சுதீஷ் கூறியது போல மாலை ஐந்து மணி போல பிரதீஷின் வீட்டிற்கு வந்தான். அப்போது தான் பிரதீஷின் அவனது அலுவலகத்திலிருந்து வந்தான். எப்போதும் ஆறு மணிக்குத் தான் வருவான். இன்று சுதீஷ் வருவதால் அவன் சீக்கிரம் வந்து விட்டான்.
உள்ளே வந்த சுதீஷ் அவன் கொண்டு வந்த மீன் குழம்பைச் சமையலறையின் ஸ்லாபில் வைத்துவிட்டு வெளியே வந்தவன் ஹாலிலிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தான். பிரதீஷோ சுதீஷிற்குப் போட்டிருந்த டீயை சூடுப் பண்ணிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவனிற்கு எதிரில் இருந்த சாய்விருக்கையில் அமர்ந்தான்.
“என்ன டா வெறும் டீ மட்டும் தர? கொறிக்க எதுவுமில்லையா?”
“ப்ச் நீ கேட்பன்னு தெரியும். அதான் முறுக்கு வாங்கி வைச்சிருக்கேன். எடுத்து கொட்டிக்கோ. டைனிங்க் டேபிள்ல தான் இருக்கு.” என்று அவன் கூற, வேகமாக எழுந்து சென்று அதை எடுத்துக் கொண்டு வந்தான்.
“சரி இப்போ சொல்லு என்ன ப்ராப்ளம்?” என்று கேட்டான் சுதீஷ்.
அன்று மதியம் கார்த்திக் வந்தது, வினய் அவர்களைப் பார்த்தது, அனாஹாவின் பயம், அவளின் வேண்டுகோள் என்று அனைத்தையும் கூறினான். அதைக் கேட்ட சுதீஷிற்கும் யோசனையாக இருந்தது.
“அனு பயப்படுறது புரியுது. கண்டிப்பா திலகா ஆண்டிக்கு டவுட் வரத் தான் செய்யும். ஆனால் எப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண முடியும்?”
“உன் ப்ரண்ட் அங்கே தான வொர்க் பண்றான். அவன்கிட்ட கேளு முடியுமானு.” என்றான் பிரதீஷ்.
“டேய் அதெல்லாம் முடியும். ஆனால் என்ன ரீசன் சொல்லிட்டு அனாஹா இப்போ வெளில வருவா? அதுவுமில்லாம உன்னோட மாமனார் இங்கே தான் டெபுட்டி தாசில்தாரா வேலைப் பார்க்கிறார். அப்போ தெரிஞ்சுடாதா?”
“அதெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை சுதி. அப்படியே தெரிஞ்சாலும் நமக்கு அது நல்லது தான். ஆனால் அவருக்குத் தெரியுறதுக்கு முன்னாடி அவங்க கல்யாணம் முடிஞ்சுருக்கனும்.”
“சரி டா எப்படி அனு வெளில வருவா?”
“அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும். நீ நா நீ மட்டுமில்லை பிருந்தாவும்.” என்று கூற அவனை அதிர்ச்சியாகப் பார்த்தான் சுதீஷ்.
“என்ன டா விளையாடுறியா? பிருந்தாவுக்கு எதுவுமே தெரியாது. அவகிட்ட என்ன டா சொல்றது?”
“உண்மையைச் சொல்லுவோம். தம்பிக்காக இதுக்கூட நீ செய்ய மாட்டியா டா அண்ணா?” என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்க அதில் காண்டானான் சுதீஷ்.
“டேய் சும்மா இரு. பிருந்தாலாம் வேண்டாம். அப்புறம் அம்மாவுக்குத் தெரிஞ்சுடும். அவ்ளோ தான் மொத்த குடும்பத்துக்கும் விஷயம் தெரிஞ்சுடும்.”
“ப்ச் புரியாமல் பேசாத சுதி. பிருந்தா ஹெல்ப் கண்டிப்பா வேணும். பிருந்தாவால மட்டும் தான் அனுவை வெளில கூட்டிட்டு வர முடியும். நாம கூப்பிட்டா அவங்க விடுவாங்களா? அதுவும் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு? யோசி சுதி. பிருந்தாகிட்ட அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னா கண்டிப்பா சொல்ல மாட்டா. எனக்காக இதை நீ செஞ்சு தான் ஆகனும்.” என்று கெஞ்சலுடன் கேட்டாலும் ஏனோ அந்தக் குரலில் நீ கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டுமென்ற கட்டளையும் இருந்தது.
