அத்தியாயம் 5

பிரதீஷூம் அனாஹாவும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தவுடனே அனைவருக்கும் அத்தனைச் சந்தோஷம். வேகமாகச் சமையலறைச் சென்ற திலகா அனைவருக்கும் பால் பாயசம் கொண்டு வந்து கொடுத்தார்.

“என்ன மா முன்னாடியே தெரியுமா உனக்கு எல்லாம் நல்லபடியா முடியும்னு? பால் பாயாசம்லாம் தயாரா வைச்சுக்கிருக்க?” என்று கேலியாகக் கேட்டார் காசியம்மாள்.

“நல்ல விதமா நினைச்சா எல்லாம் நல்லபடியா முடியும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதான் இந்தச் சம்மதம் முடிஞ்சுடும்னு என் மனசுல பட்டுச்சு மா. அதான் முன்னாடியே நான் தயாரா வைச்சுட்டேன்.” என்று திலகா கூற, காசியம்மாள் அவரை மெச்சிக் கொண்டார்.

தனியாக நிச்சயதார்த்தம் என்று வைக்காமல் திருமணத்திற்கு முன் தினம் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் கதிரைவேல் குடும்பம் அங்கிருந்து கிளம்பினர். போகும் முன் பிரதீஷ், அனாஹாவை ஓர் பார்வைப் பார்த்து விட்டுச் செல்ல அதை சைதன்யா பார்த்துவிட்டாள். வேகமாகத் தன் அக்காவின் பக்கம் வந்து,”அக்கா,மாமா உன்னை இப்போ சைட் அடிச்சுட்டு தான போனார்?” என்று கேலியாக வினவ, அவளைச் செல்லமாக முறைத்தாள் அனாஹா.

“பிச்சு பிச்சு அமைதியா இரு தன்யா.” என்று கூற, அவளை விடாமல் ஓட்டினாள் சைதன்யா.

அப்பொழுது அங்கு வந்த வினய்,”அக்கா, மாமா செம ஹேன்ட்சம்மா இருக்கார். எனக்கு மாமாவை ரொம்ப பிடிச்சுருக்கு. உனக்கும் பிடிச்சுருக்கு தான?” என்று பெரிய மனிதர் போல் கேட்டான்.

“ஏய் பிடிச்சதுனால தான் அக்கா முகம் பளிச்சுன்னு இருக்குப் பார்.” என்று சைதன்யா கூற, வினய் அவளை முறைத்துப் பார்த்தான்.

“இப்போ எதுக்கு என்னை முறைக்கிற? இரு அம்மாகிட்ட சொல்றேன்.”

“ஆமா இன்னும் சின்ன பப்பா நீ அம்மாகிட்ட போய் சொல்றேன்னு ஸ்கூல் பசங்க மாதிரி கம்ப்ளைன் பண்ணிட்டு இருக்க!! நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்!!”

“யார் இப்போ ஐ.சி.யூ.ல இருக்க?” என்று கேட்க, அத்தனைக் காண்டானான் வினய்.

“நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு. நான் அக்காகிட்ட பேசனும்.”

“நான் போக மாட்டேன். நீ சொன்னா நான் போயிடுவேனா? இங்க தான் இருப்பேன்.” என்று வீம்பாக அவள் கூற, அவளிடம் பேசுவது தவறு என்று புரிந்து அனாஹாவின் புறம் திரும்ப அவளோ அங்கு இல்லை. இவர்கள் இருவரும் சண்டை போடும் போதே அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

“பார் உன்னால அக்கா எழுந்து போயிட்டா.”

“என்னால ஒன்னுமில்லை. உன்னால தான்.” என்று அதற்கும் இருவரும் சண்டை போட மீண்டும் அங்கு வந்துவிட்டாள் அனாஹா.

“இன்னும் உங்க சண்டை முடியலையா? சரி அப்போ இரண்டு பேரும் சண்டைப் போடுங்க நான் என் ரூம்க்கு போறேன்.” என்று அங்கிருந்து கிளம்ப,

“அக்கா நாங்க ஒன்னும் சண்டை போடலை.” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூற, சிரிப்புடன் நின்றாள் அனாஹா.

