நட்சத்திர விழிகளிலே வானவில் – 27 (4)

நந்தினியின் முறைப்பை பார்த்து அஞ்சியவன், “இங்க பாரு கிழவி, எனக்கு நம்ம நந்துவோட குலதெய்வம் கோவிலை பார்க்கனும்னு தோணுது. இதுல என்ன தப்பு?…” என நாச்சியிடம் மல்லுக்கு நின்றான்.

அவனின் எகிறியதில், “நிறைமாசமா இருக்கிற பொண்ணை கூட்டிட்டு அலைக்கழிக்க பார்க்காத ராசா. இப்போ கோவிலுக்கு போனாலும் தேங்காய் உடைச்சு சாமி கும்பிடக்கூடாது. குழந்தை பிறக்கட்டும். அப்புறமா போய்க்கலாம்…” என தன்மையாக எடுத்துக்கூற அதை உதயா கேட்காமல் பிடிவாதம் பிடித்து கடைசியாக ஏழுமலையிடம் முறையிட அவருக்கு மருமகன் வாக்கே வேதவாக்கு ஆனது.

நேசமணி, கோசலை உட்பட ஏழுமலை குடும்பம், மூர்த்தி குடும்பம், விஷ்ணு குடும்பம், தனம் குடும்பம், சுதர்சனம் உட்பட ஒரு படையையே திரட்டிக்கொண்டு தன் மனைவியின் உத்தரவின் படி அனைவருமே அருவியூரின் திருவிழா அன்றைக்கு நந்தினியின் குலதெய்வம் கோவிலுக்கு சொகுசு பேருந்தை அமர்த்தி ஒன்றாக சென்றனர்.

அங்கே போய் வெறுமனே சாமியை மட்டும் தரிசித்துவிட்டு சற்று நேரம் அமர்ந்துவிட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்.கோவிலில் இருந்து கிளம்பும் முன் ட்ரைவரிடம் தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு திரும்ப,

“பிரபா நீ யோசிச்சுதான் செய்யறியா?… அவ தான் சின்னபொண்ணு. ஏதோ புரியாம சொல்றா. நீயும் அவ சொல்றதுக்கெல்லாம் ஆடுற?. இப்போவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நந்தினியை சமாளிச்சுக்கலாம். இப்படியே நம்ம ஊருக்கு வண்டியை திருப்பசொல்லு…” என விஷ்ணு கடிந்துகொள்ள அவனின் தோளில் கைபோட்ட பிரசாத்,

“டேய், நீ எதுக்குடா டென்ஷன் ஆகுற?… அவ ஒண்ணும் விளையாட்டுத்தனமா இந்த முடிவை எடுக்கலை. நல்லா யோசிச்சு தான் இவ்வளோ தூரம் எல்லோரையும் கொண்டு வந்திருக்கா. அங்க போனா விஷயம் என்னன்னு தெரிஞ்சிடுமே. இப்போ வரைக்கும் நிச்சயமா அவ மனசுல ஒரு அலைகழிப்பு ஓடிட்டு இருக்கத்தான் செய்யும். அங்க போவோம். நாம எல்லோருமே இருக்கோமே?. பார்த்துக்கலாம்…” என உதயாவிற்கும், விஷ்ணுவிற்கும் தைரியமூட்டினான்.

இவர்கள் மூவரும் பேசி கொண்டிருந்ததை ஒரு முறைப்போடு பார்த்தவள் உதயாவை நோக்கி கண்டனப்பார்வை ஒன்றை விடுத்தாள். அதில் சுதாரித்தவன்,

“டேய், அவ டென்ஷன் ஆகுறா. அங்க போய் பேசலாம் வாங்க…” என மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு நந்தினியை நோக்கி முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டிக்கொண்டே உதயா செல்ல இவனை பார்த்து தலையில் அடித்துகொண்டு,

“இவன் வேணும்னா இவன் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கட்டும். நம்மை எதுக்குடா கூட்டு சேர்க்கிறான்?…” என முணுமுணுத்துகொண்டே விஷ்ணுவும் பிரசாத்தும் பின் தொடர்ந்தனர்.

நந்தினியின் அருகில் அமர்ந்த உதயா, “அது ஒண்ணுமில்லை நந்து, சும்மா பிரசாத் சொன்னதை பத்தி பேசிட்டு இருந்தோம்…” என சமாளிக்க எண்ணி துணைக்கு பிரசாத்தை இழுக்க அதுவே நந்தினியிடம் வம்பிழுக்க வாய்ப்பாக போயிற்று பிரசாத்திற்கு.

தன்னை கேள்வியாக பார்த்தவளிடம், “நாம பேசின விஷயத்தை பத்தி நந்தினிக்கிட்டையும் சொல்லிடலாம் பிரபா. அப்போதானே அவளும் அவ சைட்ல இருந்து ஏதாவது ஹெல்ப் பண்ணுவா. அதனால என்னனு நீயே சொல்லு…” என உதயாவை மாட்டிவிட்டுவிட்டு விஷ்ணுவோடு ஹைபை அடித்துகொண்டான் பிரசாத்.

