அவளிற்குப் புரியவில்லை ஏன் அவர் அப்படி அமர்ந்திருக்கிறார் என்று. அதனால் அவரிடம் சென்று,”அம்மா என்னாச்சு ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? அதுவும் கோபமா இருக்கிற மாதிரி இருக்கு.” என்று கேட்டாள்.
அதில் வேகமாக அவர் எழுந்து அவளை அடிக்கப் போய் விட, அவளின் அரண்ட முகத்தைப் பார்த்து உயர்த்திய கையை அப்படியே இறக்கி, அவளின் இரு கைகளையும் பற்றி ஒரு உலுக்கு உலுக்கி,”எப்போதிருந்து இது நடந்துட்டு இருக்கு?” என்று கேட்டார்.
அவரின் கேள்வி அவளிற்குப் புரியவில்லை. அதனால்,”அம்மா வலிக்குது. முதல்ல புரியுற மாதிரி பேசுங்க.” என்று கூறி அவரின் கையைத் தன் புறத்திலிருந்து எடுத்து விடு முயல அவளால் முடியவில்லை.
“அம்மா.”
“ஏய் நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு. யார்கிட்ட இப்போ பேசிட்டு இருந்த?” என்று கேட்க, அவளிற்கு அதிர்ச்சி எல்லாம் ஒரு நிமிடம் தான்.
அடுத்த நிமிடமே,”நான் பேசிட்டு இருந்தது கார்த்திக்கோட. நானும் கார்த்திக்கும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். இப்போ ஆரம்பிச்சது இல்லை. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா லவ் பண்றோம். ஏதோ என்னோட நல்ல நேரம் என் ஜாதகத்துல இப்போ கல்யாணம் பண்ணக் கூடாதுனு இருந்தது. அதனால நீங்க அதைப் பத்திப் பேசலை. நானும் என் காதலை உங்ககிட்ட சொல்லலை. ஆனால் இப்போ நான் சொல்றதுக்கு வேலை வைக்காமல் நீங்களே கண்டுபிடிச்சுட்டீங்க. எனக்கு வேலை மிச்சம்.” என்று நிமிர்வுடன் அவரது முகத்தைப் பார்த்துக் கூற, அத்தனை ஆத்திரம் வந்தது அவரிற்கு.
“உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என்கிட்டயே நீ காதலிக்கிறதை சொல்லுவ? அப்படி என்ன உனக்கு நாங்க குறை வைச்சோம்? உன்னோட அப்பாவுக்கு இது தெரிஞ்சா அவரால தாங்கிக்கவே முடியாது. அய்யோ இப்படி எங்கே தலைல மண்ணை வாரிப் போட்டுட்டியே!!”” என்று தலையில் அடித்துக் கொண்டு அவர் கத்த அத்தனை எரிச்சல் வந்தது அனாஹாவிற்கு.
“அம்மா இப்போ என்ன நடந்துச்சுனு இப்படிப் புவம்புறீங்க? நீங்க பண்றது உங்களுக்கே அந்நியாயமா தெரியலையா? அதுவும் தலையில் அடுச்சுக்கிட்டு அழுகிற அளவுக்கு இங்கே என்ன நடந்துச்சு?” என்று அவள் கேட்க, திலகாவிற்கு அத்தனைக் கோபம்.
“ஏய் வாயை மூடு. எங்கே வீட்டுல எதுவுமே என்னால பேச முடியாது. நாங்க விருப்பப்பட்டு ஏதாவது சாக்லேட் கேட்டால் கூடா அடி விழுகும் அப்படி என்ன உனக்கு ஆசை நாங்க வாங்கிக் கொடுக்க மாட்டாமோனு. அதனாலே என் பிள்ளைங்களை அப்படி வளர்க்கக் கூடாது. அவங்க என்ன ஆசைப்பட்டாலும் செய்யனும், எதுக்கும் உன்னை அடிக்கக் கூடாதுனு அவ்ளோ ஆசையா உன்னை வளர்த்தேன். ஆனால் நீ உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்த எங்களை எப்படி ஏமாத்த மனசு வந்துச்சு? இப்பவும் கொஞ்சம் கூடக் குற்றவுணர்ச்சி இல்லாமல் என் முகத்தைப் பார்க்க எப்படி மனசு வந்துச்சு உனக்கு?” என்று அத்தனை ஆத்திரத்துடன் கேட்டார்.
