ஆவேசமாக பேசியவரை நிதானமாக பார்த்து, “என் தங்கச்சிதான் இவ, எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன்!…” என்றான் அமர்த்தலாக.
சுதர்சனனோ, “வேணி என்ன இது?, இப்டியா நடந்துகொள்வது? பொது இடத்துல, அதுவும் நம்ம வீட்டு விசேஷத்துல?…..”என்றார் கடுமையாக.
விருந்தினர்களில் பாதிக்கும் மேல் பந்தியில் இருக்க மீதி உள்ளவர்கள் எல்லோரும் வட்டமேஜை மாநாடு போட்டு சொந்தகதை சோகக்கதை என ஆர்வமாக அலச ஆரம்பித்துவிட்டனர்.
அதனால் இந்த சம்பவம் மற்றவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் தப்பிப்பிழைத்தது. வேணியின் முகமாற்றத்தை கண்டு அவரை நெருங்கிய மூர்த்தியும், பாக்கியாவும் என்னவென கேட்டுவைக்கவும்,
“அண்ணி! அண்ணி! இவன் கிட்ட சொல்லுங்க அண்ணி தயவு செய்து கெளரியை அவனோட தங்கைன்னு சொல்லவேண்டாம்னு!…” என்று சட்டென கண்களை நிறைத்த கண்ணீருடன் மன்றாடினார்.
விஷயம் அறிந்ததுமே மூர்த்தியின் முகத்தில் இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. அந்த பாவத்திலேயே தெரிந்துவிட்டது இனி அவரிடமிருந்து தனக்கு சாதகமாக எந்த ஒரு வார்த்தையையும் வாங்க தன்னால் முடியாதென்னும் செய்தி.
பாக்கியாவோ ஒருவிதமான இயலாமையோடு உதயாவை பார்க்க அவனோ கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நின்றான்.
“யார் புறம் பேசுவது?….” என தவித்தபடி கைகளை பிசைந்தனர்.
சமீபத்தில் இருந்தே தங்கள் வீட்டில் நடந்து வரும் பிரச்சனை தான் இது. வேணியிடம் ஏதோ மாற்றம் இருப்பது அனைவருக்கும் புலப்பட்டது. அவரையும் எதுவும் சொல்லமுடியாமலும், உதயாவின் பிடிவாதத்தை தளர்க்கமுடியாமலும் போராடி தோற்றுதான் போயினர். இது இங்கே விசேஷ வீட்டில் அதுவும் புதிதாக வந்த மருமகள் முன் நடப்பது தான் மேலும் சங்கடத்திற்குள்ளாக்கியது.
உதயாவும் சரி, வேணியும் சரி விட்டுகொடுக்காமல் சிலிர்த்துக்கொண்டு நின்றனர்.
கெளரி “அம்மா அண்ணா சொல்றதுல என்ன தப்பு? நீங்க இப்டி பேசறது எனக்கு பிடிக்கவே இல்லை. நான் அவங்க தங்கச்சிதான்!…” என்றவுடனே மீண்டும் ஆத்திரம் அதிகமாக அவளை அறைய போனார். நிமிடத்தில் கௌரியை தன் பின் நகர்த்தியவன்,
“அத்தை!.. என்ன காரியம் செய்ய பார்த்தீங்க? இந்த வேலையெல்லாம் இங்க வச்சுக்காதீங்க சொல்லிட்டேன்!…” என்றான் கடுமையாக எச்சரிக்கும் குரலில்.
உதயாவின் கடுமையில் திகைத்து கௌரியை அடிக்க ஓங்கிய கையை தளர்த்தினாலும் உஷ்ணம் குறையாமலேயே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவரை பார்த்து மிரண்ட நந்தினியை கண்டு வேணியை அவ்விடத்தில் இருந்து அப்புறபடுத்தவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார் சுதர்சனம்
எவ்வளவு மகிழ்வுடன் வந்தாரோ அதை அளவு மனவருத்தத்துடன் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டாளே? என குமைந்தபடி வேணியிடம், “வா போகலாம்!..” என்றார் சுதர்சனம் அழுத்தத்தோடு.