“சரி நான் பேசிப் பார்க்கிறேன் பிரதி. ஆனால் என்னால உறுதியா சொல்ல முடியாது பிருந்தா இதுக்கு ஒத்துக்காட்டி நீ வேற ப்ளான் தான் போடனும்.”
“கண்டிப்பா பிருந்தா ஒத்துக்குவா. அவளும் உன்னை லவ் பண்ணித் தான மேரேஜ் பண்ணிகிட்டா சோ கண்டிப்பா புரிஞ்சுக்குவா.” என்று பிரதீஷ் கூற,
“சரி ஒகே. அப்போ நான் கிளம்புறேன். நைட் பேசிட்டு உனக்கு என்னன்னு நாளைக்குச் சொல்றேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அதே போல் அன்றிரவே சுதீஷ் பிருந்தாவிடம் அத்தனையும் கூற, அதிர்ச்சியில் அவளிற்குப் பேச்சே வரவில்லை.
“என்ன சொல்றீங்க அத்தான்? பிரதீஷ் சைதன்யாவை லவ் பண்றானா? அதே மாதிரி அனாஹா வேற பையனை லவ் பண்றாளா?”
“ஆமா இவ்ளோ நேரம் அதைத் தான சொன்னேன்.”
“என்ன நீங்க இவ்ளோ ஈசியா சொல்றீங்க? வீட்டுல தெரிஞ்சா எவ்ளோ பிரச்சனை ஆகும். அதெல்லாம் தெரிஞ்சும் எப்படி உங்களால அமைதியாக இருக்க முடியுது?”
“இங்கே பார் பிருந்தா எனக்கு என் தம்பி சந்தோஷம் ரொம்ப முக்கியம். அவனோட சந்தோஷம் சைதன்யாவோடனு சொல்றான். அப்போ கண்டிப்பா அவங்களை சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு. உன்னால எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா? அதை மட்டும் சொல்லு.” என்றான் சுதீஷ். அவனின் குரலில் தெரிந்த மாறுபாட்டில் சுதாரித்து விட்டாள் பிருந்தா.
“அத்தான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன். நான் என்ன செய்யனும்?”
“நாம கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கப் போகும் போது அனாஹாவோட அப்பா அப்புறம் அம்மாகிட்ட ஏதாவது ரீசன் சொல்லி நீ வெளில கூப்பிட்டு வா. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.”
“என்ன பார்த்துக்குவீங்க? உங்களோட ப்ளான் என்னன்னு என்கிட்டயும் சொல்லுங்க. அப்போ தான் என்னால தெளிவா செயல்பட முடியும்.”
“நீ அனாஹாவை வெளில கூட்டிட்டு வந்ததும் கார்த்திக் அங்கு வந்துருவார். அவங்க இரண்டு பேரும் அங்கிருந்து ரெஜிஸ்டர் ஆஃபிஸ் போயிடுவாங்க. அங்கே என் ப்ரண்ட் எல்லா ஏற்பாட்டையும் ரெடியா வைச்சுருப்பான். ஸோ இவங்க போனதும் அவங்களுக்கு மேரேஜ் நடந்துரும். எப்படிப் போனாங்களோ அப்படியே அனாஹாவை கார்த்திக் ரிட்டர்ன் கூட்டிட்டு வந்து விட்டுருவார். நீ திரும்பக் கூட்டிட்டு வரனும் அவ்ளோ தான்.”
“என்ன இது சிம்பிள்ளா அவ்ளோ தான்னு சொல்றீங்க அத்தான்? நாளைக்கு உண்மைத் தெரிய வரும் போது நான் தான் மாட்டுவேன் அத்தான்.”
