அத்தியாயம் 7

திருமணம் இனிதாக முடிந்ததில் அங்கிருந்தவர்களில் சிலருக்குச் சந்தோஷம், சிலருக்கு வருத்தம் அதில் சிலரோ பெண் மாறியது நினைத்து அதை எப்படி எடுத்துக் கொள்வது எனப் புரியாமல் அமைதியாக இருந்தனர். அதிலும் சிலர் என்று சொல்வதை விட பிரதீஷின் அத்தை வசந்தியும் அவரது மகள் ப்ரீத்தியும் அத்தனைக் கோபத்துடனும் வருத்தத்துடனும் இருந்தனர். அதை வெளிப்படையாக அவர்களால் காட்ட முடியாது. அப்படிக் காட்டினால் தியாகராஜன் அவர்களைக் கொன்றே விடுவார். அத்தனைப் பிரியம் தங்கை மற்றும் அவரது குடும்பம் மேல். வசந்தியின் ஆசையே இரு பெண்ணையும் ஒரே குடும்பத்தில் அதிலும் வசதியாக இருக்கும் தன் நாத்தனாரின் குடும்பத்திலே கொடுக்க வேண்டும். அதனால் தான் சிறு பிள்ளையிலிருந்தே தன் பெண்களுக்குச் சொல்லி வளர்த்தார். முதல் பெண் பிருந்தா திருமணத்தில் அனைத்தும் நல்லபடியாக நடந்ததால் ப்ரீத்தியின் திருமணத்திலும் அனைத்தும் சுபமாக முடிந்துவிடும் என்று அத்தனை நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் நடந்தது என்னவோ முற்றிலும் எதிர்பாராதது. அதனால் தான் முகத்தைத் தூக்கி வைத்து உட்கார்ந்திருந்தார். அவரின் பக்கத்திலே கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தாள் ப்ரீத்தி. அவளால் வாய்விட்டு அழ முடியாது. எப்போது பிரதீஷ் அவளைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறினானே அன்றே அவனை மறந்துவிட வேண்டுமென அவளது தந்தைக் கட்டளையாகக் கூறிவிட்டார். இப்போதும் அவள் அவனை நினைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தால் அவளது தந்தை வயதுப் பெண் என்றும் பாராமல் கை நீட்டி விடுவார். அதற்காக அவர் கொடுமைக்கார தந்தை இல்லை. அதே போல் ஒழுக்கம் வேண்டும். அதில் சிறு பிழை கண்டால் கூட அவர் தொலைத்து விடுவார். அதனால் தான் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். பெண் மாறிய போது கூட அத்தனைக் கெஞ்சினாள் பிரதீஷிடம். அவனோ கிளிப்பிள்ளை போல் முடியாது என்று கூறியதையே கூற, அவளிற்கு அத்தனை வேதனையாக இருந்தது. ஆனால் அவனால் இஷ்டமில்லாமல் கண்டிப்பாக அவளைத் திருமணம் செய்ய முடியாது என்பதால் அவனது முடிவில் உறுதியாக இருந்தான்.

மேடையில் அத்தனைச் சந்தோஷத்துடன் நின்றிருந்த பிரதீஷையும் ஏதோ திருவிழாவில் தொலைந்து போன பிள்ளை போல நின்றிருந்த சைதன்தாவையும் பார்க்கப் பார்க்க அவளிற்கு வயிற் எரிந்தது.

“அம்மா இதெல்லாம் என்னால பார்க்க முடியாது. ப்ளீஸ் மா வீட்டுக்குப் போகலாம்.” என்று கண்ணில் நீருடன் தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு ப்ரீத்தி கூறினாள்.

“இப்போ போக முடியாது ப்ரீத்தி. அப்புறம் உங்க அப்பா நம்மளை தொலைச்சு கட்டிடுவார். பல்லைக் கடிச்சுட்டு கொஞ்சம் அமைதியா இரு டா மா.” என்று கூறி அவளின் கையைப் பிடித்துத் தட்டிக் கொடுத்தார் வசந்தி. அதைத் தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியாதே. அவர் கூறியதிலிருந்த உண்மைச் சுட அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

தாலி கட்டி முடித்த கையோடு அக்னியைச் சுற்றி வந்தார்கள் மணமக்கள். பின்னர் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கக் கூறினார் ஐயர். முதலில் காசியம்மாளின் காலில் விழுக,”இரண்டு பேரும் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும். சந்தோஷமா இருங்க கண்ணுகளா.” என்று கூறி இருவரின் கண்ணத்தையும் தடவி தன் வாயில் வைத்து முத்தம் வைத்தார்.

