அத்தியாயம் 15

பிரதீஷூம் சைதன்யாவும் பரமசிவம், திலகா, சதாசிவம், அருணா, அனாஹா மற்றும் வினயுடன் பிரதீஷின் இல்லத்திற்கு வந்தனர். அங்கே சுமித்ரா ஆரத்தி தட்டுடன் தயாராக இருந்தார் மணமக்களை வரவேற்க. இன்று தான் சைதன்யா முதன் முதலில் பிரதீஷின் இல்லத்திற்கு வருகிறாள். அவள் வீட்டிலிருந்த போது தெரியாத ஒன்று கிளம்பிய போது தான் மண்டையில் நச்சென்று அடித்தது போல் புரிந்தது. இனி தன் வீடு பிரதீஷின் இல்லம் தான். தன் வீடு என்று இத்தனை நாள் நினைத்த வீட்டை இனி அம்மா வீடு என்று தான் கூறமுடியும் என்ற உண்மைப் புரிய அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

அவள் அமைதியாகவே வர, பிரதீஷ் அதைப் பார்த்தாலும் எதுவும் பேசவில்லை. அவளது சூழ்நிலைப் புரிந்தது. அனைத்து பெண்களுக்கும் நடக்கும் ஒன்று தான் என்றாலும் சைதன்யாவிற்குப் பத்து நாட்களில் அனைத்தும் மாறிவிட்டது. மற்றவர்களுக்காவது திருமணத்திற்கு முன்பு, தான் தன் வீட்டை விட்டுச் செல்லப் போவதை உணர்ந்து கொள்ள நேரம் இருக்கும். ஆனால் சைதன்யாவிற்கு அதுவும் இல்லை. சட்டென்று அனைத்தும் நடந்து விட்டது. அதனால் அவளிற்குப் பயமாக இருந்தது தான் உண்மை தான். ஆனால் பிரதீஷ் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டது அவளது மனம் அறிந்து நடந்து கொண்டது அவளிற்குச் சற்று நிம்மதியாக இருந்தது.

வீடு வந்து சேர்ந்ததும் அனைவரும் இறங்க, சுமித்ரா, கதிரைவேல் மற்றும் சுதீஷ் மூவரும் கீழேயே இருந்தனர். அதே போல் கீழே குடியிருந்தவர்களும் மணமக்களைப் பார்ப்பதற்காகவே வெளியில் வந்து நின்றனர்.

சுமித்ரா பிரதீஷ் மற்றும் சைதன்யாவைப் பார்த்து,”இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க.” என்று கூற, அவர் கூறியதைப் போலவே இருவரும் சேர்ந்து நின்றனர். பின்னர் சுமித்ரா ஆரத்தி எடுத்து முடிக்கவும்,”இரண்டு பேரும் மேல போங்க. நான் ஆரத்தியைக் கொட்டிட்டு வரேன்.” என்று கூறிச் சென்றார் அவர்.

பிரதீஷ் சைதன்யவின் கையைப் பற்றி அழைத்துச் சென்றான். அவனைத் தொடர்ந்து அனைவரும் சென்றனர். அனைவர் முன்பும் பிரதீஷ் அவளின் கையைப் பற்றியது அவளிற்குக் கூச்சமாக இருக்க, அவளது கையை விடுவிக்க முயன்றாள். ஆனால் பிரதீஷ் அவளின் கையை விடாததால் அவளால் கையை எடுக்க முடியவில்லை. அவளும் அவனை ஓர் முறை முறைத்துப் பார்த்துவிட்டு அப்படியே விட்டுவிட்டாள்.

“ரைட் லெக் வைச்சு உள்ளே வா.” என்று பிரதீஷ் அவளது காதில் கூறவும் அவளும் அவன் கூறியதைப் போலவே வலது காலை முதலில் வைத்து உள்ளே வந்தாள். அவளைப் போலவே அவனும் வலது கால் வைத்து உள்ளே சென்றான்.

அந்த வீட்டை முதல்முறையாகப் பார்த்த சைதன்யாவிற்குப் பிடித்துவிட்டது. அனாஹா மற்றும் வினயும் முதன்முறையாக அந்த வீட்டைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது.