“ப்ச் மா நான் ஒன்னும் கார்த்திக்கை இழுத்துட்டு ஓடிப் போகலை. உங்ககிட்ட சொல்லி முறையா உங்க எல்லாரோட ஆசீர்வாதத்தோட எனக்குக் கல்யாணம் நடக்கனும்னு அதுவும் கார்த்திக்கோடனு அத்தனை ஆசையா நானும் தான் இருக்கேன். ஆனால் நீங்க என்னனா ஏதோ நான் செய்யக் கூடாததைச் செஞ்ச மாதிரி இப்படிப் பேசுறீங்க? இதனால் தான் அப்பா இருக்கும் போது விஷயத்தைச் சொல்லனும்னு நினைச்சேன். ஆனால் இப்படி நீங்க முன்னாடியே கண்டுபிடிப்பீங்கனு கனவா கண்டேன்.”
“வாயை மூடு அனு. இப்போ கூட உனக்கு நீ பண்ணது தப்பா தெரியலை. நான் பேசுறது தான் தப்பா தெரியுது அப்படித் தான? அப்படி என்ன பெத்தவங்களை விட இப்போ வந்த அவன் முக்கியமா போயிட்டான்? இதுக்கு நான் எந்தக் காலத்துலயும் ஒதுக்க மாட்டேன்.”
“அம்மா நான் கார்த்திக் பத்தி இதுவரைக்கும் எதுவும் சொல்லலை. அப்படி இருக்கும் போது எதுவும் கேட்காமல் வேண்டாம்னு சொல்றது டூ மச் மா.”
“என்ன டி டூ மச்? அதான் நல்லா தெரியுதே அந்தப் பையன் லட்சணம்!! காலேஜ் படிக்கும் போது என்ன லவ்? இதுலயே தெரியலை!!”
“அம்மா அப்படிப் பார்த்தால் நானும் தான் லவ் பண்ணேன். அப்போ நானும் தப்பான பொண்ணுன்னு அர்த்தமா?”
“ஏய் அடிச்சு பல்லைத் தட்டிக் கைல கொடுத்துடுவேன்.”
“ப்ச் அம்மா இப்போ உங்க பிரச்சனை என்ன? அதை முதல்ல சொல்லுங்க.”
“என்ன டி எதுவும் தெரியாத மாதிரி கேட்கிற? நீ லவ் பண்றது தான் பிரச்சனை. அவன் என்ன குலமோ கோத்திரமோ!!! சீ.” என்று அவர் அசுயையுடன் கூற, அத்தனைக் கோபமாகப் பார்த்தாள் அனாஹா.
“ப்ச் அம்மா உனக்கு நான் லவ் பண்ணது பிரச்சனைனு சொன்ன நான் ஏத்துக்கிறேன். அதுக்காக இப்படிப் பேசாத? அது என்ன குலம் கோத்திரம்னு இப்படிப் பேசுற? இப்படி எல்லாம் பேசாத அம்மா.”
“அப்படித் தான் பேசுவேன். என்ன டீ பண்ணுவ? எனக்கு இந்தக் கலப்புத் திருமணம் எல்லாம் செட்டாகுது. நான் அதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்.”
“அப்போ அது தான் உன் பிரச்சனையா!! நல்லா கேட்டுக்கோ கார்த்திக்கும் நம்ம கேஸ்ட் தான் அம்மா. இப்போ உனக்குப் பிரச்சனை இல்லையே.” என்று கேட்க, அவரிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இப்படி ஒரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை.
அமைதியாக அவர் இருக்க, அனாஹாவிற்குத் தன் அம்மாவின் எண்ணம் புரிந்தது. அத்தனை உவப்பாக இல்லை. ஆனால் அதைக் கேட்கும் நேரம் இதுவல்ல. அவளிற்குத் தன் காரியம் முடிய வேண்டும். சுயநலம் தான் ஆனால் வேறு வழி தெரியவில்லை.
“ஆமாம் அம்மா. கார்த்திக் நம்ம கேஸ்ட் தான்.” என்று அழுத்தமாகக் கூறினாள்.
