வெயில் கொழுத்தும் மதிய வேளையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜா நகரிலிருக்கும் அந்தப் பெரிய வீட்டின் முன்பு கீச்சிட்டு வந்து நின்றது அந்த நான்குச் சக்கர ஸ்கோடா வண்டி. அதிலிருந்து ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கிய சதாசிவத்தின் முகத்தில் யோசனையின் சாயல் தெரிய, திரும்பி ஓட்டுநரின் பக்கத்துக் கதவைத் திறந்த அவரது மனைவி அருணாவின் முகத்தைப் பார்த்தார்.
“உள்ள போங்க மாமா. எதுக்கு உங்க அண்ணி கூப்பிட்டாங்கனு தெரிஞ்சுடப் போகுது. என் முகத்தைப் பார்த்து ஒன்னும் ஆகப் போறது இல்லை.” சிரித்துக் கொண்டே கூறிய அருணா அவரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கேட்டைத் திறந்தார்.
கேட் திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார் திலகா. அருணாவும் சதாசிவமும் வருவதைப் பார்த்து,”உள்ளே வாங்க.” என்று அழைத்து விட்டு முன்னே சென்றார்.
சதாசிவமும் அருணாவும் உள்ளே நுழைந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர். திலகா இருவருக்கும் சில்லென்ற மோரைக் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிப் பருகிய இருவருக்கும் வெயிலில் வந்ததில் இதமாக இருந்தது.
“மாமா இல்லையா அக்கா?” மோர் குடித்துக் கொண்டே அருணா திலகாவிடம் கேட்டார்.
“இப்போ வர்ற நேரம் தான்.” என்றுடன் அமைதியாகி அவரும் அவர்கள் எதிரில் இருக்கும் ஓர் ஆள் அமரக் கூடிய ஒற்றை சோபாவில் அமர்ந்தார்.
சரியாக அதே நேரம்,”என்ன திலகா, சதா கார் நிக்கிது. அவன் வந்துருக்கானா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் அந்த வீட்டின் தலைவன் பரமசிவம்.
“ஆமாங்க உங்க தம்பி மட்டுமல்ல அருணாவும் வந்துருக்கா. நான் தான் வரச் சொன்னேன்.”
“அருணாவுமா? எதுக்கு நீ அவங்களை வரச் சொன்ன?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்து சதாசிவம் பக்கத்தில் அமர்ந்தவர் இருவரையும் தலையசைத்து வரவேற்றார்.
“ஒரு முக்கியமான விஷயம் பேசனும் அதுக்கு தான் வரச் சொன்னேன். பேசுறதுக்கு முன்னாடி வந்து எல்லாரும் சாப்பிடுங்க.” என்று கூறிவிட்டு திலகா சாப்பிடும் இடம் நோக்கிச் சென்றார்.
“இவ என்ன பேசப் போறா? உங்களையும் வேற வர வச்சிருக்கா. என்ன வரப் போகுதுனு தெரியலை” என்ற யோசனையோடு பரமசிவம் கூறினார்.
“மாமா இன்னும் கொஞ்ச நேரத்துல விஷயம் என்னன்னு தெரியத் தான் போகுது. எதுக்கு இப்போ கவலைப்பட்டுக்கிட்டு? வாங்க அக்கா சொன்ன மாதிரி முதல்ல சாப்பிடலாம். அதுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்று கூறி அருணா சதாசிவத்தையும் பரமசிவத்தையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
திலகா மூவருக்கும் பரிமாறி விட்டு அவருக்கும் தட்டை எடுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பித்தார். நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாக உண்டனர்.
உண்டு முடித்து மீண்டும் முன் அறைக்கு வந்து சோபாவில் அமர திலகா தான் பேச்சை ஆரம்பித்தார்,”நம்ம பாப்பாவுக்கு ஒரு நல்ல இடத்திருந்து நல்ல சம்மதம் வந்துருக்கு. அதைப் பத்திப் பேசத் தான் வரச் சொன்னேன்.” என்று கூறிவிட்டு மூவரின் முகத்தையும் பார்த்தார்.
“சந்தோஷமான விஷயம் அக்கா. பையன் யார்? என்ன பண்றார்? நம்ம ஊரா இல்லை வேற ஊரா அக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டார் அருணா.
