காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் போய்க் கொண்டிருந்தனர் சதாசிவம் மற்றும் அருணா. அன்று ஞாயிற்றுக் கிழமை, கதிரைவேலைச் சந்தித்துப் பேசுவதற்குத் தான் போய்க் கொண்டிருந்தனர்.
திலகா இரண்டு தினங்களுக்கு முன்னரே அருணாவிற்கு அழைத்து ஜாதகம் பொருந்தி இருப்பதைக் கூறிவிட்டார். அவர் கூறியதைக் கேட்ட அருணா,”அக்கா நீங்க இப்போ ஜாதகம் பொருந்தி வந்திருக்கிறதைப் பத்தி ராதாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். வர ஞாயிறு நானும் மாமாவும் வரோம் அக்கா. அவங்க ராதாகிட்ட சொல்லி பையனோட அப்பாவை ஏதாவது கோவிலுக்கு வரச் சொல்லுங்க அக்கா. முதல்ல அந்தப் பிரச்சனையை முடிச்சுவிடுவோம். அப்புறம் அதை மனசுல வைச்சு அவங்க நம்ம அனுவை வேண்டாம்னு சொல்லிடக் கூடாது அதான்.” என்று கூற, அவரது யோசனை திலகாவிற்கும் சரியெனப்பட்டது. அதனால் ராதாவிடம் அருணா கூறியதைக் கூற அதை ராதா அப்படியே காசியம்மாளிடம் கூற, அத்தனைச் சந்தோஷம் அவரிற்கு. அதே போல் திலகா குடும்பம் மீது அவரிற்கு நன்மதிப்பு அதிகரித்தது. அதற்காகவே இந்தச் சம்மதத்தை முடிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார்.
சதாசிவம் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, அவரது எண்ணங்கள் இருபது வருடங்களுக்கு முன் நோக்கிச் சென்றது.
சதாசிவம் மற்றும் பரமசிவத்தின் அப்பா, இருவருக்கும் திருமணம் முடிந்தவுடன் சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டார். அதில் கதிரைவேலின் வீட்டின் பக்கத்து வீடு சதாசிவம் பெயரில் எழுதி வைக்கப்பட்டது. அந்த வீடு சற்றுப் பழைய வீடு. தரைதளம் மட்டுமே உள்ளது. அதுவும் சரியாக இல்லை. சதாசிவத்தின் மகன் வினய் பிறந்து ஏழு மாதங்களான நிலையில் அந்த வீட்டை மொத்தமாக இடித்து விட்டு மாடி வீடாகக் கட்டி வாடகைக்கு விடலாமென யோசித்து அதன் பணி செய்ய ஆரம்பிக்கும் போது கதிரைவேலிற்கும் சதாசிவத்திற்கும் பிரச்சனை ஆரம்பமானது.
இரு வீட்டிற்கும் பொதுவாகத் தான் பக்கவாட்டு மதில் சுவர் இருக்கும். அந்தச் சுவரையும் இடிக்கச் சதாசிவம் முடிவெடுக்க, அது தங்கள் வீட்டுச் சுவரென்று கதிரைவேல் கூற, சதாசிவத்திற்குக் கோபம் வந்து வார்த்தையை விட்டுவிட்டார். அதில் கதிரைவேலும் சதாசிவத்தைத் திட்ட, அது பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று நின்றது. பின்னர் தான் சதாசிவம் அந்த வீட்டின் தாய் பத்திரத்தைப் பார்க்க, அதில் அந்த மதில் சுவர் இல்லை. அதில் அவர் தவறு புரிந்தாலும் மன்னிப்புக் கேட்க அவரின் மனம் இடமளிக்கவில்லை. அதனால் அதை அப்படி விட்டுவிட்டார். கதிரைவேலின் வீட்டின் மதில் சுவரிற்குப் பக்கத்திலே இன்னொரு சுவர் அமைத்து வீட்டையும் கட்டி முடித்தார். வீடு முடியும் வரை சதாசிவம் அங்கு வந்தது மிகவும் குறைவு. பரமசிவம் தான் அத்தனையும் பார்த்துக் கொண்டார்.