“அக்கா நீங்க எதுவும் சொல்லலை நான் கேட்டதுக்கு.”என்று மீண்டும் வினய் ஆரம்பிக்க, அவனைப் பார்த்துச் சிரித்த அனாஹா அவனின் முன் தலைமுடியைத் தேய்த்து விட்டு,”எனக்கு ஒகே தான் டா பெரிய மனுஷா.” என்று அவள் கூறவும் தான் அவனின் முகத்தில் மகிழச்சி வந்தது.

அனாஹா,சைதன்யா மற்றும் வினய் மூவருமே அத்தனைப் பாசமாக அன்பாக இருப்பார்கள். வினயிற்கு சைதன்யா வேறு அனாஹா வேறு அல்ல. சைதன்யா கூடச் சில நேரம் சிறு பிள்ளைப் போல் நடப்பாள். ஆனால் வினய் அப்படியில்லை. இந்த வயதிலே மிகவும் பொறுப்பானவன். அதனால் தான் தன் முதல் அக்காவிற்கு இந்தத் திருமணத்தில் முழுச் சம்மதமா என்று அறிய வேண்டி அவளிடம் வினா எழுப்பினான்.

சிறியவர்கள் இங்குப் பேசிக் கொண்டிருக்க, பெரியவர்கள் நால்வரும் அடுத்து என்ன செய்ய வேண்டுமென இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.

“அக்கா, நம்ம அனுவுக்கு காஞ்சிபுரத்துல ட்ரெஸ் எடுத்துரலாம். அங்கே எல்லாம் நல்லா இருக்கும். நமக்குத் தெரிஞ்ச கடைல அவங்களே நெய்யுவாங்க அக்கா.”

“அப்போ சரி. நல்ல நாள் பார்த்து போயிட்டு வரலாம். அதுக்கு முன்னாடி நம்ம பையன் வீட்டைப் போய் பார்க்கனும். இங்கே இருக்கிற வீட்டையும் பார்க்கனும். அங்கே காஞ்சிபுரத்துல மாப்பிள்ளை இருக்கிற வீட்டையும் பார்க்கனும்.”

“ஆமா அக்கா. இதை முதல்ல நம்ம மாப்பிள்ளை வீட்டுல சொல்லனும். நம்ம பொண்ணு போய் வாழப் போற வீட்டைப் பார்த்துத் தான ஆகனும் நாம. என்ன மாமா சொல்றீங்க?”

“ம் ஆமா போய் பார்க்கனும்.” என்று கூறியவர் குரலில் சந்தோஷமே இல்லாமல் இருக்க மூவரும் சற்று அதிர்ந்து பார்த்தார்கள் அவரை.

“என்ன அண்ணா? என்ன ஆச்சு? ஏன் உங்களுக்கு இன்னும் இந்தச் சம்பந்தம் பிடிக்கலையா? முதல்ல ஒரு மாதிரியிருந்தாலும் மாப்பிள்ளையைப் பார்த்ததும் உங்க முகம் பிரகாசமாச்சே. நான் தான் பார்த்தேனே!! அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க?” என்று கேட்டார் சதாசிவம்.

“ப்ச் அப்படியில்லை சதா. நேத்து தான் நாம அனுவோட கல்யாணம் பத்திப் பேச்சு எடுத்தோம். ஆனால் இப்படி டக்குன்னு முடியும்னு நான் யோசிக்கவே இல்லை. அனுவுக்குக் கல்யாணமாகி போயிட்டா வீடே வெறுச்சுனு இருக்கும். என் பொண்ணுன்னு இல்லாமல் அவள் இன்னொருவரோட பொண்டாட்டியா மாற போற. இது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் அனு இல்லாமல் எப்படி இருக்கப் போறேனோ தெரியலை.” என்று அவர் கவலையுடன் கூற, திலகாவிற்கும் சட்டென்று மனநிலை மாறிவிட்டது.

