நட்சத்திர விழிகளிலே வானவில் – 27 (5)

கணேஷிடம் பிரசாத்தின் மாற்றத்தை பற்றி முன்பே போனில் சொல்லியிருந்ததால் பிரசாத்திடம் கணேஷ் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தான். சிவா பிரசாத் பக்கம் திரும்பக்கூட இல்லை.

முன்பே ஊர்த்தலைவரிடம் கணேஷ் சொல்லியிருந்ததால் கோவில் வாசலிலேயே அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உதயாவின் பெற்றோரும், நாச்சியும் பழைய விஷயங்களை கிளற விரும்பாமல் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

“ராசா, என்னமோ தெரியுது, ஆனா தெளிவா தெரியலையே?…” என அண்ணாந்து பார்த்துக்கொண்டே கண்ணாடியை கழட்டாமல் உதயா என நினைத்துக்கொண்டு பிரசாத்திடம் கேட்க,

“கிழவி, யார் பக்கத்துல நிக்கிறாங்கன்னு கூட கண்ணுக்கு தெரியலை உனக்கு. இந்த அலம்பல் தேவையா? முதல்ல இந்த கண்ணாடியை கழட்டித்தொலை. பார்க்க பயங்கரமா இருக்க…” என கிண்டலடிக்க,

“உனக்கு பொறாமைடா பேராண்டி. பாட்டி இப்போவும் பியூட்டியா இருக்கேன்னு…” என அவனின் பேச்சை ப்பூவென ஊதித்தள்ளிவிட்டு அசால்ட்டாக விஜியோடு ஜோடியாக நடந்தார். அவரின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து சிரித்துக்கொண்டே அனைவரும் அம்மன்  சிலையின் அருகே சென்றனர். அந்த ஊர்மக்கள் பிரசாத்தை மறந்துவிட்டனரோ என்னவோ அவனை கண்டுகொள்ளவே இல்லை.

நந்தினி, உதயாவை கூட ஒன்றிரண்டு பேருக்கு தான் அடையாளம் தெரிந்தது. ஆனால் பிரசாத் பழைய ஞாபகங்களால் மனதை அழுத்தும் பாரத்தோடு இருந்தான்.

நந்தினியின் கண்கள் கூட்டத்தில் துழாவ அவளின் நீண்ட நேர தேடலுக்கு பலன் கிட்டியது. அவள் தேடியவரை பார்த்தவள் நொடியில் உதயாவை இழுத்துக்கொண்டு அவரை நோக்கி சென்றாள்.

அங்கே பிரகாரத்தில் ஒரு ஓரத்தில் சேரில் தொய்வாக அமர்ந்திருந்தவரை பார்த்து, “தாத்தா, என்னை தெரியுதா?…” என அவரை பார்த்து கேட்க, அவரோ இருவரையும் புரியாமல் பார்த்தார்.

அவரை அடையாளம் கண்டுகொண்ட உதயா சுதாரித்துகொண்டு நந்தினி எதுவும் பேசும் முன் இங்கிருந்து அவளை நகர்த்த நினைத்து, “என்ன நந்து இது? வா போகலாம். இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தியா?…” என கடிந்துகொள்ள,

“நீங்க பேசாம இருங்க…” என அவரை அடக்கிவிட்டு அந்த பெரியவரிடம் திரும்பி, “ஏன் தாத்தா?… என்னை இன்னுமா அடையாளம் தெரியலை?…” என கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்க அவருக்கு எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று மட்டும் தான் தோன்றியது. அதை அவளிடத்தில் கூற நந்தினி கொதித்துவிட்டாள்.

“அவ்வளோ சீக்கிரம் என்னை மறந்திட்டீங்களா? ஆனா நான் உங்களை மறக்கலை. இந்த ஊரையும் மறக்கலை. என்னை கண்ணீர் விட வச்சு அவமானப்படுத்தி வேதனையோட வழியனுப்பி வச்ச இந்த ஊரை எப்படி மறப்பேன்? ஆனா நீங்க மறந்துட்டீங்களே. என்னோட விஷயத்துல உங்களோட தவறான கணிப்பால நீங்க இந்த ஊர்த்தலைவர் பதவியை இழந்ததை மறந்துட்டீங்களே?…” என எள்ளலாக பேசியதும் தான் அவருக்கு யாரென புரிந்தது.