“ஓ அந்தப் பையனும் நம்ம ஜாதி தானா? சரி அவங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க? இதே ஊர் தானா?”
“இல்லை அம்மா. அவங்க சொந்த ஊர் கடலூர். ஆனால் படிச்சது இங்கே தான். படிச்சுட்டு கேம்பஸ்ல வேலைக் கிடைச்சு அவர் சென்னைல வேலைப் பார்த்தார் மா.”
“வேலைப் பார்த்தார்னா? இப்போ வேலைப் பார்க்கலையா?”
“இல்லை மா. ஒரு ஆறு மாசமா வேலைல இல்லை. TNPSC GROUP 1 எக்ஸாம் எழுதிட்டு ரிசலட்காக வெயிட்டிங்.”
“ஓ! சரி அவங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க?”
“அப்பா போலிஸ் மா. இப்போ தான் எஸ்.ஐ ஆ ப்ரோமோஷன் கிடைச்சு செங்கல்பட்டுல வேலைப் பார்க்கிறார். அம்மா ஹவுஸ் வைஃப். அப்புறம் கார்த்திக்கோட கூடப் பிறந்தவங்க இரண்டு பேர். தம்பி சென்னைல எஸ்.பி.ஐ.பேங்க்ல கிளார்க்கா வேலைப் பார்க்கிறார். அப்புறம் தங்கச்சி பி.எஸ்.சி கடைசி வருஷம் படிக்கிறா.” என்று கூற, திலகா முகத்தைச் சுளித்தார்.
“என்ன இப்படிச் சொல்ற? அப்போ சொத்துனு எதுவுமில்லையா?” என்று கேட்க, அவரைப் பார்த்து முறைத்தாள் அனாஹா.
“என்ன முறைப்பு? சொத்து இல்லாமல் எப்படி உன்னால சந்தோஷமா வாழ முடியும்? இங்கே எவ்ளோ வசதியா நீ வாழ்ந்துட்டு இருக்கனு தெரியும் தான? அப்புறம் எப்படி ஒன்னுமில்லாதவங்க வீட்டுல வாழுவ? அதெல்லாம் முடியாது. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.”
“நீ ஒத்துக்க வேண்டாம். நான் அப்பா வரட்டும் அவர்கிட்ட பேசிக்கிறேன்.”
“அப்பாகிட்ட தான தாராளமாக நீ சொல்லிக்கோ. ஆனால் என்னை மீறி எதுவும் இங்கே நடக்காது. உன் அப்பாவும் என் பேச்சை மீற மாட்டார்.” என்று திலகா கூற, அதிர்ச்சியாகப் பார்த்தாள் அனாஹா.
திலகா கூறியது அத்தனை உண்மை. அவர் கூறிய பேச்சிற்கு மறு பேச்சு பேசமாட்டார் பரமசிவம். அப்படியே பேசினாலும் இறுதியில் திலகா பேச்சு தான் எடுபடும். அதனால் தான் அதிர்ச்சி அனாஹாவிற்கு.
அவள் அப்படியே நிற்க, அனாஹாவின் கைப்பேசியை வாங்கிய திலகா,”உன் ஃபோன் இனிமேல் என்கிட்டயே இருக்கட்டும்.” என்று கூறி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.
அதன் பிறகு தான் முழு மூச்சில் மாப்பிள்ளைப் பார்க்க நினைத்தார் திலகா. அப்படி அடுத்த நாள் கோவிலிற்குச் சென்ற போது ராதாவைப் பார்த்து பிரதீஷ் பற்றித் தெரிந்து கொண்டார். அதைப் பரமசிவம்,சதாசிவம் மற்றும் அருணாவை வர வைத்து பிரதீஷ் பற்றிக் கூறினார். அவர் நினைத்தது எல்லாம் சரியாக நடந்தது. சதாசிவமும் அருணாவும் கோவிலில் சந்தித்து கதிரைவேலிடம் மன்னிப்புக் கேட்க, பெண் பார்க்கும் வைபவத்திற்கு அடித்தளம் அமைத்தது.
கதிரைவேல் குடும்பம் தங்களது வீட்டிற்கு நாளைக்கு வரப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து திலகா அனாஹாவிடம் வந்தார்.
