அத்தியாயம் 13

பிருந்தா சைதன்யாவை பிரதீஷின் அறை வாசலில் விட்டுவிட்டு அவள் சென்று விட, சைதன்யாவிற்குப் படப்படப்பாக இருந்தது. அவளால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல முடியுமென்று தோன்றவில்லை. அப்படியே அவள் நின்று கொண்டிருக்க அவள் கதவைத் திறக்காமலே தானாகக் கதவைத் திறக்க, ஒரு நிமிடம் திகைத்துவிட்டாள். ஆனால் சிரித்த முகத்துடன் அவளின் பாவனைகளைப் பார்த்து நின்று கொண்டிருந்த பிரதீஷையும் பார்க்கவும் மீண்டும் படப்படப்பு வந்துவிட்டது.

வெளியே வந்த பிரதீஷ் நிதானமாக அவளின் கையைப் பிடித்து உள்ளே அழைக்க அவள் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. திரும்பி அவளைப் பிரதீஷ் பார்க்க முடியாது என்று அவள் தலையசைக்க அவனிற்குச் சிரிப்பு தான் வந்தது.

“அப்போ நைட் ஃபுல்லா இப்படியே இங்கேயே நிக்க போறியா சையு?” என்று கேட்க, அவளால் சட்டென்று பதில் கூற முடியவில்லை.

“நான் தான் உன்கிட்ட சொன்னேன் தான? இன்னும் என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான்.

“இல்லை அது வந்து பயமா இருக்கு.” என்று மனதில் தோன்றியதை அவள் கூற,

“எதுக்கும் பயம்? நான் உன்னை என்ன பண்ணப் போறேன்னு சையுக்கு பயம் வருது?”

“அது வந்து இன்னைக்கு…” என்று அவள் சொல்ல முடியாமல் தயங்க, கையைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் பிரதீஷ். அதில் அவளிற்குக் கூச்சமாக இருக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“அச்சோ சையு வெட்கம்லாம் வருமா உனக்கு?” என்று கேட்டு அவள் முகம் பார்க்க அவளோ அவனிற்கு முகம் காட்டாமல் திரும்பிக் கொண்டே இருந்தாள். அதில் அவனிற்குச் சிரிப்பு வந்து விட்டது.

“ஓகே ஓகே ரிலாகஸ். இன்னைக்கு எதுவும் இல்லை. ஜஸ்ட் தூங்க தான் போறோம் ஓகே வா.” என்று அவன் சொன்னவுடன்,

“நிஜமாவா?” என்று வேகமாகக் கேட்க, ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தான்.

“அப்போ ஓகே வாங்க போகலாம்.” என்று கூறிக் கொண்டு அவனை முந்திக் கொண்டு உள்ளே செல்ல, சிரித்துக் கொண்டு பிரதீஷூம் உள்ளே நுழைந்தான்.

உள்ளே வந்த சைதன்யா அவனது அறையைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள். பிரதீஷ் தான் இன்னும் என்ன என்று போல் அவளிடம் வந்து,”என்னாச்சு? நான் தான் ஒன்னுமில்ல தூங்க தான போறோம்னு சொன்னேன். அப்புறம் என்ன? ஏன் நின்னுட்ட?” என்று கேட்டான்.

“இல்லை சினிமால எல்லாம் ஃப்ர்ஸ்ட் நைட் ரூம்னா பெட்ல பூ எல்லாம் போட்டு அலங்காரம் பண்ணிருப்பாங்க. பட் இங்கே எதுவுமில்லை அதான் அப்செட் ஆகிட்டேன்.” என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கூறினாள்.

