அத்தியாயம் 3

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அருணா மற்றும் சதாசிவத்தின் இல்லம். சதாசிவம் அரசு தேர்வில் வெற்றி பெற்றவர் முதலில் வேலைச் செய்தது தேனி மாவட்டத்தில் தான். அப்போது அவரிற்குத் திருமணம் ஆக வில்லை. அதன் பிறகு அவர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றல் கிடைக்க நிறையப் பேரிடம் கேட்டு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத் தான் அவரிற்கு மாற்றம் கிடைத்தது. மாற்றம் கிடைத்தவுடன் தான் அருணாவைத் திருமணம் செய்தார். அருணா, சதாசிவம் மற்றும் பரமசிவத்தின் தாய்மாமா மகள் தான். திருமணத்திற்குப் பிறகு சதாசிவம் வேலைக்குச் சென்று விட்டால் வீட்டில் தனியாக இருக்க அவரிற்குக் கஷ்டமாக இருக்க ஏதாவது கற்றுக் கொண்டால் நன்றாக இருக்குமென நினைத்து அழகுக் கலைப் பயிற்சி பெற்றார். அதை அப்படியே விட்டுவிடாமல் அதில் பெரிய அளவில் பயின்று சான்றிதழும் பெற்று இப்போது தனியாக அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்தோடு பலருக்கு அவரே கற்றும் தருகிறார். அவரது அழகு நிலையம் காஞ்சிபுரத்தில் நல்ல பிரசித்தி பெற்ற ஒன்றாகத் திகழ்கிறது. நிறையத் திருமண நிகழ்ச்சிக்கு இவரைத் தான் மணப்பெண் அலங்காரத்திற்கு அழைக்கின்றனர்.

சதாசிவம் மற்றும் அருணா தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் சைதன்யா, இருபத்தி இரண்டு வயது நிரம்பிய யுவதி. இளங்கலை வணிகவியல் படித்து விட்டு இப்போது பட்டய கணக்காளர் ஆவதற்குப் படித்துக் கொண்டிருக்கிறாள். இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெற்று ஓர் பட்டய கணக்காளர் நிறுவனத்தில் ஆர்டிகல்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறாள். அவர்களது இரண்டாவது மகன் வினய், பத்தொன்பது வயது நிரம்பிய வாலிபன். அனைவரையும் போல் இவனும் பொறியியல் படிப்பு தான் படிக்கின்றான். காஞ்சிபுரத்திலே ஓர் பொறியியல் கல்லூரியில் இப்போது ட்ரெண்டில் இருக்கும் படிப்பான செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (Artificial Intelligence and Data Science) துறையில் முதல் வருடம் படிக்கிறான்.

வீட்டிற்கு வந்த அருணாவிற்குப் பலத்த யோசனை. அடுத்து என்ன நடக்குமென்று. ஒரு வேளை ஜாதகம் பொருந்தி வந்தால் தான் நினைத்தது போல் சதாசிவம் சென்று மன்னிப்பு கேட்பாரா? அப்படிக் கேட்டாலும் கதிரைவேல் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி நடப்பார்கள் என்று பல யோசனைகள்.

அருணா வந்ததிலிருந்து அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த சதாசிவம் அவரிடம் வந்து,”என்ன அருணா யோசனை எல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே அவரின் அருகில் அமர்ந்தார்.

“ஒன்னுமில்லை மாமா எல்லாம் அக்கா பேசினதைப் பத்தி தான் யோசிக்கிறேன்.” என்று கூறிவிட்டுச் சிறு இடைவெளி விட்டவர் நன்றாக அவரைப் பார்க்கும்படி திரும்பியவர் அவரின் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டவர்,”மாமா நான் ஒன்னும் சொல்வேன் நீங்க கோபப்படாமல் கேட்கனும்.” என்ற பீடிகையுடன் அவர் கூறினார்.

“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு? என்ன விஷயம்னு முதல்ல சொல்லு அருணா. அப்புறம் நான் கோபப்படுறதைப் பத்திப் பார்த்துக்கலாம்.”

“அது வந்து மாமா…” என்று சற்றுத் தயங்கியவர் பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,”மாமா நீங்க ஏன் கதிரைவேல்கிட்ட மன்னிப்புக் கேட்கக் கூடாது?” என்று கேட்டார்.

“இதுல எதுக்கு தயங்குற? ஏற்கனவே முடிவுப் பண்ணது தான? அண்ணி போய் பொருத்தம் பார்த்துட்டு வரட்டும். அதுக்கு அப்புறம் நாம பார்த்துக்கலாம்.”

“இல்லை மாமா, அக்கா பொருத்தம் பார்க்கிறது அடுத்தது. நீங்க தான சொன்னீங்க தப்பு உங்க மேலனு அப்போ நீங்க மன்னிப்பு கேட்கிறதுல எதுக்கு தயங்கனும்?” என்று கேட்க, யோசனையுடன் அவரைப் பார்த்தார் சதாசிவம்.

