அத்தியாயம் 2

சிவம் ட்ரேடர்ஸ் என்ற பெயர்ப் பலகை கொண்ட கடையில் ஆட்கள் மும்முரமாக வேலைச் செய்து கொண்டிருந்தார்கள். அன்று வந்த சரக்குகளைச் சரி பார்த்துப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்வதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் பரமசிவம் மற்றும் திலகாவின் அன்பு மகள் அனாஹா.

இருபத்தி ஐந்து வயது நிரம்பிய யுவதி. கோதுமை நிறத்தில், மாசு மருவற்றப் பளிங்கு போல முகம் ஜொலிப்பைப் பார்த்தால் அவளது சருமத்தை நன்றாகப் பராமரிக்கிறாள் என்று தெரிந்துவிடும். சருமம் மட்டுமின்றி அவளது முடியும் நலல் கரு கரு என்று அடர்த்தியாக இருக்கும். ஆனால் நீளம் சற்று குறைந்து நடு முதுகு வரை தான் இருக்கும். ஐந்தரை அடி உயரத்திற்கு ஏற்ற எடையுடன் பார்க்க எழிலோவியமாக யாரையும் சட்டென்று ஈர்த்துவிடுவாள்.

கணினி பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்று விட்டு வேலைக்குப் போக விரும்பாமல், வீட்டிலும் இருக்கப் பிடிக்காமல் தந்தைக்கு உதவியாகத் தொழிலில் இறங்கிவிட்டாள். அவர்களது தொழில் பருப்பு, மசாலா பொருட்கள் மற்றும் நவதானியங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைச் செய்வது தான்.

சிவம் ட்ரேடர்ஸ், பரமசிவம் மற்றும் சதாசிவத்தின் தந்தைக் காலத்திலிருந்தே இருக்கிறது. பள்ளிப் படிப்பை முடித்தவுடனே பரமசிவம் கடையில் பொறுப்பேற்றுக் கொள்ள, சதாசிவமோ கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுக் கடைக்கு வர இஷ்டமில்லை என்று கூறி அரசு தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்று இப்போது மண்டல துணை வட்டாச்சியராகக் காஞ்சிபுரத்து மாவட்டத்தில் பணிபுறிகிறார். அவரது வசிப்பிடமும் காஞ்சிபுரத்தில் தான்.

சற்று முன்னர் தான் சரக்குகள் வந்திறங்கியது. அதைச் சரிபார்த்து, மூட்டையைப் பிரித்து மொத்த வியாபாரத்திற்கு ஏற்ப அதைப் பிரித்துக் கட்டி வைக்கும் வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. கடையின் பின்னாலே கிடங்கு(godown) இருக்கிறது. கடைக்கும் கிடங்கிற்கும் நடுவில் ஒரு தடுப்பு மட்டும் தான். அதையும் இவர்கள் கதவால் தான் அடைத்திருந்தார்கள்.

எப்போதும் கடையை மதியம் இரண்டு மணிநேரம் மூடி விடுவார்கள். சரக்கு வந்திறங்கும் நேரம் மட்டும் மதியம் அரை மணிநேரம் தான் கடை மூடுவார்கள். அதுவும் சாப்பிடப் போக வேண்டுமென்று. அந்த நேரத்தில் பெரும்பாலும் அனாஹா தான் இருப்பாள். பரமசிவமும் பொண்ணு பொறுப்பாகக் கவனிக்கிறாள் என்று விட்டுவிடுவார்.

பரமசிவம் கடையின் வாசலில் செருப்பைக் கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவரைப் பார்த்து,”என்ன அப்பா நீங்க வந்திருக்கீங்க?” என்று கேட்டாள் அனாஹா.

அவள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல்,”நீ ஏன் மா உன் ஃபோனை வீட்டுல வைச்சுட்டு வந்துட்ட?” என்று கேட்டார்.