அங்கேயே சில நேரங்கள் இருந்துவிட்டு மதியச் சாப்பாட்டையும் முடித்து விட்டுக் கிளம்ப ஆயத்தமானார்கள் மற்றவர்கள். கிளம்பும் முன் சுமித்ரா சைதன்யாவிடம் வந்து,”சைதன்யா நான் என் பையனைப் பத்தி நானே பெருமையா சொல்றேன்னு நினைக்காது. என் இரண்டு பையன்களும் ரொம்ப ரொம்ப நல்ல பசங்க. உன்னை ரொம்ப பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிருக்கான். அவனோட சந்தோஷம் மட்டும் தான் எனக்கு முக்கியம். அது உன் கைல தான் இருக்கு. உனக்குப் பிடிக்காத எதையாவது அவன் செஞ்சா சொல்லிடு அவன்கிட்ட கேட்டுக்குவான். அதனால அவன்கிட்ட சண்டை மட்டும் போட்டுறாது. அதுக்காக சண்டையே போட வேண்டாம்னு சொல்லலை. சண்டை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காது. போடுங்க ஆனால் உடனே சமாதானம் ஆகிடுங்க. பெரிசாகிட வேண்டாம் அவ்ளோ தான் நான் சொல்லுவேன்.” என்று அவர் கூற,

“ஓகே அத்தை.” என்று மட்டும் கூற, சுமித்ராவிற்கு அதுவே போதும் என்று இருந்தது.

அவர் அவளிடம் பேசிவிட்டு சென்றதும் அருணாவும் திலாகவும் அவளிடம் வந்தவர்கள்,”உன்னோட அத்தை என்ன சொன்னாங்க தன்யா?” என்று கேட்டார் திலகா.

சுமித்ரா பேசிவிட்டது சென்றதை அவள் கூறவும்,”ம் சரியா தான் சொல்லிருக்காங்க. மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். அதனால தான நான் அனாஹாவுக்கு அவரைக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அடம்பிடிச்சேன்.” என்று அவர் கூறவும் சைதன்யாவும் அருணாவும் அவரைப் பார்க்க, அதில் திலகா பேசியது அவரது நினைவிற்கு வர, நெற்றியில் அடித்துக் கொண்டார்.

“நான் ஒரு கூறு கெட்டவ எதை எப்போ பேசுறேன் பார்.”

“சரி அக்கா விடுங்க தெரியாமல் சொல்லிட்டீங்க.” என்று திலகாவிடம் கூறிவிட்டு சைதன்யா புறம் திரும்பிய அருணா,”இங்கே பார் தன்யா உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு அதெல்லாம் ஓகே. ஆனால் ஒன்னு நீ இன்னும் சி.ஏ. ஆகலை. அதை என்னைக்கும் நீ மறக்கக் கூடாது. நீ சி.ஏ. ஆகாம உனக்குக் கல்யாணம் பண்ணக் கூடாதுனு இருந்த என்னை மாப்பிள்ளையோட பேச்சும் உன்னோட அப்பாவும் சேர்த்து மாத்திட்டாங்க. இருந்தாலும் எனக்கு மனசுக்கு ஒரு மாதிரியா தான் இருக்கு. ஒரு பொண்ணுக்கு கண்டிப்பா தனி சம்பாத்தியம் அவசியமானது. அப்போ தான் அவளால தைரியமா சுயமா இருக்க முடியும். கல்யாணம் ஆகிடுச்சினா இப்போ இல்லைனாலும் பின்னால உனக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதெல்லாம் இருக்கக் கூடாதுனு நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதோட உன்னோட இலட்சியமும் உன் நினைவில் இருக்கனும். அதை எப்போவும் மறந்துர கூடாது.” என்று அவர் கூற,

“அருணா அதெல்லாம் நம்ம தன்யா பார்த்துப்பா. அவளோட படிப்பு எந்த விதத்திலும் கெடாது. நம்ம பொண்ணு திறமைசாலி அதை விட மாப்பிள்ளை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ கவலைப்படாத.” என்று திலகா அவரைத் தேற்றவும் அனாஹா அவர்களிடம் வரவும் சரியாக இருந்தது.