“பையன் பெயர் பிரதீஷ். சொந்தமா காஞ்சிபுரத்துல ட்ராவலஸ் அண்ட் டூர்ஸ் பிஸ்னஸ் பண்றார். அங்கேயே சொந்தமா வீடு இருக்கு. பையன் ஃபோட்டோ பார்த்தேன். நல்லா இருக்கார். நம்ம பாப்பாவுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கார்.”
“அப்படியா? ஃபோட்டோ இருக்கா. என்கிட்ட காட்டுங்க நானும் பார்க்கிறேன்.” என்று ஆர்வமாகக் கேட்ட அருணாவிற்குப் பையனின் புகைப்படத்தைக் காட்டத் தனது கைப்பேசியை எடுக்கப் போன திலகாவை தடுத்த பரமசிவம், “இரு திலகா ஃபோட்டோ அப்புறம் பார்த்துக்கலாம். மாப்பிள்ளையைப் பத்தி சொல்லிட்ட அவரோட குடும்பத்தைப் பத்தி நீ எதுவும் சொல்லலை. அவங்க அப்பா அம்மா யார்? என்ன பண்றாங்க?அவங்களும் காஞ்சிபுரமா? அதை முதல்ல நீ சொல்லு” என்றார்.
“காஞ்சிபுரம்னா சொல்லுங்க அண்ணி யார் என்னன்னு விசாரிச்சுடுவோம்.” என்றார் சதாசிவம்.
“அது வந்து…” என்று திலகா இழுக்க, பரமசிவம் சந்தேகமாக அவரைப் பார்த்தார்.
“சொல்லு திலகா பையனோட குடும்பம் யார்?” சற்று அழுத்தமாகக் கேட்டார். அவருக்குத் திலகா பற்றி நன்குத் தெரியும். முதலில் இந்த விஷயத்தைத் தன்னிடம் கூறாமல் தம்பி மற்றும் அவனின் மனைவியையும் வர வைத்து அவர்களை வைத்துக் கூறுகிறார் என்றால் ஏதோ பிரச்சனை இதிலிருக்கிறது என்பது புரிந்தது அவருக்கு.
“நான் யார்னு சொல்லுவேன் ஆனால் நீங்க யாரும் பாதகமா எதுவும் சொல்ல கூடாது. நம்ம பாப்பாவுக்கு முதல்ல வந்த வரன். அதான் எல்லாரையும் வர வைச்சு பேசுறேன்.” என்று பூடகமாகப் பேக மூவருக்கும் புரியவில்லை. அதனால் அவர் என்ன கூறப் போகிறார் என்று பார்க்க அமைதியாக இருந்தார்கள்.
“பையனோட அப்பா பேர் கதிரைவேல், அம்மா பேர் சுமித்ரா.” என்று நிறுத்திவிட்டு மூவரையும் பார்க்க அவர்களும் தாங்கள் நினைத்த ஆட்களைத் தான் கூறப் போகிறாரா என்று தெரிந்து கொள்ள அவர் மேலும் கூறட்டும் என்று இப்போதும் அமைதியாக இருந்தனர்.
அவர்களது அமைதி திலகாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அவர் தொடர்ந்தார்,”அவங்க குடும்பமும் இதே ஊர் தான். காசி ரைஸ் ட்ரேடர்ஸ் கடை வைச்சுருக்காங்கள அவங்க தான். அவங்களோட இரண்டாவது பையன் தான் பிரதீஷ்.” என்று கூறி முடிக்க யாரும் எதுவும் பேசவில்லை.
ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தவர் அதற்கு மேல் அவரால் அந்த அமைதியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவரே,”ஏதாவது சொல்லுங்க. அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார்.
“என்ன பேசச் சொல்ற திலகா? அந்த ஆளுக்கும் நம்ம சதாவுக்கும் எவ்வளவு சண்டை நடந்துச்சுனு உனக்கும் தெரியும். இப்போ இப்படிப் பேசினா என்ன அர்த்தம்?” ஆதங்கத்துடன் கேட்டார் பரமசிவம்.
“தெரியும்ங்க. ஆனால் அந்தப் பிரச்சனை நடந்து பல வருஷமாச்சு. வினய் பிறந்த போது நடந்த பிரச்சனை. இப்போ அவனுக்கே இருபது வயசு ஆகப் போகுது. அப்புறம் எதுக்கு இன்னும் அதையே தூக்கிட்டு சுத்தனும்?” என்று அவர் கேட்க, மூவருக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை.