உடனே தன் கைப்பேசியை அங்குத் தேடியவள் சிரித்த முகமாக,”மறந்துட்டேன்னு நினைக்கிறேன் அப்பா. நீங்கக் கேட்டவுடன் தான் ஞாபகம் வருகிறது.” என்று கூறவும்,

“நல்ல பொண்ணு மா நீ. இப்படியா எடுத்துட்டு வந்தோமா இல்லையானு தெரியாமல் இருப்ப? சரி நீ போய் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா. நான் அப்புறம் வீட்டுக்குப் போயிக்கிறேன்.” என்றார்.

“நான் சாப்பிட்டு வரேன் அப்பா. என்னைக்கு நான் மதியம் தூங்கியிருக்கிறேன் இன்னைக்கு தூங்க?”

“சரி மா. நீ சாப்பிட்டு வா.” என்று அதற்கு மேல் எதுவும் பேசவில்லை பரமசிவம்.

அப்பாவின் பேச்சு அனாஹாவிற்குச் சரியாகப் படவில்லை. அவரிடம் வந்தவள்,”என்ன அப்பா எதுவும் பிரச்சனையா? அம்மா கூடச் சண்டையா? நான் தான் கடையைப் பூட்டிட்டு வருவேன்ல அப்பா. நீங்க ஏன் வந்தீங்க?” என்று கேட்டாள்.

தன் முக வாட்டத்தை வைத்தே பெண் கண்டு கொண்டாள் என்பதை நினைத்து பெருமைப் பட அவரால் இப்போது முடியவில்லை. திலகா கூறியது அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது தான் அதற்காகச் சண்டை போட்ட குடும்பத்துடன் சம்மதம் வைக்க அவரது மனம் வெகுவாகத் தயங்கியது. அதனால் அதையே அவர் யோசித்துக் கொண்டிருக்க, சற்றுக் கவலையாக அவரைப் பார்த்த அனாஹா,”அப்பா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் நீங்க ஏதோ யோசிச்சுட்டு இருக்கிற மாதிரி இருக்கு. என்னாச்சு அப்பா?” என்று மீண்டும் கேட்க,

“ஒன்னுமில்லை டா. சின்ன வாக்குவாதம் உன் அம்மா கூட. உன் அம்மாவைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே!! அவள் சொல்றதை தான் நாம கேட்கனும். அதுல கொஞ்சம் சண்டை. வேற ஒன்னுமில்லை. நீ போய் சாப்பிட்டு மெதுவா வா. நான் இங்கே பார்த்துக்கிறேன்.” என்று கூற, அனாஹா அவரைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.

அவளிற்கு நிச்சயமாகத் தெரியும் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று. சின்ன சண்டை என்றால் தன் தந்தை அதைப் பெரிதாக எண்ண மாட்டார். வீட்டு வாசற்படி தாண்டும் போதே அதையும் மறந்து விடுவார். ஆனால் இப்போது அப்படியில்லை அவர். சரி வீட்டிற்குச் சென்று அன்னையிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று யோசித்து அங்கிருந்து கிளம்பினாள்.

அனாஹாவின் ஆராயும் பார்வையை வைத்தே மகளின் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்ட பரமசிவம் மகள் சென்றவுடன் வேகமாகத் தன் கைப்பேசியை எடுத்து மனைவிக்கு அழைத்தவர் கடையில் நடந்ததைக் கூறியவர் எக்காரணம் கொண்டும் வீட்டில் நடந்ததை இப்போதைக்கு மகளிடம் கூற வேண்டாம், அப்படிக் கூறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் குரலில் கூறிவிட்டுத் தான் கைப்பேசியை வைத்தார்.

அனாஹா வீட்டிற்குள் நுழைய திலகா உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அவரது முகமும் சாதாரணமாக இருக்க, தான் தான் தேவையில்லாமல் யோசிக்கிறோமோ என்று தோன்றி அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டாள்.

