அனாஹா அவர்கள் வீட்டின் சாய்விருக்கையில் அமர்ந்திருக்க அவளை அத்தனைக் கோபத்துடன் திலகா முறைத்துக் கொண்டிருக்க, அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பரமசிவம். அவர் அதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“என்ன பாப்பா இது? உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா? இதுல போட்டிருக்கிறது நிஜமா? ஏன் பாப்பா முன்னாடியே சொல்லலை?” என்று அத்தனைக் கவலையாகக் கேட்டார் பரமசிவம்.
அனாஹா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, திலகா கோபமாக அவளின் பக்கத்தில் நெருங்கி கொஞ்சமும் யோசிக்காமல் அனாஹாவின் கண்ணத்தில் சப்பென்று ஓர் அறைந்தார். இதைச் சுத்தமாக யாரும் எதிர்பார்க்கவில்லை.
“ஏய் திலகா இது என்ன கை நீட்டி அடிக்கிறது? நான் தான் பேசிட்டு இருக்கேன்ல. அறிவில்லை உனக்கு!! இப்படித் தான் பிஹேவ் பண்ணுவனா உள்ளே போ. என் பொண்ணுகிட்ட நான் பேசிப்பேன்.” என்று கோபமாகக் கூறினார்.
“எப்படிங்க அமைதியா இருக்கிறது? நான் அத்தனை வாட்டிப் படிச்சு படிச்சு சொன்னேங்க இவகிட்ட இந்தக் காதல் கண்றாவியை எல்லாம் மறந்துருனு. முதல்ல முடியாதுனு சொன்னவ பொண்ணு பார்க்க வரும் போது சரின்னு சொல்லும் போதே எனக்கு டவுட் வந்துச்சு. அப்போவும் கேட்டேன் எப்படிச் சரின்னு சொன்னன்னு!! காசு பணம் இல்லாமல் வாழ முடியாது அப்படி இப்படினு சொல்லி என்னை ஏமாத்திட்டா….” என்று அவர் பாட்டிற்குப் பேசிக் கொண்டே செல்ல அதிர்ச்சியாகப் பார்த்தார் பரமசிவம்.
“அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா.” என்று நிதானமாகக் கேட்க, அவரின் குரல் மாற்றத்தைக் கவனிக்கவில்லை திலகா.
“ஆமாங்க எனக்குத் தெரியும். அதனால தான் அவசர அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாட்டுப் பண்ணேன். அப்போவும் என் கண்ணுல மண்ணைத் தூவிவிட்டு இப்படிப் பண்ணுவானு நான் நினைக்கவே இல்லையே.” என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்து ஒப்பாரி வைத்தவர் நிமிர்ந்து பரமசிவத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அப்போதே வாயை மூடி இருப்பார். ஆனால் அன்று அவருக்கு ஏதோ பிடித்திருந்தது போல அதனால் அழுது கொண்டிருந்தவர் திடீரென எழுந்து அனாஹாவின் அருகில் வந்து அவளின் கழுத்தில் தாலி இருக்கிறதா என்று பார்த்தார்.
அப்படி எதுவுமில்லை என்று தெரிந்தவுடன் பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவர் கண்ணைத் துடைத்துக் கொண்டு,”இப்போவும் ஒன்னும் குறைஞ்சு போகலை. நான் சொல்றதை இப்போவாவது கேள். அந்தக் கடங்காரனை மறந்துட்டு நாங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையோட குறிச்ச நேரத்தில கல்யாணத்தைப் பண்ணிக்கோ. உன்னோட வாழ்க்கைச் சந்தோஷமா இருக்கும்.” என்று அவர் மனசாட்சி இல்லாமல் பேச, அவரை வெறித்துப் பார்த்தாள் அனாஹா.
“சை!! எப்படி அம்மா உன்னால இப்படிப் பேச முடியுது? நல்ல வேளை எங்களோட மேரேஜ் சர்டிபிகேட் காப்பி இன்னொன்னை பிரதீஷ் வீட்டிக்கும் அனுப்பினது நல்லதா போச்சு. இல்லைனா நீ என்ன வேனாலும் பண்ணுவல!! ஆனால் உன்னால எதுவும் பண்ண முடியாது பிகாஸ் வீ ஆர் லீகல்லி மேரீட். அதாவது சட்டப்படி நாங்க கல்யாணமானவங்க.” என்று இருவரும் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்க, பரமசிவம் என்ற ஒருவரை இருவரும் மறந்துவிட்டனர்.