“என்ன சொல்ல வர அருணா?”

“மாமா நம்ம அனு ஜாதகம் அந்த வீட்டுப் பையனோட ஜாதகத்தோட பொருத்தம் இருந்தாலும் இல்லைனாலும் நீங்க போய் மன்னிப்புக் கேளுங்கனு சொல்றேன்.” என்று அருணா கூற, அதிர்ச்சியாகப் பார்த்தார் சதாசிவம். எதுவும் கூறவில்லை அவர்.

“இங்கே பாருங்க மாமா நான் சொல்றதைக் கேட்டு உங்களுக்குக் கோபம் வரலாம். ஆனால் நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிங்க. திலகா அக்கா பேசுறதைப் பார்த்தால் அவங்க இந்தச் சம்மதத்தை ரொம்ப எதிர்பார்க்கிறாங்க. எனக்குக் காரணம் தெரியலை ஆனால் நம்ம அனுவுக்கு அந்தப் பையன் பிரதீஷை முடிக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆசைப்படுறாங்க. ஒரு வேளை ஜாதகம் பொருந்தி அவங்க வீட்டுல இந்தச் சண்டையை மனசுல வைச்சுக்கிட்டு வேண்டாம்னு சொல்லிட்டா கண்டிப்பா அக்காவோட கோபம் நம்ம மேல திரும்பும். அதனால் தேவையில்லாத மனஸ்தாபங்கள் நமக்கும் பெரிய மாமா குடும்பத்துக்கும் வரும். அக்கா நம்மளை ஏதாவது சொல்லிட்டா அப்புறம் பெரிய மாமா சும்மா இருக்க மாட்டாங்க. அக்காவோட சண்டைப் போடுவாங்க. அப்புறம் உறவு நிலைக்காது மாமா. அதை நம்மால தாங்கிக்க முடியாது மாமா. அதுக்காக தான் சொல்றேன்.” என்று அவர் பொறுமையாக எடுத்துக் கூற, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் சதாசிவம்.

“நீங்க யோசிங்க மாமா. யோசிச்சு நல்ல முடிவா எடுங்க.” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, யோசனையில் ஆழ்ந்தார் சதாசிவம்.

அருணா கூறியதைப் போல் கதிரைவேல் அனுவை வேண்டாமெனக் கூறினால் கண்டிப்பாக திலகாவின் கோபம் தங்கள் மேல் விழுக அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அருணா கூறியது போல் திலகாவிற்கும் பரமசிவத்திற்கும் கண்டிப்பாகச் சண்டை வரும். அதனால் குடும்பத்தில் தேவையில்லாத மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்ன தான் சேர்ந்து ஒரே வீட்டில் இல்லையென்றாலும் மனதால் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள். பிள்ளைகளிடம் இதுவரை ஒருவரும் வேறுபாட்டைக் காண்பித்தது இல்லை. தப்பு தன் மேல் இல்லையென்றால் தைரியமாக இருக்கலாம் ஆனால் பிரச்சனையின் அடித்தளம் தான் தான். அப்படி இருக்கும் போது வீம்பு பார்ப்பது குடும்பத்திற்கு நன்மை பயக்காது என்பது அவருக்கும் புரிந்தது. அருணா கூறியது போல் தானே சென்று கதிரைவேலிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டார்.

உடனே உள்ளே சென்று அருணாவிடம்,”அருணா நீ சொன்ன மாதிரியே நான் போய் அவர்கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன்.” என்று அவர் கூற, அத்தனை சந்தோஷம் அருணா முகத்தில்.

“ரொம்ப சந்தோஷம் மாமா. ஆனால் நாம போறது பெரிய மாமாவுக்குத் தெரிய வேண்டாம்.” என்று கூற, கேள்வியாகப் பார்த்தார் சதாசிவம்.

அவரின் பார்வைப் புரிந்த அருணா,”இங்கே பாருங்க மாமா நீங்க போய் மன்னிப்புக் கேட்கிறேன்னு சொன்னா பெரிய மாமா வேண்டாம்னு சொல்ல நிறைய சான்ஸ் இருக்கு. அதனால் தான் சொல்றேன் அவருக்குத் தெரிய வேண்டாம்.” என்றார்.

“ப்ச் என்ன பேசுற அருணா? ஊருக்குள்ள நாம போகும் போது எப்படி அண்ணாவுக்குத் தெரியாமல் இருக்கும்?”