“சித்தி அப்பாவும் சித்தப்பாவும் கூப்பிடுறாங்க.” என்று அருணாவை மட்டும் பார்த்துச் சொல்ல, திலகா அவளைப் பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட, அருணாவும் சைதன்யாவும் அதைப் பார்த்துக் கவலைப்பட, அனாஹா அவர்களைத் தேற்றிக் கொண்டு அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றாள்.

அனைவரும் பிரதீஷ் மற்றும் சைதன்யாவிடம் கூறிவிட்டுக் கிளம்ப அனாஹா பிரதீஷிடம் வந்து,”பிரதீஷ் உங்களை ரொம்ப நம்பித் தான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன். என்னோட நம்பிக்கையை நீங்க காப்பாத்துவீங்கனு நம்புறேன். தன்யா என்னை மாதிரி கிடையாது. அவள் ரொம்ப சாது. சித்தி அவங்க கைக்குள்ளேயே வைச்சு வளர்த்துட்டாங்க அவளை. சோ கொஞ்சம் பார்த்துக்கோங்க.” என்றாள்.

“டோன்ட் வொர்ரி அனு. சையு இஸ் மை லைஃப். நான் இதை சும்மா சொல்லலை. ஐ வில் ஷோ இட் இன் மை ஆக்ஷன்.” என்று கூற, அனாஹா சரியென்று அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

அனைவரும் சென்றதும், சைதன்யா அங்கிருந்த சாய்விருக்கையில் அமர, அவளிற்கு அருகில் வந்து அமர்ந்த பிரதீஷ்,”நாளுக்கு ஆபிஸ் போகனும் தான?” என்று கேட்டான்.

“ம் ஆமா.”

“எத்தனை மணிக்கு போகனும்?”

“9.30 க்கு அங்க இருக்கனும்.”

“ஓகே. உன்னோட வண்டியை வினய் சாயந்தரம் கொண்டு வந்துடுறேன்னு சொன்னான். நீ அதுல போயிக்குவியா இல்லை நான் கொண்டு போய் விடவா?”

“இல்லை வேண்டாம். நானே போயிக்குவேன்.”

“ஓகே. மதியம் லன்ச் எடுத்துட்டு போயிடுவியா இல்லை வீட்டுக்கு வருவியா?”

“நான் வீட்டுக்குத் தான் வருவேன் சாப்பிட. ஆனால் எனக்குச் சமைக்கத் தெரியாதே.”

“மேடம் நீங்க சமைக்க வேண்டாம். அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ உங்க வீட்டுல எப்படி இருப்பியோ அப்படியே இரு ஓகே வா. சரி உனக்குத் தூக்கம் வருதா?”

“ம்ஹூம் இல்லை.”

“சரி அப்போ இப்போ என்ன பண்ணலாம்?”

“படிக்கனும். த்ரீ டேஸ்ஸா படிக்கவே இல்லை. நான் இப்போ போய் படிக்கவா?” என்று கேட்க, முதலில் திகைத்தாலும் சரியென்று தலையசைத்தான் பிரதீஷ்.

உடனே அவள் எழுந்து செல்ல, பிரதீஷ் அறையைக் காட்ட சைதன்யா போய் படிக்க ஆரம்பித்துவிட்டாள். பிரதீஷிற்குத் தூக்கம் வர அவளிடம் வந்து,”சையு நான் தூங்க போறேன். உனக்கு ஏதாவது வேணும்னா என்னை எழுப்பு. நான் தூங்குறேன்னு அமைதியா இருக்க வேண்டாம் ஓகே?” என்று கூற, சரியென்று தலையசைத்தாள்.