“அம்மா.” என்று அழைத்துக் கொண்டே டைனிங் டேபிள் நோக்கிச் செல்ல, திலகா எதுவும் தெரியாதது போல் அவளிற்குச் சாப்பாடு வைக்க வந்தார்.

அனாஹா எதுவும் கேட்கவில்லை. அமைதியாக உண்டவள் அவரிடம் எதுவும் பேசவில்லை. அவளிற்கும் அவரிடம் சில மனக் கசப்பு உள்ளது. சாதாரண மனக் கசப்பு என்று தான் அனாஹா நினைத்தாள். சிறிது நாட்களில் தன் அம்மா தன்னைப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறாள். ஆனால் திலகாவைப் பொறுத்தவரை அது சாதாரண மனக் கசப்பு இல்லை. அவரிற்கு அனாஹா மீது பயங்கர அதிருப்தி. அவள் அப்படிச் செய்வாள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அதனால் அவளிடம் பேச்சைக் குறைத்து விட்டார். இதை மகளும் அம்மாவும் பரமசிவத்திடம் காட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவரிற்கும் இவர்கள் பேசாமல் இருப்பது தெரியாது.

காலையில் கூடச் சண்டை, அதில் திலகா அனாஹாவின் கைப்பேசியைத் தெரியாமல் கீழே போட்டுவிட அதன் டிஸ்ப்ளே உடைந்து விட்டது. அதனால் தான் அவள் கைப்பேசியை எடுத்துக் கொண்டு வரவில்லை. பரமசிவம் கேட்டப் பொழுது தெரியாத மாதிரி நடந்து கொண்டாள். அவளிற்குத் தேவையில்லாமல் தந்தையைக் கஷட்பபடுத்த விரும்பவில்லை. அதனால் தான் அவள் திலகாவுடன் நடந்த சண்டையைக் கூறவில்லை. அது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் திலகாவை மீறி அந்த வீட்டில் எதுவும் நடக்காது. அதனால் பரமசிவத்திடம் கூறினால் மாற்றம் எதுவும் நடக்காது என்பது அனாஹாவின் எண்ணம். இது இன்னொரு காரணம்.

அவள் மறைத்த விஷயம் பின்னால் பெரிதாகப் பிரச்சனையாகும் என்று, அதனால் பரமசிவம் மிகவும் மனம் வருந்தும் நிலை வரும் என்றும் அனாஹா அறியவில்லை. தெரிந்திருந்தால் மறைத்திருக்க மாட்டாளோ என்னவோ.

சாப்பிட்டவுடன் திலகாவிடம் வந்தவள்,”அம்மா, அப்பா கூட எதுவும் சண்டையா?” என்று கேட்டாள்.

என்ன தான் திலகா சாதாரணமாக இருந்தாலும் அனாஹாவிற்கு மனம் கேட்கவில்லை. அதனால் அவளின் பிணக்கையும் மறந்து அவரிடம் கேட்க, அவரோ அவள் கேட்டதை ஒரு பொருட்டாக மதிக்காமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

“அம்மா உங்ககிட்ட தான் கேட்டேன். முதல்ல எனக்குப் பதில் சொல்லுங்க.” சற்றுச் சத்தமாகக் கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த திலகா,”உன்கிட்ட எனக்கு எந்தப் பேச்சும் இல்லை.” என்று கூறிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பிக்க அனாஹாவிற்குக் கோபம் தான் வந்தது.

“ப்ச் நீங்க ஒன்னும் பேச வேண்டாம். நான் கேட்டதுக்குப் பதில் மட்டும் சொல்லுங்க.” என்று கூறி தொலைக்காட்சியை மறைத்தது போல் நின்று கொண்டாள்.