“மாமா உங்க கவலை எல்லா பெத்தவங்களுக்கு இருக்கிறது தான். ஏன் என்னை பெத்தவங்களுக்கு, அக்காவோட பெத்தவங்களுக்குன்னு எல்லாருக்குமே இந்தக் கவலை இருக்கும். பொண்ணை பெத்துட்டாளோ கல்யாணம் பண்ணும் போது அவளைப் பிரியனும்னு காலம்காலமாக நடக்கிறது தான். ஏன் நாளைக்கே தன்யாவுக்கு கல்யாணமான நாங்களும் அவளைப் பிரிஞ்சு தான் ஆகனும். நீங்க பிரிவைப் பத்தி மட்டும் யோசிக்காமல் அதுல நம்ம பொண்ணு எவ்ளோ சந்தோஷமா ஒரு புது வாழ்க்கைல அடி எடுத்து வைக்கப் போறானு நல்லதை மட்டும் யோசிங்க மாமா. இந்தக் கவலை சட்டுனு மறந்துரும்.” என்று அருணா கூற, பரமசிவமும் சரியென்று தலையசைத்தார்.

“அருணா சொல்றது சரி தான் அண்ணா. அது மட்டுமில்லாமல் நம்ம அனு என்ன ரொம்ப தூரத்துலயா இருக்கப் போறா? இதோ காஞ்சிபுரத்துல தான் இருப்பாள். ஏதாவது தேவைனா நாங்க பக்கத்துலயே இருக்கோம். அதை விட நீங்க அவளைப் பார்க்கனும்னு நினைச்சா அதிகபட்சம் அரைமணி நேரம் அவ்ளோ தான் அண்ணா. அதனால நீங்க எதுவும் யோசிக்காதீங்க சரியா. இப்போ நாம சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம். பாருங்க அண்ணியும் கவலையாகிட்டாங்க. நீங்க சந்தோஷமா இருந்தால் தான் அவங்களுக்கும் சந்தோஷம்.” என்று சதாசிவமும் கூற, பரமசிவம் திலகாவைப் பார்த்துவிட்டு சிரமப்பட்டுச் சிரித்தார். அவருக்கு அவகாசம் தேவையென்று மற்றவர்களுக்குப் புரிந்தது.

“சரி அக்கா மதியம் யாரும் சாப்பிடலை இன்னும். வாங்க நாம அதுக்கு போய் ரெடி பண்ணலாம்.”

“ம் வா அருணா.” என்று கூறி அங்கிருந்து பெண்கள் எழுந்து சென்றார்கள்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல, பிரதீஷ் அனாஹாவைப் பெண் பார்த்து வந்து இன்றோடு பதின்மூன்று நாட்களாகி விட்டது. இந்த இடைப்பட்ட நாட்களில் சொற்ப முறையே அவர்கள் இருவரும் பேசியிருக்கிறார்கள்.

அன்று காலை எப்போதும் போல் எழுந்து, திலகாவிற்குச் சமையலில் உதவிச் செய்துவிட்டு உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திருமணமாகப் போகிறதென அவளைக் கடையின் பக்கம் வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அப்போது திலகாவின் கைப்பேசி அடிக்க, எடுத்துப் பார்த்தாள் அனாஹா. அருணா தான் அழைத்திருந்தார். அதனால் அதை எடுத்து அவளே பேசினாள்,”சொல்லுங்க சித்தி.”

“இன்னைக்கு பார்லர் வா டா அனு. உனக்கு எந்த மேக்கப் செட்டாகுதுனு டிரையல் பார்த்துரலாம். நானும் இன்னைக்கு ப்ரீ தான்.”

“அப்படியா சித்தி ஓகே நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்.”

“நீ அக்காகிட்ட ஃபோன் கொடு நான் பேசிக்கிறேன்.” என்று கூற, அனாஹாவும் கைப்பேசியை எடுத்துப் போய் திலகாவிடம் தந்தாள்.

அருணாவும் அனாஹாவிடம் கூறியதை திலகாவிடம் கூற, திலகாவோ,”இப்போவே வா பார்க்கனும் அருணா? கல்யாணத்துக்கு தான் இன்னும் ஒரு மாசமிருக்கே?” என்று கேட்டார்.