இருவரையும் ஜோடியாக பார்த்தவர் அடையாளம் கண்டுகொண்டு, “அம்மாடி, தாயி!! நீயா ஆத்தா. உன்னை இன்னொருக்க பார்க்கமாட்டோமான்னு தவிச்சிட்டே இருந்தேன் ஆத்தா. நீயே என்னை தேடி வந்துட்ட. என்னை மன்னிச்சிடும்மா. உனக்கு பண்ணின பாவத்துக்கு நிறைய பட்டுட்டேன். மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடும்மா…” என கைக்கூப்பி கேட்டவரை பார்த்தவளின் மனம் இரங்கவே இல்லை.

கற்சிலைபோல அவரையே வெறித்துக்கொண்டு நின்றிருந்தவளை பிடித்து உலுக்கிய உதயா, “நந்து, இவரை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு? மன்னிச்சிட்டேன்னு சொல்லிட்டு வா. போகலாம்…”

“நான் எதுக்காக மன்னிக்கணும்? உப்பை தின்னவங்க தண்ணியை குடிக்கிறாங்க…” என சாராதணமாக கூற,

“மன்னிப்பை குடுக்கிறவங்களை பெரியமனுஷங்களாகவும், கடவுளுக்கு சமமாகவும் சொல்லுவாங்க. அப்படி நினைச்சுக்கோயேன்…” என உதயா சமாதானப்படுத்த முயல,

“இவரை மன்னிச்சு எனக்கு கடவுள் ஸ்தானம் வேணும்னு நான் கேட்டேனா? அவசியமே இல்லை. நான் சாதாரண மனுஷியாவே இருந்துக்கறேன். அதைத்தான் விரும்பறேன். இவர் செஞ்ச பாவத்துக்கு இப்போ அனுபவிக்கிறார். இதைப்போல எத்தனை பண்ணினாரோ? எனக்கு தெரியாது. ஆனா இதுக்காகவாவது தண்டனை கிடச்சதே?…”

“தப்பு செய்தவங்க எல்லோரையும் மன்னிச்சு விடறதாலதான் திரும்பவும் அதையே செய்யறாங்க. மன்னிக்கனும்னா அந்த கடவுளே மன்னிக்கட்டும், அவர் மன்னிச்சிருந்தா இவர் இப்போ நல்லா இருந்திருந்தா என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாரே? செஞ்ச தப்பை நினச்சு வருந்தியிருக்க மாட்டாரே…”

“இதுவே இந்த கவலையே, இந்த குற்ற உணர்வே இவரை அடுத்த முறை அவசரப்பட்டு எதையும் செய்துவிடாமல் தவறு நடக்கும் முன்னால யோசிக்க வைக்கும். இந்த வருத்தம் உறுத்திட்டே இருந்து இனி செய்யபோகும் செயல்களுக்கு ஆயிரம் முறை சரியா தவறான்னு தீர ஆராய்ந்து பார்க்க சொல்லும். இப்போ நான் வந்த வேலை முடிஞ்சது. சாமி கும்பிட்டுட்டு கிளம்பலாம்…” என சொல்லிய அந்த நந்தினியை உதயாவிற்கு பார்க்க பிரமிப்பாக இருந்தது. அவளை பார்த்து பெருமை கொள்ளாமலும் இருக்கமுடியவில்லை.