அவள் கூறியதில் பக்கென்று சிரித்துவிட்டான் பிரதீஷ். அவனது சிரிப்பில் அவள் புரியாமல் அவனைப் பார்த்து,”ப்ச் எதுக்குச் சிரிக்கிறீங்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“பார்ரா மேடம்க்கு கோபம் எல்லாம் வருது.” என்று கூறிவிட்டு,”இவ்ளோ நேரம் உள்ளேயே வர மாட்டேன்னு பயந்து நின்னது என்ன, இப்போ என்னடானா பூ அலங்காரம் இல்லைனு கவலைப்படுற!! உன்னைப் புரிஞ்சுக்கவே முடியவில்லையே!!” என்று கேட்டான்.

“அது ஆமா பயம் இருந்துச்சு. ஆனால் நீங்க தான சொன்னீங்க இன்னைக்கு எதுவுமில்லைனு அதனால பயம் போச்சு. ஆனால் உள்ளுக்குள்ள ஒரு எக்சைட்மென்ட் இருந்துச்சு ஃப்ர்ஸட் நைட் ரூம் எப்படி இருக்கும்னு. அதான் அப்செட் ஆகிட்டேன்.” என்று உதட்டைப் பிதுக்குக் கொண்டு சொல்ல, அவளை நெருங்கிய பிரதீஷ் அந்த பிதுக்கிய உதட்டைச் சரி செய்ய அதிர்ந்து விட்டாள் சைதன்யா.

“இல்லை இல்லை அப்செட்லாம் கிடையாது எனக்குத் தூக்கம் வருது. குட் நைட்.” என்று வேகமாக அவனிடம் கூறிவிட்டு கையிலிருந்த பால் சொம்பை அவனிடம் தந்துவிட்டுப் படுக்கையில் போய் படுத்துவிட்டாள்.

“ஹா ஹா, சையு டோண்ட் வொர்ரி. நான் சொன்னது சொன்னது தான். இன்னைக்கு எதுவும் கிடையாது சரியா. அதனால் ப்ரியா இரு. இப்போ எந்திரிச்சு ட்ரெஸ் மாத்திட்டு தூங்கு.” என்று கூறவும் மெதுவாக எழுந்து அவன் சொன்னதைச் செய்துவிட்டு வந்தாள்.

“எந்த சைட்ல தூங்குற?” என்று அவன் கேட்கவும், வலதுப் பக்கத்தை அவள் காமிக்கவும் அவன் இடது பக்கம் மாறி அவளிற்கு இடமளித்தான்.

“ம் தூங்கு. குட் நைட்.”என்று கூறி அவன் கைப்பேசியை கையில் எடுத்துப் பார்க்க, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து படுத்துவிட்டாள். காலையில் சீக்கிரம் எழுந்ததால் இப்போது தூக்கம் கண்களைச் சுழற்றப் படுத்தவுடனே தூங்கிவிட்டாள் சைதன்யா. ஆனால் பிரதீஷிற்குத் தான் தூக்கம் வரவில்லை. அவனிற்குச் சைதன்யாவை மிகவும் பிடிக்கும். ஆனால் அவளைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் அவன் கூறுவான். அதனால் முதலில் அவளை நன்றாகப் புரிந்து அவளிற்கும் அவனைப் புரிய வைக்க வேண்டுமென்ற முடிவுடன் தூங்கச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்துவிட்டாள் சைதன்யா. திருமணத்திற்கு முன்பு அவள் சீக்கிரமாகவே எழுந்துவிடுவாள். ஐந்து மணிக்கு எழுபவள் அவளைச் சுத்தப்படுத்திவிட்டுப் படிக்க அமர்ந்தாள் என்றால் எட்டரை மணிக்குத் தான் புத்தகத்தைக் கீழே வைப்பாள். அதுவும் அவள் ஆர்ட்டிக்கள்ஷிப் செய்வதற்கு ஆடிட்டர் அலுவலகம் செல்ல வேண்டுமென்பதால் தான். அங்கு ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும். எட்டரை மணிக்குச் சென்று குளித்து தயாராகி வர ஒன்பது மணியாகும். அதன் பின் சாப்பிட்டுக் கிளம்ப ஒன்பது பதினைந்து ஆகிவிடும். அவளிற்குத் தனியாக வண்டி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் சென்றுவிடுவாள். அவளது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல பத்து நிமிடங்கள் தான் ஆகும். அதனால் சரியாக ஒன்பதரைக்கு அலுவலகத்தில் இருப்பாள் சைதன்யா.

