உதயாவை நெருங்கிய ஏழுமலை, “நீங்க எதுக்காக என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுனீங்க?…” என்றார் ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில்.
“உங்க பொண்ணை காப்பாத்தனும்னு தான் சார்…” என்றான் சிறிதும் பிசிறாத குரலில்.
“அப்போ வேற எந்த நோக்கமும் இல்லை. அப்படிதானே?…” என்று சந்தேகமாக கேட்டவரை பார்த்து எரிச்சலான உதயா,
“சார், உங்க சந்தேகம் புரியுது. எனக்கும் இது அவசியமில்லைதான். அப்போ இருந்த சூழ்நிலையில் எனக்கு வேற வழி தெரியலை…”
“நீங்க சொல்றது உண்மைனா, நீங்க அவளை காப்பாத்தனும்னு நினச்சா வேற வழியில் காப்பாத்திருக்கலாமே?…” என்று குறுக்கு கேள்வி கேட்டவரை பதில் சொல்லாமல் அமைதிகாத்தான்.
“இங்க பாருங்க சார், அந்த பிரசாத் உங்க பொண்ணை இப்போ நாங்க காப்பாத்தினாலும் பின்னால விடமாட்டேன்னு சொன்னான். அந்த அளவுக்கு அவன் உங்க பொண்ணுமேல கோவமா இருக்கான். இந்த சம்பவத்துல போனது உங்க பொண்ணோட வாழ்க்கை மட்டுமில்ல, எங்க பிரபாவோட வாழ்க்கையும் தான். புரிஞ்சிக்கிட்டு தன்மையா பேசுங்க…” என்று கொஞ்சம் சூடாகவே பதில் கொடுத்தான்.
அவனது பேச்சில் உள்ள நியாயம் அறிந்து தன்னை கொஞ்சம் நிதானித்த ஏழுமலை மற்ற யாரையுமே பேச விடவில்லை.
“சரி விடுங்க. நடந்ததை பேசி பிரயோஜனமில்லைன்னு எனக்கு தெரியும். எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரே பதில் தான் வேணும்….” என்றவரை ஆராயும் பார்வை பார்த்த உதயா அவரே சொல்லட்டும் என்று மௌனமாகவே இருந்தான்.
“என் பொண்ணை நீங்க நிஜமாவே வேற உள்நோக்கம் எதுவுமில்லாமல் தான் கல்யாணம் செய்துக்கிட்டீங்கன்றது உண்மைனா இனி என் பொண்ணோட வாழ்க்கையில நுழையவோ, தலையிடவோ, அவளை உரிமை கொண்டாடவோ மாட்டேன்னு இங்க இந்த இடத்தில் சத்தியம் செஞ்சு எனக்கு உத்தரவாதம் தரனும்…” என்று உதயாவின் புறம் தன் வலது கையை நீட்டினார்.
ஏழுமலையின் பேச்சில் அனைவருமே விக்கித்து நின்றனர். இப்படி ஒரு முடிவில் இருப்பார் என்று யாருமே நினைக்கவில்லை.
“ஐயோ தம்பி என்ன வார்த்தை சொல்லிட்ட?, இனிமே நந்தினிக்கு புருஷன் இந்த தம்பிதான். கோவில் சன்னிதானத்துல சாமி முன்னால ஊர்மக்கள் எல்லோரும் கூடி இருந்த சபையில நடந்த திருமணத்தை பொய்யாக்க பார்க்காதப்பா. அது பெரிய பாவம்யா. அதுங்க ரெண்டும் தெய்வத்தோட காலடியில ஒன்னு சேர்ந்திருக்குதுங்க. பிரிக்காதப்பா…” என்று தன் தம்பியிடம் மன்றாடினார்.
கோசலையின் வேண்டுகோளை துச்சமாக எண்ணி புறந்தள்ளியவர் உதயாவின் புறம் நீட்டிய கையை நீட்டியபடியே வைராக்கியமாக இருந்தார்.
மற்றவர்களுக்கும் ஏழுமலையின் முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும் அவரை மறுத்து பேச ஒருவருக்கும் துணிவில்லை.
உடனே கோசலை பூசாரியின் உதவியை நாட அவரும் ஏழுமலையிடம் முடிந்த அளவு சொல்லி பார்த்தார். அவர் யாரின் பேச்சிற்கும் மனம் இறங்குவதாக தெரியவில்லை.
இறுதியாக உதயாவிடம் வந்த கோசலை, “தம்பி என் புள்ளையா நினச்சு உன் கிட்ட கெஞ்சி கேட்கிறேன். தயவு செய்து என் தம்பி சொல்றது போல சத்தியம் செய்யாதப்பா. எங்க பொண்ணோட வாழ்க்கை இதுல அடங்கி இருக்கு…” என்று கண்ணீர் உகுத்துகொண்டே தான் பெறாத மகளுக்காக போராடினார்.
