ஹாஸ்பிட்டலில் நந்தினிக்கும் பாக்கியத்திற்கும் சிகிச்சைகள் துரிதகதியில் நடந்துகொண்டிருந்தது. அடைபட்ட அரங்கு அறையில் மூச்சிற்கு தவித்து மயங்கி விழுந்ததால், நேரத்தில் கொண்டுவந்து சேர்த்ததாலும் விரைவில் மயக்கம் தெளியவும் அவள் சரியாகிவிடுவாள் என்று சொன்ன பின் தான் அனைவருக்குமே நிம்மதியானது.
ஆனால் அந்த நிம்மதி கூட சில நிமிடங்களே. பாக்கியத்திற்கு வந்திருந்தது ஹார்ட் அட்டாக் என்று சொல்லவும் அனைவருமே உடைந்தே விட்டனர். ஆபத்துக்கட்டத்தை தாண்டினாலும் இனிமேல் அவரை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இன்னும் ஒருவாரம் ஹாஸ்பிட்டலில் இருக்குமாறு சொல்லி சென்றார் டாக்டர் பெருமாள்.
அனைவரும் ஐசியுவின் வாயிலில் நிற்க நந்தினி கண் விழித்த தகவல் நர்ஸ் மூலமாக வந்து சேர்ந்தது. உதயாவை போய் பார்க்க சொல்லி அவனை முதலில் அனுப்பியவர்கள் பின்னால் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வருவதாக கூறினார்கள்.
நந்தினியின் அறைக்குள் சென்று படுக்கையை நெருங்கி வேகமாக அவளை இழுத்து அணைத்து கொண்டான். அவளும் வாகாய் அவனுக்குள் சந்தோஷ கண்ணீரோடு அடைபட்டவள் இனிமே பிரியவே கூடாது என்பது போல அவனோடு ஒட்டிகொண்டாள்.
“எனக்கு மொத்த உசுரும் காத்தோட கரைஞ்சு போயிடுச்சுடா நந்து. நான் உன்னை கவனிக்காம போனதால்தானே? நான் உன்னை விட்டுட்டு போயிருக்கக்கூடாது…” என குற்றஉணர்வில் துடிக்க அதை தாங்கமுடியாமல் நந்தினி இல்லை என்பது போல அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.
இன்று தன்னால் நந்தினிக்கு உண்டான ஆபத்தையும் அவள் பட்ட இன்னல்களையும் தன் முத்தங்களால் கொஞ்சம் கொஞ்சமாக துடைக்க முயன்றான். அதன் மூலம் தனக்குமான ஆறுதல் கிட்டுமா என்று தேடினான். அவனின் மனதையும், சஞ்சலத்தையும் உணர்ந்தவள் மறுக்காமல் அனுமதித்தாள். நீண்ட நேரம் தொடர்ந்த இவர்களின் முத்த போராட்டம் வெகுநேரம் கழித்தே முடிவுக்கு வந்தது.
அதன் பின் கொஞ்சம் சுய உணர்வுக்கு வந்ததும் நந்தினி என்ன நடந்தது, எப்படி தெரிந்து தான் காப்பாற்றப்பட்டேன் என கேள்வி எழுப்ப, தனக்கு கௌரியின் மூலமாக தெரிந்த, வீட்டில் நடந்தது அனைத்து விஷயங்களையும் நந்தினியோடு பகிர்ந்துகொண்டான்.
அவனால் தன் உடன்பிறந்த தங்கையின் இறப்பிற்கு காரணமே வேணி தான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. நந்தினியாலும் இதை நம்பமுடியவில்லை. எப்படி இவ்வாறு வேணியால் நடந்துகொள்ள முடிந்தது. அதற்கு காரணமும் சொல்லி தன்னை குற்றமற்றவளாக காட்ட துணிந்தார் என நினைக்க நினைக்க அசிங்கமாக இருந்தது.
தங்களுக்குள் இருவரும் சுழன்றுகொண்டிருக்க புயல்போல அந்த அறைக்குள் நுழைந்த பிரசாத் உதயாவை இழுத்து நிறுத்தி கன்னத்தில் பளாரென அறைந்தான். அருவியூரில் பார்த்ததற்கு பின் இரண்டரை வருடங்கள் கழித்து பிரசாத்தை பார்க்கவும் நந்தினிக்கு பழைய ஞாபகங்கள், அதனால் தனக்கு உண்டான அவமானம், தான் அனுபவித்த வலி, வேதனை, கோவம், ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்தது. “இவனால் தானே, எல்லாம் இவனால் தானே…” என தனக்குள்ளேயே தணலாக தகித்தாள்.
