இரவில் மட்டுமே அவர்களுக்கான தனிமை கிடைக்கும். அந்த பொன்னான நேரத்தை இருவரும் இழக்க விரும்பாமல் ரசனையோடு கழிப்பார்கள். தங்களின் குழந்தையை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்றும் எப்படி சீராட்டவேண்டுமென்றும் கனவுகளை கண்டனர்.
உதயா பார்த்து பார்த்து உருவாக்கிய ரெயின்போ கார்மெண்ட்ஸ் நந்தினியின் விழிகளின் அசைவிற்கேற்ப அவளின் உதயாவால் பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்ட அவளின் நிர்வாக திறமையால் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.
எப்போதாவது வீட்டில் சிறுநேர தனிமை கிடைத்தாலும் கழுகுக்கு மூக்குவேர்த்தது போல நாச்சி முன்னால் வந்து நின்று உதயாவை முறைப்பார். அப்படி ஆப் ஆகி அமைதியாக பரிதாபமாக நிற்கும் உதயாவை பார்க்கும் போது நந்தினிக்கு தான் பாவமாக இருக்கும்.
இதற்க்கிடையில் பிரசாத்தை அழைத்துகொண்டு மீனாட்சிபுரத்தில் ஏழுமலையின் வீட்டிற்கு உதயா செல்ல முதலில் அவனை பார்த்ததுமே முறைத்த விஜி உதயாவை கவனத்தில் கொண்டு கோவத்தை கட்டுப்படுத்தினான்.
அனைவரிடத்திலும் மன்னிப்பை கேட்டான் பிரசாத். வேணியின் செயலை தவிர்த்து பிரசாத்தின் வேலைகளை உதயா கூறவும் அனைவரும் ஆடிப்போய்விட்டனர். தன் மகளுக்காகத்தானே இவ்வளவும் செய்திருக்கிறான். இவனை போய் தவறாக எண்ணிவிட்டோமே என சிறு வருத்தமும் எழத்தான் செய்தது.
கோசலை, விஜியை தவிர அனைவருமே ஓரளவு பிரசாத்தை புரிந்துகொண்டு ஏற்க நினைத்தனர். அதிலும் ஏழுமலை தன் மாப்பிள்ளையே சொல்லும் போது மறுத்து பேசுவாரா என்ன? அந்த அளவிற்கு உதயா மீது பிரியம் வைத்திருந்தார்.
ஏழுமலையின் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே வரும் போது எதார்த்தமாக ரவியை பார்ப்பது போல பார்த்து ஆச்சர்யத்தை காட்டி பேசிய உதயா மகிமாவை பற்றியும் விசாரித்துவிட்டு ஏழுமலையிடம் ரவியை தன் நண்பனின் தங்கை கணவன் என அறிமுகபடுத்தவும் அவரும் ஆச்சர்யப்பட்டு போனார்.
உதயா, ரவி மீது சிறு சந்தேகம் கூட எழவில்லை அவருக்கு. அப்படியே ரவி, மகிமாவை உதயா தான் இங்கே அனுப்பியிருந்தால் அதில் தவறேதுமில்லை என நினைக்கும் அளவிற்கு மாறியிருந்தார்.
அங்கிருந்து அனைவரிடமும் சொல்லிகொண்டு கிளம்பி வரும் வழியில், “சரியான தில்லாலங்கடிடா நீ. உன் மாமனார் போல என்னையும் வெள்ளந்தின்னு நினச்சுட்டியா? இப்படி அவரை மயக்கி வச்சிருக்கியே? பாவம் அவர் உன்னை போய் நல்லவன்னு நம்பறாரு பாரு…” என கிண்டலாக பிரசாத் கூற,
“என்னடா பூடகமா பேசற?, அதுவும் தில்லாலங்கடின்னு, உன்னை விடவா?….” என பிரசாத்தை வாரிய உதயா, “எதைப்பத்தி சொல்றீங்க சார்?…” என கேட்கவும் ரவி விஷயத்தை பற்றி என பிரசாத் கூற அசடுவழிந்த உதயா, “பொண்டாட்டியை காப்பாத்தனும்னா இப்படியெல்லாம் செஞ்சுதானே ஆகனும்…” என வீராப்பாக பேச,
“ஆமாமா, பொண்டாட்டிக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிவைக்கிற வரைக்கும் அவளை பாதுகாக்கனும்ல. நல்ல வேலைதாண்டா பார்த்திருக்க…” என சூடாக திருப்பிக்கொடுத்தான் பிரசாத்.
“ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்ற?, விடேன். நீ அவளுக்கு மேல இருப்ப போல…” என்று உதயா சலிப்படைய,
“ஓ… அய்யாவுக்கு உண்மை சுடுதாக்கும்?… நீ அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கனும்னு தேவுடு காத்திட்டு இருந்த இந்த விஷயம் மட்டும் உன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சு பார் மகனே? சலங்கை கட்டாதா குறையா ஆடு ஆடுன்னு ஆடித்தீர்த்திடுவா…” என சொல்லிவிட்டு இடியென சிரித்தான் பிரசாத்.