இப்போது அதை எல்லாம் நினைத்துக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, அருணா அவரின் கையைப் பிடித்து அவரை நிகழ்வுக்குக் கொண்டு வந்தார்.
“என்ன யோசனை மாமா?”
“இல்லை அன்னைக்குக் கொஞ்சம் அமைதியா போயிருக்கலாம். இப்போ இது தேவையே இருந்திருக்காது.”
“ம் ஆமா மாமா நீங்க சொல்றது சரி தான். ஆனால் இப்போ அதை யோசிக்கிறதுல பலன் எதுவுமில்லை மாமா. வள்ளுவரே சொல்லிருக்கார்,
தீயினாற் சுட்டப்புண் உள்ளாரும் ஆராதே
நாவினாற் சுட்ட வடு.
அதனால எப்பவும் நாம பேசும் போது யோசிச்சு தான் பேசனும். அதுவும் கோபத்துல வார்த்தையை விட்டுட்டா அப்புறம் அதை அள்ள முடியாது. இனிமேல் சூதானமா இருந்துக்குவோம் மாமா அவ்ளோ தான்.” என்று அருணா கூற, சரியென்று தலையசைத்தார் சதாசிவம்.
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்திபெற்ற விஷ்ணு கோவில். அங்கு தான் கதிரைவேலை சந்திக்க முடிவெடுத்துள்ளனர். திலகாவை அழைத்ததற்கு அவர் பரமசிவம் வீட்டிலிருப்பதால் வர முடியாதெனக் கூறிவிட்டார். அதனால் அருணாவும் சதாசிவம் மட்டும் தான் கோவில் வந்தனர்.
கோவிலிற்கு வந்த அருணாவும் சதாசிவமும் முதலில் சாமியை தரிசித்து விட்டு வரலாம் என்று முடிவெடுத்து உள்ளே சென்றார்கள். சாமியைத் தரிசித்து விட்டு பிரகாரத்தைச் சுற்றிவிட்டு கோவிலின் உள்ளே ஓர் ஓரத்தில் தரையில் அமர்ந்தார்கள்.
காசி இல்லம், காசியம்மாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கதிரைவேல்.
“என்ன தான் அம்மா பிரச்சனை உங்களுக்கு? நான் தான் வேண்டாம்னு சொல்றேன். அப்புறமும் இப்படிப் பண்றீங்களே!! ஏன் அம்மா எதுவும் கேட்கக் கூடாதுனு இருக்கீங்க?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் கதிரைவேல்.
“இங்கே பார் அந்தத் தம்பியே மன்னிப்புக் கேட்கிறேன்னு சொல்றார். உனக்கு அதை ஏத்துக்க என்ன பிரச்சனை? அதை முதல்ல சொல்லு.”
“ம்மா மன்னிப்புக் கேட்டுட்டா எல்லாம் சரியா போச்சா? அதுக்காக பேசுனது இல்லைனு ஆகிடுமா அம்மா?”
“இங்கே பார் கதிரு தப்பைச் செஞ்சுட்டு அது தப்புன்னு உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறது எல்லாம் பெரிய விஷயம். அப்படி இருக்கிறப்போ நீ இப்படி முரண்டுப் பிடிக்கிறது நல்லா இல்லை.” என்று அவரும் கோபத்துடன் கூறினார்.
“அம்மா நான் ஒன்னும் முரண்டு பிடிக்கலை. இப்போ அந்த சதாசிவத்தோட அண்ணனோட பொண்ணை நம்ம வீட்டுல குடுக்கனும்னு தான் மன்னிப்புக் கேட்க வராங்க. இல்லாட்டி அவன் வருவானா?”
“சரி நீ சொல்றது சரிதான். அப்படியே இருந்தாலும் அண்ணன் பொண்ணுக்காக அந்தத் தம்பி மன்னிப்புக் கேட்குதுனா அது எவ்வளவு பெரிய விஷயம். அப்போ அந்தத் தம்பி நல்லவனா தான இருக்கனும். அப்போ ஏதோ ஒரு சூழ்நிலை அப்படி நடந்துருச்சு. அதை மறந்துட்டு நம்ம பையனோட எதிர்காலத்தைப் பத்தி யோசி. எவ்வளவு நாளா அவனுக்குப் பொண்ணு பார்க்கிறோம்? எதுவும் சரியா வர மாட்டீங்கிது. வந்தால் அவனுக்குப் பிடிக்கலை. அப்படி இருக்கும் போது இந்த இடத்தை விட எனக்கு மனசு வரலை. உன் பையனுக்குக் கல்யாணம் நடக்கனும்னு நீ நினைச்சா என் கூடக் கிளம்பிக் கோவிலுக்கு வா. இல்லாட்டி உன் இஷ்டம்.” என்று அவர் கூறிவிட, கதிரைவேலிற்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.