அதே பழக்கத்தில் இன்றும் அவள் எழுந்து விட்டாள். ஆனால் என்ன செய்ய என்று தெரியவில்லை. திரும்பிப் பக்கத்தில் பிரதீஷைப் பார்க்க, அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அதனால் அவனைத் தொந்தரவு செய்யாமல் மெதுவாக எழுந்தவள் தன் பேக்கை எடுத்து அதிலிருந்து பல் துலக்க ப்ரஷ்ஷை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றாள்.

அவள் பல் துலக்கிவிட்டு வந்தவுடன் அங்கிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தவள் அவளது கைப்பேசியை எடுத்தாள். பின்னர் ப்ளூ டூத் யியர்பட்ஸை எடுத்து காதில் பொருத்தி தன் கைப்பேசியில் தன் படிப்புச் சம்மதாக இருந்த வீடியோவை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். அதில் நேரம் போனதே அவளிற்குத் தெரியவில்லை. சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு பிரதீஷ் அவளின் அருகில் வரவும் தான் அவளது கவனம் அவனிடம் சென்றது.

அவனைப் பார்த்தும் கைப்பேசியில் ஓடிக் கொண்டிருந்த வீடியோவை அமர்த்திவிட்டு காதிலிருந்த யியர்பட்ஸை கழட்டி விட்டு வேகமாக எழுந்தவள்,”எழுந்திருச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“ம் குட் மார்னிங்க் சையு. படிச்சுட்டு இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் தோளைப் பற்றி அமர வைத்தவன் தானும் அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

“ம் ஆமா. ஃபைனல் எக்ஸாம்க்கு பிரப்பேர் பண்ணிட்டு இருக்கேன்.” என்று கூறினாள்.

“ஓ ஓகே ஓகே. எப்போ எழுந்த?”

“நான் ஃபைவ்க்கு எழுந்தேன்.”

“அப்போவே என்னையும் எழுப்பி விட்டுருக்கலாம்ல? தனியாவா இருந்த?”

“ரூம்க்குள்ள தான இருந்தேன். அதனால ஒரு பிரச்சனையும் இல்லை. அப்புறம் நீங்க எழுந்து என்ன செய்ய போறீங்க? அதான் எழுப்பலை.”

“பார்ரா. சரி ஓகே நீ படி. நான் போய் உனக்கு காஃப்பி எடுத்துட்டு வரேன்.”

“அச்சோ இல்லை நானே வரேன். நீங்க போய் எதுக்கு?”

“இட்ஸ் ஓகே சையு. அதுவுமில்லாம நீ குளிக்கல இன்னும். ஸோ நீ போய் குளி. அதுக்குள்ள நான் போய் உனக்கு எடுத்துட்டு வரேன்.” என்று அவன் கூற,

“நீங்களும் இன்னும் குளிக்கலையே!!”

“ஹா ஹா நான் குளிக்காட்டி ஒரு ப்ராளமும் இல்லை. ஆனால் நீ குளிக்காமல் கீழே போகக் கூடாது. அதனால தான் சொன்னேன்.” என்று அவன் கூற,

“ஓ!!” என்று கூறிவிட்டு கைப்பேசியை அங்கேயே வைத்துவிட்டு தன் பேக்கிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.

அவள் சென்றதும் பிரதீஷ் கதவைத் திறந்து கொண்டு கீழே வந்தான். வீட்டிலிருந்த உறவினர்கள் சில எழுந்திருக்க, சிலரோ தூங்கிக் கொண்டிருந்தார்கள். காசியம்மாள் அவரது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். இவன் வருவதைப் பார்த்ததும் எட்டிப் பின்னால் பார்க்க, பிரதீஷூம் திரும்பிப் பார்த்துவிட்டு,”என்ன பாட்டி அப்படிப் பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.