“ஒரு மாசம்னு இழுக்காதீங்க அக்கா, நகை அப்புறம் துணி எடுக்கிறது, பத்திரிக்கை டிசைன் பார்க்கிறதுனு இப்படி ஏகப்பட்ட வேலை இருக்கு. எனக்கும் வரிசையாக புக்கிங் ஆகியிருக்கு. இந்த மாசம் நிறைய மூகூர்த்தம் இருக்கு அக்கா. அதான் இப்போவே பார்த்துட்டா கல்யாணத்தப்போ சூப்பரா ரெடி பண்ணிடலாம் நம்ம அனுவை.” என்று அருணா கூற, சரியென்று சம்மதித்தார் திலகா.

“சரி அருணா நான் அவரோட அனுப்பி வைக்கிறேன்.” என்று கூறி கைப்பேசியை வைத்தார்.

“அனு அப்பாவோட அப்படியே காஞ்சிபுரம் போயிட்டு வா சரியா. நான் அப்பாகிட்ட சொல்றேன்.”

“அம்மா ஹாஃப் அன் அவர்(half an hour) தான் ஆகும். நானே போயிக்கிறேன் மா. எதுக்கு அப்பாவை தேவையில்லாமல் அலைய விடனும்.”

“லூசு மாதிரி பேசாத அனு. கல்யாணமாகப் போகுது. இப்போ இப்படி எல்லாம் தனியா போகக் கூடாது. சொன்னா கேள்.” என்று கூறிவிட்டு அவளைப் பேச வாய்ப்புக் குடுக்காமல் கைப்பேசியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் பரமசிவத்தை அழைக்க.

திலகா கூறியதைக் கேட்டவுடன் கடையை அங்கு வேலைச் செய்யும் ஒருத்தரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு வந்து அனாஹா அழைத்துக் கொண்டு தங்களது காரில் காஞ்சிபுரத்திற்குக் கிளம்பினார் பரமசிவம்.

போகும் வழியெல்லாம் அனாஹா கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த பரமசிவம் சிரித்துக் கொண்டாலும் எதுவும் அவளிடம் கேட்கவில்லை. அனாஹாவின் முகத்திலிருந்த மகிழ்ச்சியே கூறியது அவள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று. இந்த மகிழ்ச்சியே போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று தோன்றியது அவரிற்கு.

பரமசிவம் அனாஹாவை அருணாவின் பார்லரில் விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். எப்படியும் டிரையல் பார்க்க நேரமாகும் என்பதால் சதாசிவத்தை மாலை கொண்டு வந்து விடுவதாக அருணா கூற சரியென்று கிளம்பிவிட்டார் பரமசிவம்.

இது எப்போதும் நடப்பது தான். அனாஹா காலையில் அருணா வீட்டிற்கு வந்தால் மாலை தான் போவாள். சில நேரங்களில் அங்கேயே இரண்டு மூன்று நாட்கள் தங்கி விடுவாள். சதாசிவம் தான் அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விடுவார். அதனால் தான் அருணா கூறியவுடன் பரமசிவம் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.

“உனக்கு ஹச்.டீ. மேக்கப் தான் ட்ரை பண்ணப் போறேன் அனு. உன்னோட ஸ்கின்ன நீ நல்லா மெண்டெயின் பண்ணிருக்க அதனால மேக்கப் போட ஈசியா இருக்கும்.”

“எல்லாம் உங்களோட ட்ரெயினிங்க்னால தான் சித்தி. நீங்க சொல்லலைனா எனக்கு எதுவும் தெரிஞ்சுருக்காது சித்தி.” என்று கூற, அவளின் நெற்றியில் முத்தம் வைத்தார் அருணா. அதில் லேசாகக் கண்கள் கூடக் கலங்கியது அனாஹாவிற்கு. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை அவள். அனாஹாவைப் பொறுத்தவரை அருணா நல்ல சித்தி மட்டுமல்ல ஒரு தோழியாகவும் சில நேரங்களில் நடந்து கொள்வார்.