உதயாவிற்கு இப்போது விழிபிதுங்கியது. என்னவென்று சொல்லுவான்? பரிதாபமாக நந்தினியை பார்த்துவிட்டு பிரசாத்தை முறைத்தவன் தன்னை பார்த்து சத்தமாக சிரித்துகொண்டிருந்த விஷ்ணுவை பார்த்துக்கொண்டே,

“அதை நான் எப்படி சொல்ல? விஷ்ணுக்கிட்ட கேட்டுக்கோ. அவன்தான் முழுசா கேட்டான். நான் உன்னையே பார்த்துட்டே இருந்ததால சரியா கவனிக்கலை நந்துக்குட்டி…” என அழகாக விஷ்ணுவை மாட்டிவிட்டு தான் தப்பித்துக்கொண்டான். இவர்களின் விளையாட்டை பெரியவர்கள் அனைவருமே சுவாரசியமாக பார்த்தனர்.

“என்ன விஷயம்ங்க? எனக்கும் சொல்லுங்க. மாத்தி மாத்தி சஸ்பென்ஸ் வைக்காதீங்க…” என தனக்கே தெரியாத விஷயத்தை கொஞ்சலாக கேட்டு சொல்ல சொன்ன கௌரியை கொலைவெறியோடு பார்க்க கௌரியோ வெட்கத்தோடு தலை கவிழ்ந்தாள்.

“படுபாவி, நான் ரொமான்ஸா லுக் விடும்போதேல்லாம் வெட்டிவச்ச வெங்காயத்தை பார்க்கிறது போல பயந்து ஓடிடறது. இப்போ கோவமா பார்க்கறேன். இதுக்கு போய் இப்படி வெட்கப்படறாளே? விஷ்ணு, இப்படி பச்சை பிள்ளையா அப்பாவியா இருக்கியே? நீ இன்னும் வளரனும்டா…” என வானத்தை பார்த்து வராத கண்ணீரை துடைத்துகொண்டவனை பார்த்த கெளரி,

“என்னங்க கண்ணுல தூசி விழுந்திருச்சா?…” என கேட்கவும் அவளை முறைத்துக்கொண்டே, “சவுரீஈஈஈஈஈஈ…” என்று பல்லைக்கடித்தான்.

இவர்களின் அலம்பலில் சிரித்த பிரசாத், “விடுடா, விடுடா. கல்யாண வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்…” என அவனை சமாதானம் செய்துவிட்டு நந்தினியை பார்த்தவன்,

“ஏய் ரேடியோ, உனக்கு இப்போ விஷயம் என்னனு தெரியனும். அதானே நானே சொல்றேன். எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்துவைக்கிறதை பத்திதான் பேசினேன். அதுவும் முக்கியமா பொண்ணு உன்னை போல இல்லாம எங்கம்மா தனம், லக்ஷ்மிம்மா போல சாந்தமா இருக்கனும்னு சொன்னேன்…” என்றவன் உதயா, விஷ்ணுவை பார்த்து கண்ணடித்துவிட்டு,

“இவங்க ரெண்டுபேர்க்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சது ஏனா அனுபவப்பட்டவங்க பார்த்தாதானே நல்ல பொண்ணா அமையும். இவங்க படற கஷ்டம் எனக்கு வரவேண்டாம்னு பார்த்து பார்த்து செலெக்ட் பண்ணுவாங்கல்ல…” என நந்தினியை வம்பிழுக்க அதில் வெகுண்டவள் உதயாவை முறைத்துக்கொண்டே,

“உனக்கெல்லாம் என்னை போல பொண்ணு கசக்குதா? பார்த்துக்கிட்டே இரு. நிச்சயமா என்னை விட நூறுமடங்கு அதிகமா வாயடிக்கிறவ  தான் உனக்கு பொண்டாட்டியா கிடைப்பா. அவ கிட்ட ஒவ்வொரு நாளும் நீ எவ்வளோ பாடுபடப்போற பாரு. இது நிச்சயமா நடந்தே தீரும்…” என அவனுக்கு சாபம் குடுக்க அதை மகிழ்ச்சியோடு ஏற்றான்.

பிரசாத் விரும்பியதும் அதுவே. நந்தினி சொன்னால் நிச்சயம் நடக்கும் என நினைத்தான். அவளிடம் முன்பு சாபத்தை பெற்றவன் இப்போது அவள் வாயாலேயே வரத்தையும் பெற்றுவிட்டான்.

நந்தினியின் மீது தோன்றியது ஈர்ப்பாக இருந்தால் காலப்போக்கில் மறைந்துவிடும். அவனுக்கே தெரியும் இது காதலாக நிச்சயம் இருக்கமுடியாது. இருந்திருந்தால் உதயாவிடம் சேர்க்கவேண்டும் என எண்ணியிருக்கமாட்டான். அவர்களை பார்த்து பொறாமை கொள்ளாமல் அவர்களின் அன்னியோனியத்தில் சந்தோஷம் கொண்டான்.