இதில் திலகாவிற்குக் கோபம் வந்து வேகமாக எழுந்தவர்,”எனக்கும் என் புருஷனுக்கும் ஆயிரம் இருக்கும். உனக்கு எதுக்கு நான் சொல்லனும்? நீ எங்க பொண்ணுனா உனக்கு எங்களுக்குள்ள நடக்கிற எல்லாத்தையும் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை. இப்போ தள்ளு.” என்று கூறியவர் அவளைத் தள்ளி விட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அனாஹா தான் திலகாவின் பேச்சில் ஆ வென்று ஆச்சரியத்தில் அப்படியே நின்றுவிட்டாள். திலகா திரும்பி அவளின் நிலையைப் பார்த்தாலும் எதுவும் கூறவில்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள் காலை தரையில் உதைத்து விட்டு அவளது அறைக்குச் சென்று விட்டாள்.


அதே ஸ்ரீபெரும்புதூர், காந்திஜி ரோட்டில் அமைந்துள்ளது காசி இல்லம். பெரிய வீடு தான். ஆனால் பழைய வீடு. அதை இந்தக் காலத்திற்கு ஏற்ப சிறிது மாற்றம் செய்திருந்தனர். வீட்டின் முன் கதவைத் அதாவது கேட்டை திறந்து உள்ளே வந்தால் பெரிய போர்ட்டிகோ ஒன்று உள்ளது. அதில் இரண்டு கார்கள் தாராளமாக நிறுத்தலாம். ஆனால் ஒரு கார் தான் நின்று கொண்டிருந்தது. அவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தைத் தான் உபயோகப் படுத்துவார்கள். அதனால் இரண்டு இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. அது மதிய நேரம் என்பதால் வீட்டின் ஆம்பளைகள் சாப்பிடுவதற்காக வந்திருந்தனர்.

சரியாக அந்நேரம் ராதா அவர்கள் வீட்டிற்கு வந்தார். அவர் வரும் போது, வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த காசியம்மாள் ராதாவைப் பார்த்து புருவம் உயர்த்தி,”வா ராதா என்ன இந்நேரம் வந்திருக்க? எதுவும் முக்கியமான விஷயமா வந்திருக்கியா?”

“ஆமா பெரிய அத்தை. எல்லாம் நல்ல விஷயம் தான். வீட்டுக்குள்ள போய் பேசுவோம் அத்தை. கதிர் மாமா இருக்காங்களா?” என்று கேட்க,

“ம் இப்போ தான் அவனும் என் பெரிய பேரனும் சாப்பிட வந்தாங்க. வா உள்ளே போவோம்.” என்று கூறி அவர் எழ, அவரின் கையைப் பற்றி ராதா அவருடன் உள்ளே நுழைந்தார்.

அங்கிருந்த சாய்வு நாற்காலியில் காசியம்மாள் அமர, ராதாவை அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமரச் சொன்னார்,”உட்கார் ராதா. கதிரு முதல்ல சாப்பிடட்டும். நீயும் வா சாப்பிடலாம்.” என்று கூப்பிட்டார்.

“இல்லை பெரிய அத்தை நான் சாப்பிட்டுத் தான் வந்தேன். கதிர் மாமா லேட்டா இன்னைக்கு?”

“ம் ஆமா மா. சரி என்ன நல்ல விஷயம்?”

“அது வந்து நம்ம பிரதீஷ் தம்பிக்கு ஏத்த மாதிரி ஒரு ஜாதகம் வந்துருக்கு அத்தை. அதான் அதைப் பேசத் தான் வந்தேன்.” என்று கூறவும் காசியம்மாள் முகத்தில் வெளிச்சம் பரவியது.

அவர்களும் பிரதீஷிற்காகப் மூன்று வருடங்களாகப் பெண் பார்க்கிறார்கள் ஆனால் எதுவும் அமையவில்லை. பெண் நன்றாக இருந்தால் இடம் இவர்கள் அவளிற்கு வசதியாக இருக்காது. சரி அனைத்தும் ஒத்து வாந்தால் பெண் வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை தான் வேண்டும் அதிலும் லட்சத்தில் சம்பளம் வாங்க வேண்டுமென்று பல நிபந்தனைகள் வைக்கிறார்கள்.