பின்னர் கதிரைவேல்-சுமித்ரா, பரமசிவம்-திலகா மற்றும் சதாசிவம்-அருணா என அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். அருணாவின் காலில் விழும் போது இருவரையும் தூக்கிவிட்டு,”மாப்பிள்ளை அன்னைக்கு நீங்க ஏதோ சொன்னீங்க. நானும் சரின்னு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். ஆனால் அவளுக்கு இன்னும் படிப்பு முடியலை மாப்பிள்ளை. அது எப்பவும் நின்ற கூடாது. அப்புறம் அவளோட முயற்சி எல்லாம் வீணா போயிடும். கண்டிப்பா அவள் சி.ஏ. ஆகனும் மாப்பிள்ளை.” என்று பிரீஷிடம் மன்றாடினார்.

“அத்தை நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன் கண்டிப்பா உங்க பொண்ணு என்னோட மனைவி சி.ஏ. ஆவா. நீங்க கவலைப்படாதீங்க. நான் சொன்ன வாக்கைக் கண்டிப்பா காப்பாத்துவேன்.” என்று கூற, கண்ணீருடன் தலையசைத்தார்.

“ரொம்ப செல்லமா வளர்த்துட்டா அருணா. வீட்டுல இதுவரைக்கும் எந்த வேலையும் அவளை அருணா செய்ய விட்டது இல்லை மாப்பிள்ளை. ஆனால் நாம சொன்னால் அதை அப்படியே செஞ்சுடுவா மாப்பிள்ளை. அவள் ஏதாவது தப்புப் பண்ணா எடுத்துச் சொல்லுங்க மாப்பிள்ளை, கேட்டுக்குவா.” என்று சதாசிவம் உணர்ச்சிவசப்பட்டுப் பேச அவரின் கைகளை அழுத்தி அவரிற்குக் கண்களால் கவலைப்படாதீர்கள் என்றான்.

அனாஹா, சைதன்யாவின் பக்கத்தில் வந்து,”தன்யா அக்கா மேல உனக்கு எதுவும் கோபமா?” என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

“அச்சோ அக்கா அதெல்லாம் இல்லை.”

“உன்னோட லைஃப் பிரதீஷ் கூட நல்லா இருக்கும் டா. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் அக்கா சாரி டா.”

“அக்கா ப்ளீஸ் சாரிலாம் சொல்லாத.”

“கவலைப்படாத அனு, சையுவை கண்டிப்பா நான் நல்லா பார்த்துப்பேனு. உன்னோட நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்.” என்று அவன் கூற, அனாஹா மகிழ்ச்சியுடனும் சைதன்யா ஆச்சரியத்துடனும் பார்த்தார்கள் அவனை.

சைதன்யா பார்ப்பதைப் பார்த்த பிரீதஷ் அவளைத் திரும்பிப் பார்த்துக் கண்ணடிக்க சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளிற்குப் படப்படாப்பாக வந்தது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது. இதெல்லாமே அவளிற்குப் புதுவித உணர்வைக் கொடுத்தது. அதிலும் பிரதீஷ் தன்னை இரண்டரை ஆண்டுகளாகக் காதலிக்கிறான் என்று கேட்டதிலிருந்து அவளிற்கு அடிவயிற்றில் ஏதோ செய்து கொண்டிருந்தது. அதை வார்த்தையால் அவளால் விவரிக்க முடியவில்லை. அதிலிருந்து பிரதீஷின் பார்வையும் உரிமைப் பேச்சும் இன்னும் இன்னும் அவளைக் கிறங்க செய்தது உண்மையென்றால் அவளைப் பயப்படவும் வைத்தது.

மண்டபத்தில் அனைத்துச் சடங்கும் முடிந்து முதலில் அவர்கள் வந்தது பரமசிவத்தின் வீட்டிற்குத் தான். திருமணம் ஸ்ரீபெரும்புதூரில் தான் நடந்தது. முதலில் மணமகள் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். சைதன்யா வீடு காஞ்சிபுரத்தில் இருப்பதால் பரமசிவத்தின் வீட்டிற்குத் தான் மணமக்கள் வந்தனர்.

