நட்சத்திர விழிகளிலே வானவில் – 4 (1)

        மண்டபத்தின் வாயிலுக்கு வந்த உறவினர்கள் கைகளில் பூச்செண்டோடு ஊர்வல காரிலிருந்து இறங்கிய மணமக்களை வரவேற்த்தனர்.

மண்டபத்தை பார்த்தவளின் மனதில் துக்கபந்தொன்று  எழுந்து தொண்டையடைக்க கரையுடைத்த கண்ணீருக்கு அணைபோட முடியாமல் அரற்றினாள்.

அவளது நிலையறிந்தோ உதயா, “நீங்க எல்லோரும் முன்னால போங்க நாங்க இதோ வந்திடறோம்!…” என அனைவரையும் அனுப்பிவிட்டு அவள் புறம் திரும்பினான்.

சற்று ஒதுக்கமாக அழைத்து சென்றவன், “என்னாச்சு?…” என வினவியும் பதிலில்லை. அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

இது வேலைக்காகதென்று முகத்தை தானே நிமிர்த்தியவன் அவளது கண்ணீரை கண்டு பதறிவிட்டான்.

அவனையறியாமல் அவளை தன் புறம் திருப்பி பதட்டத்துடன், “ஹே என்னடா?…. ஏன் அழற?….. என்னாச்சு உனக்கு?…” என்று இரு கைகளையும் அவளது கன்னத்தில் வைத்து முகத்தை தாங்கியவாறு கேட்க,

அவளோ, “என்னோட அப்பா?…. அம்மா? எனக்கு எனக்கு எல்லோரையும் பார்க்கணும் போல இருக்குதே?…” “அழ அழ வருது!…” என சொல்லியபடி கதறியவளை இழுத்து மென்மையாக அணைத்துகொண்டான். எவ்வளவு நேரம் சென்றதோ?

“சரிடா, அழாதே உன்னை தேடி ம்ஹூம் நம்ம தேடி நிச்சயம் வருவாங்க!…” என்றவனுக்கு நம்ப இயலாத பார்வையை பதிலாக கொடுத்தாள்.

“நான் நிஜமாதான் சொல்றேன், கண்டிப்பா வருவாங்க!..” என்றவன் அவளை மீட்டுக்க 

“இங்க பாரு நந்துக்குட்டி இதுக்கு மேல அழுதா மேக்கப் லாம் கரைஞ்சு போய்டும். அப்புறம் மண்டபத்துக்குள்ள நீ அடியெடுத்து வைக்கவுமே உன்னை பார்த்து பயத்துல ஆளாளுக்கு அலறியடிச்சு ஓடிடுவாங்க!…” என வம்பிளுத்தவன் கெளரிக்கு போன் செய்து டச்சப் செய்ய தேவையானதை எடுத்துவருமாறு கூறினான்.

கெளரியும் சூழ்நிலையை புரிந்துகொண்டது போல நந்தினியை கலகலப்பாக்கும் பொருட்டு முகத்தை திருத்தியவாறே, “என்ன அண்ணி மேக்கப் பத்தலைனா வீட்லயே சொல்லியிருக்கலாமே? இங்க வந்து உள்ள வரமாட்டேன்னு அடம்பிடிச்சுட்டா இருப்பீங்க?…” என கேலி செய்ய லேசான வெட்கம் எட்டிப்பார்க்க அவளிடம் சிணுங்கினாள். கௌரியின் தலையில் கொட்டு வைத்தவன், “போதும் வாலு, நீ போ நான் கூட்டிட்டு வரேன்!…” என அவளை அனுப்பிவிட்டு தோளில் கைபோட்டவாறே உள்ளே அழைத்துசென்றான்.

அவனது மனசாட்சியோ கண்ணுக்கு முன்னால் எட்டி பார்த்து, “டேய் நீ என்னடா பண்ற?..” என்றது.

“நான் என்ன பண்ணினேன் ஒண்ணுமே இல்லையே?…” எனவும்,

“நீ என்ன பண்ணின்னு நான் தான் பார்த்துட்டுதானே இருந்தேன்!…”

“ப்ச், இப்போ என்ன அதான் பார்த்துட்டல்ல அப்புறம் என்னவாம்?…” என்றான் சலிப்போடு.

“டேய் நல்லவனே, அந்த புள்ளைய கைய புடிக்கிற? கண்ணீரை துடைக்கிற? இதுதான் சாக்குன்னு அணைச்சுக்க வேற செய்ற?…” என்றது.