அன்றைய நாள் பெரிதாக எதுவும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பிரதீஷ் அவளை அன்று அவனது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென நினைத்தான். ஆனால் அவளோ படிக்க வேண்டுமெனக் கூறிவிடச் சரி படிக்கட்டும் என்று விட்டுவிட்டான். அவன் நன்றாகத் தூங்கி எழ, அப்போதும் அவள் படித்துக் கொண்டு தான் இருந்தாள். அவளைத் தொந்தரவுச் செய்யாமல் அவனது வேலையை அவன் செய்துவிட்டு இரவு உணவையும் தயார் செய்தான். பின்னர் தான் அவளை அழைக்க அதுவரை அவள் நேரம் போவது தெரியாமல் படித்துக் கொண்டிருந்தாள்.

“சாரி.” என்று அவள் கூற,

“எதுக்கு சாரி?”

“இல்லை நீங்க தனியா வேலைப் பார்த்திருக்கீங்க. ஆனால் நான் எதுவும் செய்யலை. நீங்க என்னைக் கூப்பிட்டுருக்கலாம்ல?” என்று கேட்டாள்.

“டேய் இட்ஸ் ஓகே. நான் தான் சொன்னேன்ல நீ நார்மலா உன் வீட்டுல எப்படி இருப்பியோ அப்படி இரு. ஐ கேன் மேனேஜ். இப்போ வா சாப்பிடலாம்.” என்று கூற, அவளும் அவன் பின்னே சென்றாள்.

அவன் சாதாரணமாகச் சப்பாத்தி மற்றும் சோயா சன்க்ஸ் அதாவது மீல் மேக்கர் க்ரேவி செய்திருக்க, சைதன்யாவிடம்,”உனக்கு மீல் மேக்கர் பிடிக்கும் தான?” என்று கேட்டான்.

“ம் பிடிக்கும்.”

“குட்.” என்று கூறி அவளிற்குப் பரிமாறி அவனிற்கும் வைத்துக் கொண்டான்.

சைதன்யா சாப்பிட ஆரம்பிக்க, பிரதீஷ் அவளிடம்,”நல்லா இருக்கா?” என்று கேட்டான்.

“ம் சூப்பரா இருக்கு.” என்று சப்புக் கொட்டி அவள் சாப்பிட அதைப் பார்க்க அவனிற்கு நிம்மதியாக இருந்தது.

அதன் பின் எதுவும் பேசவில்லை. அவள் சாதாரணமாக இரண்டு தான் சாப்பிடுவாள். அன்று நன்றாக இருக்கவும் மூன்று சப்பாத்தி சாப்பிட்டாள். அதையும் அவனிடம் கூற, அவனிற்கு அத்தனை மகிழ்ச்சி. அதன் பிறகு அனைத்தையும் எடுத்து வைத்துச் சுத்தப்படுத்தி விட்டுத் தூங்கச் சென்று விட்டனர்.

அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் சைதன்யா முதலில் எழுந்துவிட, பிரதீஷ் சற்று நேரம் சென்று தான் எழுந்தான். அவன் எழுந்ததும் வேகமாக அவனைச் சுத்தம் செய்து கொண்டு வெளியே வர, அங்கிருந்த சாய்விருக்கையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் சைதன்யா. அவளைப் பார்த்து,”குட் மார்னிங் சையு.” என்றான்.

“குட் மார்னிங்.”

“ம் உனக்கு காஃபி தான?” என்று கேட்க, ஒரு மாதிரியாக அவள் தலையாட்ட அவளிடம் வந்தான்.

“நீ என்ன குடிப்ப? உண்மையைச் சொல்லு.” என்று கூற,

தயக்கத்துடன்,”நான் ஹார்லிக்ஸ் தான் குடிப்பேன்.” என்று கூறினாள்.

“இதுக்கு எதுக்கு உனக்குத் தயக்கம்? சரி வெயிட் பண்ணு நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்.”

“என்ன நோ நோ வேண்டாம். இப்போ எங்கே போய் வாங்குவீங்க?”

“பக்கத்துல டீ கடை இருக்கு சையு. அங்கே இப்போதைக்கு ஒரு ஷாஷே மட்டும் வாங்கிக்கலாம். அப்புறம் நான் போய் பாட்டில் வாங்கிட்டு வரேன்.”