“அக்கா வாயை மூடிட்டு பேசாம இருக்க மாட்டியா? இவன் எந்த குலமோ? என்னமோ?… நாம வேற இவன் வேற, நமக்கு எப்படி ஒத்துவரும்?… நீ நினைக்கிறது நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் நடக்காத ஒன்னு. என் பொண்ணுக்கு எப்படி பட்ட வாழ்க்கை அமைச்சு தரணும்னு எனக்கு தெரியும். மீறி ஏதாவது பேசின…” என்று சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தார்.
அவரது அலட்சியத்தில் உதயாவும் விஷ்ணுவும் வெகுண்டனர். ஆனாலும் ஏழுமலையின் சகிக்கமுடியாத பேச்சிற்கு சரிக்கு சரியாக பேச விரும்பவில்லை.
உதயா சடுதியில் முடிவெடுத்தவனாக, “இதோ பாருங்கம்மா, நீங்க கோவில்லை வச்சு என்னை உங்க பிள்ளைன்னு சொல்லவுமே உங்களையும் என்னோட அம்மா ஸ்தானத்துல வச்சு தான் சொல்றேன்…” என்றவனை ஆவலாக பார்த்தார். தன் வயிற்றில் பாலை வார்ப்பானா என்று.
ஆனால் அவரது ஆசையை சுக்குநூறாக உடைத்தது உதயாவின் பேச்சு. அதில் மொத்தமாக நம்பிக்கை அற்று போனார்.
“என்னால உங்க பொண்ணை ஏத்துக்க முடியாது. கல்யாணம் ரெண்டு பேர் சம்மதத்தோட மனசு ஒத்து பண்ணிக்க வேண்டியது. உங்க வீட்டு பொண்ணை காப்பாத்தனும் அப்டின்ற ஒரு மனிதாபிமானத்துல தான் நான் இப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டியதா போச்சு…” என்றவனை தடுத்து ஏதோ சொல்ல போக,
“புரிஞ்சுகோங்கம்மா மனிதாபிமானத்துல காதல் வராது. கடமைக்காக இப்போ சரின்னு சொல்லிட்டு நீங்க சொல்றதை கேட்டு நடந்தா அது அடுத்து வாழப்போகும் வாழ்க்கையை நரகமாக்கிரும். அதனால நான் விலகிடறது தான் நல்லது. அதுவும் இல்லாம ரொம்ப சின்ன பொண்ணு அவ…” என்றவன் ஏழுமலையிடம் வந்து அவரது கரத்தில் தன் கரத்தை பொருத்தியவன்,
“இதோ பாருங்க சார், நீங்க என்னை முழுசா நம்பலாம். உங்க பொண்ணை இந்த இக்கட்டான நிலையில் இருந்து காப்பாத்த தான் நான் கல்யாணம் செய்தேன். இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்லை. உங்க பொண்ணோட எதிர்கால வாழக்கையில் நான் குறுக்கிட மாட்டேன்…” என்று கரத்தை அழுத்தி உறுதியாக கூறினான். கோசலை நடப்பதை தடுக்க முடியாமல் தவித்துபோனார்.
உதயா ஏழுமலையிடம் விறைப்பாகவே குரலில் எந்த விதமான உணர்வையும் காட்டாமல் பேசினாலும் பேசும் போது அவனுக்கு தொண்டை அடைத்ததையும், அவனது கண்கள், “நந்தினி எழுந்துவிடமாட்டாளா?…” என்று அவளையே வட்டமிட்டதையும் கோசலையும் விஷ்ணுவும் பரிதாபமாக பார்த்தனர்.
அவனது மனதை அவனே உணராமல் ஏழுமலையின் பேச்சி கோவம் கொண்டு அதற்காக வீம்பாக சத்தியம் செய்கிறானே? என வேதனையடைந்தனர்.
அவனது சத்தியத்தில் நந்தினியின் உள் மனம் ஏனோ படபடவென அடித்துக்கொண்டது. கதறி அழவேண்டும் போல ஒரு உணர்வு அவளை ஆட்டிபடைத்தது. சத்தியம் செய்யாதே என்று கத்தவேண்டும் போல ஆவேசம் உண்டானது. ஆனால் அவளால் சுண்டுவிரலை கூட அசைக்க முடியவில்லை.
உதயாவின் மாற்றத்தையும் உத்தரவாதம் கொடுக்கும் போது நொடியில் முகத்தில் வந்து போன உயிர்வலியையும் கோசலையும், விஷ்ணுவும் கவனிக்கத்தான் செய்தனர்.
கோசலைக்கு இது ஒன்றே போதும், நிச்சயம் என்றாவது ஒருநாள் உதயா மீண்டும் வருவான், நந்தினியை மீட்க வருவான், என்று முழு நம்பிக்கை தோன்றியது. ஆனால் ஏழுமலையோ வெற்றிக்களிப்பில் இருந்தார்.