பிரசாத்திற்கு அவளை பிடித்திருந்தது. தன் துணைவியாக வந்திருந்தால் நன்றாக இருக்குமென்று மட்டுமே எண்ணினான். அந்த நினைப்பு அவனுக்கு பெரும் வலியை தராமல் மெல்லிய ஏமாற்றத்தை மட்டுமே தந்திருந்தது. அதையும் நந்தினி போன்ற ஒரு குணாதிசயம் கொண்ட பெண்ணை மணப்பதால் நிச்சயம் அந்த ஏமாற்றம் மறைந்துவிடும் என நம்பினான்.

பிரசாத் தன் தனி உலகத்தில் சுற்றிகொண்டிருக்க அனைவரும் கிளம்பி பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். இவனும் சேர்ந்து கிளம்ப இம்முறை உதயா ஏழுமலையின் அருகில் அமர்ந்துகொண்டு அவரை திசைதிருப்பும் விதமாக பேச்சுகொடுத்துகொண்டே வந்தான். அவரும் போகும் பாதையையும், வழியையும் காணாமல் உதயாவின் பேச்சிலேயே மூழ்கிவிட்டார்.

விஜி செல்லும் வழியை சுட்டிக்காட்டியதில் கவனித்த நேசமணியும், கோசலையும் திடுக்கிட்டு பதற உதயாவை காட்டி அவர்களை விஷ்ணுவும் பிரசாத்தும் அடக்கிவிட்டனர்.

“ஏழுமலைக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ? இப்போதானே இறங்கி வந்திருக்கிறார்…” என எண்ணி சந்திராவிற்கும், பூரணிக்கும் பயத்தில் வியர்த்து ஊற்றியது.

அருவியூருக்குள் நுழையும் தருவாயில் தான் ஏழுமலை ஜன்னலின் வழியாக கவனிக்க அந்த இடம் முதலில் கண்களில் விழுந்தாலும் கருத்தில் தாமதமாக தான் பதிய அவர் மனம் திடுக்கிட்டது.

முகம் இறுக உதயாவிடம் மறுத்து கூற முயல அவனது கைகள் கொடுத்த அழுத்தத்தில் அப்படியே கண்மூடி சாய்ந்து அமர்ந்துவிட்டார். “தன் மகளுக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ? என்னவெல்லாம் வேதனை கொள்வாளோ?…” என தவித்தபடி இருக்க, அவர் உடலில் தெரிந்த மாற்றத்திலேயே இப்போது ஏழுமலையின் நெஞ்சம் என்ன பாடுபடும் என உதயா உணர்ந்தான்.

கோவிலை நெருங்கி பஸ்ஸை ஓரமாக நிழலை பார்த்து நிறுத்தவும் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள். பிரசாத், உதயா, நந்தினி, விஷ்ணு, ஏழுமலை குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு இங்கே நடந்த சம்பவம் தெரியாததால் புது இடத்தை பார்க்கும் உற்சாகத்தோடே இருந்தனர். அதிலும் நாச்சியை கேட்கவே வேண்டாம்.

பழைய கூலிங்கிளாஸ் ஒன்றை போட்டுக்கொண்டு தட்டுத்தடுமாறி விஜியின் கையை பிடித்துக்கொண்டே தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அங்கிருந்தவர்களிடம் தப்பு தப்பாக பேசி அலப்பரையை கூட்ட ஆரம்பித்தார்.

கணேஷ், சிவா இருவரும் தங்களை நெருங்கி வருவதை பார்த்த விஷ்ணு, “இந்தால உன் லவ்வர் வந்துட்டான். உன்னை இத்தனை வருஷமா பார்க்காதது போல என்னமா ஏக்கத்தோட பார்க்கிறான் பாரேன். கட்டுன பொண்டாட்டி தோத்தா…” என சிவாவை கலாய்க்க சிவா வெட்கத்தில் நெளிந்தான்.

இருவரையும் அறிமுகப்படுத்திய உதயா அனைவரையும் கோவிலை நோக்கி அழைத்துச்சென்றான். ஏழுமலை தன் முகமாற்றத்தை சம்பந்தி வீட்டாரிடம் காட்டாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டார்.

ஆனால் நந்தினியோ முகத்தில் மிளிர்ந்த கர்வத்தோடு உதயாவின் கரத்தோடு தன் கரத்தை கோர்த்தவள் அவனோடு ஜோடியாக தலைநிமிர்ந்து முன்னால் சென்றாள். அதை பார்த்த ஏழுமலை இத்தனை நாள் இல்லாத ஒரு ஜொலிப்பு தன் மகளின் முகத்தில் மின்னுவதை பார்த்து தன் தயக்கங்களை தகர்த்தெறிந்தார்.

நந்தினி தான் இங்கே வர முழுக்காரணமாக இருக்கும் என்று அவருக்கு புரிந்தது. அவளது இந்த பிம்பத்தை பார்க்கத்தானே ஆசைப்பட்டார். அனைவரையும் அழைத்துக்கொண்டு தானும் மூர்த்தியோடு பேசியபடி சென்றார்.

error: Content is protected !!