“இல்லை நீ மட்டும் வர பேத்தி எங்கே? இன்னும் தூங்குதா?” என்று கேட்டார்.

“அவள் அஞ்சு மணிக்கே எழுந்து படிச்சுட்டு இருந்தா பாட்டி. இப்போ தான் குளிக்கச் சொல்லிட்டு வந்தேன்.” என்று அவன் கூற,

“எப்படியோ உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்ட. அப்போ அந்தப் பொண்ணைக் கடைசிவரை சந்தோஷமா வைச்சுக்க வேண்டிய பொறுப்பு உன்னோடது தான் புரியுதா?”

“ம் புரியுது பாட்டி. கண்டிப்பா சையுவ நான் நல்லா பார்த்துப்பேன் சரியா.” என்றான்.

“ம் நீங்க சந்தோஷமா இருந்தாலே நாங்களும் இங்கே சந்தோஷமா இருப்போம். அதை மனசுல வைச்சுக்கோ. சரி போய் காஃப்பிய குடி.” என்று அவர் கூற, அவரிடம் சரியென்று கூறிவிட்டு சமையலறைக்குச் சென்றான்.

அங்கு சுமித்ரா அடுப்படியில் நின்று பால் காய்ச்சிக் கொண்டிருக்க, பிரதீஷ் வந்து சுமித்ராவை பின்னாலிருந்து அவரின் தோளில் தலை வைத்துச் சாய்ந்தான். அவர் பிரதீஷைப் பார்த்துவிட்டு அவனது கண்ணத்தில் கைவைத்து,”எழுந்திருச்சுட்டியா!! சரி இரு உனக்கு ப்ளாக் காஃப்பி போடுறேன். அப்புறம் சைதன்யாவுக்கு காஃப்பியா டீயா?” என்று கேட்டார்.

“சையுக்கு காஃப்பி தான் மா.” என்று கூறி அவரை விடுத்து சமையல் மேடையில் ஏறி அமர, சுமித்ரா ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தார்.

“என்னாச்சு உன் முகமே டல்லா இருக்கு?”

“எல்லாம் இந்த வசந்தி அண்ணினால தான். பாவம் பிருந்தா. பிரீத்தி மட்டும் தான் அவங்க பொண்ணா? ஏன் பிருந்தா இல்லையா? கொஞ்சமும் யோசிக்கவே மாட்டிங்கிறாங்க. அண்ணன்கிட்ட சொல்ல எனக்கு ஒரு நிமிஷமாகாது. ஆனால் உனக்கு அண்ணாவோட கோபம் பத்தித் தான் நல்லா தெரியுமே!! அதனால மட்டும் தான் வாயை மூடிட்டு இருக்கேன்.”

“ஏன் மா அத்தை திரும்பப் பிரச்சனை பண்ணாங்களா?”

“எல்லாம் பழைய விஷயம் தான். அவங்க பொண்ணு மட்டும் ஆசைப்பட்டால் போதுமா? உனக்கு விருப்பமில்லைனு சொல்லியும் காலைல பயங்கரமா பேசிட்டாங்க.”

“என்னாச்சு? என்ன பேசுனாங்க?”

“அவங்களை நம்ம மதிக்கவே இல்லையாம். அனாஹா வேற ஒரு பையனை லவ் பண்றானு தெரிஞ்சதும் நம்ம பிரீத்தியை தான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுருக்கனுமாம். அதை விட்டுட்டு கொஞ்சம் கூட ரோஷம் இல்லாமல் திரும்ப அந்த வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. அக்கா எப்படி இருப்பாளோ அப்படித் தான் தங்கச்சியும் இருப்பாள். பாருங்க அவளும் யாரையாவது இழுத்துட்டு போகப் போறானு ரொம்ப பேசிட்டாங்க பா.” என்று அவர் கவலையுடன் கூற, அத்தனைக் கோபம் வந்துவிட்டது பிரதீஷிற்கு.

