அனைவரின் முன்னாலும் வேணியால் தலைகுனிந்து கூனி குறுகிப்போய் அமர்ந்திருந்தார். கௌரியால் இதையெல்லாம் நம்பவே முடியவில்லை. இன்னும் என்னவெல்லாம் தங்களின் தலையில் இடியாக இறங்கபோகிறதோ என நினைத்த மூர்த்தி, பிரசாத் முழுதாக சொல்லிமுடிக்கட்டுமென அமைதியாக இருந்தார்.
“இதுமட்டுமில்லை வள்ளி இங்க வந்த பின்னாலையும் நந்தினிக்கு நிறைய இடஞ்சல் குடுத்திருந்திருக்காங்க. நீங்க வள்ளிக்கிட்டையே கேட்டு தெரிஞ்சுக்கோங்க. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்களை கன்ட்ரோல்ல வச்சுக்க பார்த்தோம். கெளரி கல்யாணம் முடியவுமே சொல்லிடலாம்னு தான் நினச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ளே…” என தொண்டையை செருமிக்கொண்டு,
“இன்னைக்கு காலையில நீங்க எல்லோருமே கௌரி வீட்டுக்கு கிளம்பிட்டதா வள்ளி மூலமா எனக்கு தகவல் வந்திருச்சு. ஆனாலும் மனசுக்குள்ள ஒரு படபடப்பு. வள்ளியை நந்தினிக்கு காவலா இருக்க சொன்னேன். நான் நினச்சது போலவே கொஞ்ச நேரத்துல வேணி அத்தை இங்க வந்துட்டாங்க. இனி அவங்ககிட்ட கேளுங்க…” என கூறியவன் வேணியை இழுத்துகொண்டுவந்து மூர்த்தியின் முன் நிறுத்தினான்.
“ம்ம். சொல்லுங்க. ஏமாத்தலாம்னு நினச்சீங்க, நடக்கிறதே வேற, சொல்லிட்டேன்…” என்றவனது மிரட்டல் நன்கு வேலை செய்தது.
அனைவரையும் பார்த்து அழுதுகொண்டே, “சொல்லிடறேன். இனியும் மறைக்க என்ன இருக்கு? ஆமா, எனக்கு நந்தினியை பிடிக்கலை. என் பொண்ணு வாழவேண்டிய வாழ்க்கையை அவ வாழறத என்னால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலை. அதுவும் இல்லாம நான் தூக்கி வளர்த்த பிரபா அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை எதிர்த்து பேசினதும் இல்லாம உங்க எல்லோர்க்கிட்டையும் சொல்லி என்னை தனிமரமா நிக்கவைப்பேன்னு சவால் விட்டான்…” என திமிராக சொல்லவும் அனைவருக்கும் இது பலத்த அதிர்ச்சியாக இருந்தது.
வேணியின் பேச்சில் அருவருத்த கெளரி நடுக்கத்தோடு விஷ்ணுவை நெருங்கி நின்றுகொண்டாள். அவளது மனநிலை புரிந்தது போல தன்னோடு மென்மையாக அணைத்துகொண்டான் விஷ்ணு.
உதயாவிற்கு முதலிலேயே எல்லாம் தெரிந்தும் யாரிடமும் இப்படி சொல்லாமல் மறைத்துவிட்டானே என மனம் கலங்கினார்கள். எப்படி பட்ட பிரச்சனைக்கு நடுவில் தன் மனைவியை பாதுகாத்தான் என எண்ணி பெருமைப்படாமலும் இருக்கமுடியவில்லை.
அனைவரும் வேணியை வெறுப்பாக பார்க்க அவர் இவர்களை தவறியும் பார்த்துவிடாமல் வேறு திக்கில் பார்த்துக்கொண்டே,
“அது என் கோவத்தை இன்னமும் அதிகமாக்கிருச்சு. என் மகளும் அவளுக்கு மயங்கி என்னை எதிர்த்து பேச ஆரம்பிச்சா. என்னை விட்டு எல்லோருமே விலகறது போல இருந்தது. அதுக்காகத்தான் நான் பிரசாத் மூலமா நந்தினியை பழிவாங்க நினச்சேன். சின்ன சின்ன சங்கடம் குடுத்தும் அவளை ஒண்ணும் செய்யமுடியலை. அவ இருக்கிற வரைக்கும் எனக்கு நிம்மதி இல்லைன்னு நினச்சேன். அதனால…” என ஒரு கணம் நிறுத்தியவர்,
“கெளரி வீட்க்கு எல்லோரும் போனப்போ பெத்தவ நான் இருக்கேன், அவ என்னை கண்டுக்காம உங்க எல்லோரோடையும் பேசினதும் இல்லாமல், என்னை விட்டுட்டு வராத நந்தினியை தேடினது எனக்கு ரொம்ப ஆங்காரத்தை உண்டு பண்ணிருச்சு…”
“நீங்க… நீங்க எல்லோருமே கெளரி வீட்ல பேச்சுல மும்மரமா இருந்தீங்க. அதை பயன்படுத்திக்கிட்டு நான் சம்பந்தியம்மாக்கிட்ட வெளில இருக்கேன்னு சொல்லிட்டு மெதுவா வீட்டுக்கு கிளம்பிட்டேன். அங்க நந்தினி கௌரி வீட்டுக்கு வர கிளம்பிட்டு இருந்தா…” என்றவர் மெல்ல விழியுயர்த்தி அனைவரையும் பார்க்க அவர்களின் வெறுப்பு உமிழும் பார்வையை காணமுடியாமல் தலைகுனிந்துகொண்டார்.