அவர்கள் வந்ததும் மணமக்களிற்குப் பால் பழம் தர, அதைக் குடிக்க அத்தனை யோசித்தாள் சைதன்யா. காரணம் முதலில் பிரதீஷ் குடித்துவிட்டுக் கொடுக்க அவனது எச்சில் பட்டதை அவளால் குடிக்க முடியவில்லை. அதைக் கையில் வைத்து அப்படியே இருக்க திலகா தான்,”என்னாச்சு தன்யா? ஏன் குடிக்காமல் அப்படியே உட்கார்ந்திருக்க?” என்று கேட்டார்.

என்ன தான் அவரின் மகள் தன் கழுத்தை அறுத்தாலும் அவரால் சைதன்யாவிற்குத் தப்பாக நடக்க வேண்டுமென்று யோசிக்கவே முடியாது.

“பெரியம்மா அது வந்து…” என்று அவள் என்னக் கூறுவது எனப் புரியாமல் அமைதியாக முகத்தைச் சுளித்துக் கொண்டே வாயருகில் எடுத்துப் போக அவளின் முக பாவனையிலே புரிந்து போன பிரதீஷ் வேகமாக அதை வாங்கி அவனே குடித்து முடிக்க அனைவரும் திகைப்புடன் பார்த்தார்கள் அவனை.

“என்ன மாப்பிள்ளை பொண்ணுக்குக் குடுக்காமல் நீங்களே குடிச்சிட்டீங்க?” என்று சிலர் அதிருப்தியுடன் கேட்க, அவரைப் பார்த்துச் சிரித்து வைத்தான் பிரதீஷ்.

“ஒன்னும் பிரச்சனையில்லை இன்னொன்னு கொண்டு வாங்க.” என்று அவன் கூற, அனாஹா அங்கே வந்து டம்ப்ளரை அவனின் கையில் கொடுக்க, திலகா அவளை முறைத்துப் பார்த்து விட்டு அங்கிருந்து தள்ளிச் சென்றார்.

பிரதீஷ் அதை அப்படியே சைதன்யாவிடம் கொடுத்து,”சையு நீ குடிச்சுட்டு குடு. எனக்கு உன் எச்சிலைச் சாப்பிடுறதுல பிரச்சனை இல்லை.” என்று கூற, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவனிற்குக் கோபமோ என்று அவனின் முகத்தை உற்றுப் பார்க்க அதில் சிரித்து,”எனக்குக் கோபம் எல்லாம் இல்லை டா. நீ குடிச்சுட்டு குடு.” என்றதும் அவளும் அவன் கூறியதைப் போல் செய்ய அதைப் பார்த்த அத்தனைப் பேரும் ஓ என்று கத்தினார்கள்.

இதை எல்லாம் அருணா மற்றும் சதாசிவமும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். பிரதீஷின் செயல் அவர்கள் மனதை அத்தனைக் குளிர்வித்தது. தங்கள் பெண் நன்றாக இருப்பாள் என்று நம்பினார்கள்.

இங்குச் சற்று நேரம் இருந்தவர்களை பிருந்தாவும் சுதீஷூம் வந்து பிரதீஷின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார்கள். இரவுச் சடங்கு மணமகன் வீட்டில் தான் என்பதால் தான் அவர்கள் வந்திருந்தனர்.

கிளம்பும் வரை எதுவும் தெரியவில்லை சைதன்யாவிற்கு. ஆனால் இப்போது கிளம்பப் போகிறோம் என்றதும் பயமாக இருந்தது அவளிற்கு. இருபத்தி இரண்டு வயது தான் ஆகிறது. சிறு பிள்ளை தான். ஆனால் திருமணம் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதச் சிறு பிள்ளை இல்லை. அதே போல் தன் வீட்டை விட்டு வேறு ஓர் இடத்தில் தான் அவளது வாழ்க்கை இனி என்று நினைக்க நினைக்க மனம் தடத் தட என்று அடித்துக் கொண்டது.

அருணாவின் கையைப் பிடித்துக் கொண்டு நகர மாட்டேன் என்று அவள் அப்படியே நிற்க, பார்த்த பிரதீஷிற்கு அத்தனைக் கஷ்டமாக இருந்தது. தான் மட்டும் கொஞ்சம் யோசித்து செயல் பட்டிருந்தால் இப்படி சைதன்யா கஷட்பபட்டிருக்க மாட்டாள் என்று நினைத்தான். ஆனால் முடிந்துவிட்டது, இனி யோசித்து எதுவும் பயனில்லை என்று அவளிடம் சென்றவன் அவளின் கையைப் பிடித்து,”சையு நான் இருக்கேன். நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது சரியா. ஐ ப்ராமிஸ். அதே மாதிரி நீ உன் அம்மா,அப்பா அப்புறம் உன் தம்பியைப் பார்க்கனும்னா அடுத்த நிமிஷம் போய் பார்த்துட்டு வந்தரலாம். நம்ம வீட்டுல இருந்து உன் அம்மா வீட்டுக்கு ஜஸ்ட் ஃபிஃப்ட்டீன் மினிட்ஸ் தான் ஆகும்.” என்று அவன் கூற, நடப்புப் புரிந்தது. இனி பிரதீஷ் வீடு தான் தன் வீடென்றும் தான் இதுவரை வாழ்ந்த வீடு இனி தன் அம்மா வீடு என்ற நிதர்சனம் புரிய அவளிற்கு அப்படியே பிரமை பிடித்தது போல் இருந்தது.