“இங்கே பார் அனு நாளைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வராங்க. அம்மா சொல்றதைக் கேள் உன்னோட வாழ்க்கை நல்லபடியா இருக்கும். நான் பாரத்துக்கிற பையனுக்கு அத்தனைச் சொத்து இருக்கு. நீ சந்தோஷமா இருப்ப. என் பேச்சை கேட்டு நாளைக்கு நல்லபடியா நடந்துக்கோ. புரிஞ்சு நடப்பனு நம்புறேன்.” என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
அனாஹாவிற்கு அத்தனைக் கஷ்டமாக இருந்தது. அவளது கைப்பேசியை அன்று திலகாவிற்குத் தெரியாமல் எடுக்கப் போகும் போது அவர் பார்த்துவிட அதில் இருவருக்குள்ளும் சிறு தள்ளுமுள்ளு நடைபெற்றதில் கைப்பேசி கீழே விழுந்து உடைந்து விட்டது. அதனால் அவளால் கார்த்திக்கிடமும் பேச முடியவில்லை. அவன் அதனால் கண்டிப்பாகப் பதறி இருப்பான் என்று புரிந்தது. ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சரி நாளை பெண் பார்க்கும் வருபவரிடம் பேசி இத்திருமணத்தை நிறுத்த வேண்டுமென முடிவெடுத்து அமைதியாக இருந்தாள்.
அதே போல் பிரதீஷூம் பெண் பார்க்க என்று வந்தான். அவனிடம் எப்படித் தனியாகப் பேச என்று அவள் யோசிக்கும் போதே கதிரைவேலே அப்படி ஓர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க சந்தோஷமாகச் சென்றாள். இருந்தாலும் மனம் பதறிக் கொண்டே தான் இருந்தது. ஒரு வேளை அவன் இதற்குச் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வதென அவளிற்குப் புரியவில்லை. படி ஏறிச் செல்லும் வரை இருக்கும் அத்தனைக் கடவுளையும் வேண்டிக் கொண்டே தான் சென்றாள்.
அருணா அவர்கள் இருவரையும் விட்டுட்டு அங்கிருந்து செல்ல, இருவரும் எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றிருந்தார்கள் யார் முதலில் பேச என்று தெரியாமல். பின்னர் பிரதீஷே பேச்சை ஆரம்பித்தான்,”ஹாய் ஐ ஆம் பிரதீஷ்.” என்று கூறி அவளை முன் கையை நீட்டினான்.
“ஹலோ, நான் அனாஹா.” என்று கூறி அவனிடம் கையைக் கொடுத்தாள்.
“நான் முதல்ல சாரி சொல்லிடுறேன் அனாஹா.” என்ற பீடிகையுடன் அவன் ஆரம்பிக்க, அவனைப் புரியாமல் பார்த்தாள். தான் கேட்க வேண்டிய மன்னிப்பை இவன் ஏன் கேட்கிறான் என்று பார்த்தாள்.
அவனே தொடர்ந்தான்,”லுக் அனு நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்.” என்று அவன் கூறவும் அவள் கண்களில் வெளிச்சம் பரவியது. இதைச் சுத்தமாக அவள் எதிர்பார்க்கவில்லை.
கையைக் கட்டிக் கொண்டு,”ஓ அப்போ எதுக்கு என்னைப் பெண் பார்க்க வந்தீங்க?” என்று கேட்டாள்.
“ப்ச் சிட்டுவேஷன் அப்படி. எப்பவும் முன்னாடியே வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆனால் இப்போ நான் டூர் போயிருந்த கேப்ல எங்கே வீட்டுல இப்படிப் பண்ணிட்டாங்க. அதுவும் உங்க ஃபேமிலினு தெரிஞ்சுருந்தா கண்டிப்பா வந்திருக்கவே மாட்டான். ஆனால் இப்போ என்ன செய்யனு சுத்தமா புரியலை.” என்று வருத்தத்துடன் கூறினான் பிரதீஷ்.
“ஏன் எங்கே ஃபேமிலிக்கு என்ன குறை? அதென்ன எங்கே ஃபேமிலினு தெரிஞ்சுருந்தா வந்திருக்க மாட்டேன்னு என்கிட்டேயே சொல்றீங்க?”
