அத்தியாயம் 6

இரண்டு வீடுகளிலும் கல்யாண களை கட்டியது. திருமணத்திற்கு இன்னும் இருபத்தி ஐந்து நாட்கள் தான் இருந்தது. சற்று நேரத்திற்கு முன்பு தான் திருமணப் பத்திரிக்கைகள் எல்லாம் வந்தது. அருணாவும் அன்று திலகா வீட்டில் தான் இருந்தார்.

“அக்கா, பத்திரிக்கைல பேர் போடுறதுக்கு லிஸ்ட் ரெடியா அக்கா?”

“எல்லாம் ரெடி அருணா. அந்த டேபிள்ல தான் வைச்சிருக்கேன். ஒரு வாட்டி நீ அதைச் சரிப்பார்த்துரு. அப்புறம் யார் பேராவது விட்டுப் போயிருந்தால் நல்லா இருக்காது. நம்ம வீட்டுல நடக்கிற முதல் கல்யாணம். தடபுடலாக நடத்தனும்.” என்று கண்களில் கனவுடன் கூற, அருணா அவரைச் சிரித்த முகத்துடன் பார்த்தார்.

“கவலைப்படாதீங்க அக்கா. நீங்க எதிர்பார்க்கிற மாதிரியே சூப்பரா நம்ம அனு கல்யாணத்தை நடத்திடலாம்.” என்று கூறவும், திலகாவிற்கு அத்தனைச் சந்தோஷம்.

“அக்கா எப்போ மாப்பிள்ளையோட வீட்டைப் பார்க்கப் போறோம்? அவங்க எதுவும் சொன்னாங்களா?”

“ஆமா அதை மறந்துட்டேன் பாரேன். நாளைக்குத் தான் சொன்னாங்க வரச் சொல்லி.”

“சரி அக்கா. அப்போ நம்ம வீட்டுக்குக் காலை சாப்பிட்டுக்கு வந்துருங்க. அதுக்கு அப்புறம் போய் பார்த்துக்கலாம் சரியா.”

“ப்ச் அதெல்லாம் எதுக்கு அருணா. நாங்க சாப்பிட்டுட்டே கிளம்பி வரோம்.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கல்யாண வேலை எவ்ளோ இருக்கு. இதுல நீங்க சமைச்சுட்டு வேற இருப்பீங்களா? நம்ம வீட்டுல தான் சமைக்க ஆள் இருக்குல. உங்களுக்கு அங்கே தான் நாளைக்குக் காலை சாப்பாடு.” என்றுச் சற்றுக் கடுமையுடன் கூற, சரியென்று தலையசைத்தார்.

“அப்படியே போய் ட்ரெஸூம் நாளைக்கு எடுத்தரலாம்னு சம்பந்தி அம்மா சொன்னாங்க அருணா. நீயும் வந்துரு. சைதன்யாவையும் வினயையும் நாளைக்கு லீவ் போடச் சொல்லிடு.”

“ம் சரி அக்கா.” என்று கூறிவிட்டு பேர் இருக்கும் லிஸ்ட்டை சரி பார்க்க ஆரம்பித்தார் அருணா.


காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஜவுளிக் கடையில் நின்றிருந்தார்கள் பரமசிவம் மற்றும் கதிரைவேல் குடும்பத்தினர். சிறியவர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்திருந்தார்கள். சற்று நேரத்திற்கு முன்பு தான் பரமசிவம், திலகா மற்றும் அனாஹா மூவரும் சதாசிவத்தின் இல்லத்திற்கு வந்திருந்தனர். காலைச் சாப்பாட்டை முடித்துவிட்டு அருணா, சதாசிவம், பரமசிவம் மற்றும் திலகா நால்வரும் அங்கிருந்து, காஞ்சிபுரத்தில் இருக்கும் பிரதீஷின் வீட்டிற்குக் கிளம்பினர்.

அவர்கள் சென்றவுடன், வினய் அனாஹாவிடம் வந்து,”அக்கா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று பீடிகையுடன் பேச்சை ஆரம்பித்தான்.