“நீங்க சும்மாவா விட்டீங்க? இது என்ன பேச்சு இது? சை!!! என்ன இருந்தாலும் சையுவும் ஒரு பொண்ணு தான!! அவங்க பொண்ணை இப்படிப் பேசினா பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா? வேற யாருடைய பொண்ணுனா அவங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா? வரட்டும் அவங்க. என் பொண்டாட்டியைப் பத்திப் பேச அவங்க யார்?” என்று அத்தனைக் கோபம் வந்துவிட்டது அவனிற்கு.

“விடு பிரதி. நானே அவங்களை நல்லா திட்டிவிட்டுடேன். அது மட்டுமில்லாம இப்படிப் பேசுனா அண்ணன்ட்ட சொல்லிடுவேன்னு சொன்னதும் அப்படியே கப்சிப் தான். இனி பேசிட்டாங்க.” என்று அவனைச் சமாதானப்படுத்தினார்.

“அம்மா, சையுவ பிடிச்சு அவள் தான் வேணும்னு நான் அவளுக்காகக் காத்திருந்து ப்ளான் பண்ணிக் கல்யாணம் பண்ணிருக்கேன். அவளைத் தப்பா பேசுனா நான் பொறுத்துட்டு இருக்க மாட்டேன். சொல்லிருங்க அவங்கிட்ட நான் கேட்டுட்டு அமைதியாலாம் இருக்க மாட்டேன்.” என்று அவன் சொல்லி முடிக்கவும்,

“அட வா மா.” என்று சுமித்ரா கூறவும் சரியாக இருக்க, சுமித்ரா யாரை அழைக்கிறார் என்று திரும்பிப் பார்த்த பிரதீஷ் அங்குச் சைதன்யாவை எதிர்பார்க்கவில்லை.

அவள் கேட்டிருப்பாளோ என்று அவளையே பார்க்க, அவளோ அமைதியாக உள்ளே வந்தாள். அவளின் முகத்தை வைத்து எதுவும் தெரியவில்லை. அதனால் பிரதீஷ் அறைக்குச் சென்று கேட்டுக் கொள்ளலாம் என்று அதை விடுத்து,”என்ன சையு கீழேயே வந்துட்டியா? நான் தான் உன்னை மேல இருக்கச் சொன்னேனே.” என்றான்.

“இல்லை அம்மா கால் பண்ணாங்க. அவங்க தான் என்னைக் குளிச்சுட்டா கீழே போனு சொன்னாங்க. அதான் வந்தேன்.” என்றாள்.

“பிரதி இந்தா உன்னோட ப்ளாக் காஃப்பி. இந்தா மா இது உனக்கு. சக்கரை, சூடு எல்லாம் சரியாக இருக்கானு பார்த்துக்கோ மா.” என்று கூறி இருவரிடமும் நீட்டினார். சைதன்யா அனைத்தும் சரியாக இருக்கிறது என்று குடித்துப் பார்த்துவிட்டு கூற, சுமித்ராவே,”பிரதி நீயும் போய் குளி. சைதன்யா நீயும் ரூம்க்கு போய் குடி மா. இரண்டு பேரும் சேர்ந்து கீழே வாங்க. சாமி கும்பிட்டுட்டு சாப்பிடுங்க, அதுக்குள்ள உங்க வீட்டுல இருந்து ஆட்கள் வந்துருவாங்க. மறுவீட்டுக்கு நீங்க இரண்டு பேரும் கிளம்பனும்.” என்று கூறவும் சரியென்று இருவரும் அவரிடம் கூறிவிட்டு மேலே அறைக்குச் சென்றனர்.

error: Content is protected !!