“தெய்வமே, உன் காலை காட்டு தெய்வமே. அடங்குடா. போதும் இதை இங்கயோட மறந்திட்டு தான் நீ ஊருக்குள்ள நுழையனும். அவக்கிட்ட சண்டைபோட்டு கோவத்துல உளறி வச்சுடாதே. உனக்கு புண்ணியமா போகும்…” என கெஞ்சலும் மிரட்டலுமாக உதயா பேச,
“ம்ம் பார்க்கலாம். அது அவ கைலதான், இல்லை இல்லை வாய்ல தான் இருக்கு. முதல்ல உன் பொண்டாட்டியை எனக்கிட்ட முறைச்சுக்காம, வம்பிளுக்காம, சண்டை போடாம அமைதியா இருக்க சொல்லு. அப்போதான் நான் சொல்லமாட்டேன். இல்லைனா உன் விதிப்படி நடக்கும்…” என்று மிதப்பாக கூறினான்.
“எல்லாம் நேரம். நடக்குற கதையை பேசுடா. அவளாவது உங்ககிட்ட சண்டை போடாம இருக்கிறதாவது. இப்போ நாம லேட்டா போனா அதுக்கும் உன்னைத்தான் திட்டுவா. வாங்கிக்கட்டிக்க ரெடியா இரு…” என நொந்துகொண்டே பதிலளிக்க நந்தினியின் பிம்பம் தோன்றி சிறுமுறுவலை உண்டாக்கியது பிரசாத்தின் இதழ்களில்.
இப்போதெல்லாம் பிரசாத்திற்கும் நந்தினிக்குமான சண்டை அவ்வப்போது அரங்கேறிகொண்டுதான் இருந்தது. நந்தினியே அமைதியாக இருந்தாலும் பிரசாத் வேண்டுமென்றே அவளிடம் வார்த்தையாடி வாங்கிக்கட்டுவான். சிலநேரம் இவர்களது சண்டை பெரிதாகி யாராலும் சமாளிக்கமுடியாமல் போகையில் உதயா தான் பஞ்சாயத்து செய்வான்.
எப்போதும் போல இருவரும் நேரத்திற்கு வீட்டுக்கு போய் சேர்ந்தும் யாரும் அறியாமல் உதயாவிடம் பிடிபிடியென பிடித்தாள் நந்தினி.
ஐந்தாமாதம் மருந்து கொடுத்துவிட்டு ஏழாம் மாதம் வளைகாப்பு என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இத்தனை நாட்களில் யாரும் வேணியை போய் பார்க்க வேண்டுமென்று நினைக்கவே இல்லை. உதயா தான் அவ்வப்போது பிரசாத் செல்லும் நேரம் சென்று வருவான். நந்தினியால் வேணியை மன்னிக்கே முடியவில்லை.
கௌரியின் இறப்பிற்கு காரணமாகி, அதையும் இத்தனை வருடங்கள் மறைத்து தன் குடும்பத்திற்கு துரோகம் இழைத்த வேணி நம்பிக்கை துரோகியாக தான் தெரிந்தார்.
அதனால் அவரை பார்க்க மட்டுமல்ல நினைக்க கூட விரும்பவில்லை. அதே நேரம் உதயா போய் பார்ப்பதை தடுக்கவும் எண்ணவில்லை.
ஏழாம் மாதம் வளைகாப்பு ஊரே மெச்சும்படி சிறப்பாக நடைபெற்றது. நந்தினியை அழைத்துக்கொண்டு அன்றே மீனாட்சிபுரம் கிளம்ப முடியாததால், உதயாவும் அதை அனுமதிக்காதபடியால் சாஸ்திரத்திற்காக விஷ்ணுவின் வீட்டிற்கு அழைத்துசென்று மீண்டும் மறுநாளே உதயாவின் வீட்டிற்கு அழைத்துவரபட்டாள் நந்தினி.
அன்றைக்கு அனைவருக்குமே உதயா வீட்டில் மதிய விருந்து தயாராகிக்கொண்டிருக்க ஹாலில் யோசனையாக அமர்ந்திருந்த உதயாவை பார்த்த நந்தினி அவனை நோக்கி மெதுவாக சென்றாள்.
“என்னாச்சுங்க, குழப்பமா இருக்கிறது போல வாடி இருக்கு உங்க முகம்?…” என கவலையோடு கேட்டவளை பார்த்தவன் உண்மையை சொல்லலாமா? வேண்டாமா? என தனக்குள்ளேயே பூவா தலையா போட்டுப்பார்த்துகொண்டிருந்தான்.