அருணாவிற்கும் சதாசிவத்திற்கும் விஷயம் கேள்விப்பட்டு அங்கு அப்போது தான் உள்ளே வந்தவர்கள் அனாஹாவும் திலகாவும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதையும் அதில் அதிர்ந்து பரமசிவம் கீழே சாய்ந்ததையும் கண்டு வேகமாக வந்து அவரைத் தாங்கிக் கொள்ள அப்போது தான் அனாஹாவும் திலகாவும் அவரைப் பார்த்து அதிர்ந்தனர்.
“மாமா, பெரிய மாமாவை ரூம்க்கு கூட்டிட்டு வாங்க. நான் தண்ணீர் எடுத்துட்டு வரேன்.” என்று கூறி வேகமாக உள்ளே சென்று தண்ணீர் எடுக்க அருணா செல்ல, சதாசிவம் கைத்தாங்கலாகப் பரமசிவத்தை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அவர்களின் பின்னயே திலகாவும் அனாஹாவும் வர, அறைக்குள் வந்ததும் அவரிற்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்த திலகா, அனாஹா பரமசிவத்தின் அருகில் வருவதைப் பார்த்தவர்,”நீ முதல்ல வெளில போ டீ. உன்னால தான் எல்லாமே. நல்லா இருந்த மனுஷனை இப்படிப் பண்ணிட்டியே. இப்போ நிம்மதியா.” என்று அவர் கூற, அதில் குற்றவுணர்வுத் தோன்ற திரும்பி வெளியே செல்லப் போனாள் அனாஹா.
“முதல்ல நீ வெளில போ. உன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை.” என்று பரமசிவம் திலகாவைப் பார்த்துக் கூற அதிர்ச்சியுடன் அங்கே அப்படியே நின்றுவிட்டார்.
சதாசிவத்திற்கும் தண்ணீர் எடுத்து வந்த அருணாவிற்கும் புரியவில்லை ஏன் பரமசிவம் இவ்வாறு கூறுகிறார் என்று. அதனால் சதாசிவம்,”அண்ணா என்ன இது எதுக்கு உங்களுக்கு அண்ணி மேல கோபம்? தப்புப் பண்ணது அனு. நீங்க எதுக்கு அண்ணி மேல கோபப்படுறீங்க?” என்று கேட்டார்.
“தப்பு அனு பண்ணலை சதா. இதோ நிக்கிறாளே என் உயிரை வாங்கனு இவள் தான் எல்லாத்தையும் பண்ணிருக்கா.” என்று கூற, புரியாமல் பார்த்தனர்.
“நான் என்னங்க தப்புப் பண்ணேன்?”
“பின்ன உன்கிட்ட முன்னாடியே அனு சொல்லிருக்கா லவ் பண்றதைப் பத்தி. என்கிட்ட ஒரு வார்த்தைச் சொன்னியா நீ? சொல்லிருந்தா இவ்ளோ தூரம் பிரச்சனை வந்தருக்குமா? இப்போ மாப்பிள்ளை வீட்டுல கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று அத்தனைக் கோபத்துடன் கேட்டார்.
அவர் கூறியதைக் கேட்ட சதாசிவத்திற்கும் அருணாவிற்கும் அத்தனை அதிர்ச்சி. அருணா திலகாவிடம்,”அக்கா உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? ஏன் நீங்க மாமாகிட்ட சொல்லலை?” என்று கேட்டார்.
“ஆமா அண்ணி நீங்க பண்ணது ரொம்ப தப்பு. ஏன் அண்ணி சொல்லலை?” என்று கேட்டார் சதாசிவம்.
“அக்கா சொல்லலைனாலும் நீயாவது சொல்லிருக்க வேண்டாமா அனு? இப்படிப் பண்ணிட்டியே!!” என்று ஆதங்கத்துடன் கேட்டார் அருணா.