“ஆமாம் டா தன்யா. நீ கவலைப்படாம போயிட்டு வா. அம்மாவை நீ நினைச்சாலே போதும் டக்குன்னு நான் வந்துருவேன். பயப்படாமல் போயிட்டு வா.” என்று கூறி அவளின் கையை அழுத்திப் பிடித்து அவளை ஆறுதல் படுத்தினார்.

அதுவரை எதையும் யோசிக்காமல் அமைதியாக இருந்தவள், பிரதீஷ் தம்பி என்று கூறியவுடன் தான் பார்த்தாள், வினயை எங்குத் தேடியும் காணவில்லை. காலையில் மாங்கல்யம் கட்டும் போது கூட இருந்தான். ஆனால் அதன் பின் அவனைப் பார்க்கவே இல்லை.

“அம்மா வினய் எங்கே?” என்று கேட்டாள்.

அப்போது தான் மற்றவர்களும் அவனைத் தேடினர். அவன் எங்கும் இல்லை. அனாஹா வேகமாக உள்ளே சென்று மாடியில் அவளின் அறைக்குப் பக்கத்து அறையைத் திறந்து பார்க்க, அங்கு தான் வினய் ஜன்னல் பக்கம் நின்று கீழே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“வினய்.” என்று அனாஹா அழைக்க, அத்தனை வேதனையுடன் திரும்பிப் பார்த்தான். அவனது வேதனை நன்றாகவே புரிந்தது அனாஹாவிற்கு. வேகமாக உள்ளே வந்து அவனை அனைத்துக் கொள்ள, அவளது தோளில் முகம் வைத்து அழ ஆரம்பித்து விட்டான்.

“அக்கா, எப்படி தன்யா இல்லாமல் நான் இருக்கப் போறேன். ஐ வில் மிஸ் ஹெர் அ லாட் அக்கா.” என்று சிறு பிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுக, அனாஹாவிற்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. தன்னுடைய சந்தோஷத்திற்காக இவர்களின் சந்தோஷத்தை எடுத்துக் கொண்டோமே என்று.

“சாரி வினய் என்னால தான!! I am really sorry டா.” என்று அனுவும் கண்ணில் நீருடன் கூற, வேகமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,”ப்ச் அய்யோ அக்கா, எப்படியும் தன்யா மேரேஜ் பண்ணி வேற வீட்டுக்குப் போவா தான். ஆனால் அதை இவ்ளோ சீக்கிரம் எதிர்பார்க்கலை. அவ்ளோ தான் அக்கா. ப்ளீஸ் நீங்க அழுகாதீங்க.” என்று அவளின் கண்ணீரைத் துடைத்து விட இன்னும் இன்னும் குற்றவுணர்ச்சியாக இருந்தது அனாஹாவிற்கு.

“சரி வா கீழே போகலாம். உன்னை எதிர்பார்த்துட்டு போகாமல் நின்னுட்டு இருக்கா தன்யா.” என்று அனு கூறவும் அவளுடன் கீழே வந்தான் வினய்.

வினயை பார்த்தவுடன் வேகமாக ஓடிச் சென்று அவனை அனைத்துக் கொண்டாள் சைதன்யா. என்ன தான் வினய் சைதன்யாவை விடச் சின்ன பையனாக இருந்தாலும் அவளை விட இவன் விவரமானவன்.

“அழாத தன்யா எங்கே போகப் போற? நாங்க இருக்கிற அதே காஞ்சிபுரத்துல தான் நீயும் இருக்கப் போற. என்னைய பார்க்கனும்னு நீ நினைச்சாலும் உன்னைய பார்க்கனும்னு நான் நினைச்சாலும் உடனே பார்த்துடலாம். ஸோ டென்ஷனாகம போ. மாமா என்ன சொல்றாங்களோ அப்படியே செய். You are stepping on your new life. இப்போ நீ அழக் கூடாது சரியா.” என்று அவளின் கையைப் பிடித்துக் கூற, இதுவரை ஒருவித அவஸ்தையுடன் இருந்த சைதன்யா வினயின் பேச்சைக் கேட்டதும் அவளிற்குத் தெம்பாக இருந்தது.