திலகாவிற்கு அம்மா என்றால் அம்மாவாக மட்டும் தான் இருக்க வேண்டும். அதென்ன தோழியாக இருப்பது? என்று கோபம் கொள்வார். அவரிடம் பல விஷயங்கள் அனாஹாவால் பேச முடியாது. ஆனால் அருணாவிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வாள். அருணாவையும் அத்தனைப் பிடிக்கும். அதே போல் தான் அருணாவிற்கும். அனாஹா, தன் பெரிய மாமாவின் மகள் என்பதாலே அத்தனைப் பிடித்தம் அவருக்கு. இருவருக்குள்ளும் சொல்ல முடியாத ஓர் பந்தம் இருக்கிறது.


பிரதீஷ், மதிய வேளையில் வீட்டிற்கு வந்து தான் சாப்பிடுவான். அதிலும் காலையிலே அவனே சமைத்து வைத்துச் சென்று விடுவான். அவனிற்குச் சமையல் என்றால் அத்தனைப் பிடிக்கும். வீட்டில் கூடச் சமையல் செய்ய ஆள் வைக்கலாம் என்றதற்கு வேண்டாம் என மறுத்து அவனே தான் சமைத்துக் கொள்கிறான்.

அனாஹா அன்று காஞ்சிபுரம் வருகிறாள் என்று தெரிந்தவுடன் மதியம் சாப்பிட்டு விட்டு அவளைப் பார்ப்பதற்காகத் தயாராகி வர, அவனது கைப்பேசி இசைத்தது. எடுத்துப் பேசியவன் அடுத்த நொடிக் கிளம்பிவிட்டான் அவனது வீட்டிலிருந்து அந்த நபரைச் சந்திக்க.

காஞ்சிபுரத்திலிருந்து சற்று வெளியே ஓர் உணவகத்தில் தான் அந்த நபரைச் சந்திக்க ஏற்பாடுச் செய்திருந்தான். அங்கு வந்து சேர இருபது நிமிடங்கள் எடுக்கும். அதனால் அவனது காரிலே அங்குச் சென்றான். அந்த உணவகத்திற்கு வந்ததும் அந்த நபரைத் தேட, அவன் சந்திக்க வேண்டியவர் ஓர் இடத்தில் அமர்ந்திருக்க அங்குச் சென்றான் பிரதீஷ்.

“ஹை, ஐ ஆம் பிரதீஷ்.” என்று இவன் கூற, அந்த நபரும் சிரித்துக் கொண்டே எழுந்து அவனிற்குக் கை கொடுத்து,”ஹலோ” என்று தன் பெயரையும் கூறி அறிமுகம் செய்துக் கொண்டான்.

“உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்று அவன் கேட்க,

“நான் சாப்பிட்டுத் தான் வந்தேன். எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க ஆர்டர் பண்ணிக்கோங்க.”

“அச்சோ எப்படி நான் உங்களைப் பார்க்க வைச்சு சாப்பிடுறது? சரி ஜூஸ் எதுவும் குடிங்க.”

“நோ நோ சாப்பிட்ட அப்புறம் ஜூஸ் குடிக்கிறது ஹெலத்துக்கு நல்லது இல்லை. ஸோ வேண்டாம்.”

“ப்ச் இப்படிச் சொன்னா எப்படி பாஸ்?” என்று அவன் கேட்கவும், வேறு வழியின்றி,”சரி ஒரு ஆப்பிள் ஜூஸ்.” என்றான் பிரதீஷ்.

“இது நல்ல பிள்ளைக்கு அழகு.” என்றான் அவன்.

சரியாக அந்த நேரம் அங்கு வந்தான் வினய் அவனது நண்பர்களுடன். அன்று மதியம் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நூன் ஷோ போகலாமென க்ளாஸை கட் அடித்து விட்டுச் சாப்பிடுவதற்காக அங்கு வந்திருந்தனர். அப்போது தான் பிரதீஷைப் பார்த்தான் வினய். உடனே அவர்களிடம் வந்துவிட்டான்.

“ஹலோ மாமா, என்ன இங்கே?” என்று பிரதீஷைப் பார்த்துக் கேட்க, வினயை அங்கு எதிர்பார்க்காததால் சற்று அதிர்ச்சி அடைந்தான் பிரதீஷ்.