அமைதியாக அவர் அமர்ந்துவிட, சற்று யோசிக்கட்டும் என்று காசியம்மாளும் அமைதியாக இருந்தான். அதன் பலன் கதிரைவேல் கோவிலிற்கு வரச் சம்மதித்தார்.
காசியம்மாளிற்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஏதோ இப்போதே திருமணம் நடந்துவிட்டது போல் அத்தனை மகிழ்ச்சி அவரது முகத்தில். நொடியும் தாமதிக்காமல் கதிரைவேலையும் சுமித்ராவையும் அழைத்துக் கொண்டு கோவிலிற்குக் கிளம்பிவிட்டார்.
அதன் பலன் இதோ பத்து நாட்கள் கழித்து கதிரைவேல் குடும்பமாகப் பரமசிவம் வீட்டில். ஆம் இன்று பெண் பார்க்கும் வைபவம் நடக்கிறது.
முதலில் சதாசிவம் கதிரைவேலிடம் மன்னிப்புக் கேட்டது தெரிந்து குதித்த பரமசிவத்தை அருணா அடக்கிவிட்டார். அதன் பின்னர் அனைத்தும் துரிதமாக நடந்தது. பிரதீஷ் அவனது இராஜஸ்தான் ட்ரிப்பில் இருந்து வந்தவுடன் அவனை வீட்டிற்கு அழைத்து இது போல் விஷயத்தைக் கூற முதலில் மறுத்தவனையும் சுதீஷ் பேசிக் கரைத்துச் சம்மதிக்க வைத்துவிட்டான்.
அதே போல் தான் அனாஹாவிடம் இவ்விஷயத்தைக் கூற அத்தனை அதிர்ச்சி அவளிற்கு. இதைச் சுத்தமாக அவள் எதிர்பார்க்கவில்லை. திலகா தான் அதையும் இதையும் கூறி அவளைச் சம்மதிக்க வைத்தார்.
இன்று, அருணாவும் சதாசிவமும் தங்கள் பிள்ளைகள் சைதன்யா மற்றும் வினயுடன் பரமசிவத்தின் இல்லத்திற்கு வந்துவிட்டனர். சைதன்யா மற்றும் வினய் இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. தங்கள் வீட்டில் ஓர் விசேஷம் நடக்கப் போகிறது என்று அத்தனை மகிழ்ச்சியாக இருந்தனர்.
அருணாவும் சைதன்யாவும் அனாஹாவின் அறையில் இருந்தனர். அருணா தான் அனாஹாவிற்கு அலங்காரம். மணப்பென் அலங்காரம் இல்லை. ஆனால் மெலிதாக சின்ன மேக்கப் செய்திருந்தார் அருணா. புடவையில் அத்தனை அம்சமாக இருந்தால் அனாஹா.
“அக்கா செம க்யூட்டா இருக்க.” என்று கூறி அனாஹாவின் கண்ணத்தைப் பிய்த்து முத்தம் வைத்தாள் சைதன்யா.
“தன்யா இப்போ தான் அனுவுக்கு மேக்கப் பண்ணி முடிச்சேன். நீ கலைச்சு விட்டுராதா. அமைதியா இரு நீ சரியா.” என்று கூற, சைதன்யா அப்படியை அமைதியாகி விட்டாள்.