அதில் பொறுமையை கைவிட்ட நந்தினி, “இப்போ என்ன விஷயம்னு எனக்கிட்ட சொல்லப்போறீங்களா?… இல்லையா?…” என அதிகாரமாக கேட்க,
“சொல்லிடறேன், சொல்லிடறேன், சொல்லாம இருந்தா என்னை விட்டுடவா போற? கணேஷ் கால் பண்ணியிருந்தான். அருவியூர்ல இன்னும் இரண்டு நாள்ல திருவிழாவாம். போன ரெண்டு வருஷமா கூப்பிடத்தான் செஞ்சான். நான் தான் போகலை. இந்த வருஷமும் நம்மை எல்லோரையும் கூப்பிடறான். அதான்…” என படபடவென மனப்பாடம் செய்ததுபோல ஒப்பித்தான்.
முதலில் முகம் கசங்கியவள் பின் மனதில் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, “ம்ம், போகலாமே. நாம எல்லோருமே போகலாம்…” என அசால்ட்டாக கூறவும் உதயாதான் குழம்பி போனான்.
“இவ பெருசா ஏதோ ப்ளான் பண்ணிட்டா போல. உஷாருடா உதயா…” என தனக்குள் பேசியவன் நந்தினியிடம்,
“என்ன சொல்ற நீ? அங்க எப்டி போக? ம்ஹூம், வேண்டாம். நான் கணேஷ்க்கிட்ட சொல்லிப்பேன். நீ பேசாம இரு…” என்று அங்கிருந்து நழுவப்பார்க்க,
“இங்க பாரு மாமா, இந்த கதைதானே வேண்டாம்ன்றது. சும்மா இருந்தவளை ஆசை காமிச்சு ஏமாத்திட்டு நீ தப்பிக்கலாம்னு நினைக்காத? அதுவும் நான் வாயும் வயிறுமா இருக்கும் போது. இந்த மாதிரி நேரத்தில நான் ஆசைப்பட்டதை நீ நிறைவேத்தி தான் ஆகனும். இஇல்லைனா?…” என கட்டளையிடும் தோரணையில் மேடிட்ட வயிற்றை உதயாவின் முன்பு ஏற்றம் இறக்கமாக காட்டி பேசிய அவள் அழகில் தான் பேச வேண்டியதை மறந்து லயித்துவிட்டான்.
அவனது ரசனையான பார்வையை கண்டவள் தனக்குள் சிரித்துக்கொண்டு, “மாமா ப்ளாட்டா. ஹைய்யா அப்போ நாம அந்த ஊருக்கு போகப்போறோம்…” என கைகளை ஆட்டி குதூகலிக்க அதில் தானும் மகிழ்ந்தவன்,
“ம்ம் சரி. நாம போய்ட்டு வரலாம்…” என ஆமோதித்தான்.
“நாம மட்டுமா? ம்ஹூம் எல்லோருமே போகனும். எல்லோரும் தான் போறோம்…” தீர்மானமான குரலில் விழிகள் பளபளக்க பேசியவளை விநோதமாக பார்த்தவன் தான் என்ன சொன்னாலும் இனி தன் மனைவி கேட்கபோவதில்லை என உணர்ந்து,
“இங்க பாருடா. மாமாக்கு நாம அருவியூருக்கு போறது தெரிஞ்சா பிரச்சனை ஆகிடுமே? கொஞ்சம் யோசி…”
“தெரிஞ்சா தானே. தெரியாம கூட்டிட்டு போய்டலாம். அங்க போனதும் ஒண்ணும் செய்யமுடியாதே?…” என்று மிக மிக சாதாரணமாக கூற,
“அடிப்பாவி!!! தெரியாம எப்படி கூட்டிட்டு போக முடியும். அவங்க என்ன சின்ன குழந்தையா?. என்ன நினைச்சிட்டு இருக்க நீ?..” என உதயா எகிறினான்.
“எப்படின்னு என் கிட்ட கேட்டா? அப்பறம் நீ எதுக்கு இருக்க?… நீதான் திட்டம் போட்டு காய் நகர்த்தறதுல கெட்டிக்காரன் ஆச்சே? அதனால நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நாம எல்லோருமே போகனும். எல்லோரும்னா எல்லோரும் தான். உன் பாசமலரை தண்ணீர் டேங்கை தூக்கிட்டு அங்க வரசொல்லி நல்லா தண்ணி ஊத்தி செடியை வளர்த்துக்கோங்க. இது உன் பாடு. புரிஞ்சதா?…” என ஆணையிட்டு விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அதன் பின்னால் என்ன செய்வது என யோசிக்க யோசிக்க எதுவுமே பிடிபடாமல் உதயாவின் பாடுதான் திண்டாட்டமாக போய்விட்டது.
வெகுநேரம் கழித்து ஒருவழியாக மூளையில் பளிச்சிட்ட யோசனையை செயல்படுத்தலாமென நினைத்து அனைவரையும் கூட்டி பேச ஆரம்பிக்க முதல் பாலிலேயே நாச்சியால் அவுட்டாக்கப்பட்டு உதயாவின் திட்டத்திற்கு தடை சொல்லப்பட்டது.