“என்ன வினய்” என்று சாதாரணமாகக் கேட்டாள்.

“நான் அன்னைக்கு உனக்கு மெசேஜ் பண்ணேன்ல அதைப் பத்தி மாமாகிட்ட பேசுனியா?”

“ம் கேட்டேன் வினய். அவங்க ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றாங்களாம். அவரோட ப்ரண்ட் சென்னை போல. அவங்க சொந்த ஊர் போறாங்களாம். ஊருக்குள்ள வந்துட்டு போக நேரமாகிடும்னு பிரதீஷ் அங்கே போய் மீட் பண்ணிருக்காங்க வினய்.”

“ஓ அப்படியா சரி அக்கா. உனக்கு ஒகேனா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை அக்கா.” என்று கூற, அவனை அத்தனை அன்புடன் பார்த்தாள் அனாஹா.

பிரதீஷ் வீடு சதாசிவம் வீட்டிலிருந்து இருபது நிமிடப் பயணத்தில் சென்றுவிடலாம். அன்று திருமணத்திற்குத் துணியும் எடுப்பதால் கதிரைவேல், சுமித்ரா, காசியம்மாள், சுதீஷ் மற்றும் பிருந்தா என அத்தனைப் பேரும் பிரதீஷ் வீட்டிலிருந்தனர்.

சுமித்ராவின் அண்ணன் அதாவது பிருந்தாவின் தந்தை தியாகராஜன் மற்றும் அவரின் மனைவியையும் அழைத்தனர். ஆனால் தியாகராஜன் வேலை இருக்கிறது என்று வர முடியாது என்றும் அவரது மனைவி வசந்தியையும் இரண்டாவது பெண் ப்ரீத்தியையும் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் வசந்திக்கும் ப்ரீத்திக்கும் சுத்தமாக இஷ்டமில்லை வருவதற்கு. காரணம் ப்ரீத்திக்கு பிரதீஷ் மீது அத்தனைக் காதல். ஆனால் பிரதீஷ் வேண்டாம் எனக் கூறியதைக் கேட்டதிலிருந்து பித்து பிடித்ததுப் போல் தான் சுத்திக் கொண்டிருக்கிறாள். எப்படியாவது தன் மாமாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கனவுக் கண்டவள், அனாஹாவுடன் திருமணம் நிச்சயம் செய்த போது அது கனவாகவே போனதை எண்ணி அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் வசந்தி அழைத்தப் போது வரமுடியாது என்று கூறிவிட்டாள். வசந்தியும் தான் மட்டும் எப்படிப் போவது என்று நினைத்து ப்ரீத்திக்கு உடம்புச் சரியில்லை என்று கூறிவிட்டுத் துணி எடுக்க வரமுடியாது என்றுவிட்டனர். அதில் பிருந்தாவிற்கு அத்தனை வருத்தம்.

பரமசிவம், திலகா, சதாசிவம் மற்றும் அருணா என நால்வரும் பிரதீஷின் வீட்டிற்கு வந்தனர். அவனது வீடு தனி வீடு தான். ஆனால் கீழே மேலே என்று இரண்டு போர்ஷன்கள் உள்ளது. அந்த வீட்டின் முன் வண்டியிலிருந்து இறங்கிய நால்வரும் வீட்டை வெளியிலிருந்து பார்த்தவர்களுக்குத் திருப்தி இல்லை. காரணம் பரமசிவத்தின் வீடு அத்தனைப் பெரிதாக இருக்கும். அதே போல் தான் சதாசிவத்தின் வீடும். ஏன் கதிரைவேல் வீடு கூடப் பெரிதாகத் தான் இருந்தது. ஆனால் இந்த வீடு சிறியதாக இருக்கவும் அவர்களிற்கு என்னவோ போல் ஆனது. இருந்தாலும் உள்ளே சென்று பார்க்கலாம் என்று கேட்டைத் திறந்து கொண்டே உள்ளே நுழைய, ஒரு கார், இரண்டு மூன்று பைக் நிறுத்தும் அளவிற்கு போர்டிகோ இருந்தது.