சுதீஷிற்கு அவர்கள் இவ்வளவு மெனக்கெடவில்லை. காரணம் பிருந்தா சுமித்ராவின் அண்ணன் மகள். பிருந்தாவிற்குத் தங்கை ஒருத்தி இருக்கிறாள். ஆனால் பிரதீஷிற்கு அவளைத் திருமணம் செய்ய விருப்பமில்லை. காரணம் அவளை அவன் அப்படிப் பார்த்தது இல்லை. அவர்களது தாய் மாமாவும் இதே ஊர் என்பதால் ஒன்றாக வளர்ந்தார்கள். ஒன்றாக வளர்ந்தவளை தன்னால் திருமணம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான். அதனால் தான் வெளியே அவனிற்குப் பெண் பார்க்கிறார்கள்.

“அப்படியா ரொம்ப சந்தோஷம் ராதா. பொண்ணு யார் எந்த ஊர். அவங்க குடும்பம் என்ன பண்றாங்க? பொண்ணு ஃபோட்டோ எதுவும் இருக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டார் காசியம்மாள்.

ராதா பதில் கூறுவதற்கு வாயைத் திறக்கச் சரியாக அனைவரும் அங்கு வந்துவிட்டனர். கதிரைவேல் சோஃபாவில் அமர்ந்திருந்த ராதாவைப் பார்த்து,”வா மா. சாப்பிட்டியா மா.” என்று கேட்டுக் கொண்டே எதிரிலிருந்த சோஃபாவில் அமர்ந்தார். அவரிற்கு அருகிலே சுதீஷும் அமர்ந்தான்.

“சாப்பிட்டேன் மாமா. எல்லாம் நல்ல விஷயம் தான். நம்ம பிரதீஷ்க்கு ஏத்தப் பொண்ணு இருக்கு மாமா. அதான் அதைப் பத்திப் பேசத் தான் வந்தேன்.”

“அப்படியா ரொம்ப சந்தோஷம் மா. பொண்ணு எந்த ஊர்? அவங்க குடும்பம் என்ன பண்றாங்க?” என்று கேட்டார்.

“அதைத் தான் நானும் கேட்டுட்டு இருந்தேன் நீ வந்துட்ட கதிரு. சரி சொல்லு ராதா.” என்று கதிரைவேலிடம் ஆரம்பித்து ராதாவிடம் முடித்தார் காசியம்மாள்.

“பொண்ணு நம்ம ஊர் தான். ஜாதகம் எடுத்து ஒரு வாரம் கூட ஆகலை. நேத்து கோவில்ல அந்தப் பொண்ணோட அம்மாவைப் பார்த்தேன். அவங்க தான் பொண்ணோட ஜாதகம் போட்டோ எல்லாம் கொடுத்தாங்க. நானும் நம்ம பிரதீஷோட ஜாதகத்தையும் போட்டோவையும் கொடுத்துருக்கேன். இன்னைக்கு சாயந்தரம் ஜோசியர்கிட்ட போய் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்காங்க.” என்று விளக்கமாக அவர் கூறினார்.

“நம்ம ஊரா? யார் வீட்டுப் பொண்ணு? இப்போ தான் ஜாதகம் எடுத்துருக்காங்கனா அந்த பொண்ணு வயசு கம்மியா இருக்கப் போகுது ராதா.”

“இல்லை பெரிய அத்தை, பொண்ணுக்கு இப்போ தான் குருபலன் வந்துருக்காம். அதனால தான் லேட்டா எடுத்துருக்காங்க. பொண்ணுக்கு இருபத்தி அஞ்சு வயசாகிடுச்சு அத்தை.”

“அப்படியா அப்போ சரி நம்ம பிரதீஷ்கு இப்போ இருபத்தி ஏழு. சரியா தான் வரும். சரி நீ இன்னும் யார் வீட்டுப் பொண்ணுன்னு சொல்லலையே!!”