“அதை அப்போ பார்த்துக்கலாம் பிருந்தா. அப்படியே தெரிஞ்சாலும் டோண்ட் வொர்ரி நாங்க எதுக்கு இருக்கோம். யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. சொல்லவும் விட மாட்டேன். அதனால நீ எதுவும் யோசிக்காத.” என்று அவன் கூறிவிட்டுப் படுக்கச் செல்ல பிருந்தாவிற்குத் தான் அத்தனைப் பயமாக இருந்தது. அவளாக சுதீஷை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. காரணம் அவன் மேல் அவள் பைத்தியமாக இருக்கிறாள். அவனிற்கும் அவளை மிகவும் பிடிக்கும் தான். ஆனால் பிருந்தாவிற்கு அதிகமாக அவனைப் பிடிக்கும் அவனிற்குப் பிடிக்காத எந்தக் காரியத்தையும் அவள் செய்ய மாட்டாள். இப்போது அவளிற்கு யோசனையாக இருந்தது. தான் செய்ய முடியாது என்று கூறினாள் கண்டிப்பாக சுதீஷிற்குப் பிடிக்காது. இருந்தாலும் பிரதீஷிற்காக இதைச் செய்ய முடிவெடுத்தவள் தூங்கச் சென்று விட்டாள்.
அடுத்த நாள் விஷயத்தை பிரதீஷிடம் சுதீஷ் கூற அவனும் அதை கார்த்திக் மற்றும் அனாஹாவிடம் கூற, அவர்களுக்கும் அத்தனைச் சந்தோஷம். அதன் பிறகு தான் அனாஹா சற்று நிம்மதியாக வளம் வந்தாள்.
அனைவரும் ஜவுளி எடுக்க வேண்டி அன்று கடைக்குச் செல்ல பிருந்தாவிற்குத் தான் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவளிற்கு ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் த்ரில்லிங்காகவும் இருந்தது.
அனாஹா கடைக்குள் வந்ததும் அவள் பிருந்தாவைத் தேடிச் சென்று,”அக்கா ரொம்ப தாங்க்ஸ். நீங்க செஞ்ச ஹெல்ப்ப நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.” என்று அவளது கையைப் பற்றிக் கண்ணில் நீர் வைத்துக் கூற, பிருந்தாவிற்கு அவளைப் பார்க்க ஒரு மாதிரியாகி விட்டது.
“ஷ், அனு எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க. அமைதியா எப்பவும் போல இரு. இல்லாட்டி நீயே காட்டிக் கொடுத்துருவ போல.” என்று கூறவும் தான் கண்ணீரை உள் இழுத்துக் கொண்ட அனு அவளிடம் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாள்.
அனைவரும் துணி எடுத்துக் கொண்டிருக்க, சுதீஷ் பிருந்தாவிற்கு கண்ணைக் காட்ட, அவள் திலகாவிடம் சென்றாள்.
“சித்தி.” என்று திலகாவை அழைக்க, அவர் திரும்பிப் பார்த்தார். அவருடன் இருந்த சுமித்ராவும் பார்த்தார்.
“சித்தி, அனாஹாவை நான் கொஞ்சம் வெளில கூட்டிட்டு போயிட்டு வரேன்.” என்று கூற, திலகாவும் சுமித்ராவும் புரியாமல் அவளைப் பார்த்தனர்.
“என்ன பேசுற பிருந்தா? எங்கே கூட்டிட்டு போற நீ? எதுவும் என்கிட்ட கூடச் சொல்லலை.” என்று கேட்டார் சுமித்ரா.
“அது இல்லை அத்தை இப்போ தான் எனக்கும் தோனுச்சு. இங்கே என் கூடப் படிச்ச பொண்ணு பொட்டிக் ஒன்னு வைச்சுருக்கு. உங்களுக்குத் தெரியும் தான அத்தை? மோஸ்ட்லி ட்ரெஸ் எல்லாம் அங்க தான நான் எடுப்பேன். சூப்பரா தைக்கவும் செய்வா. நான் அதை அனு கிட்ட சொன்னேன். என்னை கூட்டிட்டு போங்க அக்கானு சொன்னா. இன்னைக்கு விட்டால் வேற நாள் கிடைக்காது. அப்புறம் கல்யாண பொண்ணு வெளில போகக் கூடாதுனு சொல்லிடுவீங்க.” என்று அவள் கூற, சுமித்ரா எதுவும் பேசவில்லை ஆனால் யோசனையாக இருந்தார் அவர். அதே போல் இதற்குத் திலகா என்ன கூறுவாரோ என்று அவர் முகத்தையே பார்க்க, திலகா திரும்பி அனாஹாவைப் பார்த்தார்.