கீழ் வீட்டில் வேறு ஒரு குடும்பம் குடியிருக்கிறது. மேல் வீட்டில் தான் பிரதீஷ் தான் இருக்கிறான். படி ஏறித் தான் போக வேண்டும். அதுவும் நிறையப் படிகள் எல்லாம் இல்லை. பத்து படித் தான். படிகள் நேர் கோட்டில் இருக்கும், வளைந்து இருக்காது. இவர்கள் வந்ததைப் பார்த்து பிரதீஷ் வேகமாகக் கீழே வந்தான்.

அவன் மட்டும் வருவதைப் பார்த்தவர்கள் என்னடா இது பெரியவர்கள் வராமல் இவன் மட்டும் வருகிறான் என்று தான் தோன்றியது அவர்களுக்கு. அவர்களின் முகத்தைப் பார்த்தே அவர்களின் எண்ணத்தைப் புரிந்து,”அம்மா, அப்பா அப்புறம் பாட்டி எல்லாம் கீழே வந்து உங்களைக் கூப்பிடத் தான் எழுந்தாங்கா ஆனால் நான் தான் இது என்னோட வீடு ஸோ நான் உங்களைக் கூட்டிட்டு போனால் நல்லா இருக்கும்னு தோனுச்சு. அதான் நான் வந்தேன். உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையே.” என்று கேட்க,

“அதெல்லாம் இல்லை மாப்பிள்ளை.” என்று பரமசிவம் கூற, மற்றவர்களும் தலையசைத்தனர்.

அவன் முன்னால் செல்ல, அவர்களும் அவன் பின்னர் சென்றனர். மேல் வீட்டின் வாசலிலே பிரதீஷின் குடும்பம் நின்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் தான் மனதிற்குள் நிம்மதி.

அது வரை ஒரு மாதிரியாக இருந்த அவர்களின் முகம் வீட்டைப் பார்த்ததும் அப்படியே மாறிவிட்டது. அத்தனை அழகாக அதைப் பராமரித்திருந்தான் பிரீதஷ். கீழே இருந்து பார்க்கும் போது சிறிய வீடாக இருந்தது. ஆனால் மேலே வந்து பார்த்ததும் தான் தெரிந்தது நல்ல பெரிதாக இருந்தது.

வீட்டினுள்ளே நுழைந்ததுமே பெரிய ஹால் இருந்தது. அந்த ஹாலின் இடது பக்கத்தில் சமையலறைக் கூடிய சாப்பிடும் அறை இருந்தது. அதில் ஆறு பேர் உட்காரக் கூடிய ஓர் மேஜையும் இருந்தது. அதே போல் ஹாலின் வலது பக்கத்திலே இரு அறை இருந்தது. அதே போல் வீட்டின் வாசற் கதவிற்கு அப்படியே நேர் எதிரில் குட்டி மொட்டை மாடி இருந்தது. அங்கு ஓர் ஓரத்தில் அவனது உடற்பயிற்சி சாதனங்கள் இருந்தது. இன்னொரு புறம் ஓர் ஊஞ்சல் இருந்தது. அதற்கு மேல் தடுப்பும், அதில் காற்றாடியும் இருந்தது.

அனைத்தையும் பார்த்தவர் மனதில் அத்தனை திருப்தி. இருவருக்கு இந்த வீடு போதும் என்று தான் தோன்றியது. அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்ததும் ஹாலிலிருந்த சோஃபாவில் வந்து உட்கார்ந்தார்கள்.

“வீடு நல்லா இருக்கா மா?” என்று கேட்டார் காசியம்மாள்.

“ம் நல்லா இருக்கு மா. மாப்பிள்ளை ரொம்ப அருமையா வீட்டை வைச்சிருக்கார்.” என்றார் திலகா.

“உனக்குப் பிடிச்சுருக்கா அருணா? நீ எதுவும் சொல்லலை.”