“ஆமா அதுக்கு இப்போ என்ன?, பாவம் பெத்தவங்களை நினச்சு அழுதா, அதான் ஆறுதல் சொன்னேன், அவ்வளோதான்!…”

“என்னது அவ்வளோதானா? என்ன நினச்சு அந்த புள்ளைய கூட்டியாந்த நீ? இப்போ என்ன பண்ணிட்டு இருக்க? பாவம்டா, ஆச காட்டி மோசம் செஞ்சுடாத. நல்லா யோசி!….” என்று சொல்லிமுடிக்கவும்,

“உன்னை!….” கடுப்பேற்றிய பிடித்து மனசாட்சியை கையகப்படுத்தி காவலில் வைத்தான்.

ஓரளவு தன் எண்ணம் பிடிபட்டாலும்  முழுதாக அதை உணர முடியாமல் குழுமியிருந்தவர்களின் கூட்டம் கூடி சுற்றிவளைத்தது இருவரையும்.

அனைவரின் பார்வையும் நந்தினியை மொய்ப்பதுபோல தோன்ற இன்னும் உதயாவை நெருங்கியபடியே நடந்து வந்தாள்.

அவர்களின் நெருக்கம் நாச்சிக்கு அளப்பறியா ஆனந்தத்தை உண்டு பண்ணியது.

“பார்வையை பாரு புள்ளைகளை இப்படியா பார்த்துவைக்கிறது? வச்சகண்ணு வாங்காம பார்க்குற இந்த கொள்ளிக்கண்ணை எல்லாம் நோண்டி குப்பையில போடனும்!…” என வசவுமழை பொழிந்தபடி பொருமி தள்ளினார்.

அவரது பொருமலை கேட்ட கௌரி, “ஏன் கிழவி எல்லோரும் பார்க்கிறதுக்காகதானே இந்த வரவேற்பே? அப்புறம் ஏன் இப்டி தாளிக்கிற? வாயை மூடிட்டு பேசாம இரு இல்லைனா அண்ணா ஆடிரும். அம்பூட்டுத்தான் சொல்லிட்டேன்!….” என அடக்கிவைத்துவிட்டு மேடையை நோக்கி சென்றாள்.

துள்ளிக்குதித்து சென்றுகொண்டிருந்தவளை, “கெள!…” என்ற அழைப்பு தடுத்து நிறுத்தியது. அந்த குரலில் எரிச்சலோடு திரும்பியவள், “எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு என்னை அப்டி கூப்பிடாதீங்கன்னு?…” என்றாள் கோவத்தில் செந்தணலாக ஜொலித்த முகத்தோடு.

“சரி அப்போ சவுரின்னு கூப்பிடறேன் அதுதான் எனக்கு சவுகரியமா இருக்கு, உனக்கு ஓகேன்னா சொல்லு!…” என்று சீண்டினான் விஷ்ணு உதயாவின் நெருங்கிய தோழனும் அவன் நடத்தும் கார்மெண்ட்ஸ் தொழிலில் பாட்னருமான விஷ்ணுவரதன்.

“வேணாம் என்னை அவசரமா திட்டவச்சிடாதீங்க சொல்லிட்டேன்!…”

“நீ என்னை நிதானமாக கூட திட்டேன் எனக்கு வேலைஎதுவுமே இல்லை. பொழுதும் போகலை. வா அப்டி ஓரமா உட்கார்ந்து நீ திட்டுறதை கேட்கவாச்சும் செய்வேன்!…” என வம்பு செய்ய,

பதிலுக்கு பதில் பேசுபவனை ஒன்றும் செய்ய முடியாமல் காலை உதைத்தவாறு தையதக்கா தையதக்காவென கோவத்தோடு சென்றவளை பார்க்க பார்க்க பள்ளி சிறுமியின் பாவனைகள் நினைவுக்கு வந்து சிரிப்பை உண்டாக்கின. சிரிப்போடே மற்றவர்களை கவனிக்க சென்றவனது இதழ்களில் புன்னைகை மட்டும் நிரந்தரமாக தங்கிகொண்டது.

விஷ்ணுவிற்கு கெளரியை வம்பிளுப்பதென்றால் அல்வா சாப்பிடுவது போல. அவ்வளோ பிடித்தம். அவனை பொறுத்தவரை அவள் இன்னமும் பள்ளிச்சிறுமியே.

உதயா, நந்தினி இருவரும் அனைவருக்கும் கைகூப்பி நமஸ்காரம் தெரிவித்துவிட்டு அமரவும் பரிசுபொருட்களுடன் உறவினர்கள் ஒவ்வொருவராய் நெருங்கவும் சரியாக இருந்தது.