“இல்லை வேண்டாம், இப்போ நான் காஃபியே குடிக்கிறேன். நீங்க அப்புறமா போய் வாங்கிட்டு வாங்க.”

“டேய் பரவால ஒரு ப்ராப்ளமும் இல்லை. ஜஸ்ட் ஃபை மினிட்ஸ்ல வந்துருவேன்.” என்று கூற, அவள் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டே இருக்க,

“என்னாச்சு உனக்கு? ஏன் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க?”

“இல்லை தனியா இருக்க ஒரு மாதிரியா இருக்கு.”

“அட இதை முதல்ல சொல்றதுக்கு என்ன? சரி நீயும் வா. இரண்டு பேரும் சேர்ந்து போவோம். இப்போ ஓகே வா?” என்று கேட்க, அவளிற்கும் இப்போது வெளியே போனால் நன்றாகத் தான் இருக்கும் என்று தோன்ற,

“சரி வெயிட் பண்ணுங்க. ஐ வில் செயிஞ்ச் அண்ட் கம்.” என்று கூறி வேகமாக உள்ளே செல்லப் போக,

அவளைத் தடுத்த பிரதீஷ்,”இதுவே ஓகே தான் சையு. நீ செயிஞ்ச் பண்ணத் தேவையில்லை.” என்று கூற, ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டவள் சரியென்று அவனுடன் வெளியில் சென்றாள்.

அவள் போட்டிருந்தது, மேலே ஒரு டீஷர்ட், கீழே பட்டியாளா பேன்ட் போல போட்டிருந்தாள். அதனால் அதுவே ஒரு உடை போல இருக்க, பிரதீஷ் தேவையில்லை என்று கூறிவிட்டான்.

இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வர, அப்போது தான் சூரியன் உயிர்த்தெழுந்திருந்தது. என்ன தான் சைதன்யா சீக்கிரமாகவே எழுந்தாலும் அவள் சூரிய உதயத்தை எல்லாம் பார்த்தது இல்லை. வீட்டில் தன் அறையில் தான் இருப்பாள். சாளரத்தைக் கூட நன்றாக விடிந்தபின் தான் திறப்பாள். அதனால் அன்று அவளிற்கு அந்த விடியலைப் பார்க்க அத்தனை ரம்மியமாய் இருந்தது. அதுவும் கூட்ட நெரிசலுடனே பார்த்த தெருக்கள் இப்போது ஆள் அரவமின்றி இருப்பது கூட நன்றாக இருக்க அதை ரசித்துக் கொண்டே பிரதீஷ் உடன் நடந்தாள்.

பிரதீஷிற்கு சைதன்யாவுடன் யாருமில்லா அந்தத் தெருவில் நடக்க அத்தனை ஆனந்தமாக இருந்தது. இது அவன் எப்போதும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு. இதற்கு முன்பு அவன் காலை எழுந்தவுடன் வெளியே நடைப்பயிற்சி செய்யக் கிளம்பிவிடுவான். அப்போது அவன் பல நாட்கள் நினைத்திருக்கிறான் தான் சைதன்யாவுடன் கைகோர்த்து நடக்க வேண்டுமென்று. அதில் இப்போது கை மட்டும் தான் கோர்க்கவில்லை. ஆனால் சைதன்யா தன் பக்கத்தில் இருக்கிறாள். அதுவே அவனிற்குப் போதுமானதாக இருந்தது.

ஐந்து நிமிட நடையிலே டீ கடை ஒன்று வர, பிரதீஷ் சென்று ஹார்லிக்ஸ் ஷாஷேவை வாங்கிக் கொண்டு வர, சைதன்யா அவன் கையில் இருக்கும் ஷாஷேவைப் பார்த்து,”என்ன இவ்ளோ வாங்கியிருக்கீங்க? ஒன்னு தான சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“ஒன்னு மட்டும் எப்படி வாங்க முடியும்? அதான் ஒரு சரம் வாங்கிட்டேன்.” என்று கூற, சரியென்று திரும்பி வீடு நோக்கி நடந்தார்கள்.

“எப்போ லன்ச்கு வருவ?”