“என்ன திலகா பேசுற? வருஷமாகிடுச்சுனா பிரச்சனை நடந்தது நடக்கலைனு ஆகிடுமா? முதல்ல இந்த சம்பந்தம் பத்தி உனக்கு யார் சொன்னது? அவங்க வீட்டுல இருந்து யாராவது கேட்டாங்களா?”
“இல்லைங்க. பக்கத்து தெரு ராதா அக்கா தான் சொன்னாங்க. அவங்களோட மாமியாரோட ஒன்னு விட்ட அக்கா தான் அந்தப் பையன் பிரதீஷோட பாட்டி. அந்தப் பையனுக்கும் பொண்ணு பார்க்குறாங்களாம். இன்னைக்கு கோவில்ல ராதா அக்காவைப் பார்த்தேன். அப்போ நம்ம பாப்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம் ஏதாவது பையன் தெரிஞ்சா சொல்லுங்கனு சொன்னேன். உடனே அவங்க ஃபோன்ல இருந்து பையனோட ஃபோட்டோ அப்புறம் ஜாதகத்தை அனுப்பினாங்க. எனக்கு ஃபோட்டோவைப் பார்த்ததும் பிடிச்சுடுச்சு அதான்.” என்று விலாவாரியாக திலகா கூறினார்.
பரமசிவம் எதுவும் யோசிக்கவில்லை,”சரி நீ அந்த ராதாவுக்கு ஃபோன் பண்ணி இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடு. அவங்ககிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடு. நீ எதுவும் நம்ம பாப்பா ஃபோட்டோ ஜாதகம் எதுவும் அனுப்பலைல?”
“இல்லைங்க அது வந்து…” என்று அவர் இழுக்க, சட்டென்று பாய்ந்து அவரை அடிக்க கை ஓங்கி விட்டார். சுதாரித்த சதாசிவம் தன் அண்ணனின் கையைப் பற்றத் திலகா மிரட்சியாகப் பார்த்தார்.
“மாமா என்ன இது புது பழக்கம்? நம்ம குடும்பத்துல யாரும் பொண்டாட்டிகிட்ட கையை ஓங்கினது இல்லை. முதல்ல நீங்க அமைதியா உட்காருங்க மாமா. பேசிட்டு தான இருக்கோம். பார்த்துக்கலாம்.” என்று அருணா அவரை அமைதிப்படுத்த, பரமசிவம் திலகாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்தார்.
“அறிவில்லையா உனக்கு? எப்போ இருந்து என்கிட்ட கேட்காமல் முடிவெடுக்க ஆரம்பிச்ச நீ? அப்போ அப்பாவா நான் எதுக்கு? நீயே எல்லாத்தையும் பண்ண வேண்டியது தானா?” ஆற்றாமையுடன் கேட்டார் பரமசிவம்.
திலகா எதுவும் பேசவில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் செய்தது சரி தான். அதனால் நேராக நிமிர்ந்து பரமசிவத்திடம்,”இங்கே பாருங்க உங்களைப் பொறுத்தவரை நான் செய்தது தப்பா இருக்கலாம். ஆனால் ஒரு அம்மாவா என் பொண்ண நல்ல இடத்துல கட்டிக் கொடுக்க எனக்கு ஆசையா இருக்காதா? அந்தக் குடும்பம் நல்ல குடும்பம் தான். இந்த ஊர்ல யார் கேட்டாலும் அதைத் தான் சொல்லுவாங்க. அப்படி இருக்கும் போது எதுக்கு நாம மட்டும் பழசை நினைச்சு நம்ம பொண்ணுக்கு கிடைக்கிற நல்ல வாழ்க்கையைக் கோட்டை விடனும்?”
“ஏய் அறிவிருக்கா உனக்கு? அந்தக் குடும்பம் கெட்டக் குடும்பம்னு யாரும் இங்கே சொல்லலை. அதே போல அந்தக் குடும்பம் மட்டும் தான் இந்த உலகத்துலயே நல்ல குடும்பம்னு இல்லை. எத்தனையோ நல்லக் குடும்பம் இருக்கு. அதுல யாரையாவது நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுக்கலாம். இந்தச் சம்பந்தம் வேண்டாம். இப்போ அவங்களுக்கு ஃபோன் போட்டு நீ சொல்றியா இல்லை நேர்ல அந்த ராதா வீட்டுக்கே போய் நான் சொல்லவா?”