“அத்தை சிவம் ட்ரேடர்ஸ் கடை வைச்சுருங்காளா அவங்க பொண்ணு தான் அத்தை.” என்று கூறவும் அனைவருக்கும் அதிர்ச்சி. அத்தனை நேரமிருந்த சந்தோஷம் அனைத்தும் துணி வைத்துத் துடைத்தார் போல ஆகிவிட்டது.

“என்ன ராதா சொல்ற?அந்தக் குடும்பத்துக்கும் நமக்கும் ஆகாதுனு தெரியாதா உனக்கு? எப்படி அந்த வீட்டுப் பொண்ணை?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டார் கதிரைவேல்.

“மாமா சண்டைலாம் பல வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. அதை இப்போ எதுக்கு மாமா யோசிச்சுட்டு இருக்கனும்? நல்ல சம்மதம் வரப்போ சண்டைலாம் மறந்துரனும் மாமா.”

“ப்ச் என்ன மா சொல்ற நீ? எப்படி இது சரி வரும்? நீ பிரதீஷோட ஜாதகம் கொடுத்ததும் அவங்க பார்த்துட்டு எதுவும் சொல்லலையா?”

“இல்லை மாமா. திலகாகிட்ட தான் காட்டினேன். உங்க குடும்பம்னு தெரிஞ்சும் அவங்க எதுவும் சொல்லலை. நீங்க தான் எப்போவோ நடந்தச் சண்டையை மனசுல வைச்சுட்டு பேசுறீங்க.” என்று அவர் கூறவும் ஒருவருக்கும் என்ன பேசுவதென்று புரியவில்லை.

அனைவரும் அமைதியாக இருக்க, காசியம்மாள் தான்,”இங்கே பார் கதிரு நம்ம பிரதீஷ்க்கு நாமளும் பார்க்காத இடமில்லை. எதுவும் அமையல!! இப்போ தானா வருது. ராதா சொல்றது மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க வரும்போது நாமா ஏன் வேண்டாம்னு சொல்லனும்?” என்று கேட்டார்.

“மா என்ன மா நீங்க புரியாத மாதிரி பேசுறீங்க? அந்த சதாசிவம் எவ்வளவு பேசினான்னு உங்களுக்கு ஞாபகமில்லையா? தப்பு அவன் மேல வைச்சுகிட்ட நம்மகிட்ட எவ்வளவு எகிறினான்னு மறந்துட்டீங்களா?”

“கதிரு நீயும் தான் அவங்களை பதிலுக்குப் பேசின. அவங்க பொண்ணு வாழ்க்கைனு வரும் போது அதை மறந்துட்டாங்க தான!! அப்போ நீ மட்டும் ஏன் உன் பையனோட வாழ்க்கைக்காகப் பழசை மறக்கக் கூடாது?” என்று அவரிடம் கேட்டவர், திரும்பி மருமகளைப் பார்த்து,”என்ன சுமித்ரா வேடிக்கை பார்த்து நின்னுட்டு இருக்க. பிரதீஷ் உனக்கும் தான பையன். அவனுக்குக் கல்யாணம் ஆக வேண்டாமா?” என்று கேட்டார்.

“அத்தை என்ன இப்படிப் பேசுறீங்க? இது நல்ல விஷயம் அத்தை. ஆரம்பிக்கும் போதே இவ்ளோ பிரச்சனையா ஆரம்பிக்கனுமானு யோசனையா இருக்கு அத்தை.”

“அட யார் டீ நீ!! உன்கிட்ட போய் கேட்டேன் பார் என்னை சொல்லனும்.” என்று அவர் தலையில் அடித்துக் கொள்ள மாமியாரைப் பார்த்து முறைத்து வைத்தார் சுமித்ரா.