பிரசாத் விட்ட அறையில் பொறிகலங்கி நின்ற உதயாவை பார்த்த நந்தினி, “உனக்கு எவ்வளோ துணிச்சல் இருந்தா என் புருஷனை நீ அடிப்ப?… உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா…” என தன்னால் எழுந்துகொள்ள முடியாத சூழலிலும் தீனமான குரலில் திக்கி திணறி கர்ஜித்தாள்.
அவளை அலட்சியபடுத்திய பிரசாத், “நீயெல்லாம் என்ன மனுஷன்டா?, வெட்கமா இல்லை. உனக்கெல்லாம் எதுக்குடா மீசை?. கட்டின பொண்டாட்டியை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க தெரியாத உனக்கு கல்யாணம் ஒரு கேடா?..” என கோவமாக பேசியவனை புரியாமல் பார்த்தான் உதயா.
“பெரிய ஹீரோவாட்டம் இவளை காப்பாத்த தாலி கட்டினியே? அதுக்கான கடமையில இருந்து மட்டும் தப்பிக்கனும்னு நினைக்கிற உனக்கு எதுக்குடா கல்யாணம்? எப்படிப்பட்ட சூழ்நிலையில கல்யாணம் முடிஞ்சிருந்தாலும் நீ இவளை கைவிடாம காப்பாத்திருந்தா அப்போ ஒத்துக்கறேன் நீ நல்ல ஆம்பளைன்னு. வாக்கு குடுத்துட்டேன்னு சாக்கு சொல்லிக்கிட்டு ஓடி ஒளிஞ்ச உன்னை என்னனுடா சொல்ல?…” என பிரசாத் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனியானான் உதயா.
“டேய் என் புருஷனை கேள்வி கேட்க நீ யாருடா? பெருசா பேச வந்துட்ட? நீ ரொம்ப ஒழுக்கமோ? உன்னால தாண்டா இவ்வளவு பிரச்சனையும்…” என தன் தைரியங்களை ஓன்று திரட்டி அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து பிரசாத்தை நோக்கி வீசினாள்.
அதை அழகாக கேட்ச் பிடித்தவன் மூடியை திறந்து தண்ணீரை குடித்துவிட்டு உதயாவிடம் நீட்டினான்.
“வச்சிரு. குடிச்சு தொலைஞ்சிடாத. உன் பொண்டாட்டிக்கிட்ட பேசணும்னா இது மாதிரி பத்து பாட்டில் வேணும்…” என வம்பிழுக்க அவனை முறைத்தாள் நந்தினி.
அதுவரை இல்லாத ஒரு அமைதியும், இறுக்கமும் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது பிரசாத்திடம். “அன்னைக்கு நான் நடந்துக்கிட்டது தப்புதான் நந்தினி. என்னால நீயும் இவனும் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டீங்க. அதுக்கு…” என அவன் முடிக்க கூட இல்லை நந்தினி பொங்கிவிட்டாள்.
“என்ன மன்னிப்பு கேட்க போறியா? நீ கேட்டுட்டா நாங்க பட்ட வேதனையும் கஷ்டங்களும் இல்லாம போய்டுமா? மன்னிப்புன்ற உன் ஒரு வார்த்தையால நடந்தது எதையுமே இல்லாம பண்ணிடுவியா?…” என பொரிந்து தள்ள,
“இல்லை நந்தினி நான் அன்னிக்கு கொஞ்சம் குடிச்சிருந்தேன், அதுவும் இல்லாம நீ வேற என்னை கோவப்படுத்தியும், அவமானப்படுத்தியும் பேசின. குடிகாரன்னு வார்த்தைக்கு வார்த்தை என்னை மட்டம் தட்டினதும் தான் உன்னை தண்டிக்க நினச்சேன்…”
“ஓ சார் குடிச்சிருந்ததால தானா இவ்வளவு பிரச்சனையும்?, ஏண்டா குடிச்சவனை குடிகாரன்னு சொல்லாம குலசாமின்னா சொல்லுவாங்க. அப்டித்தாண்டா சொல்லுவேன். ஆயிரம் தடவை சொல்லுவேன். சொல்லிக்கிட்டே இருப்பேன். நீ குடிகாரன் தான் குடிகாரனே தான். உன்னால என்னடா பண்ணமுடியும்?…” என புஸுபுஸுவென மூச்சுவாங்க கத்தினாள்.