“நீங்க சொல்றதை நான் நம்பறேன், போகும் போது அவ கழுத்தில நீங்க கட்டின கயறை கைய்யோட கழட்டி எங்காவது தூற எறிஞ்சிட்டு போய்டுங்க…” என்று பேசும் வார்த்தைகளில் அமிலத்தை கக்கினார்.
“தாலியை கழட்டுவதா?…” – விஷ்ணுவின் அருகில் நின்ற உதயாவின் உடல் ஒரு ஷணம் ஆடி அடங்கியது. ஏனோ அவனது அனுமதி இன்றி கண்களை நிறைத்த கண்ணீரை வெளியேற விடாமல் மீண்டும் உள்ளே இழுத்துகொண்டான்.
விஷ்ணுவின் கையை அழுத்த பிடித்தவன் கரங்கள் நடுங்கியது. அவனது மனநிலை என்னவாக இருக்கும் என்று முழுதாக புரியவில்லை என்றாலும் ஓரளவிற்கு அனுமானிக்க முடிந்தது விஷ்ணுவால்.
உதயாவின் வெளிறிய முகத்தை பார்த்த கோசலை அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல், “நீயெல்லாம் மனுஷனாடா? பொண்ணை பெத்தவனாட்டமா பேசற? பாவத்துக்கு மேல பாவம் பண்ணிட்டு இருக்கே? புரிஞ்சுக்கோடா. உன் மனசை மாத்திக்கோ…” என்று எடுத்து சொல்லியும் அசையாமல் நின்றார்.
மூச்சை ஆழ இழுத்து விட்டவன், “இதோ பாருங்க சார், உங்க பொண்ணை உங்ககிட்ட முழுசா ஒப்படைச்சாச்சு. நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. வேற நல்ல பையனா பார்த்து கல்யாணம் செஞ்சு கூட வைங்க. அது உங்க விருப்பம். நீங்க கேட்டதை நான் செஞ்சுட்டேன். அதோட முடிஞ்சது. என்னை அதை செய் இதை செய்னு ஆடர் போடற வேலையை வச்சுக்காதீங்க. அந்த அதிகாரமும், உரிமையும் உங்களுக்கு இல்லை. மைன்ட் இட்…” என்று கோவமாக கூறியவன்,
“வாடா போகலாம். பெருசா பேச வந்துட்டாங்க. காப்பாத்தினதுக்கு சரியான பதிலடி குடுத்துட்டாங்க…”என பேசிக்கொண்டே விஷ்ணுவையும் சிவாவையும் அழைத்துகொண்டு சென்றுவிட்டான்.
“அண்ணா, நில்லுங்கண்ணா…” என்ற விஜியின் தீனமான குரலில் ஒரு நொடி தேங்கியவன் நந்தினி இருந்த திசையை பார்த்துவிட்டு விடுவிடுவென நகர்ந்துவிட்டான்.
எங்கே தன் கையாலே தான் அணிவித்த மாங்கல்யத்தை கழட்ட வைத்துவிடுவார்களோ என்று அஞ்சினான் உதயா. அதனால் தான் அப்படி பேசிவிட்டு வந்தான்.
தன்னால் இனி அங்கே ஒரு நிமிடம் கூட இருக்க இயலாது. இருந்தால் வேறு விபரீதம் எதுவும் நடந்துவிடுமோ என்று பயந்துவிட்டான். அந்த பயம் எதற்காக உண்டானது என்று கூட யோசிக்கவில்லை.
உதயா சென்றதும் அங்கே அசாத்திய மௌனம் குடிகொண்டது. ஒருவரது முகத்தையும் பார்க்காமல் வேனில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்து கண் மூடிகொண்டார் ஏழுமலை.
அனைவரும் ஒரு பெருமூச்சோடு தாங்களும் வண்டியில் ஏறி அமர்ந்தனர். பூசாரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேசமணியின் அழைப்பில் அவர்களுடன் சென்றார்.
ட்ரைவர் வரவும் வேன் புழுதியை பறக்கவிட்டபடி அந்த ஊரை விட்டு கிளம்பியது.
வேன் மறையும் வரை தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்த உதயாவிடம்,
“ஏண்டா பிரபா, நீ சாதாரணமாக இப்படியெல்லாம் நடந்து கொள்பவனில்லையே?… உனக்கு என்னடா ஆச்சு?… உன் மனசுல நீ என்னதான் நினச்சிட்டு இருக்க?…” என விஷ்ணு சரமாரியாக கேள்விகளை அடுக்க அவனை விடுத்து சிவாவை தனியாக அழைத்துகொண்டு போனவன் அவனிடத்தில் ரகசியமாக ஏதோ பேசி அவனை அனுப்பிவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பினான் தெளிவான முகத்தோடு.
“வாடா மச்சான், கணேஷிடம் நடந்தது அனைத்தையும் சொல்லிவிட்டு நாமளும் கிளம்புவோம். இனி இங்க என்ன வேலை?…” என்று இலகுவாக பேசினான் உதயா.