“சித்தி சொல்லிருந்தால் ஏதாவது மாற்றம் வந்திருக்குமா? கண்டிப்பா அம்மா பேச்சை இந்த வீட்டுல யாரும் மீற மாட்டீங்க. அம்மாவும் அதைத் தான் சொன்னாங்க. என்னால கண்டிப்பா கார்த்திக்கை மறக்க முடியாது சித்தி. அப்பாகிட்ட சொல்லுவேன்னு சொன்னதுக்கு அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா சித்தி?” என்று கேட்டு நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தால்,”உங்க அப்பா என் பேச்சை மீற மாட்டார். இதுவரைக்கும் அப்படித் தான் நடந்துருக்கு. இனிமேலும் அப்படித் தான். அதனால உன் ஆசையை மறந்துருனு சொன்னாங்க. அவங்களை சொல்லியும் தப்பில்லையே!! இல்லாட்டி சண்டைக்கார குடும்பத்துல சம்பந்தம் வைக்க முடிஞ்சுருக்குமா? அப்பா சித்தப்பாவுக்காக வேணாம்னு சொல்லிருப்பாங்க. ஆனால் அம்மா உங்களை எல்லாம் கன்வின்ஸ் பண்ணிருப்பாங்க. நான் சொல்றது சரி தான?” என்று கேட்க, மூவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. பரமசிவம் அப்படி முறைத்துப் பார்த்தார் திலகாவை.
“பார் அவளோட மனசுல நான் எந்த அளவுக்கு இருக்கேன்னு பார். அப்பா எதுக்கும் லாய்க்கில்லாதவன்னு அவள் முடிவுப் பண்ணி தனியா அவளா ஒரு முடிவெடுத்துருக்கா பார். எல்லாம் உன்னால தான். இந்த வீட்டுல எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதுனு தான் நான் அமைதியா நீ சொல்றதுக்கு எல்லாம் சரின்னு சொன்னேன். ஆனால் நீ என்னை எந்த எடத்துல கொண்டு வந்து வைச்சுருக்க பாத்தியா. இந்த வீட்டுத் தலைவனா அப்போ நான் எதுக்கு இனி. எல்லாமே நீங்களே முடிவுப் பண்ணுங்க. இனிமேல் யாரும் என்கிட்ட எதுவும் பேச வேண்டாம்.” என்று கூறி அவர் அப்படியே கண் மூட, பார்த்த அனைவருக்கும் மனம் கஷ்டமாக இருந்தது.
“அப்பா ப்ளீஸ் இப்படிப் பேசாதீங்க. எனக்குப் பயமா இருந்துச்சு நீங்களும் அம்மா மாதிரி வேண்டாம்னு சொல்லிடுவீங்களோனு. அதனால தான் நான் சொல்லலை அப்பா. ப்ளீஸ் என்னால உங்ககிட்ட பேசாமல் இருக்க முடியாது. சாரி அப்பா ப்ளீஸ்.”
“என்னங்க…” என்று திலகா ஆரம்பிக்க,
“வாயை மூடு. என்கிட்ட ஒரு வார்த்தை நீ பேசக் கூடாது. பேசினா இந்த வீட்டுல கூட இருக்காமல் வெளில போயிடுவேன். முதல்ல ரூம்ம விட்டு வெளில போ.” என்று அத்தனை ஆங்காரத்துடன் அவர் கத்த, உண்மையிலே திலகா பயந்துவிட்டார். அனாஹா எதுவும் பேசவில்லை. அவளிற்கு இந்த பரமசிவம் புதிது. அவளிற்குத் தெரிந்த தன் அப்பா அதிர்ந்து கூடப் பேச மாட்டார். ஆனால் இன்று இப்படிக் கத்தவும் அவளுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது.
“அண்ணா ப்ளீஸ் நீங்க அமைதியா இருங்க.” என்று கூறிவிட்டு அருணாவிற்குக் கண்ணைக் காட்ட, அவர் திலகாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.
