நட்சத்திர விழிகளிலே வானவில் – 26 (4)

“சரி அன்னைக்கு இவங்க மட்டும் வராம இருந்திருந்தா, என்னோட  நிலைமை என்னாகிருக்கும்ன்னு நீ யோசிச்சு பாரு…” என விதண்டாவாதம் செய்ய உதயாவிற்கு தலைவலியே வந்துவிட்டது.

“இதை இப்படியே விடமாட்டாளா? இப்படி பேசி பேசி என் வாயை கிளருறாளே? பெருசா என்னாகியிருக்கும்? தப்பா நடந்திருந்தா என் மனைவியாக்கியிருப்பா. எனக்கு கிடச்ச வரமா யாருக்குமே விட்டுக்குடுக்காம நான் பத்திரமா பார்த்திருப்பேன். ஆனா எனக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கலையே?…” என தனக்குள் சொல்லிக்கொண்டவன் இரண்டரை வருடமாக மனதிற்குள் வலுக்கட்டாயமாக புதைத்து வைத்திருந்த எண்ணங்கள் மேலேறி வரத்தவித்தது.

தன் வாழ்க்கையின் வசந்தமாக வரவேண்டியவள் தான் செய்த அதிகபிரசங்கித்தனமாக செய்த செயலின் வீரியத்தால் தனக்கே சாபம் கொடுத்துவிட்டு அந்த சாபத்திற்கும் மொத்த உருவமாகி போனவளை என்ன சொல்லி தேற்ற என விழிபிதுங்கி நின்றான்.

அதுநாள் வரை தனக்குள் மட்டும் வைத்திருந்த ரகசியம் நந்தினியின் சிறுபிள்ளைத்தனமான பேச்சால் வெளிப்பட்டுவிடுமோ என பயந்தான். தன் மனதில் தோன்றிய எண்ணம் வார்த்தைகளாக வெளிவராமல் இருக்க படாத பாடுபட்டுப்போனான் பிரசாத். அமைதியாக நின்றவனை நெருங்கிய உதயா,

“என்னால இப்போ கூட நம்ப முடியலை பிரசாத். நீ இப்படி மனசு மாறிடுவன்னு…” என்று கூற அவனை பார்த்து மெல்ல மென்மையாக முறுவலித்தவன்,

“உனக்கொன்னு தெரியுமாடா பிரபா. எங்கப்பா இறக்கும் போது உங்க மேல உண்டான கோபம் காலப்போக்கில் மறஞ்சு போச்சு. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள எனக்கு தயக்கமா இருந்துச்சு. உன்னையும் மூர்த்தி அப்பாவையும், அவ்வளவு மோசமா பேசிட்டோமேன்னு எனக்குள்ளே எத்தனையோ நாள் வருத்தப்பட்டு வேதனைப்பட்டிருக்கேன்…”

“ஆனா சில நேரம் தோணும், மூர்த்தி அப்பா அன்னைக்கு கட்டாயப்படுத்தி எங்கப்பாவை கூட்டிட்டு போகாம இருந்திருந்தா நானும் உன்னை போல இருந்திருப்பேனேன்னு நினைக்கும் போது வர்ற கோவத்தை என்னால கட்டுப்படுத்தவே முடியலை…”

“என்னோட ஆற்றாமை தான் கோவமா அப்பப்ப வெளிவரும். அப்போலாம் உங்களை எதாவது செய்யனும்னு நினைப்பேன். உனக்கே தெரியுமே? இதுவரைக்கும் என்னால உனக்கு பெருசா எந்த ஒரு நஷ்டத்தையும் குடுக்கலைன்னு. ஆனா நான் அதையும் உனக்கு அம்மா மூலமா தெரியப்படுத்திட்டுதான் செய்வேன்…” என்றவனை பிரமிப்பாக பார்த்தான் உதயா.

“என்ன அப்படி முழிக்கிற? அம்மாக்கு தெரியாம ரகசியமா என்னால எதுவும் செய்ய முடியாதுன்னா நினைக்க?, நிச்சயமா முடியும். நான் உனக்கு இடஞ்சல் குடுக்கிறதுக்கு முன்னாலையே உன்னை அலார்ட் பண்ணிடுவேன். அந்த கஷ்டத்தையும் என்னால குடுக்காம இருக்க முடியலை. அதான் கொஞ்சமா உன்னை சீண்டுவேன். இது கூட என்னோட மன ஆறுதலுக்காகத்தான்…”

“அன்னைக்கு அருவியூர்ல விளையாட்டா பசங்க பெட் கட்டினதாலதான் தண்ணியடிச்சேன். குடிக்கிறதுல முதலும் அன்னைக்குதான் முடிவும் அன்னைக்குதான். உன் முன்னாலையே என்னை மட்டம் தட்டி பேசினதாலதான் அந்த அளவுக்கு எல்லை தாண்டினேன். அன்னைக்கு நான் செய்த காரியத்தோட வீரியம் போதை தெளியவும் என்னை எவ்வளவு காயப்படுத்துச்சு தெரியுமா?…” என்றவனை அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள் நந்தினி.