அதை பார்த்த உதயா இவ மறுபடியும் தேரை இழுத்து தெருவுல நிறுத்திருவா போல என பயந்து, “நந்தும்மா இது ஹாஸ்பிட்டல், நீ வேற இப்போதான் கண் முழிச்சிருக்க, அலட்டிக்காதடா. அமைதியா இரு…” என சொல்லியதுதான் தாமதம் கோவமனைத்துமே உதயாவின் புறம் திரும்பியது.
“ஏண்டா நீ உன் தம்பிக்கு சப்போர்ட்டா, உன்னை தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ. வாயை மூடிட்டு இரு. இன்னைக்கு இவனை ஒரு வழி பன்றேன். குடிச்சதால நிதானமில்லாம இவன் என்ன வேணும்னாலும் செய்யலாம், அதை நான் கேட்க கூடாதா?…” என தன்னவனை தாளிக்கவும் அதைப்பார்த்து சிரித்த பிரசாத்,
“ஏய் அரைக்காப்படி, இன்னும் உன் வாய் மட்டும் குறையவே இல்லைல. பாவம் எங்க லக்ஷ்மிம்மா. உன் கிட்ட என்னவெல்லாம் பாடுபடப்போறாங்களோ?…” என்று எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினான்.
நந்தினியை சீண்டியதில் கலவரமான உதயா பிரசாத்தின் லக்ஷ்மிம்மா என்ற அழைப்பில் நெகிழ்ந்தான். “இவனுள் எப்போது நிகழ்ந்தது இந்த மாற்றம்? எத்தனை வருடங்கள் கழித்து இப்படி உரிமையாக அதட்டி பேசுகிறான்…” என மனம் மகிழ்ந்தது.
அவனது முகமாற்றத்தை கண்ட நந்தினி, “அடடா, ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க சார், இவன் தான நமக்கு தொடர்ந்து தொல்லை குடுத்தான். இப்போ இவன் பேச்சுல மயங்கி அப்டியே பாசத்துல ஐஸா உருகற?…” என்று உதயாவை வார,
“போதும் நந்தினி நான் தான் போதையில தெரியாம செய்துட்டேன்னு சொல்றேன்ல. திரும்ப திரும்ப அதையே பேசற?…” என்று சலிப்பான குரலில் கூற,
“எவ்வளோ ஈஸியா சொல்ற? குடிச்சா உங்களுக்கெல்லாம் புத்தி என்ன புண்ணாக்கு விக்கவா போகும்? குடி குடின்னு அந்த குடியால எத்தனை குடும்பங்கள் சீரழிஞ்சு போயிருக்கு. அந்த குடியால எத்தனை பேர் வாழ்க்கையே திசை மாறி போயிருக்கு. அன்னைக்கு நான் கதற கதற என்னை தூக்கிட்டு போனியே? தப்பா ஏதாவது நடந்திருந்தா?…” என்றவள் அதற்குமேல் பேச வார்த்தை வராமல் அவனை முறைத்தவாறே இருந்தாள்.
“அதான் ஒண்ணும் நடக்கலைல. அதை விடு…” என பிரசாத் கூற,
“அப்படி நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? அதை சொல்லுடா நீ முதல்ல…”
“நிறுத்தறியா, முதல்ல அன்னைக்கு நீ எப்படி நடந்துக்கிட்டன்னு யோசிச்சு பாரு. கொஞ்சம் கூட புத்தியில்லாம முன் யோசனை இல்லாம நடந்துக்கிட்டது நீ. பொண்ணுங்களுக்கு முதல்ல வேகத்தை விட விவேகம் வேணும், சமயோசித புத்தி வேணும். எப்போ எப்படி நடந்துக்கணும் அப்டின்ற புத்திசாலித்தனம் வேணும். அன்னைக்கு நீ அப்படி ஆராய்ந்து நடந்திருந்தா கொஞ்சம் புத்தியோட யோசிச்சிருந்தா எதுவுமே நடந்திருக்காது…”
“என் மேல பழியை போட்டு நீ செஞ்ச தப்புல இருந்து தப்பிக்க பார்க்காத. எதாச்சும் நடந்திருந்தா?…” என அப்போதும் விடாமல் கேட்க இப்படியே மாற்றி மாற்றி இருவரும் சண்டை போட பொறுத்தது போதும் என்று,
“ஐயோ போதும், ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்தறீங்களா? எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கீங்க? நடக்காததை ஏன் பேசறீங்க?…” என்றவனிடம் கோவமாக பேச நந்தினி வாயை திறக்க எத்தனிக்க,
“நந்தினி அன்னைக்கு நடந்த சம்பவத்தால தான் இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திருக்கீங்க. அதை நினச்சுப்பாரு…”