“மேல சொல்லுங்க வீட்டுக்கு வந்து என்ன செய்தீங்க?…” என்று பிரசாத் உறும அதில் பயந்தவர் தயக்கமாக,
“அவளை கூப்பிட்டு இன்னைக்கு அரங்கு ரூம்ல விளக்கேத்தனும், நேத்தே ஏத்திருக்க வேண்டியது. அண்ணி மறந்துட்டாங்களாம், அதான் என்னை அனுப்பிவச்சாங்கன்னு சொன்னேன். முதல்ல அவ நம்பலை. அப்றமா தான் நான் சொல்றதை கேட்டா. அவளை ரூம்க்கு கூட்டிட்டு போய் உள்ள அவ விளக்கேத்தும் போது நான் உடனே வெளில வந்து கதவை சாத்திட்டேன்…”
“அதை பார்த்த வள்ளி என்னன்னு விசாரிச்சு சாவியை கேட்டா. குடுக்கமுடியாதுன்னு சொல்லவும் என்னையே அடிக்க வந்தா. அதான் என்ன செய்யன்னு தெரியாம இந்த ரூம்க்குள்ள வந்து ஒளிஞ்சுட்டேன். இந்த வேலைக்கார நாயி என்னை உள்ள வச்சு கதவை பூட்டிட்டா…” என்று கைகளை பிசைந்துகொண்டே கூறி முடிக்கவும் சுதர்சனம் எழுந்து விட்டார் ஒரு அறை. வேணிக்கு தலை கிறுகிறுத்து போனது.
அடித்து கொன்றுவிடும் வெறியில் இருந்த சுதர்சனத்தை வந்து பிடித்துக்கொண்ட விஷ்ணு, “நீங்கல்லாம் ஒரு பொண்ணா? வாழவந்த பெண்ணை சாவடிக்க பார்த்திருக்கீங்க? அந்த அளவுக்கு உங்களுக்கு என்ன வெறி?…” என வேணியை பார்த்து கேட்கவும்,
“ஆமா வெறிதான். அவ வந்ததிலிருந்து எல்லோரும் அவளுக்கு குடுத்த முக்கியத்துவம், காணாத பொக்கிஷத்தை கண்டது போல தலையில தூக்கிவச்சு கொண்டாடினது எனக்கு பிடிக்கலை. இப்போவும் எனக்கு நான் செஞ்சது தப்பில்லைன்னுதான் தோணுது…” என்று வீம்பாக படபடவென என்ன பேசுகிறோம் என்று உணராமலேயே பேச,
அவரை பார்த்த மூர்த்தி, “நீ செஞ்ச பாவங்கள் இதுமட்டும் தானா? இல்ல இன்னமும் இருக்கா?. போதும். இதோட நிறுத்திருமா. எங்களை, எங்க குடும்பத்தை விட்டுடு…” என்று உடைந்துபோன குரலில் யாரோ ஒருவரிடம் பேசுவது போல ஒட்டாத தன்மையில் தள்ளி வைத்து பேசிய தன் அண்ணனை பார்த்த வேணி நிலைகுலைந்து தன்னிலை மறந்தார். அதிலேயே பித்து பிடித்தவர் போல உளற ஆரம்பித்தார்.
“அண்ணே அவ நம்ம குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டா அண்ணே. அதான் அப்படி பண்ணினேன். நம்ம பிரபாவை நம்மக்கிட்ட இருந்து பிரிச்சிடுவா. அதான் அப்படி பண்ணினேன். இதைத்தான் நான் எனக்கு தெரிஞ்சு செய்தேன். நான் வேற ஒண்ணுமே பண்ணலை…” என்றவர் விடாமல் தன்னை நியாயப்படுத்த முயன்று வார்த்தைகளை அவரை அறியாமல் சிதறவிட்டார்.
“நம்ம குட்டி கெளரி அரங்கு ரூம்க்குள்ள நுழைஞ்சது கூட எனக்கு தெரியாம தான் நடந்தது. அவ உள்ளே இருக்கான்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா காப்பாத்தியிருப்பேன் அண்ணே. நீங்களாவது என்னை நம்புங்க அண்ணே…” என தன் போக்கில் சொல்லிக்கொண்டே போக அதை கேட்ட பாக்கியம் நெஞ்சை பிடித்துக்கொண்டே மயங்கி விழுந்தார்.