“ப்ச் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசுனா என்ன அர்த்தம்?” என்று கணவனிடம் கேட்டு விட்டுத் திரும்பி,”என்ன தம்பி நீங்களும் அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்? அருணா நீயும் எதுவும் பேச மாட்டிங்கிற? உங்களையும் பேசத் தான கூப்பிட்டேன் நான்.”
“அக்கா என்னை என்ன பேசச் சொல்றீங்க? இது நம்ம பொண்ணு வாழ்க்கைச் சம்மந்தப்பட்டது. டக்கனு நம்ம முடிவெடுக்க முடியாது. நாலா பக்கமும் யோசிச்சு தான் முடிவெடுக்கனும். முதல்ல நீங்க சொல்லுங்க. எதுக்கு அந்தக் குடும்பத்து பையன் தான் வேண்டும்னு அடம் பிடிக்கிறீங்க?”
“ப்ச் நான் அடம் பிடிக்கலை. நம்ம பாப்பாவுக்கு இருபத்தி ஐந்து வயசாகிடுச்சு. அவளோட ஜாதகத்துல குரு பலன் இப்போ தான் வந்துருக்கு. இதுவே என்னைப் பொறுத்தவரை லேட் தான். இப்போலாம் பையனுக்கு இருபத்தி ஓர் வயசானலே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க. நான் என் பொண்ணுக்கு இருபத்தி அஞ்சுல தான் பார்க்கவே ஆரம்பிக்கிறேன். எடுத்தவுடனே ஒரு நல்ல சம்பந்தம் வருது. எதுக்கு நாம வேண்டாம்னு சொல்லனும்? உன் மாமா சொல்ற மாதிரி இங்கே நிறைய நல்ல குடும்பம் இருக்கு. ஆனால் அவங்க யாரும் கேட்கலை. இந்தக் குடும்பம் தான கேட்டுருக்கு.”
“ஏய் அந்தக் குடும்பத்து ஆளுங்களா கேட்டாங்க? அந்த ராதா தான சொன்னாங்க? நம்மளை மாதிரி அந்தக் கதிரைவேலும் யோசிக்க மாட்டானா? அவனும் வேண்டாம்னு தான் சொல்லுவான். நாளைக்கு எங்கேயாவது அவனைப் பார்த்தால் எனக்கு மரியாதையா இருக்குமா? இல்லை வெளில யாருக்காவது இந்த மாதிரி அவங்க நம்ம பொண்ணை வேண்டாம்னு சொன்ன விஷயம் போச்சுனா நல்லவா இருக்கும்? எதையும் யோசிக்க மாட்டியா நீ? நம்ம பொண்ணுகிட்ட ஏதோ குறை இருக்குனு பேச மாட்டாங்களா?”
“ஏங்க அவங்களே சரினு சொன்னாலும் நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்க போல? ஏங்க ஆரம்பிச்ச உடனே இப்படி எதிர்மறையா பேசுறீங்க?”
“இங்கே நேர்மறையா பேச எதுவுமே இல்லை திலகா. நான் சொல்றதை தான் நீ கேட்க முடியாதுனு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கியே.”
“நான் பிடிவாதம் பிடிக்கறதா உங்களுக்குத் தோனுனா நான் ஒன்னும் பண்ண முடியாது. கொஞ்சம் நான் சொல்றதை யோசிங்க. எதையும் யோசிக்காமல் டக்கனு வேண்டாம்னு சொன்னால் என்ன அர்த்தம்?
“சரி நீ சொல்ற மாதிரியே அவங்க சரினு சொல்றாங்கனு வைச்சுக்குவோம். நீ சொன்னயே பழைய பிரச்சனை அதை மனசுல வைச்சுக்கிட்டு நம்ம பொண்ணை ஏதாவது பண்ண என்ன பண்ணுவ நீ?”
“என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க. அவங்களைப் பார்த்தால் அப்படிப்பட்ட ஆளா தெரியலை. அதுவுமில்லாம கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம பொண்ணு ஒன்னும் அவங்க கூட இருக்கப் போறது இல்லையே! மாப்பிள்ளை கூட காஞ்சிபுரத்தில் தான இருப்பாள்.”