அம்மா எது கூறினாலும் மறுபேச்சு எதுவும் இதுவரை சைதன்யா பேசியது இல்லை. அதற்காக அருணா அவளை அடக்குகிறார் என்று அர்த்தம் இல்லை. சைதன்யாவைப் பொறுத்தவரை அம்மா எதுக் கூறினாலும் சரியாகத் தான் இருக்கும். அவளிடம் அவளின் தோழி யாரென்று கேட்டால் கண்டிப்பாக யோசிக்காமல் தன் அம்மா தான் என்று கூறுவாள். எதற்கெடுத்தாலும் அவளிற்கு அம்மா வேண்டும். சாதாரண ட்ரெஸ் எடுத்தால் கூட அவள் முதலில் கேட்பது அம்மா தான். அவர் சரியென்றால் எடுத்துக் கொள்வாள். அவளிற்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இருக்கிறது என்று கேட்டால் கண்டிப்பாகப் போய் அருணாவிடம் தான் கேட்பாள். அத்தனை அம்மா கோந்து அவள். அனாஹா கூட எத்தனை முறை கூறிவிட்டாள் ஏன் அருணா கூடவும் தான் ஆனால் அவளால் அவளதுப் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
வெளியே அனைவரும் பேசிக் கொண்டிருக்க, வேண்டா வெறுப்பாகத் தான் அங்கு அமர்ந்திருந்தான் பிரதீஷ். ஏதோ தன் அண்ணன் கூறிவிட்டான் என்று தான் வந்திருக்கிறான். பெண்ணைப் பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்று கூற வேண்டுமென்ற முடிவுடன் பெண் வருவதற்காகக் காத்திருந்தான்.
அதே போல் தான் பரமசிவமும். அவரிற்கு விருப்பமே இல்லாமல் தான் அனைவரையும் வரவேற்றார். ஆனால் பிரதீஷை பார்த்ததும் அவரது மனம் அப்படியே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். அத்தனை கம்பீரமாக அவன் உள்ளே வருவதைப் பார்த்ததும் அவனிற்குத் தன் பெண்ணைப் பிடிக்க வேண்டுமென்று அப்போதே வேண்டுதல் வைத்துவிட்டார்.
“சரி நம்மளே பேசிட்டு இருந்தால் எப்படி? பொண்ணை வரச் சொல்லுங்க.” என்று காசியம்மாள் கூற,
“அச்சோ இதோ போய் கூட்டிட்டு வரேன்.” என்று திலகா மாடி ஏறி அனாஹாவின் அறைக்குச் சென்றார்.
அனாஹாவின் அறையில் எழிலோவியமாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்ததும் அவரது கண்களே பட்டுவிடும் போல் இருந்தது திலகாவிற்கு. உள்ளே நுழைந்தவர் அனாஹாவை நெட்டி முறித்தவர்,”வா அனு. உன்னைப் பார்க்கனும்னு எல்லாரும் சொல்றாங்க. அப்புறம் மாப்பிள்ளை நீல கலர் ஷர்ட் போட்டிருக்கிறார். உனக்கு ரொம்ப பொறுத்தமா இருப்பார்.” என்று பேசிக் கொண்டே அவளை அழைத்துச் சென்றார். அவர்களின் பின்னயே அருணாவும் சைதன்யாவும் கீழே சென்றார்கள்.
கீழே வந்தவுடன் திலகா அனாஹாவை அனைவருக்கும் வணக்கம் கூறும்படிக் கூற, அவளும் அனைவருக்கும் வணக்கம் கூறிவிட்டு பரமசிவத்தின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
காசியம்மாளிற்கும் சுமித்ராவிற்கும் அனாஹாவைப் பார்த்தவுடன் திருப்தி. பிரதீஷிற்கு ஏற்றப் பெண்ணாக இருப்பாள் என்று நம்பினர். காசியம்மாள் சுமித்ராவைப் பார்க்க அவர் மற்றவர்கள் அறியா வண்ணம் கண்ணை மட்டும் சிமிட்டித் தன் சம்மதத்தைக் கூறினார்.
“என் பொண்ணு அனாஹா.” என்று அவளை அறிமுகப்படுத்தி விட்டு அருணாவையும் கூடவே சைதன்யாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார் பரமசிவம் அனைவரிடமும்.