சதாசிவம் அனாஹாவையும் அங்கிருந்து போகச் சொல்ல, அவர் முடியாது என்று தலையாட்டி விட்டு பரமசிவம் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுக, பரமசிவத்தால் கோபத்தைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
“அனு அழுகாத.”
“சாரி அப்பா. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க அப்பா. கார்த்திக்கை நான் ரொம்ப லவ் பண்றேன் அப்பா. அவரும் ரொம்ப நல்லவர் அப்பா. உங்களை மாதிரியே என்னை அவர் ரொம்ப கேரிங்கா பார்த்துக்குவார் அப்பா. எங்கே அம்மா பேச்சை கேட்டு நீங்க வேண்டாம்னு சொல்லிடுவீங்களோனு பயந்துட்டேன் அப்பா. ப்ளீஸ் என்கிட்ட பேச மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க.” என்று அவள் கெஞ்ச, அவளின் தலையைத் தடவி விட்டார் பரமசிவம்.
“சரி அந்தப் பையன் இப்போ எங்கே இருக்கார்? என்ன பண்றார்? குடும்பம் யார்?” என்று கேட்டார்.
அனாஹா கார்த்திக் பற்றியும் அவனின் குடும்பத்தைப் பற்றியும் கூற, கேட்ட அவருக்குச் சரியென்று தான் பட்டது. முதலில் வேறு இனம் என்று நினைத்துத் தான் பயந்தார். ஆனால் ஒரே இனம் என்று அறிந்தவுடன்,”என்ன அனு மா? நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன்? அதுவும் நம்ம இனம் தான்னு சொல்ற அப்போ எனக்கு என்ன பிரச்சனை வரப் போகுது? நீ இதை என்கிட்ட சொல்லிருக்கனும் அனு.”
“அப்பா, அம்மா தான் அவங்க நம்மளை விட வசதில குறைவுனு வேண்டாம்னு சொல்லி உங்ககிட்டயும் சொல்லக் கூடாதுனு என்னை மிரட்டுனாங்க அப்பா. அதான் என்னால உங்ககிட்ட சொல்ல முடியலை அப்பா. சாரி.” என்றாள்.
“சரி விடு. அந்தப் பையனை நான் சந்திக்கனும். அதுக்கு முன்னாடி கதிரைவேல் குடும்பத்தைப் போய் பார்க்கனும். அவருக்கு கண்டிப்பா நம்ம மேல கோபமிருக்கும். கூப்பிட்டு வைச்சு அவமானம் பண்ணிட்டதா நினைப்பாங்க.” என்றார்.
அவர் நினைத்தது போல் தான் கதிரைவேலும் குதி குதியெனக் குதித்துக் கொண்டிருந்தார் அவரது வீட்டில். அவரிற்குப் பயங்கர கோபம். சுதீஷூம் பிரதீஷூம் கூட அவர் இந்த அளவிற்குக் கோபப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
“ப்ச் போதும் நிப்பாட்டு கதிரு. அந்தப் பொண்ணைப் பத்திப் பேசறதுக்கு முன்னாடி உன் பையனைகிட்ட பேசு. அந்தப் பொண்ணு மேல எந்தத் தப்புமில்லை. எல்லாம் இங்கே நிக்கிறான் பார் இவனைக் கேள்.” என்று காசியம்மாள் பிரதீஷை கை காட்ட ஒன்றும் புரியாமல் பார்த்தார் கதிரைவேல்.
“அம்மா பிரதீஷ் என்ன பண்ணான்? எதுக்கு அவனை நான் கேட்கனும். பொண்ணு லவ் பண்றதை மறச்சு இந்த அளவுக்கு கொண்டு வந்து இப்போ என் குடும்ப மானத்தை வாங்கிட்டாங்க. இதுக்கு பிரதீஷ் எப்படிக் காரணம்?”
“இங்கே பார் கதிரு லவ் பண்ணது அந்தப் பொண்ணு மட்டுமல்ல நம்ம வீட்டுப் பையனும் வேற பொண்ணை லவ் பண்றான். அந்தப் பொண்ணும் உன் பையனும் எல்லாத்துலயும் கூட்டுத் தான். நீ திட்டனும்னா உன் பையனைத் திட்டு.” என்று கூற, அத்தனை அதிர்ச்சி கதிரைவேலிற்கு. அவரிற்கு மட்டுமல்ல சுமித்ராவிற்கும் அத்தனை அதிர்ச்சி.