“அழு மூஞ்சியா போகாத. பார்க்க நல்லாவே இல்லை. சிரிச்சுட்டு போ தன்யா.” என்று மீண்டும் வினய் கூற, சம்பிரதாயமாகச் சிரித்தாள் சைதன்யா.

பிரதீஷ் அவளின் கையைப் பற்றி அழைத்துச் சென்று காரில் அமர வைத்தான். அவன் மறுபக்கம் வந்து அமர போக அவனிடம் வந்த வினய் அவனின் கையைப் பற்றி,”மாமா அவளுக்கு வயசு தான் ஆச்சு ஆனால் இன்னும் சின்ன பிள்ளை தான். நீங்க தான் கொஞ்சம் பார்த்துக்கனும்.”என்று பெரிய மனிதன் போல் கூறினான்.

“வினய் யூ டோன்ட் வொர்ரி. நான் உங்க அக்காவை நல்லா பார்த்துக்கிறேன்.” என்று கூறி அவனின் தோளில் தட்டிவிட்டு காரில் அமர, சுதீஷ் காரை எடுத்தான். கார் அங்கிருந்து நகர, சைதன்யா ஜன்னல் வழியாக அவளின் அம்மா, அப்பா, வினய், பரமசிவம் மற்றும் அனுவிற்கு டாட்டா காட்டியபடியே அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை கையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

பின்னரும் அவள் பார்த்துக் கொண்டே இருக்க, பிரதீஷ் அவளின் கையைப் பிடித்து,”சையு எங்கே போயிடப் போறாங்க எல்லாரும்? இங்கே தான இருக்கப் போறாங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ் டா.” என்று கூற, சரியென்று தலையசைத்தாள்.

வண்டி பிரதீஷின் வீட்டிற்குச் சென்று நின்றது. மணமக்கள் இருவரும் கீழே இறங்க, ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். பிரதீஷ் சைதன்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“பிருந்தா, தன்யாவை கூட்டிட்டு போய் சாமி ரூம்ல விளக்கு ஏத்து மா.” என்றார் சுமித்ரா.

அதன்படி பிருந்தாவும் சைதன்யாவை அழைத்துக் கொண்டு சாமி அறைக்குச் சென்றாள். அங்கு என்ன செய்ய வேண்டுமென அவள் கூற, கர்மசிரத்தையாக அனைத்தையும் செய்து விளக்கை ஏற்றிச் சாமி கும்பிட்டாள். அவள் பக்கத்திலே பிரதீஷூம் சாமியை வேண்டிக் கொண்டான்.

பின்னர் மூவரும் வெளியே வர, காசியம்மாள் தான்,”பிருந்தா தன்யாவை கீழே இருக்கிற ரூம்க்கு கூட்டிட்டு போ. அப்புறமா பிரதீஷ் ரூம்க்கு அனுப்பிக்கலாம்.” என்றார்.

“சரி பாட்டி.” என்று கூறி பிருந்தா அவளை அழைத்துச் சென்றாள்.

இங்கு பிரதீஷ் அவனின் அம்மாவிடம் வந்து,”அம்மா, சையுவும் நானும் கொஞ்சம் வெளில போயிட்டு வரோம்.” என்றான்.

அதில் அவர் பீதியடைய,”என்ன பிரதீஷ் சொல்ற? இப்போ எப்படி வெளில போவ? இங்கே சடங்கு எல்லாம் இருக்குப்பா.” என்றார்.

“அம்மா அதான் சையு வீட்டுலயே முடிஞ்சதுல அப்புறம் என்ன? நாங்க போயிட்டு வந்துடுறோம் மா.” என்றான்.

“எப்படி பிரதீஷ் முடியும்? அப்பாவுக்கும் பாட்டிக்கும் தெரிஞ்சா கண்டிப்பா நோ தான் சொல்லுவாங்க.”

“ஓ அப்போ அது தான் பிரச்சனையா சரி நான் பாட்டிக்கிட்ட நானே கேட்டுக்கிறேன்.” என்று கூறி அவனது பாட்டியைத் தாஜா செய்து ஒத்துக்கொள்ள வைத்தவன் சைதன்யாவையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

error: Content is protected !!