அவர்களை கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று கொண்டனர் இருவருமே. உதயா அவளுக்கு ஒவ்வொருத்தரையும் அறிமுகபடுத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டுமே இருந்ததில் புன்னகை மாறா முகத்தோடு ஓரிரண்டு வார்த்தைகளையும் பேசினாள். அதிலேயே மிகவும் சோர்வாக உணர்ந்தாள் நந்தினி. காலையிலிருந்து அலைச்சல் அதனால் உண்டான அசதி என அனைத்தும் வரிசையாக அணிவகுத்து நின்றன.

அவளையும் மீறி களைப்பு முகத்தில் தெரிய, “இன்னும் கொஞ்சம் தாண்டா பொறுமையா இரு, என்ன?…” மென்குரலில் சொன்னவனை கண்டு புன்னகைத்து தலையசைத்தாள்.

“தட்ஸ் குட்!…” என்று சொல்லிவிட்டு தன்னை நெருங்கிய தம்பதியினரை முகம்நிறைய சிரிப்போடு வரவேற்றான்.

“வாங்க அத்தை, வாங்க மாமா!…” என்று

“நந்தினி இவங்க என்னோட அத்தை. அப்பாக்கு கூடபிறந்த தங்கை பேர் கிருஷ்ணவேணி!…” என அறிமுகபடுத்தபட்டவரை நோக்கி இருகரம் கூப்பினாள் நந்தினி.

அவரோ பதிலுக்கு தலையை கூட அசைக்காமல் வெறுமையான பார்வையோடே நந்தினியை நோக்கினார்.

அந்த கண்களில் எந்தவிதமான உணர்வுமில்லாமல் ஸ்நேக பாவம் கூட துடைத்தெறிந்ததுபோல காட்சியளித்தது. இவங்க ஏன் இப்படி பார்க்கறாங்க என நினைத்துகொண்டே அவரது பார்வையை தவிர்த்து அவரருகில் இருந்த மனிதரை காணவும், “இவங்க சுதர்சனம் மாமா, அத்தையோட கணவர், அதுமட்டுமில்லை அம்மாவின் அண்ணனும்!…” என்றான்.

அவர் எப்படியோ என்று நினைக்கவேண்டிய அவசியமே இல்லாமல் பரிவோடு பார்த்தவரை கண்டதும் தன் தந்தையின் முகமே மனதில் சட்டென நிழலாடியது. கைகூப்பியதும், “நல்லா இருடாம்மா. நான் உனக்கு அப்பா முறையாகனும், புரியுதா? நீ என்னை சித்தப்பா இல்லை பெரியப்பா எப்டி வேணும்னாலும் கூப்பிடலாம்!..” என்று அன்பு கட்டளையிட்டார்.  

உடனடியாக தலையாட்டியவளை கண்டு புன் சிரிப்போடு, “அம்மாடி, இந்த படவா ஏதாச்சும் கோக்குமாக்குத்தனம் பண்ணினா என் கிட்ட சொல்லிடு. லெப்ட் & ரைட் வாங்கிடலாம்!…” என கூட்டணி போட்டவரின் பேச்சில் இயல்பாக சிரித்தாள்.

அந்நேரம், “அண்ணி!…” பட்டாம்பூச்சிக்கு கால் முளைத்ததுபோல வந்து நின்ற கெளரியை அணைத்தவாறே, “என் பொண்ணு கெளரி!..” என சுதர்சனம் நந்தினியிடம் அறிமுகபடுத்தவும் அதிர்ச்சியோடு அவள் உதயாவை நோக்கினாள் என்றால் வேணியோ ஆத்திரமாக நோக்கினார்.

அவனோ அசால்ட்டாக கெளரியை தன் புறம் இழுத்து, “இல்லை… என் தங்கை!….” என்றான் விரிந்த புன்னகையோடு.

நந்தினிக்கோ, “இங்க என்னதான் நடக்குது?..”என குழப்பத்துடனே வேடிக்கை பார்த்தாள்.

கெளரி புன்னகை மாறா முகத்தோடு நந்தினியை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள். அவள் மட்டுமில்லாது சுதர்சனன், உதயாவுமே நந்தினி பேந்த பேந்த முழிப்பதை பார்த்து பலமாக நகைத்துகொண்டனர்.

உதயா மீண்டும் “என்னடா செல்லம், நீ என் செல்ல தங்கச்சிதானே?…” என கூறவும்,

முதலில் அனைத்தையும் பார்வையாளராக மட்டுமே பார்த்துகொண்டிருந்த கிருஷ்ணவேணிக்கு கோவம் எல்லை மீற, “போதும் பிரபா மறுபடியும் கௌரியை உன் தங்கைன்னு சொல்லாத, எத்தனை தடவை சொல்லிருக்கேன் உன் கிட்ட?…” என்றாரே உக்கிரமாக.

error: Content is protected !!