கதிரைவேல் பிரதீஷைப் பார்க்க, அவன் ஆமாம் என்று தலையசைத்து சைதன்யாவை காதலிக்கிறதையும் கூற, அவருக்கு அத்தனை அதிர்ச்சி.
“ஏன் என்கிட்ட சொல்லலை நீ?”
“சொல்லி இருந்தா நீங்க சரின்னு சொல்லி அவங்ககிட்ட பொண்ணு கேட்டுருப்பீங்களா? உங்களுக்கு உங்க கோபம், சண்டை தான் பெருசு. இதுவே சையுவோட அப்பா வந்து உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டார். இல்லாட்டி வேண்டாம்னு தான சொல்லிருப்பீங்க?” என்று கேட்க, அதிலிருந்து உண்மை அவரைச் சுட, எதுவும் பேசவில்லை.
“சரி பிரதி அதுக்காக இப்படிப் பண்ணலாமா? அனாஹாவைப் பொண்ணுப் பார்க்கப் போனோம்ல அப்பவாவது சொல்லிருக்கலாமே!! இது தப்பு பிரதி. அட்லீஸ்ட் பத்திரிக்கைக் கொடுக்கிறதுக்கு முன்னாடியாவது சொல்லிருக்கலாமே!! ஏன் டா.” என்று வேதனையுடன் கேட்டார் சுமித்ரா.
“அம்மா நீங்க பெரியவங்க நாங்க கேட்கும் போதே சரின்னு சொல்லிருந்தால் நாங்க சின்னவங்க ஏன் இப்படிப் பண்ண போறோம்?” என்று அவன் அவரைத் திரும்பிக் கேட்க,
“நீ என்ன சொன்னாலும் இது தப்பு பிரதி.” என்று அவர் சொன்னதையே சொல்ல,
“இப்போ முடிஞ்சதைப் பத்திப் பேசி ப்ரியோஜனம் இல்லை. அதனால நடக்கிறதைப் பத்திப் பேசுவோம்.” என்று காசியம்மாள் கூறிவிட்டு கதிரைவேலைப் பார்த்து,”கதிரு இது கோபப்பட வேண்டிய நேரமில்லை. அடுத்த என்ன பண்றதுனு யோசிக்க வேண்டிய நேரம்.”
“இனி என்ன பண்ண? பத்திரிக்கை கொடுத்தவங்களுக்கு ஃபோன் போட்டு இந்தக் கல்யாணம் நடக்காதுனு சொல்லனும். அது தான் வேலையே.” என்று அவர் கூற, அதிர்ந்து பார்த்தான் பிரதீஷ்.
“விளையாடதா கதிரு.”
“அம்மா நானா விளையாடுறேன்? என்ன பேசுறீங்க நீங்க?”
“அப்புறம் கல்யாணத்தை நிறுத்திறேன்னு சொல்ற!! இதுக்கா அவன் இவ்ளோ பண்ணான்?”
“அதுக்காக என்ன பண்ணனும் நான் இப்போ?”
“அவங்க வீட்டுல பேசி நம்ம பிரதீஷூக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும். நாம குறிச்ச நேரத்துல இந்தக் கல்யாணம் நடக்கனும்.”
காசியம்மாள் இவ்வாறு கூறவும் முதலில் கதிரைவேல் ஒத்துக் கொள்ளவில்லை. பின்னர் அனைவரும் பேசி அவரைச் சம்மதிக்க வைக்க, சதாசிவம் வீட்டிற்குச் சென்று பேச வேண்டுமென்று முடிவெடுக்க, சரியாக பரமசிவம் அழைத்து அவரிடம் தங்கள் வீட்டிற்கு வருவதாய் கூற அதற்கு கதிரைவேல் தாங்களே அங்கு வருவதற்குத் தான் கிளம்பிக் கொண்டிருக்கோம் என்று கூறவும் அவர்களை வரச் சொல்லிவிட்டு பரமசிவம் வைத்துவிட்டார்.