“ப்ச் இவ்ளோ சொல்லியும் இன்னும் அந்த இடம் தான் வேணும். அந்தப் பையனை மாப்பிளையும்னு சொல்லிட்டு இருக்க. இதுக்கு பேர் பிடிவாதம் இல்லையா?” என்று கேட்க, எதுவும் பேசவில்லை திலகா. அவரைப் பொறுத்தவரை பிரதீஷ் நல்ல பையன். அவனது குடும்பமும் நல்ல குடும்பம் அதுவுமில்லாமல் வசதியான குடும்பம். அவரின் மகள் சந்தோஷமாக அங்கு வாழ்வாள். அதற்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தார் திலகா.
“நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க. நான் சாயந்தரம் ஜோசியரைப் பார்க்கப் போறேன். நம்ம பாப்பாவோட ஜாதகத்தையும் அந்தப் பையனோட ஜாதகத்தையும் வைச்சு பொருத்தம் பார்க்கப் போறேன். நீங்க வரீங்களா இல்லையா அதை மட்டும் சொல்லுங்க.”
“அதான் நீயே எல்லாத்தையும் முடிவுப் பண்ணிட்டியே. நீயே எல்லாம் பண்ணிக்கோ. பொண்ணோட அப்பா எங்கேனு கேட்டால் செத்துப் போயிட்டான்னு சொல்லிடு.” என்று கூறிவிட்டு விடுவிடுவென அவரது அறைக்குள் சென்றுவிட திலகா ஸ்தம்பித்து விட்டார். சுத்தமாக அவர் இதை எதிர்பார்க்கவே இல்லை. மிஞ்சிப் போனால் சண்டை போடுவார் பார்த்துக்கலாம் என்றிருக்க அவர் இப்படிப் பேசிச் சென்றது அவரது மனதை மிகவும் காயப்படுத்தியது.
அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த சதாசிவம்,”அண்ணி நான் போய் பேசுறேன். நீங்க இருங்க. அருணா பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு வேகமாக எழுந்து அண்ணனின் அறைக்குச் சென்றார்.
பரமசிவம் கட்டிலில் கோபத்துடன் அமர்ந்திருந்தார். சதாசிவம் வருவது தெரிந்தாலும் அமைதியாக இருந்தார்.
“அண்ணா நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாமல் கேளுங்க.” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க, பரமசிவம் அமைதியாக நீ பேசு என்பதைப் போல் பார்க்க, சதாசிவம் பேச்சை தொடர்ந்தார்,”அண்ணா எனக்கும் அந்த கதிரைவேலுக்கும் சண்டை வந்ததுல முழுக்க முழுக்க நம்ம பக்கம் தான் தப்பு. ஆனால் அது தெரியாமல் வார்த்தையை விட்டது நான் தான். அப்போ கூட அவர் நிதானமா தான் இருந்தார். அப்படிப்பட்டவர் கண்டிப்பா அந்தச் சண்டையை மனசுல வைச்சுக்கிட்டு ஒரு வேளை அண்ணி ஆசைப்படுற மாதிரி கல்யாணம் நடந்தால் நம்ம பாப்பாகிட்ட அவர் கண்டிப்பா பிரச்சனை பண்ண மாட்டார்னு தான் எனக்கு தோனுது அண்ணா. அதனால் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.”
“ஏய் சதா எனக்குப் புரியலை ஏன் இப்போ அந்தப் பையன் தான் நம்ம பாப்பாக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனுமா? வேற யாரையாவது பண்ணி வைச்சா நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்க மாட்டாளா என்ன?”
“அண்ணி ஆசைப்படுறாங்களே அண்ணா. நாம ஏன் வேண்டாம்னு குறுக்க நிக்கனும்?” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார் அருணா.
“வா அருணா நீயே சொல்லு இவன் பேசுறது சரியா? உன் அக்காவுக்கு ஏத்துக்கிட்டு இவனும் சரிங்கிறான்.”