“ஐயோ!!! அண்ணா என்ன இப்படி சொல்றீங்க?…” என்றார் பாக்கியா.
“அதானே? சுதர்சனா எதுக்காக இப்படி சொல்ற? இன்னும் சாப்பிடவும் இல்லை இரண்டு பேரும். அதுக்குள்ளே கிளம்பினா எப்டிப்பா?…” என்றார் மூர்த்தி மனம் கொள்ளா ஆற்றாமையோடு.
“நான் என்ன செய்ய மச்சான். நீ தப்பா நினைக்காதம்மா பாக்கியா. நாங்க நாளைக்கு விருந்துக்கு கண்டிப்பா வருவோம், இப்போ கிளம்பறோம்மா!…” எனவும் மூர்த்தி கண்டிப்பான பார்வையோடு உதயாவை நோக்கினார்.
அவனோ புரிந்துகொண்ட விதமாக, “அத்தை நீ இப்போ சாப்பிடுவீங்களா? மாட்டீங்களா?…”
“நீ இனிமே அப்டி சொல்லமாட்டேன்னு சொல்லு, அப்போதான் சாப்பிடுவேன். இல்லைனா கிளம்பிடுவேன்!…” என்று வீம்புபிடிக்கவும்,
“அப்படியா சரி கிளம்புங்க!…” என்று முடித்துவிட்டு இதுக்குமேல என்னால பேச முடியாதென்றுவிட்டான்.
“ஏன் வேணி இப்டி பிடிவாதம் பிடிக்க? அத்தை மட்டும் இப்போ இங்க நம்மை தேடி வந்துட்டாங்கன்னா அவ்வளோதான். புரிஞ்சுக்கோ!….” என பாக்கியா சொல்லவும்
அதை ஆமோதிக்கும் விதமாக மூர்த்தியும், “இதை இங்க வச்சு பேசவேண்டாம், முதல்ல சாப்பிட போகலாம்!…” என கூறி வேணியை அதற்குமேல் யோசிக்கவிடாமல் தள்ளிக்கொண்டு சென்றனர் இருவருமே.
அவர்களை பின்தொடர்ந்தபடி, “இதெல்லாம் சகஜமப்பா!…” என்ற பாணியில் கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றனர் சுதர்சனமும் கெளரியும்.
நடந்து ஒண்ணுமே விளங்காமல் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள் நந்தினி.
“என்னாச்சு நந்து? தூக்கம் வருதா?…” என்றான் கூலாக.
நிமிர்ந்து நோக்கியவளின் பார்வையில் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு அவளது வினா என்னவென தெரிந்தும் அமைதியாக நின்றான்.
“எனக்கு இந்த விஷயத்தை பத்தி சொல்லுங்க?…”
“என்ன விஷயம்னே நீ இன்னமும் சொல்லவே இல்லையே?…” எனவும் கேட்டேவிட்டாள்.
“கெளரி யார்???….”
“இப்போ என்ன கெளரி யார்னு தெரியனும் அதானே?…” என்றான் அமைதியாக.
நானும் இதைத்தானே கேட்டேனேனும் பாவனையில் தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்தாள்.
“கிட்டவாயேன், சொல்றேன்!…” என அருகில் அழைத்ததும், “பக்கத்தில தான இருக்கோம், இதுக்கு மேலயும் கிட்டவான்னா எப்டி?…” என குழம்பி நின்றவளை கண்டு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
அவனே அவளை நெருங்கி நின்று காதருகில் குனிந்து, “இங்க பாரு நந்து இன்னைக்கு நீ ரொம்பவே டயர்ட் ஆகிட்ட, காலைல இருந்து அதிர்ச்சிமேல அதிர்ச்சி. சோ இன்னைக்கு இது போதும். நானே ஒருநாள் கெளரி பத்தி உன் கிட்ட சொல்றேன். சரியா?…” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
“ரொம்பத்தான் அக்கறை என் மேல, சொல்லமாட்டேன்னு நேர சொல்றதுக்கு என்னவாம்?…” என அவனை விட்டு நகர்ந்து முணுமுணுத்துகொண்டே தலையாட்டிவைத்தாள்.