அனாஹா அதைச் சட்டெனப் புரிந்து கொண்டு திரும்பிப் பக்கத்தில் நின்றிருந்த பிரதீஷிடம் பேச ஆரம்பித்து விட்டாள். அவளது செயலைப் பார்த்த பிரதீஷிற்குச் சிரிப்பு வந்து அதை அடக்க முடியாமல் சிரித்து விட, அனாஹாவிற்கு ஐயோ என்றிருந்தது.
“என்ன பிரதீஷ் இப்படிப் பண்றீங்க? எங்கே அம்மா கண்டுபிடிச்சுடு வாங்க. ப்ளீஸ்.” என்று அவள் கெஞ்ச, பிரதீஷ் சிரிப்பைச் சற்றுச் சிரமப்பட்டுத் தான் அடக்கினான். ஆனால் இந்தக் காட்சியைப் பார்த்த திலகாவிற்கு அவர்கள் ஏதோ அன்யோன்மாகப் பேசிக் கொள்வதாகப்பட பிருந்தாவைப் பார்த்து சரியென்று தலையசைத்தார்.
அவர் சரியென்று சொல்லவும் தான் பிருந்தாவிற்கு மூச்சு வந்தது. சுதீஷை திரும்பிப் பார்த்துக் கண்ணை மூடித் திறக்க, அவன் அவளிற்குக் கட்டை விரலைக் காட்டிவிட்டு பிரதீஷிடம் சென்றான். இதை யாரும் பார்க்கவில்லை என்று தான் அவர்கள் நினைத்தனர். ஆனால் சுதீஷ் மற்றும் பிரதீஷின் பார்ட்டி காசியம்மாள் பார்த்துவிட்டு கண்ணை உருட்டி யோசனையில் ஆழ்ந்தார்.
பிருந்தா அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, சுமித்ரா அவளின் கையைப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்று அவளிடம்,”என்ன பிருந்தா இது? புதுசா இருக்கு? இதைக் கல்யாணத்துக்கு அப்புறமும் நீ செய்யலாமே? ஏன் இப்பவே?” என்று கேட்டார்.
“அத்தை கல்யாணத்துக்கு ப்ளவுஸ் நல்லா தைக்க வேண்டாமா? என் கல்யாணத்துக்கு பார்த்தீங்க தான எப்படி சூப்பரா தச்சு கொடுத்தா. அது மாதிரி அனுவோட ப்ளவுசையும் சூப்பரா தச்சு கொடுப்பா அத்தை அதான்.” என்று கூற, அந்தக் காரணம் அவரிற்குச் சரியென்று படத் தலையசைத்து விட்டு அங்கிருந்து செல்லவும் தான் ஹப்பாடி என்றிருந்தது பிருந்தாவிற்கு.
அவர்கள் திட்டப்படியே பிரதீஷ், சுதீஷ், அனாஹா மற்றும் பிருந்தா கிளம்பினர் அங்கிருந்து. பிருந்தா கூறியது பொய்யாக இருந்தாலும் நாளை சந்தேகம் வந்து விடக் கூடாதென்று பிருந்தாவின் தோழியின் கடைக்குச் சென்று அனு எடுத்த புடவைக்கு ப்ளவுஸ் தைக்கக் கொடுத்து விட்டுத் தான் அனைவரும் ரிஜிஸ்டர் அலுவலகம் சென்றனர்.
அவர்கள் அங்கு வந்து இறங்கவும் கார்த்திக் அங்கு வரவும் சரியாக இருந்தது. அனுவைப் பார்த்தவுடன் வேகமாக அவள் அருகில் செல்ல பக்கத்தில் இருப்பவர்களை மனதில் வைத்து அமைதியாக இருந்தான். அவனிற்கும் அத்தனைப் படப்படாப்பாக இருந்தது. வீட்டில் யாருக்கும் தெரியாமல் செய்யப் போகும் முதல் காரியம். அதனால் இருவருக்கும் மனதில் வலி இருந்தாலும் அவர்களுக்கு வேறு வழியில்லாததால் மனதைத் தேற்றிக் கொண்டனர்.
அலுவலகத்தில் சுதீஷ் தன் நண்பனிடம் கூறியதாலும் முன் கூடியே அனைத்தையும் கொடுத்துப் பதிவு செய்ததாலும் இவர்கள் சென்றதுமே கார்த்திக் மற்றும் அனாஹாவை அழைக்க ஒரு விதப் படப்படப்புடனே சென்றனர்.