இங்கே பரமசிவம் வீட்டில் அவர் கதிரைவேலுக்கு அழைக்கும் முன், அதாவது பரமசிவம் கதிரைவேல் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று சதாசிவமிடம் கூறிய போது அனு பிரதீஷின் காதலைப் பற்றி பரமசிவத்திடம் கூற, பக்கத்திலிருந்து கேட்ட சதாசிவம் மற்றும் பரமசிவத்திற்கும் அதே போல் அப்போது உள்ளே வந்த அருணாவும் அதைக் கேட்க மூவருக்கும் அத்தனை அதிர்ச்சி.
“என்ன சொல்ற அனு? தன்யா சின்ன பொண்ணு எப்படி அந்தத் தம்பி இப்படிக் கேட்கலாம்?”
“சித்தி நமக்குத் தான் தன்யா சின்ன பொண்ணு. ஆனால் உண்மையிலே அவள் பெரிய பொண்ணு தான். என்னை விட மூணு வயசு தான் சின்னவ.”
“அனு!! தன்யா பத்தித் தெரியாதா உனக்கு? வினய் கூட விவரமா நடந்துக்குவான் ஆனால் தன்யா அப்படி இல்லை. அதைவிட அவள் இப்போ படிச்சுட்டு இருக்கா. எப்படிக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறது? நோ அனு நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.” என்று கண்டிப்பாய் அருணா கூற, அனுவிற்குக் கவலையாக இருந்தது.
“முதல்ல நாம போய் அவங்களை பார்த்துட்டு வரலாம். அப்புறம் எதுவும் பேசலாம்.” என்று கூறி பரமசிவம், கதிரைவேலிற்கு அழைக்க, அவரே வருவதாய் கூற, அதையும் வீட்டில் சொல்லினார் பரமசிவம்.
அனுவிற்குத் தான் கவலையாக இருந்தது. எப்படியாவது தன் சித்தி இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமென்று கடவுளிடம் வேண்ட ஆரம்பித்து விட்டாள்.
கதிரைவேல் குடும்பமும் வந்தது. முதலில் இரு வீட்டாரும் மன்னிப்பை வேண்ட, திலகாவிற்கு எதுவும் தெரியவில்லை. பிரதீஷ் வீட்டினர் எதற்கு மன்னிப்புக் கேட்கின்றனர் என்று. ஆனால் யாரிடமும் அப்போது கேட்க முடியவில்லை. அதனால் நடப்பதை அமைதியாகப் பார்த்தார்.
பின்னர் பேச்சு பிரதீஷ் மற்றும் சைதன்யா கல்யாணத்தை நோக்கிச் செல்ல, அதிர்ச்சியாகப் பார்த்தார் திலகா. ஆனால் விஷயம் கேள்விப்பட்டதும் அவரது அதிர்ச்சி குறைந்துவிட்டது.
முதலில் அருணா சம்மதிக்க முடியவே முடியாது என்று அடம்பிடிக்க, மற்றவர்கள் சொல்லிய எதையும் அவர் காதில் வாங்கே இல்லை,”உங்களுக்கு என் பொண்ணு தான் வேணும்னா மூணு வருஷம் வெயிட் பண்ணுங்க. என் பொண்ணு சி.ஏ.ஆகனும். அதுக்கு அப்புறம் எனக்கு இந்தக் கல்யாணம் நடக்கிறதுல எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றார் அருணா.
ஆனால் மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லை. இப்போது திருமணம் வைத்துக் கொண்டு அது நடக்காது என்றால் கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். அது பெண் மாறினாலும் சொல்ல வேண்டும் தான். ஆனால் இப்போது திருமணம் நின்று மூன்று வருடங்கள் காத்திருந்து பின்னர் அதே வீட்டில் தங்கையைத் திருமணம் செய்தால் அப்போது வேறு கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். அதை விட மூன்று வருடங்களில் தன்யா பாஸ் செய்யவில்லை என்றால்? அதற்கு மேலும் காத்திருக்க வேண்டும். இப்படி நிறையச் சிக்கல்கள் இருக்க, அருணாவின் நிபந்தனைகளை ஒத்துக் கொள்ள முடியவில்லை.