சிரித்துக் கொண்டே,”ப்ரண்டை பார்க்க வந்தேன். ஆமா உனக்கு காலேஜ் இல்லையா?” என்று கேட்டான்.

“ஹீ ஹீ நாங்க எல்லாம் படத்துக்கு போறோம் மாமா. அதான் பங்க் பண்ணிட்டேனு.” என்று சிரித்துக் கொண்டே கூற,

“அடப்பாவி, வீட்டுக்குத் தெரியுமா?”

“ஓ எஸ் அதெல்லாம் இன்ஃபார்ம் பண்ணிட்டேனே. அம்மாவும் அப்பாவும் இந்த விஷயத்துல எல்லாம் ஸ்டிர்க்ட் கிடையாது.”

“ஓ அப்போ உங்க அக்காவும் இப்படிப் பண்ணிருக்காளா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் பிரதீஷ்.

“அச்சோ அனு அக்கா எல்லாம் அப்படிப் பண்ண மாட்டா. பிகாஸ் பெரியம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது.”

“ஓ அப்போ உன்னோட அக்கா?” என்று கேட்டது பிரதீஷ் இல்லை அவனுடன் இருந்த மற்றொருவன்.

“என்னோட அக்காவையா? யாரு தன்யாவையா கேட்கிறீங்க?”

“ம் ஆமா.”

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினய் கேட்கவும் சட்டென்று அவன் பிரதீஷைப் பார்க்கவும் அவனிற்கும் என்ன கூறுவதெனத் தெரியவில்லை.

“இப்போ தான் உங்களைப் பத்திச் சொல்லிட்டு இருந்தேன். அதான் கேட்கிறான். இல்லையா?” என்று சற்று முறைத்துக் கொண்டே பிரதீஷ் கூற, அவன் ஈ என இழித்து வைத்தான்.

வினய்க்கு எதுவும் வேறு விதமாகத் தெரியவில்லை அதனால் சிரித்துக் கொண்டே,”தன்யா புக் பைத்தியம். அவளுக்கு டைம் கிடைச்சா உடனே அவளோட சி.ஏ. எக்சாம்க்கு ப்ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சுடுவா. ப்ர்ஸ்ட் அட்டம்ப்ட்ல பாஸ் பண்ணனும்னு வெறியோட படிச்சுட்டு இருக்கா.” என்று கூறினான்.

“ம் அதுவும் குட் தான்.” என்று பிரதீஷ் கூற, அதற்குள் வினயின் நண்பர்கள் கூப்பிட,

“சரி மாமா இன்னொரு நாள் ஆர அமரப் பேசலாம்.” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் பிரதீஷ், எதிரில் இருப்பவனை முறைத்துப் பார்த்து,”என்ன இப்படிப் பண்றீங்க? அவன் சின்ன பையன் அதனால் கண்டுப்பிடிக்கலை. இனிமேல் இப்படிப் பண்ணாதீங்க.” என்றான்.

“சரி ஓகே பிரதர் விடுங்க விடுங்க. ஏதோ ஆர்வக் கோலார்ல அப்படிப் பண்ணிட்டேன்.” என்று கூறி அவனைச் சமாதானப்படுத்தினான்.

சிறிது நேரம் பேசியவர்கள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட, வினயும் சாப்பிட்டவுடன் அவன் நண்பர்களுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். ஆனால் அவனிற்கு ஒரு விஷயம் உறுத்திக் கொண்டே இருந்தது. ப்ரண்டை பார்க்க வந்தவர் எதற்காக ஊருக்கு வெளியிலிருக்கும் உணவகத்திற்கு வர வேண்டுமென்று!! ஆனால் அதை வெளிப்படையாகக் கேட்கச் சற்றுச் சங்கடமாக இருந்தது அவனிற்கு. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டான் என்று இல்லை. உடனே தன் கைப்பேசியை எடுத்து அந்த விஷயத்தை அனுவிற்குச் சொல்லி விட்டுத் தான் சென்றான்.

error: Content is protected !!