“அச்சோ நல்லா இருக்கு மா. அக்கா சொல்லிட்டாங்களா அதான் அமைதியா இருந்தேன்.” என்றார் அருணா.

“சரி.” என்று அருணாவிடம் கூறியவர், சுமித்ரா மற்றும் பிருந்தாவைப் பார்த்து,”என்ன அப்படியே நின்னுட்டு இருக்கீங்க? போய் வந்தவங்களுக்குச் சாப்பிடக் குடிக்கக் கொண்டு வாங்க.” என்று அவர் கூறியதும் இருவரும் வேகமாக உள்ளே சென்றார்கள்.

முன்னரே அனைத்தும் தயாராக இருந்ததால் குடிக்க ஜூஸூம், சாப்பிட ஸ்னாக்ஸூம் எடுத்துக் கொண்டு வந்து தந்தார்கள் சுமித்ராவும் பிருந்தாவும்.

“சரி நல்ல நேரம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு. அது வரைக்கும் பேசிக்கிட்டு இருப்போம். அந்த நேரத்தை ஒட்டி நாம ஜவுளி எடுக்கக் கிளம்புவோம்.” என்றார் காசியம்மாள்.

“பெரியவங்க நீங்க சொன்னா சரி தான் மா.” என்றனர் இவர்கள்.

சரியாக நாற்பது நிமிடங்கள் கழித்து அனைவரும் ஜவுளி எடுக்கக் கிளம்பினார்கள். இவர்கள் இங்கிருந்து கிளம்பியதுமே திலகா, அனாஹாவிற்கு அழைத்து அவளை வரச் சொல்ல அதைப் பார்த்த காசியம்மாள்,”திலகா பிள்ளைங்க தனியாவா வராங்க?” என்று கேட்டார்.

“ம் ஆமா மா. அனாஹாவுக்கு கார் ஓட்ட தெரியும்.” என்று கூறினார் திலகா.

“அதெல்லாம் சரி தான் மா. இருந்தாலும் பிள்ளைங்க எதுக்கு தனியா வரனும். என் பேரன் பிதீஷு போய் கூட்டிட்டு வரட்டும்.” என்று கூற, பிரதீஷின் கண்கள் மின்னியது.

ஆனால் திலகாவிற்குத் தயக்கமாக இருக்க அவர் பரமசிவத்தைப் பார்த்தார். அதைப் பார்த்த கதிரைவேல்,”நீங்க கவலைப்படாதீங்க என் பையன் நல்லாவே வண்டி ஓட்டுவான்.” என்றார்.

“இல்லை அது வந்து கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணும் பையனும் எப்படி?” என்று தயக்கத்துடன் கேட்டார் பரமசிவம்.

“தனியா எங்கே வரப் போறாங்க? அதான் கூட உங்க தம்பி பசங்களும் இருக்காங்கே பரமசிவம். எதுக்கு நீங்க கவலைப்படுறீங்க?” என்று கதிரைவேல் அவரைச் சமாதானப்படுத்த,

“இருக்கட்டும் மாமா, மாப்பிள்ளையே போய் கூட்டிட்டு வரட்டும்.” என்று அருணா கூறவும்,

“ஆமா அண்ணா. அதான் கூட தன்யாவும் வினயும் இருக்காங்ளே. அப்புறம் எதுக்கு யோசிக்கனும்?” என்று சதாசிவமும் கூற, சரியென்று தலையசைத்தார் பரமசிவம்.

“சரி அப்போ நான் போய் கூட்டிட்டு வரேன்.” என்று பெரியவர்கள் கூறுவதற்கு முன்பே பிரதீஷ் கூற,

“டேய் அமைதி டா.” என்று சுதீஷ் அவனைக் கிண்டல் செய்ய, சிரித்துக் கொண்டே தன் தலைமுடியைக் கோதிக் கொண்டான் பிரதீஷ். அதைப் பார்த்த அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

“போ டா பேரான்டி போய் என் பேத்தியைக் கூட்டிட்டு வா.” என்று காசியம்மாள் கூற, அவனும் அங்கிருந்து கிளம்பினான்.