“நான் 1:30 க்கு வருவேன். ஒன் ஹவர் லன்ச் டைமிங்க்.” என்று கூற,

“ஓகே டன்.” என்று கூறவும் வீடு வரவும் சரியாக இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும் பிரதீஷ் பால் கலக்கச் சென்றுவிட, மீண்டும் படிக்க அமர்ந்தாள் சைதன்யா.

பிரதீஷ் அவனிற்கு ப்ளாக் காஃபியும், சைதன்யாவிற்கு ஹார்லிக்ஸூம் கலந்து கொண்டு வர, இருவரும் அதைப் பருகினர். பின்னர் பிரதீஷ் பால்கனிக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய சென்றுவிட்டான். அதற்கே ஒரு மணிநேரமாகி விட, முடித்து விட்டு வந்தவன் குளிக்கச் சென்றுவிட்டான். குளித்து வந்தவன் காலை சாப்பாட்டைச் செய்ய சைதன்யா எதையும் கவனிக்கவில்லை. அவளது கவனம் எல்லாம் புத்தகத்தில் மட்டுமே இருந்தது. எட்டரை மணிக்குத் தான் இடத்தை விட்டு எழுந்தாள் சைதன்யா. அதற்குள் காலை சாப்பாட்டை செய்திருந்தான் பிரதீஷ்.

“சையு ரெடி. நீ போய் சீக்கிரம் குளிச்சுட்டு வா. நாம சாப்பிடலாம்.” என்றான்.

அவன் கூறியதைப் போலவே அவளும் குளித்து விட்டு வர, இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள். பிரதீஷ் காலை சாப்பாடாக முந்திரி எல்லாம் போட்டு ரவா இட்லியும் மற்றும் தேங்காய் சட்னியும் செய்திருந்தான். அதைப் பார்த்ததும் சைதன்யா எதுவும் கூறாமல் அமைதியாகச் சாப்பிட அமர்ந்தாள்.

“உனக்குப் பிடிக்குமா?” என்று கேட்டான்.

“எல்லாம் செஞ்சு முடிச்சுட்டு கேட்டால் நான் எப்படிப் பதில் சொல்றது? நேத்தும் இப்படித் தான் கேட்டீங்க?” என்று சட்டென்று கேட்கவும் பிரதீஷ் அதிர்ந்து பார்த்தான். அவனது பாவனையைப் பார்த்த பின்பு தான் அவள் பேசியது உரைக்க, நாக்கைக் கடித்துக் கொண்டு,”சாரி ஒரு ஃப்ளோல…” என்று கூறி நிப்பாட்ட,

“பார்ரா கோபம் எல்லாம் வருமா உனக்கு? ம் இதோட செகண்ட் டைம் நீ கோபப்படுறது. ஆனாலும் நீ கேட்கிறதுல நியாயம் இருக்கு. இனிமேல் செய்றதுக்கு முன்னடியே கேட்கிறேன். இப்போ சொல்லு உனக்குப் பிடிக்குமா இல்லாட்டி வேற செய்யட்டுமா?”

“இல்லை இல்லை வேண்டாம். எனக்கும் பிடிக்கும். நான் சும்மா தான் சொன்னேன்.” என்று பழையபடி அமைதியாகி விட, பிரதீஷ் எதுவும் கூறவில்லை. தானாக எல்லாம் நடக்க வேண்டும். அவளிற்குத் தன் மீது விருப்பம் திணிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

பின்னர் அமைதியாக இருவரும் உண்டனர். உண்டு முடித்ததும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு தங்களது அலுவலகம் நோக்கிச் சென்றார்கள்.

அலுவலகம் சென்ற சைதன்யா எப்போதும் போல் வேலையைப் பார்த்தார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்த சைதன்யா பயங்கர கடுப்பில் உள்ளே வந்து அவளது பையைத் தூக்கிச் சாய்விருக்கையில் போட்டுவிட்டு தொம் என்று அமர்ந்தாள். அதை அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து நின்றிருந்தான் பிரதீஷ்.

error: Content is protected !!