“எனக்கு இரண்டு பசங்கனு உங்களுக்குத் தெரியும். என் பெரிய பையன் சுதீஷ். என்னோடவே சேர்ந்து தொழில் பண்றான். என் சின்ன பையன் பிரதீஷ். காஞ்சிபுரத்துல தனியா ட்ராவல்ஸ் அப்புறம் டூர்ஸ் கம்பெனி வைச்சுருக்கிறான். அவனோட ட்ராவல்ஸ்ஸ பத்து கார், 3 சொகுசு வேன், 2 பஸ் இருக்கு. இதுல நான் 4 கார் வாங்க தான் பணம் கொடுத்தேன். அதை அப்படியே இரண்டு மடங்கா வளர்த்தது பிரதீஷ் தான். அப்புறம் சொந்தமா அங்கேயே வீடு வாங்கிக் கொடுத்திருக்கேன். இங்கேயும் வீடு இருக்கு. அப்புறம் என்னோட காம்ப்ளெக்ஸ்ல பாதி அவனுக்குத் தான். உங்க பொண்ணை என் பையனுக்கு நீங்க தாராளமா கொடுக்கலாம். நல்லா பார்த்துப்பான்.” என்று கதிரைவேல் கூற, திலகாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
“நீங்க மாப்பிள்ளை பேர்ல இருக்கிற சொத்தைப் பத்திச் சொல்லிட்டீங்க. அதே மாதிரி என் பொண்ணுக்கு இந்த வீடு, அப்புறம் எங்க கடையும் கிடவுன்னும் எங்களோடது தான். இந்த வீடுப் போக இன்னொரு வீடு இருக்கு எங்களுக்கு. அப்புறம் இருநூறு பவுன் நகைச் சேர்த்து வச்சிருக்கிறோம். எங்களுக்கு அவள் ஒரே மகள். அதனால எங்களோடது எல்லாம் அவளோடது தான்.” என்று பரமசிவமும் கூறினார்.
“ரொம்ப சந்தோஷம். ஆனால் சொத்து,பணம்,நகை எல்லாம் இரண்டாம் பட்சம் தான் எங்களுக்கு. எங்களைப் பொறுத்தவரை என்னோட பேரனுக்கு உங்க பொண்ணைப் பிடிக்கனும். உங்க பொண்ணுக்கு எங்க பையனும் பிடிக்கனும் அவ்ளோ தான் வேணும் எங்களுக்கு.” என்று காசியம்மாள் கூற, அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் அமைதியாக இருந்தனர்.
அந்த நேரம் பிரதீஷ், சுதீஷ் காதில் ஏதோ கூற, அவன் அதை அப்படியே காசியம்மாளின் காதில் கூற, உடனே அவர்,”என் பேரன் உங்க பொண்ணு கூடத் தனியா பேசனும்னு விருப்பப்படுறான்.” என்றார்.
“ஓ பேசட்டுமே.”என்று பரமசிவமும்,
“அதெல்லாம் எதுக்குங்க.” என்று திலகாவும் ஒரே நேரத்தில் கூற, பரமசிவம் மற்றவர்கள் அறியாமல் திலகாவை முறைத்துப் பார்த்தார்.
“இப்போ எல்லாம் பேசிப் பார்க்காமல் யாரும் சரின்னு சொல்றது இல்லை. நம்ம காலம் மாதிரி இல்லை திலகா பெத்தவங்க சொல்றவங்க முகத்தையே பார்க்காமல் கல்யாணம் பண்றதுக்கு. அதனால அவங்க போய் பேசட்டும்.” என்று கூற, திலகா மறுக்க முடியாமல் சரியென்று தலையசைக்க, உடனே பரமசிவம்,”அருணா நீ கூட்டிட்டு போ மா அவங்களை. மேல உள்ள ஹால்ல பேசட்டும்.” என்றார்.
அவர் அப்படிக் கூறவுடன் பிரதிஷூம் அனாஹாவும் எழுந்து கொண்டனர். அருணா முன்னே செல்ல இவர்கள் பின்னால் சென்றனர். அருணா அவர்களை விட்டுவிட்டு கீழே வந்துவிட, அனாஹாவும் பிரதிஷூம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசினர். கீழே இருந்து பார்த்தவர்களுக்கு அத்தனை திருப்தி.
சிறிது நேரத்தில் இருவரும் கீழே வர, அத்தனை பேரும் இருவரின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரும் தங்களுக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம் என்று கூற, பெரியவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தங்கள் பிள்ளைகளின் கூற்றில்.