அனாஹா, சைதன்யா மற்றும் வினய் மூவரும் பிரதீஷ் வருவதற்காகக் காத்திருந்தார்கள். சரியாகப் பதினைந்து நிமிடத்தில் வந்துவிட்டான் பிரதீஷ். வந்தவனை அனு தான் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்றாள். அவனைப் பார்த்ததும் வினயிற்கும் சைதன்யாவிற்கும் அத்தனைச் சந்தோஷம்.

“உட்காருங்க பிரதீஷ்.” என்றாள் அனாஹா.

“உட்கார டைம் இல்லை அனாஹா. நமக்காக அங்கே எல்லாரும் வெயிட்டிங். நீங்க மூணு பேரும் ரெடினா நாம கிளம்பலாம்.” என்றான் பிரதீஷ்.

“அட இதைக் குடிங்க மாமா அப்புறம் கிளம்பலாம்.” என்று ரோஸ்மில்க்கை கொண்டு வந்து கொடுத்தான் வினய்.

பிரதீஷிற்கு மறுக்கத் தோன்றவில்லை. அதனால் வாங்கிக் குடித்து விட்டு எழுந்திருக்க மூவரும் கிளம்பி வெளியே வந்தார்கள்.

“வினய் வீட்டைச் சரியா பூட்டிட்டியா?” என்று கேட்டாள் அனாஹா.

“ம் பூட்டியாச்சு அக்கா.” என்றான்.

பிரதீஷ் காரை ஸ்டார்ட் செய்து திருப்ப, சைதன்யா முன்னால் ஏறச் செல்ல, வேகமாக அங்கே வந்த வினய் அவளின் கையைப் பிடித்து இழுத்து,”ஏய் லூசு அக்கா தான் முன்னாடி உட்காரனும். நீ என் கூடப் பின்னாடி உட்கார் வா.” என்றான். அவன் கூறியதைக் கேட்ட சைதன்யாவிற்கு முகம் கூம்பிவிட்டது. அவளிற்கு காரில் என்றும் முன் பக்கம் உட்கார்ந்து வருவது தான் பிடிக்கும்.

அவளைப் பார்த்த வினய்,”ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் தன்யா. வரும் போது அப்பாவோட வருவோம். அப்போ நீ முன் பக்கம் உட்கார்ந்துக்கோ. இப்போ அக்கா உட்காரட்டும்” என்று எடுத்துக் கூற, உடனே அவளது முகம் மலர்ந்து விட்டது.

ஆனால் அனாஹாவோ,”பரவால வினய், தன்யாவே முன்னாடி உட்காரட்டும். எனக்கு நோ ப்ராப்ளம்.” என்று கூறி பிரதீஷைப் பார்க்க, அவனும் சரியென்று தலையசைத்தான்.

“இல்லை அக்கா, அவ என் கூடப் பின்னாடி உட்காரட்டும்.”

“ஆமா அக்கா. நே இஸ்யூஸ்.” என்று சைதன்யாவும் கூற, சரியென்று முன்னால் அமர்ந்தாள் அனாஹா.


இவர்கள் நால்வரும் ஜவுளிக் கடைக்குள் வர, பெரியவர்கள் அங்கு ஏற்கனவே சேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அனாஹா நேராகத் தன் தாயிடம் செல்ல, சைதன்யாவும் அருணாவிடம் சென்றாள். வினய் அவன் தந்தை மற்றும் பெரிய தந்தையிடம் செல்ல, பிரதீஷ், சுதீஷின் பக்கம் வந்தான்.

“அனு மா உனக்கு எதுப் பிடிக்குதோ அதைப் பார்த்து எடுத்துக்கோ மா.” என்றார் சுமித்ரா.

சரியென்று தலையசைத்தவள் புடவையைப் பார்க்க ஆரம்பித்தாள். கூடவே சைதன்யாவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டாள்.