“அன்னைக்கு நாங்க சும்மா பசங்களுக்குள்ள விளையட்டா பேசிட்டு இருந்தோம்டா. அந்த நேரம் இவ ஊரையே திரட்டிட்டு வந்து தாம்தூம்னு குதிச்சதோடு இல்லாம என் கன்னத்துல அத்தனை பேர் முன்னால அடிச்சுட்டா. அம்மா கூட என்னை அடிச்சதில்லைடா. இவ என்னை அறைஞ்சுட்டா. அந்த கோவத்துல தான் புத்தி தடுமாறி வில்லங்கமா வில்லத்தனமா யோசிச்சுட்டேன்…”

“ஆனா, கண்டிப்பா என்னால உறுதியா சொல்ல முடியும், நந்தினியோட மானத்துக்கு எந்த விதமான களங்கத்தையும் நான் ஏற்படுத்தி இருக்க மாட்டேன். சும்மா மிரட்டத்தான் அப்படி செஞ்சேன். அம்மா என்னை அப்படி வளர்க்கலைடா. சத்தியமாடா…” என்றவனை இழுத்து அணைத்து கொண்டான் உதயா. சிறிது நேரத்தில் அவனை விட்டு விலகிய பிரசாத்,

“அன்னைக்கு கோவில்ல நீ இவ கழுத்துல தாலி கட்டவும் தான் நான் நம்ம வீட்டு பொண்ணாகிட்டா இனிமே எந்த பிரச்சனையும் வேண்டாம்னு நான் அமைதியா போய்ட்டேன். ஆனா நீ என்னடான்னா இவ அப்பா சொன்னாருன்னு விட்டுட்டு வந்துட்ட. அதை தாங்கிக்கவே முடியலை. என்னதான் இருந்தாலும் உன்னோட மனைவி இவ.  எப்படியாவது நம்ம குடும்பத்துல சேர்த்துடனும்னு நினச்சேன்…”

“அதுக்காக இவளை பின் தொடர்ந்து போகணும்னு நினச்சேன். ஆனா எங்களால முடியலை. இவளோட அட்ரெஸ் கண்டுபிடிக்க படாத பாடு பட்டுட்டேன். ஒருவழியா கண்டுபிடிச்சா இவ அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருந்தாரு. எனக்கு செம கோவம், யார் வீட்டு பொண்ணுக்கு, யார் மாப்பிள்ளை பார்க்கிறதுன்னு…”

“அதான் குணாவை மாப்பிள்ளையா அனுப்பினேன். அவனுக்கே தெரியாது, நான் அவனை பகடையா தான் யூஸ் பண்ணபோறேன்னு. சரியா நீ ஊர்ல இருந்து வரவும் அம்மா இருக்கும் போது அவங்க கேட்கனும்னு வேணும்னே என்னோட ப்ரெண்ட்டுக்கு கால் பண்ணி பேசினேன். நந்தினியோட கல்யாண ஏற்பாட்டை பத்தி சொன்னா எப்படியும் அம்மா உன் கிட்ட சொல்லுவாங்கன்னு எனக்கு தெரியும்…”

“நானும் அப்டி தான் பேசினேன். எனக்கு தெரியும் நீ எப்படியும் நந்தினியை கப்பாத்துவன்னு. ஆனாலும் வராம போயிட்டா அதுக்கும் கல்யாணத்தை நிறுத்த வேறொரு வழியை யோசிச்சிதான் செய்தேன். நான் நினச்சது போலவே நீயும் வந்துட்ட. நல்லவிதமா முடிஞ்சதுன்னு நினச்சா வேணியத்தை ரூபத்துல அடுத்த ஆபத்து நந்தினிக்கு…”

“என்கிடையே பேரம் பேசறாங்க. உன்னோட சம்பந்தப்பட்ட எல்லா டீட்டயில்ஸ், உன் பிஸ்னஸ் ரகசியங்கள்ன்னு எல்லாத்தையும் எனக்கு சொல்றதா. நான் மாட்டேன்னு சொன்னா கண்டிப்பா அவங்களே களத்துல இறங்கிடுவாங்கன்னுதான் யோசிச்சு வள்ளி மூலமா நந்தினியை பாதுகாக்கணும்னு நினச்சேன்…”

“கெளரி கல்யாணம் முடியவும் நந்தினியை பார்த்துக்கலாம்னு சொல்லி சொல்லியே அவங்களை ஆப் பண்ணினேன். ஆனா எங்க கண்ணுல மண்ணை தூவிட்டு ஏதாவது நந்தினியை செய்துட்டா. அதனாலதான் அம்மா மூலமா நந்தினியை உன் கண் பார்வையிலே கொண்டு வந்தாதான் அவளுக்கு பாதுகாப்புன்னு அம்மா இருக்கும் போது கோவமா பேசறது போல நடிச்சேன்…”

“இன்னைக்கு காலையில வள்ளி போன் பண்ணினதும் ஆடிப்போய்ட்டேன். என்ன செய்யறதுன்னு தெரியலை. அதான் உனக்கு போன் பண்ணி உடனே வர சொல்லிட்டு திரும்பினா அம்மா நிக்கிறாங்க. என்னனு சட்டையை பிடிச்சு கேட்கவும் எனக்கு ஒரு யோசனை தோனுச்சு. இதை விட்டா அம்மாவை ஊருக்குள்ள வரவைக்க முடியாதுன்னு. அதான் அம்மாக்கிட்ட கொஞ்சம் மிரட்டலா பேசினேன்…” என்றவன் தான் பேசியதை கூறினான்.