“வேணி அத்தை ரொம்ப நல்லவங்க. நீ ஏதும் தப்பா நினைக்காத அவங்களை!…” எங்கே முதல் சந்திப்பிலேயே வேணியின் மேல் தவறான அபிப்ராயம் உண்டாகி உறவில் விரிசல் ஏற்பட அதுவே ஏதுவாகிவிடுமோ என அஞ்சி. அதற்கும் தலையாட்டினாள்.
“கொஞ்சம் கோவம் வரும், நீயே போக போக புரிஞ்சுப்ப!…” இதற்கும் தலையாட்டி வைத்தாள்.
“ஹ்ஹ்ம், ரொம்ப கஷ்டம் எல்லாத்துக்கு தலையாட்டிட்டே இருக்கிறது சரியில்லைமா, கொஞ்சமே கொஞ்சம் பேசவும் செய்யணும்!..” என ஆலோசனை வழங்கியவனை கண்டு புன்னகைத்து அதற்கும் தலையாட்டினாள் வேகமாக.
“டேய் உதயா, உனக்கு தேவையா? இல்லை தேவையான்னு கேட்டேன்? பெரிய அட்வைசர்னு நினைப்பு. இவ்வளோ லெக்சர் குடுத்தும் திரும்பவும் தலையாட்டி வைக்கிறாளே? இனியும் பேசுவியா?…” என தனது சுட்டுவிரலை முகத்திற்கு முன் நீட்டி தன்னையே திட்டிகொண்டான்.
“நான் என்ன பண்ணேன் நீங்க சொன்னதுக்கு தலையாட்டினேன். அவ்வளோதானே?…அதுக்காக நீங்க சுவத்துல போய் முட்டிக்காதீங்க…” என்றாள் அப்பாவியாக.
அவளது பேச்சில், “அடிப்பாவி?????….”என வாயை பிளந்தவன், “இவ நம்மளை காமெடி பீஸ் ஆக்குறாளோ?…” என நந்தினியை சந்தேகமாக கூர்ந்து பார்த்தான்.
“ஆனா முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே? ச்சே ச்சே இருக்காது!… ஆனாலும்…” என யோசனையில் இருப்பவனை கலைத்தவள்,
“என்னங்க? என்னாச்சு? ஏதாச்சும் குடிக்கறீங்களா? கெளரி ஜூஸ் கொண்டு வந்து குடுத்தா!…..”
“ஒன்னும் வேண்டாம் சாப்பிட போகலாம் ரொம்ப பசி. ஆளாளுக்கு படுத்திட்டாங்க. நீ வரியா இல்லை நான் போகட்டுமா சாப்பிட?…” என்ற அவனது படபட கேள்வியில் கடுப்பாகி,
“சரி நீங்க போங்க, நான் இங்க இருக்கேன்!..” என்றாள்.
“எனக்கென்ன, இங்கயே இரு நான் போய் நல்லா கொட்டிகிட்டு வரேன்!…” என்று கிளம்ப எத்தனிக்க,
“சரிங்க, தனியா போரடிக்கும் பாட்டியை கூப்பிட்டுக்கறேன் பேச்சுதுணைக்கு…” என ஓரக்கண்ணால் அவனை பார்த்தவாறே கூறவும்,
“அம்மா தாயே பரதேவதையே, வந்த அன்னைக்கேவா? வா!….” என கை பிடித்து அழைத்துசென்றான்.
“இந்த கிழவியை சொல்லணும். எல்லோர் முன்னாலையும் என்னை ட்ரில் வாங்கி என்னை என் இமேஜை டேமேஜ் பண்ணி விட்ருச்சு, உதயா கெத்தை எத்தி தள்ளிருச்சே?…” என சகட்டுமேனிக்கு நாச்சிக்கு சாபம் குடுத்தபடியே சாப்பாடு அறைக்குள் நந்தினியுடன் நுழைந்தான்.
“டேய் என்னடா? இப்படி வந்துட்ட?…” – விஷ்ணு பதறிய பதட்டத்தில் என்னமோ ஏதோவென அதிர்ச்சியடைந்த உதயா,
“என்னடா மச்சான் சொல்ற? ஏண்டா? ஏன்? எதுக்கு இப்டி கத்துற?…”
“நீ மாப்பிள்ளைடா!…”