“உனக்கு இதுல எது பிடிச்சுருக்கு தன்யா? உனக்கு முதல்ல எடுக்கலாம். அப்புறம் எனக்கு எடுத்துக்கிறேன்.” என்றாள் அனாஹா.

அதன்படி சைதன்யா அவளிற்குப் பிடித்த மாதிரி புடவை எதுவும் இருக்கிறதா என்று பார்த்தாள். அப்போது அங்கு வந்த அருணா சைதன்யா புடவை எடுப்பதைப் பார்த்து,”என்ன தன்யா அக்காவுக்கு நீ செலெக்ட் செய்றியா?” என்று கேட்டார்.

“நோ மா, அக்கா முதல்ல என்னை எடுக்கச் சொன்னா. அதான் பார்த்துட்டு இருக்கேன்.” என்று கூறி இரண்டு புடவைகளை எடுத்துக் காட்டினாள்.

“அம்மா இதுல எது நல்லா இருக்கு?” என்று கேட்டாள்.

“தன்யா இங்க இருக்கிறது எல்லாம் வெட்டிங்க் சாரிஸ். உனக்கு நான் அங்கே செலெக்ட் பண்ணி வைச்சருக்கேன்.” என்றார்.

“ஓ அப்படியா அப்போ ஓகே.” என்று கூறியவள், ஒரு புடவையை எடுத்து,”அம்மா இந்த சேரி சூப்பரா இருக்கு. என் மேரேஜ்க்கு இந்த சேரி தான் சரியா.” என்று தங்க நிறப் புடவையில் சிவப்பு நிறத்தில் சின்ன ஜரிகை வைத்த புடவையை எடுத்துக் காட்டினாள்.

“ஏய் தன்யா முதல்ல நீ சி.ஏ. ஃபைனல் பாஸ் பண்ணு. அப்புறம் தான் மேரேஜ். அதுக்கு முன்னாடி இப்படிப் பேசாத.” என்று சற்றுக் கோபமாகக் கூறிவிட்டு அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு அந்தப் புடவையை அவள் கையிலிருந்து வாங்கி கடைக்காரரிடம் தந்தார் அருணா.

“நீ பாரு அனு.” என்று அவர் கூறவும் அங்கு பிரதீஷ் வரவும் சரியாக இருந்தது.

அதைப் பார்த்த அருணா, அனாஹாவிடம் கண்ணைக் காட்டி விட்டு அங்கிருந்து சைதன்யாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அவர்கள் சென்றவுடன்,”என்னாச்சு நான் வந்தவுடனே அவங்க போயிட்டாங்க? சைதன்யாவும் தலையைத் தேச்சுக்கிட்டே போறா?” என்று கேட்டான் பிரதீஷ்.

அனாஹா சிரித்துக் கொண்டே சற்று முன்னர் நடந்ததைக் கூற, பிரதீஷூம் யோசனையுடன் அந்தப் புடவையைப் பார்த்தான். அது அத்தனை வேலைப்பாடுகளுடன் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

“ம் சேரியைப் பார்த்ததும் சைதன்யாவுக்கு ஆசை வந்துருக்கும் போல.” என்று கூறி அந்தப் புடவையைக் கையில் எடுத்து பார்த்தான் பிரதீஷ். பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டு அனாஹாவுடன் புடவையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

“உங்களுக்கு ட்ரெஸ் எடுத்தாச்சா?”

“நோ மேட்சிங் மேட்சிங்கா போட்டா தான நல்லா இருக்கும். அதான் வெயிட்ங்க்.” என்று அவன் கூற, அவனைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தாள் அனாஹா. அதில் பிரதீஷிற்குச் சற்று வெட்கம் வந்துவிட் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதையும் அனாஹா பார்த்து விட்டாள்.

“அச்சோ வெட்கப் படுறீங்களா? இதை கேப்ட்சர் பண்ணியே ஆகனும்.” என்று கூறி அவளது கைப்பேசியை எடுத்து அவனைப் படம் பிடித்தாள்.