தனத்திடம், “உங்க செல்ல மருமக உயிருக்கு போராடிட்டு இருக்கா, காப்பாத்த வரீங்களா?…” என எள்ளலாக பிரசாத் கூற மிரண்டவர்,

“உங்க செல்ல மருமக உயிருக்கு போராடிட்டு இருக்கிற இந்த நேரத்திலையுமா நீங்க அவளை காப்பாத்த ஊருக்குள்ள வரமாட்டீங்க? ம்ம். வைராக்கியம். அப்படியே இருங்க…” என எகத்தாளமாக கூறிய பிரசாத்தை பார்த்த தனத்திற்கு உதறல் எடுத்தது. அதுவும் நந்தினியின் உயிருக்கு ஆபத்து என்றதும் ஸ்தம்பித்து நின்றார்.

இதை கூறி முடித்தவன், “ஷாக்ல இருந்தவங்களை அப்படியே நகர்த்தி காருக்குள்ள தள்ளி நம்ம வீட்டுக்கு வந்துட்டேன். எப்படி?…” என்று சட்டை காலரை தூக்கி விட்டு பெருமையாக பார்த்தவனை,

“உன் மூஞ்சி, திருந்தவே மாட்டியாடா நீ?. எப்போ பாரு எல்லோரையும் மிரட்டிட்டும், பயம் காட்டிட்டும். என்ன பொழப்பு இது. வெக்கமா இல்லை. இதுல உனக்கு தற்பெருமை வேறையா? அதிர்ச்சியில அவங்களுக்கு எதாச்சும் ஆகியிருந்தா?…” என அவனை காய்ச்சு காய்ச்சென காய்ச்ச,

“முதல்ல உன் வாயை அடக்கு. எப்போ பாரு எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசிக்கிட்டு. என்ன இன்னைக்கு தப்பிச்சிட்டோம்னு நினைப்பா? ஓவரா துள்ளற?, அமைதியா இரு சொல்லிட்டேன்…” என விரல் நீட்டி எச்சரித்த பிரசாத் மீது அவனை எரிக்கும் பார்வையொன்ற வீசினாள் நந்தினி.

அதை கண்டுகொள்ளாதவன், “என்ன செஞ்சு என்னடா பலன் பிரபா? வேணி அத்தை இப்படி செய்துட்டாங்க. நல்ல வேலை நான் வள்ளியை லீவ்ல போக வேண்டாம்னு சொல்லிட்டேன். ப்ச். அம்மா தான் என்னை ரொம்ப தப்பா நினைக்கிறாங்க. அதனால என்ன? போக போக புரிஞ்சிப்பாங்க…” என கூறியவனை தலைக்கு மேல தூக்கி சுற்றோ சுற்றென சுற்றினான் உதயா. பின்னே பிரசாத் செய்தது சாதாரண விஷயமா?

நந்தினிக்குதான் இதை பார்த்து பொறுக்கமுடியவில்லை. பிரசாத்தின் மீது கோவம் குறைந்தாலும் மனதின் ஓரத்தில் கொஞ்சம் கனன்று கொண்டே தான் இருந்தது. “இங்க பாரு நீ வேணும்னா உன் தம்பியை தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடு. நான் வேண்டாம்னு சொல்லலை. ஆனா நான் இவனை மன்னிக்கவே மாட்டேன்…” என மிதப்பாக கூற,

பிரசாத், “இவளுக்கு கையில ட்ரிப்ஸ் போட்டதுக்கு பதிலா வாயில போட்ருக்கனும்டா. கொஞ்ச பேச்சா பேசறா?…” என்று சொல்லவும் உதயாவும் சேர்ந்து பிரசாதத்தோடு இணைந்து வெடிச்சிரிப்பு சிரிக்க அதை பார்த்து கோவத்தில் கையில் கிடைத்த அனைத்து பொருட்களையும் தூக்கி வீசி எறிந்தாள் நந்தினி. 

போனவர்களை இன்னமும் காணோமென்று மூர்த்தியை தவிர அனைவரும் அங்கே நந்தினியை பார்க்க வர அந்த அறையே கலவர கோலமாக கிடந்ததை பார்த்தாலும் மூவரின் சந்தோஷ போராட்டத்தில் அனைவரின் நெஞ்சமும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.

error: Content is protected !!