“நாம கோவிலுக்கு வந்தோம்னு சொல்லிடலாம் மாமா. அக்காவையும் துணைக்குக் கூட்டிட்டு போகலாம். நான் முன்னாடி சொன்ன மாதிரி கோவில்ல வைச்சு பார்த்துடலாம்.” என்று கூற,

“சரி விஷயம் அதுக்கு அப்புறம் அண்ணனுக்குத் தெரிய வரும்ல அப்போ அவர் இப்படிச் செஞ்சோம்னு தெரிஞ்சா ரொம்ப வருத்துப்படுவார்.”

“அதைப் பத்தி நீங்கக் கவலைப்படாதீங்க. பெரிய மாமாகிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு. நான் பார்த்துக்கிறேன்.” என்று கூற, அவரிற்கும் சரியென்று பட்டது.

“ஆமாம் ஆமாம் அண்ணாவுக்குத் தான் நீ என்ன சொன்னாலும் வேதவாக்கு மாதிரி நினைப்பாரே. நீயே பேசிடு.” என்று வேண்டா வெறுப்பாகப் பேசுவது போலிருந்தாலும் அவரின் மனதில் எதுவுமில்லை. அருணா பிறந்த போது பரமசிவத்திற்கு ஆறு வயது. சதாசிவம் அவரின் அம்மா வயிற்றிலிருந்த போது தங்கை வேண்டுமென் மிகவும் ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. அதனால் மூன்று வருடம் கழித்து அருணா பிறந்த போது அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. கூடவே வைத்துச் சுத்துவார். அருணா என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார். அருணா மேல் அவருக்குச் சற்றுப் பாசம் அதிகம். அது சதாசிவத்திற்கும் நன்றாகத் தெரியும். திலகாவிற்கும் தெரியும். அதனாலயே அருணாவை அவரிற்குப் பிடிக்காமல் போய்விட்டது.

“உங்களுக்குப் பொறாமை பெரிய மாமா உங்களை விட என் பேச்சைக் கேட்கிறார்னு.”

“ஏய் ஆமா ஆமா நாங்க பொறாமை படுறோம். போ போய் ஏதாவது வேலை இருந்தால் போய் பார்.” என்று கூறி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். போகும் அவரைச் சிரித்துக் கொண்டே பார்த்தார் அருணா.


கடிகாரத்தில் நான்கு மணி ஆவதற்கு இன்னும் பத்து நிமிடங்களாகப் போகும் நேரம் திலகா தன் கைப்பேசியை எடுத்து பரமசிவத்திற்கு அழைத்தார்.

கடையிலிருந்த பரமசிவம் தன் கைப்பேசி ஒலி எழுப்புவதைப் பார்த்து யார் அழைக்கிறார்கள் என்று எடுத்துப் பார்த்தார். திலகா என்ற பெயரைப் பார்த்தவுடன் அதை எடுக்காமல் அப்படியே விட்டுவிட, முழுவதுமாக ரிங்க் அடித்து நின்றது. அவர் எடுக்கவில்லை என்றவுடன் மீண்டும் அழைத்தார் திலகா.

அதில் எரிச்சலடைந்த பரமசிவம் தன் கைப்பேசியை எடுத்து,”ப்ச் என்ன வேணும் உனக்கு? எடுக்கலைனா விடனும். அதை விட்டுட்டு எதுக்கு திரும்பத் திரும்பக் கூப்பிட்டே இருக்க?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டான்.

“அதான் திரும்பத் திரும்பக் கூப்பிடுறேன்னு தெரியுதுல அதுலயே தெரிய வேணாமா முக்கியமான விஷயமா தான் இருக்கும்னு.”

“ப்ச் இப்போ எதுக்கு கூப்பிட்ட அதை மட்டும் சொல்லு.”

“நான் தான் மதியம் நீங்க சாப்பிட வந்த போது சொன்னேன்ல சாயந்தரம் ஜோசியரைப் பார்க்கப் போகனும்னு மறந்துட்டீங்களா? நான் ரெடியா இருக்கேன். நீங்க கிளம்பி வாங்க.”

“நான் எங்கேயும் வரலை. நான் சொல்ற எதையும் கேட்காமல் நீ தான எல்லா முடிவும் எடுத்த அதனால் நீயே போய் பார்த்துட்டு வா. நான் எங்கேயும் வரலை.”

“என்ன நீங்க இப்படிப் பேசுறீங்க? அனு உங்களுக்கும் தான் பொண்ணு. ஏதோ மூனாவது ஆள் மாதிரி பேசுறீங்க?”

“நான் வரலைனு சொல்லிட்டேன் அவ்ளோ தான். இதுக்கு மேல என்னைக் கூப்பிடாதா.” என்று கூறி கைப்பேசியை வைத்து விட திலகாவிற்கு அத்தனை ஆத்திரம். இருந்தாலும் அதைக் காட்ட இது நேரமில்லை என்று முடிவெடுத்துத் தான் மட்டுமே கிளம்பினார் ஜோசியரைப் பார்க்க.