“ப்ச் சும்மா இரு அனாஹா.” என்று கூறி அவளது கைப்பேசியை அவளது கையிலிருந்து உருவப் பார்க்க அவள் அதற்குள் எடுத்துவிட்டு தன் பைக்குள் வைத்துக் கொண்டாள்.

“This is not fair Anu.”

“Everything is fair in love and war. கேள்விப்பட்டது இல்லையா நீங்க.” என்று கூற, அவன் பொய்யாக முறைத்துப் பார்த்தான். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவள் புடவையை எடுத்துப் பார்த்து அதைத் தன் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு சேரியை பிக் எடுக்கிற?”

“போட்டோல எந்த சேரி அழகா இருக்குன்னு பார்க்கத் தான்.” என்று அவள் கூற, மெச்சிக் கொண்டான் பிரதீஷ்.

சரியாக அந்த நேரம் அங்கே திலகா மற்றும் சுமித்ரா வர, தான் எடுத்த புடவையைக் காட்டினாள் அனாஹா. ரோஸ் கோல்ட் நிறத்தில் தங்க நிறத்தில் ஜரிகை வைத்திருந்தது. அதைப் பார்க்க அத்தனை அழகாக இருந்தது. அனாஹா அதை பிரதீஷிடம் காட்ட, அவனும் சூப்பர் என்று சைகைச் செய்தான்.

“பிரதீஷ் அப்போ இந்த சேரிக்கு மேட்ச்சா நீயும் ரோஸ் கோல்ட்ல எடுத்துரு.” என்றார் சுமித்ரா.

“அம்மா எனக்கு ரோஸ் கோல்ட் கிடைக்குமானு தெரியலை. அப்படிக் கிடைச்சா அதை எடுத்துடுறேன். இல்லாட்டி கோல்ட்ல எடுக்கிறேன் ஓகே வா?”

“ம் ஓகே பிரதீஷ். கோல்டும் நல்லா தான் இருக்கும்.” என்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட திலகா,”ஏன் அண்ணி, மாப்பிள்ளை இப்போ எடுக்கலையா?” என்று கேட்டார்.

“இல்லை அண்ணி, அவன் சாயந்தரம் போய் எப்பவும் அவன் எடுக்கிற கடையில எடுக்கிறேன்னு சொன்னான்.”

“ஓ அப்படியா!! முதல்லயே சொல்லிருந்தா நாம எல்லாருக்கும் அங்கேயே எடுத்துருக்கலாம்.”

“பரவால அண்ணி இதுல என்ன இருக்கு? சரி வாங்க பில் போடப் போகலாம்.” என்றார் சுமித்ரா.

திருமணத்திற்குத் தான் தான் செலெக்ட் செய்வேன் என்று அனாஹா கூறியதால் அவளது விருப்பத்திற்குத் தேர்வுச் செய்தனர். மற்ற விஷேசங்களுக்குப் பெரியவர்கள் பார்த்து எடுத்ததால் இப்போது பில் போடக் கிளம்பினார்கள்.


திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கடந்த பத்துத் தினங்களில் பல விஷயங்கள் நடந்து இந்தத் திருமணம் நடக்குமா என்னும் அளவிற்குப் பிரச்சனைகள் நடந்து இதோ திருமணம் இனிதே முடிந்து விட்டது. தங்க நிறத்தில் பட்டுச் சட்டை மற்றும் பட்டு வேஷ்டி அணிந்து மணமகனிற்கே உடைய மிடுக்குடன் அமர்ந்திருந்தான் பிரதீஷ். அவனிற்கு அருகில் தங்க நிறப் புடவையில் சிவப்பு நிற ஜரிகையிட்டப் புடவையுடன் கழுத்தில் பிரதீஷ் கட்டியத் தாலியுடன் மணமகளாக அங்கு அமர்ந்திருந்தது அனாஹா இல்லை சைதன்யா.

error: Content is protected !!