கதிரைவேல் பேச வாய் எடுக்க, அவரிற்கு முன்பு பிரதீஷ் அருணாவின் அருகில் வந்து,”ஆண்ட்டி நான் சைதன்யாவை இரண்டரை வருஷம் லவ் பண்றேன். இதை நான் யார்கிட்டயும் சொன்னது இல்லை. என்னால சைதன்யா இல்லாம வாழ முடியாது ஆண்ட்டி. நான் உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன். இதுவரைக்கும் சைதன்யா சி.ஏ.ஆகுறது உங்க பொறுப்பா இருந்துச்சு. ஆனால் இனிமேல் அது என் பொறுப்பு. ப்ளீஸ் நீங்க சம்மதிக்கனும் ஆண்ட்டி. ப்ளீஸ்.” என்று அவன் உருகிப் பேச, அருணாவால் முகத்தில் அடித்தது போல் பேச முடியவில்லை. அவர் அமைதியாக இருக்க, சதாசிவம் தான் பேசினார்.
“ஒரு நிமிஷம், நான் அருணாகிட்ட பேசிட்டு வரேன்.” என்று அருணாவை உள்ளே அழைத்துச் சென்று அருணாவிடம் பேசினார்.
“இங்கே பார் அருணா நம்ம பொண்ணுக்கு எப்படியும் கல்யாணம் பண்ணப் போறோம். அது ஏன் இந்தத் தம்பியா இருக்கக் கூடாது. ரொம்ப நல்ல பையனா இருக்கார். நம்ம அனு கொடுத்து வைச்சவனு நினைச்சேன். இப்போ அது நம்ம பொண்ணுன்னு நினைக்கும் போது இன்னுமே சந்தோஷம் தான். அனுக்காவது பொறுப்பா நடக்கத் தெரியும். ஆனால் தன்யா அப்படி இல்லை. நம்ம கைக்குள்ளயே வளர்ந்த பொண்ணு. பிரதீஷ் அவளைப் பிடிச்சு வரார். அப்போ நம்ம பொண்ணை நல்லா பார்த்துக்குவார்.” என்று அதையும் இதையும் கூறி அருணாவைச் சம்மதிக்க வைக்க, அனைவருக்கும் மிகவும் சந்தோஷம்.
திலகா எதுவும் பேசவில்லை. அவரைப் பொறுத்தவரை அனுவிற்குக் கொடுத்து வைக்கவில்லை என்று மட்டும் தான் நினைத்தார். மத்தபடி தன்யாவிற்கும் பிரதீஷிற்கும் திருமணம் நடப்பதில் எதுவும் பிரச்சனை இல்லை அவருக்கு. அதனால் அமைதியாக இருந்தார்.
அடுத்து சைதன்யாவிடம் இவ் விஷயத்தைக் கூற, அவளிற்கு அதிர்ச்சி பிரதீஷ் தன்னை கிட்டதட்ட மூன்று வருடங்களாகக் காதலிக்கிறார் என்று. ஏதோ படத்தில், கதையில் வாசிப்பதைப் போல தன்னையும் ஒரு நாயகியாக அவள் கற்பனைச் செய்தாள். அவளது குட்டி மூளை அவ்ளோ தான் அப்போது யோசித்து. அதிலும் தன் பெற்றவர்கள் கூறும் போது சரியாகத் தான் இருக்கும் என்று கூறி திருமணத்திற்குச் சம்மதித்தாள்.
ஆனால் வினயை தான் சமாளிக்க முடியவில்லை. அனாஹாவின் பாடு தான் பெரும்பாடாக இருந்தது. அவனைக் கெஞ்சிக் கொஞ்சித் தான் சமாளித்தாள்.
விளைவு, அனைவரும் குறித்த முகூர்த்தத்தில் இருவருக்கும் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் முடிந்து, பிரதீஷ் தன் ஆசை மனைவியின் பதட்டமான முகத்தைப் பார்த்து அவளைத் தெளிவு படுத்த வேண்டி வெளியே அழைத்துச் சென்றுவிட்டான்.