“ஆத்தா, நீ சொல்றது புரியுதும்மா. இப்போலாம் ரொம்ப யோசிச்சுதான் எதையுமே செய்யறேன். இனியும் அப்படித்தான் செய்வேன். ஆனா…” என பேசியவரிடம்,

“நாங்க கிளம்பறோம் தாத்தா. முடிஞ்சா எனக்கு குழந்தை பிறக்கவும் இன்னொரு முறை வரமுடியுமான்னு பார்க்கறேன். அப்போவும் என் மனநிலை இப்படியே இருக்குமா, இல்லை மாறியிருக்குமான்னு தெரியலை. பார்க்கலாம்…” என சொல்லிவிட்டு உதயாவை அழைத்துக்கொண்டு தன் குடும்பத்தினரோடு கலந்துகொண்டாள்.

உச்சிக்கால் பூஜை ஆரம்பிக்க சண்டமேளம் முழங்க அனைவரும் அம்மனின் திருவுருவை தரிசித்து கொண்டிருக்க கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன் சாமி கும்பிட்டு கொண்டிருந்த நந்தினியை தன் புறம் திருப்பி நிறுத்தி தன் பாக்கெட்டில் வைத்திருந்த செயினை எடுத்தான்.

மேளச்சத்தம் காதை கிழிக்க இதே ஊரில், இந்த அம்மனின் திருவிழா அன்று முதல் முதலில் நந்தியின் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தை சூட்டிய அதே நேரத்தில் இன்று தன் விழிகளில் நிரம்பி வழியும் அளப்பறியா காதலோடு அவளின் கழுத்தில் அணிவித்தான். அதில் கோர்க்கபட்டிருந்த குட்டி டாலரில் இருவரது பெயரும் அழகான வேலைபாடால் பொறிக்கப்பட்டு இருந்தது.

விழிகளில் ஆச்சர்யத்தை தேக்கியபடி உதயாவை காதலோடு பார்த்த நந்தினிக்கு சந்தோஷம் அலைமோதியது. தங்கள் மீது விழுந்த பூமாரியில் தன்னை மீட்டவள் சுற்றிலும் பார்க்க விஜி, பிரசாத், விஷ்ணு இவர்களின் ஏற்பாட்டில் தன் குடும்பத்தினரும் அந்த ஊர்ஜனங்களும் பூக்களை தூவி இருவரையும் ஆசிர்வதித்தனர்.

தன் பிள்ளைகளின் திருமணத்தை நிறைவோடு காணமுடியாத பெற்றோர்கள் இந்த அற்புதமான நிகழ்வை கண்களின் வழியாக இதயத்திற்குள் இதமாக நிரப்பிக்கொண்டனர்.

“இப்போ உன் மனசுல இருந்த கொஞ்ச நஞ்ச சஞ்சலமும் காணாம போயிடுச்சா நந்து?…” என்றவனை விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு நந்தினியின் தலையில் மெல்ல முட்டி அவள் முகத்தை கையிலேந்தியவன், “கோவமாகட்டும், சந்தோஷமாகட்டும் எல்லாத்திலையுமே உன்னோட மின்னும் நட்சத்திர விழிகளில் தான் என் வாழ்க்கையின் வானவில்லை பார்க்கிறேன் நந்துக்குட்டி. நம்மோட குழந்தையும் உன்னை போலவே இருக்கனும்னு ஆசைப்படறேன்…” என நெற்றியில் இதழ் பதித்தவன்,

“பொண்டாட்டி, மாமா பெர்ஃபாமென்ஸ் எப்படி?…” என கண்ணடித்து கேட்க, “சூப்பர் மாமா…” என்று சொல்லி வெட்கத்தில் அவனிடமே சரணடைந்தாள் நந்தினி.

நிறைமாத நிலாவான நட்சத்திர விழியவளை தன் காதலால் வசப்படுத்தியவன் தங்களின் வாழ்நாள் முழுவதும் வானவில்லின் வர்ணங்களால் ஜொலிக்க செய்து அவளுடன் சேர்ந்து என்றென்றும் இதே காதல் குறையாமல் நிரம்பி பெருக்க இருவரும் வாழ்வாங்கு வாழ்வார்கள் என வாழ்த்தி விடைபெறுவோம்.

நட்சத்திரம் ஜொலித்தது

……………

error: Content is protected !!