ரெஜிஸ்ட்டரிடம் ஏற்கனவே சுதீஷின் நண்பன் கூறியதால் அவர் அதிகமாக எதுவும் கேள்வி கேட்கவில்லை. அவர் நீட்டிய காகிதங்களில் இருவரையும் கையெழுத்துப் போடச் சொல்ல, அனுவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதைப் பார்த்த ரெஜிஸ்ட்டர்,”என்ன உங்க இரண்டு பேருக்கும் இந்தக் கல்யாணத்துல சம்மதம் தான?” என்று கேட்டார்.
“ம் சம்மதம் தான்.” என்று இருவரும் ஒருசேரக் கூற,
“அப்போ சைன் பண்ணுங்க.” என்றார்.
அவர் கூறியதும் ஒரு நிமிடம் தயங்கினாலும் இருவரும் அடுத்த நிமிடம் கையெழுத்திட்டனர். கூடி இருந்த அனைவரும் கை தட்டக் கொஞ்சம் குற்றவுணர்ச்சி இருந்தாலும் இருவருக்கும் அத்தனைச் சந்தோஷமாகவும் இருந்தது.
“இப்போ ஹாப்பியா அனு?” என்று கேட்டான் பிரதீஷ்.
“ரொம்ப தாங்க்ஸ் பிரதீஷ். தன்யா நிஜமாவே கொடுத்து வைச்சவ. நான் கேட்ட ஒரே காரணத்துக்காக உங்க அண்ணா, அண்ணிலாம் ரிஸ்க் எடுத்தது நினைச்சு எனக்குச் சந்தோஷமா இருக்கு. இதுக்கு உங்களுக்கு நான் என்ன செய்ய போறேன்னோ தெரியலை.”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அனு. நீ கார்த்திக் ப்ரோவோட ஹாப்பியா இருந்தாலே போதும் எங்களுக்கு.” என்றவன்,”கங்க்ராட்ஜுலேஷன் மிஸ்ஸஸ் அனாஹா கார்த்திக்.” என்றான். அதைக் கேட்ட அனாஹாவிற்கு வெட்கம் வந்துவிட்டது.
“பார் டா வெட்கத்தை. கார்த்திக் இதை அப்படியே கேப்ட்சர் பண்ணிக்கோங்க. இந்த மொமன்ட்ஸ் எல்லாம் ரொம்ப ப்ரீட்சியஸ்.” என்றான் பிரதீஷ். உடனே கார்த்திக் அதை தன் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டான். அனு அவன் தோளில் அடித்தாள்.
பின்னர் சுதீஷ் மற்றும் பிருந்தாவும் அவர்களுக்கு வாழ்த்துக் கூற, அனுவிற்கும் கார்த்திக்கிற்கும் அவர்கள் இருவருக்கும் என்ன கைமாறு செய்ய என்று தெரியவில்லை. அனு பிருந்தாவை அணைத்துக் கொள்ள, பிருந்தா அவளின் முதுகைத் தட்டுக் கொடுத்தாள்.
சுதீஷூம் கார்த்திக்கை அணைத்து வாழ்த்துத் தெரிவிக்க, கார்ததிக்கும் அவனிற்கு நன்றி உரைத்தான். பின்னர் கார்த்திக் அவர்களிடம் கூறிவிட்டு அனுவிடமும் பத்திரம் சொல்லி விட்டுச் செல்ல, அனுவை எப்படி அழைத்துச் சென்றார்களோ அப்படியே சதாசிவத்தின் இல்லத்தில் விட்டுவிட்டு பிருந்தா, சுதீஷ் மற்றும் பிரதீஷ் மூவரும் பிரதீஷின் வீட்டிற்குச் சென்றனர்.
கல்யாண வேலை களை கட்டியது இரண்டு வீட்டிலும். திருமண பத்திரிக்கையும் இரு வீட்டிலும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். முக்கியமான நபர்களுக்கு, உறவினர்களுக்குக் கொடுத்து விட்டனர். ஊரில் உள்ளவர்களைத் தான் அழைக்க வேண்டும் என்ற நிலையில் தான் கார்த்திக் மற்றும் அனாஹாவின் பதிவுத் திருமணச் சான்றிதழ் இரு வீட்டிற்கும் கொரியரில் வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.