இராஜஸ்தான் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு மகாராஜாக்களின் நகரம் என்னும் சிறப்புப் பெயரும் உள்ளது. அதே போல் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த மாநிலத்திலுள்ள ப்ளூ சிட்டி என்று அழைக்கப்படும் ஜோத்பூர் மாவட்டத்தில் தான் பிரசித்தி பெற்ற கோட்டை மேஹரங்கர் கோட்டை.

மேஹரங்கர் கோட்டை ஜோத்பூர் மாவடத்தின் மிகப் பெரிய மற்றும் அழகான கோட்டையாகும். இந்தக் கோட்டையின் மேலிருந்து பார்த்தால் மொத்த ப்ளூ சிட்டியும் தெரியும். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் கோட்டையும் நகரமும் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.

இத்தனை மகத்துவம் வாய்ந்த கோட்டையின் மேல் நின்று சூரியன் அஸ்தமிக்கும் அந்த அழகிய காட்சியைத் தன் கண்களிலும் கையில் வைத்திருந்த கேமிராவிலும் சிறை பிடித்துக் கொண்டு அதன் பிரமிப்பை பார்த்து மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான் பிரதீஷ்.

இருபத்தி ஏழு வயது இளைஞன். ஐந்தடி பத்து இன்ச் உயரம். உடலோடு ஒட்டிய சதையைப் பார்த்தாலே நன்றாகப் புரிந்து கொள்ளலாம் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறான் என்று.

வணிக நிர்வாகத்தில் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்று இப்போது சொந்தமாக PK travels மற்றும் Wanderly tours என்ற தொழிலை நடத்தி வருகிறான். அவனது நிறுவனத்தின் மூலம் தன் நண்பர்களுடன் இரண்டு தினத்திற்கு முன்பு தான் இராஜஸ்தான் வந்தான்.

“வாவ் வ்யூ டா மச்சான். நல்ல வேளை நீ இங்கே கூட்டிட்டு வந்த. இல்லாட்டி இதை எப்போ நான் பார்த்துருப்பேன்னே தெரியலை மச்சான்.” என்று பிரதீஷின் நண்பன் அசோக் கூற, அதை அவர்களுடன் வந்த மற்ற மூவரும் ஒப்புக் கொண்டனர்.

“என்னோட க்ளைன்ட் போயிட்டு வந்து ரொம்ப நல்ல ரிவ்யூஸ் கொடுத்தாங்க இந்த ப்ளேஸ்க்கு. அதான் டைம் கிடைச்சா கண்டிப்பா போகனும்னு என்னோட டு டூ லிஸ்ட்ல இருந்துச்சு. நீங்களும் எங்கேயாவது போகலாம்னு சொன்னீங்களா உடனே இந்த இடம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. அதான் டைம் வேஸ்ட பண்ணாமல் எல்லாத்தையும் புக் பண்ணிட்டேன்.”

“நல்லது பண்ண மச்சான். ப்ரண்ட்ஸ் ட்ரிப்னாலே ஜாலியா தான் இருக்கும். இதுல இந்த மாதிரி ஒரு ப்சென்ட் ப்ளேஸ்னா கேட்கவா வேணும். சூப்பர் மச்சான்.” என்று ஒவ்வொரு வரும் வித விதமாக அவனைப் புகழ அவனிற்குச் சற்று கூச்சம் வந்துவிட்டது.

“டேய் போதும் எல்லாரும் நிப்பாட்டுங்க. இப்படியே புகழ்ந்துட்டு இருந்தா மத்த இடத்தை எப்போ போய் பார்க்கிறது? வாங்க வாங்க போகலாம். அடுத்து ஜஸ்வந்த் தாடா போகனும். அது ஒரு மெமரோயில். மஹாராஜா ஜஸ்வந்த் சிங் II நினைவாக அவரோட பையன் மஹாராஜா சர்தார் சிங் கட்டிய கோட்டை. தாஜ்மஹால் கட்டிய மகாரான மார்பில்ல தான் இந்தக் கோட்டையையும் கட்டிருக்காங்க. இங்கே நம்ம போய் போட்டோ எடுத்தால் சூப்பரா இருக்கும். அதனால வாங்க சீக்கிரம் போகலாம்.” என்று கூறி அவர்கள் அனைவரையும் கீழே அழைத்துச் சென்றான் பிரதீஷ்.

இத்தனைச் சந்தோஷமாய் தன் நண்பர்களுடன் அவனது நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கும் பிரதீஷ், அவனது வீட்டில் அவனிற்குப் பெண் பார்க்கிறார்கள் என்னும் செய்தி கேட்க நேர்ந்தால் அவனது சந்தோஷம் இதே போல் நிலைத்திருக்குமா என்பது கேள்விக் குறி தான்.

error: Content is protected !!