“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க அனாஹா. நான் லவ் பண்ற பொண்ணு ஃபேமிலியை நான் ஏன் குறை சொல்ல போறேன்.” என்று கேட்க, அனாஹாவிற்கு அதிர்ச்சி. அவளிற்கு சைதன்யா ஞாபகம் வரவில்லை. அவளைப் பொறுத்தவரை அவள் சிறு பெண். அதனால் தன்னைத் தான் சொல்கிறானோ என்றும் தோன்ற, ஆனால் முதலில் கூறிய மன்னிப்பும் அவள் ஞாபகத்திற்கு வர,”நீங்க என்ன சொல்றீங்க? லவ் பண்ற பொண்ணோட ஃபேமிலியா? யாரை நீங்க லவ் பண்றீங்க?” என்று கேட்டாள்.
“சைதன்யா.” என்று மட்டும் கூற, அத்தனை அதிர்ச்சி அவளிற்கு.
கோபமாக அவனைப் பார்த்து,”ஹலோ, சைதன்யா சின்ன பொண்ணு. அவளை லவ் பண்றீங்கனு என்கிட்டயே சொல்றீங்க? எப்படி சைதன்யா உங்க லவ்வ அக்செப்ட் பண்ணா? என்கிட்ட அவள் எதையும் மறைக்க மாட்டாள். அதை விடக் கண்டிப்பா சித்திக்கிட்ட சொல்லிருப்பா. ஒழுங்கா உண்மையைச் சொல்லுங்க.” என்றாள்.
“ப்ச் அனு நான் தான் லவ் பண்றேன்னு சொன்னேன். சைத்னயாவிற்கு என்னை யார்னே தெரியாது.” என்று கூறினான்.
“அப்போ!!”
“எஸ் இட்ஸ் ஒன் சைடட். பட் அதை டபுள் சைடட் நான் மாத்த நினைக்கிறதுக்கு முன்னாடி ப்ச் அவளோட அக்காவையே பொண்ணு பார்க்க வர வேண்டிய சூழ்நிலை. அதுவும் இங்கே வந்து சையுவைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கே தெரிஞ்சது இது அவளோட வீடுனு. இப்போ என்ன பண்றதுனு சுத்தமா புரியலை. அக்காவைப் பார்க்க வந்துட்டு தங்கச்சியைப் பிடிக்குதுனு சொல்றது எவ்ளோ மடத்தனம்னு எனக்குப் புரியுது. அட் த சேம் டைம் என்னால உங்களையும் மேரேஜ் பண்ண முடியாது. இப்போ என்ன பண்றதுனு சுத்தமா புரியலை.” அத்தனை வருத்தத்துடன் கூறினான் பிரதீஷ்.
“சரி அப்போ வீட்டுல எனக்குப் பிடிக்கலைனு சொல்லிடுறேன்.”
“ப்ச் அப்போவும் பிரச்சனை தாங்க.”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா ஏற்கனவே நம்ம இரண்டு குடும்பத்துக்கும் வாய்க்கா தகராறு இருந்தது. இப்போ நீங்க வேணாம்னு சொன்னா கண்டிப்பா எங்கே அப்பாவுக்குக் கோபம் வரும். கூப்பிட்டு வச்சு அவமானபடுத்திறதா நினைப்பார்.”
“சரி அப்போ நீங்களே தன்யாவை லவ் பண்றதை சொல்லிடுங்க.”
“அதுவும் தப்புங்க. அப்போ உங்க லைஃப் என்ன ஆகுறது? அக்காவைப் பார்க்க வந்து தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு வெளில தெரிஞ்சா அது உங்களுக்குக் கஷ்டம்.” என்று கூறினான் பிரதீஷ். அதில் அவன் மேல் நல்ல எண்ணம் வந்தது.
“டோன்ட் வொர்ரி பிரதீஷ். எனக்கு எந்தக் கஷ்டமும் வராது பிகாஸ் நானும் ஒருத்தரை லவ் பண்றேன்.” என்று அவள் சிரித்துக் கொண்டே முதலில் திகைத்த பிரதீஷ் பின்னர் அவளை முறைத்துப் பார்த்து அங்கிருந்து கிளம்பினான்.