“மாமா அக்கா ஏன் பிடிவாதமா இருக்காங்கனு எனக்குப் புரியலை. ஆனால் அக்கா சொன்னது ஒன்னை மட்டும் நான் ஒத்துக்கிறேன்.” என்று அருணா கூற, நீயுமா என்று ஆயாசமாகப் பார்த்த பரமசிவத்தின் பார்வையை ஒதுக்கித் தள்ளி பேச்சைத் தொடர்ந்தார்,”அந்தப் பையனோட ஜாதகம் தான் நம்ம பாப்பாவுக்கு வந்த முதல் ஜாதகம். எதுக்கு வேண்டாம்னு சொல்லனும்? சாயந்தரம் போய் நீங்களும் ஜோசியரைப் பாருங்க. ஒருவேளை பொருத்தம் இருந்தால் நாம அந்த ராதாகிட்ட சொல்லுவோம். இந்நேரம் ராதா கதிரைவேல் குடும்பத்துகிட்ட கண்டிப்பா சொல்லிருப்பாங்க. ஒரு வேளை அவங்க வேண்டாம்னு சொல்லிட்டா நாம ப்ரொசீட் பண்ண வேண்டாம். விட்டுருவோம். எதுக்கு அதுக்குள்ள நமக்குள்ளேயே பேசி சண்டைப் போடனும்?”
“அப்போ அவங்க சரினு சொன்னா?”
“சரினு சொன்னால் முதல்ல கோவிலுக்கு வரச் சொல்லி இரண்டு குடும்பத்து பெரியவங்க மட்டும் பேசுவோம். நம்ம இரண்டு குடும்பமும் மனசு விட்டுப் பேசி பிரச்சனையை சரி பண்ணுவோம். அதுக்கு அப்புறம் அவங்களை முறையா வந்து பொண்ணு பார்க்கச் சொல்லுவோம்.” என்று முடித்தார் அருணா.
“இவ்ளோ மெனக்கெடனுமா அருணா? அப்படி அந்தப் பையன் எந்த விதத்துல உசத்தி? இல்லை என் பொண்ணுக்கு தான் ஏதாவது குறையா?”
அவர்கள் பேசுவதை வெளியிலிருந்து கேட்ட திலகா, பரமசிவம் பேசுவதைக் கேட்டு வேகமாக உள்ளே வந்தவர் அருணா பேசுவதற்கு முன்பு முந்திக் கொண்டு,”நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? இப்போ எல்லாம் மாப்பிள்ளைக் கிடைக்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? பல பேர் பல வருஷமா அவங்க பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாமல் இன்னமும் தேடிட்டு இருக்காங்க. இதோ இந்தப் பையனுக்கே ஜாதகம் எடுத்து இரண்டு வருஷமாகிடுச்சாம். நமக்கும் அந்த நிலைமை வரக் கூடாதுனு தான் சொல்றேன். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நமக்குனு இருக்கிறது நம்ம பாப்பா மட்டும் தான். அவள் சந்தோஷமா வாழ்கிறதைப் பார்க்க வேண்டாமா? கண்டிப்பா அவள் சந்தோஷமா வாழுவாங்க. சரினு சொல்லுங்க ப்ளீஸ்.” என்று கண்ணீருடன் கேட்க,
“அதான் எல்லாருக்கும் ஓகே. நான் இனி சொல்ல என்ன இருக்கு. உங்க முடிவு படியே பண்ணுங்க. நான் கடைக்குக் கிளம்புறேன். பாப்பா வருவா இப்போ. அவகிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால் நீ நினைச்சதை சாதிச்சுட்ட திலகா. ஒன்னு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ இதுல ஏதாவது பிரச்சனை வந்தால் அதுக்கு முழுக்க முழுக்க நீ தான் பொறுப்பு. நீ மட்டும் தான் பொறுப்பு.” என்று கூறிவிட்டு அவர் திலகாவின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட, இதுவே போதும் பிரச்சனை எதுவும் வராது என்ற நம்பிக்கையில் திலகா மகிழ்ச்சியாக அடுத்த வேலைப் பார்க்கச் சென்று விட, அருணாவும் அவரிடம் மாலை ஜோசியரைப் பார்த்து விட்டு அவர் என்ன கூறினார் என்பதை ஃபோன் போட்டு தன்னிடம் கூற வேண்டுமெனக் கூறிவிட்டு சதாசிவத்தை அழைத்துக் கொண்டு அவர்களும் கிளம்பி விட்டார்கள் அவருடைய வீட்டிற்கு.