“அப்பத்தா உனக்கு நான் இருக்கேன்.” என்று கூறிய சுதீஷ் தன் தந்தையைப் பார்த்து,”அப்பா எனக்கு என்னமோ பாட்டி சொல்றது சரினு தோணுது. ஏற்கனவே பிரதீஷ் வேற இப்போ கல்யாணம் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கான். அவனை இப்படியே விட்டா அவ்ளோ தான். பேசாமல் ராதா சித்தி சொல்ற பொண்ணையே பார்க்கலாம் அப்பா.” என்றான்.

“நீயும் புரியாம பேசாத சுதீஷ். சண்டைனு உங்களுக்கு வேணும்னா சாதாரணமா இருக்கலாம். ஆனால் வார்த்தைப் பிரயோகம்னு ஒன்னு இருக்கு. ஏதோ நான் பணத்தாசைப் பிடிச்சுவன் மாதிரி எவ்வளவு பேசினான் அந்தச் சதாசிவம்னு உனக்குத் தெரியாது சுதீஷ். அதனால் இந்தச் சம்மதத்தை மறந்துடுங்க. அவளோ தான் நான் சொல்லுவேன்.” என்று கூறி கதிரைவேல் எழுந்து சென்றுவிட, அவரின் பின்னாலே சுமித்ராவும் செல்ல மற்ற அனைவருக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.

“பெரிய அத்தை என்ன மாமா இவ்ளோ உறுதியா சொல்றார்? அப்போ திலகாகிட்ட வேண்டாம்னு சொல்லிடவா?”

“அடியே அப்படி எதுவும் செஞ்சுறாதா. அதான் சாயந்தரம் ஜோசியரைப் பார்க்கப் போறாங்கள, பார்த்துட்டு வரட்டும். ஒரு வேளை ஜாதகம் பொருந்தி இருந்தா மேற்கொண்டு பேசலாம். நீ எதுவும் உளறி வைக்காத சரியா.” என்று காசியம்மாள் கண்டிப்புடன் கூற, ராதாவும் சரியென்று தலையசைத்து அவரிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றார்.

அவர் அங்கிருந்து சென்றவுடன் சுதீஷின் மனைவி பிருந்தா அவரின் அருகில் வந்து,”பாட்டி என்ன பண்ண போறீங்க நீங்க? ஒரு வேளை அவங்களுக்கு ஜாதகம் பொருந்தி வந்தா மாமாகிட்ட எப்படிப் பேசுவீங்க? இவ்ளோ கோபமா வேற இருக்கார்.” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

“அவன் என் மகன். எனக்குத் தெரியும் எப்படிப் பேசுறதுனு. பிரச்சனைனா அது என் சின்ன பேராண்டி தான். இருபத்தி ஏழு வயசாகிடுச்சு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு திரியுறான். அவனைத் தான் சரி பண்ணனும்.” என்று கவலையுடன் கூறினார்.

“அப்பத்தா நீங்க வருத்தப்படாதீங்க பிரதிகிட்ட பேசுறது என்னோட பொறுப்பு. முதல்ல அப்பா சம்மதம் சொல்லனும். அது உன் பொறுப்பு சரியா கிழவி.” என்று கூறி அவரின் இரு கண்ணத்தையும் பிடித்துக் கிள்ளினான்.

“படுபாவி என் கண்ணத்தைப் பிச்சு எடுத்துறாத டா விடு டா.” என்று கத்தவும் தான் சிரித்துக் கொண்டே அவரின் கண்ணத்தை விட்டான் சுதீஷ்.

சரியாக அந்நேரம் சிணுங்கல் சத்தம் கேட்க, பிருந்தா வேகமாக எழுந்து செல்ல அவள் செல்வதற்கு சுதீஷ் அவனின் செல்ல மகன் இவானைப் பார்க்க வேகமாகச் சென்றுவிட்டான்.

அவர்கள் உள்ளே சென்றவுடன் காசியம்மாள் யோசனையில் ஆழ்ந்துவிட்டார் கதிரைவேலை எப்படிச் சம்மதிக்க வைக்க என்று.

error: Content is protected !!