அதை பார்த்த பின்னால் தான் தான் சொன்ன விஷயத்தை உணர்ந்தார். இத்தனை வருடமாக தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இன்று தன் வாய் மூலமாகவே அம்பலப்பட்டுப்போனதை எண்ணி விக்கித்து நின்றுவிட்டார்.
“அடிப்பாவி, நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மமா?. ஒரு பிஞ்சை சாகடிச்சுட்டு இத்தனை வருஷமா எங்களுக்கு தெரியாம மறைச்சதும் இல்லாம இப்போ அதை நியாயப்படுத்தி வேற பேசறியா?…” என அடி நொறுக்கித்தள்ளிவிட்டார் சுதர்சனம்.
“உன்னை போல ஒரு மிருகத்தையா என் வயித்தில சுமந்தேன். ஐயோ உன்னை பெத்த பாவத்தை நான் எங்கே போய் கழுவுவேன். என்ன பாவம் செய்தேன்னு எனக்கு இந்த தண்டனை?…” என்று வயிற்றில் அடித்துகொண்டு கதறினார் நாச்சி.
பிரசாத்துக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. விஷ்ணு தாமதிக்காமல் பாக்கியத்தை தூக்கிகொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான். பிரசாத், தனத்தோடு மூர்த்தியும், நாச்சியும் செல்ல,
போகும் போது வேணியிடம், “நம்பவச்சு கொஞ்சம் கொஞ்சமா எங்களை கொன்னுட்டியே?…”என்றவர், சுதர்சனத்திடம், “என் தங்கச்சி செத்துட்டா. இனிமே இவ இந்த வீட்டு வாசப்படி ஏறக்கூடாது. என் முகத்திலையும் முழிக்கக்கூடாது. மீறி வந்தா நானே இவளை இல்லாம பண்ணிடுவேன்…” என மூர்த்தி கண்ணீரோடு உறுதியாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அவ்வீட்டில் எஞ்சி இருந்தவர்கள் சுதர்சனத்தோடு, வள்ளி, கௌரி மட்டுமே. மூர்த்தியின் பேச்சில் அரண்டுபோன வேணி தன் கணவன் மகள் மனதை மாற்ற நினைத்து,
“பாருங்க, நான் நம்ம பொண்ணோட நல்லதுக்குதானே எல்லாம் செய்தேன். இதுக்கெல்லாம் காரணம் அந்த நந்தினிதான். எல்லோரையும் மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டு இப்போ என்னையே எங்கண்ணன் வாயால வெளியே போக சொல்ல வச்சுட்டா பாருங்க…” என அவர்களிடம் பரிதாபத்தை சம்பாதிக்க நினைத்தார்.
வேணியை நெருங்கிய கெளரி பதிலேதும் பேசாமல் கூர்ந்து பார்த்து அவரது முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு, “ச்சீ, நீயெல்லாம் என்னை பெத்த தாயா? என்னை பொருத்தவரைக்கும் நீ செத்துட்ட. அப்பா வாங்க போகலாம்…” என கூறிவிட்டு வாசலை நோக்கி செல்ல, சுதர்சனம் வேணியின் கழுத்தைபிடித்து வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே தள்ளிவிட்டார்.
“வள்ளி, கதவை பூட்டு. இனி இவ இந்த வீட்டு வாசப்படி மிதிக்க கூடாது. புரிஞ்சதா?…” என வள்ளியிடம் கர்ஜித்துவிட்டு செல்ல வேணியோ அதிர்ந்துவிட்டார். இனி தன் மகளும், கணவனும் கூட தனக்கில்லை என்பது வெகு தாமதமாக தான் புரிந்தது.
அப்போதுமே நடந்தது அனைத்திற்கும் நந்தினியையே காரணம் காட்டி அந்த வட்டத்திற்குள்ளேயே தான் அவர் மனம் சுற்றியது. தான் அவசரப்பட்டு இந்த காரியத்தை செய்யாமல் நந்தினியை இப்போது இல்லாமல் வேறொரு சமயத்தில் தன் மீது சந்கேகம் வராத அளவிற்கு கவனித்திருக்க வேண்டுமென்றும் மனம் முரண்டியது. அவளுக்கு இது போதாது. இன்னும் பெரியதாக தண்டனை கொடுக்கவேண்டுமென்று இன்னும் வெறிகொண்டது.
வள்ளியும் பிரசாத்தும் இப்படி தன் காலை வாருவார்கள் என்று எதிர்பாராத காரணத்தால் அவர்கள் மீதும் துவேஷம் உருவானது. இனி நந்தினியை தன்னால் ஒன்றும் செய்யமுடியாதோ என்ற எண்ணமே அவரை பைத்தியமாக்கியது.
மூடப்பட்ட வீட்டின் கதவை வெறித்து பார்த்தவர் கண்களில் ஜொலித்த கோபத்தீ ஒவ்வொரிடமும் சென்று கடைசியில் இத்தனையையும் யோசிக்காமல் செய்த தன்மீதே திரும்பி முன் தோட்டத்தில் கிடந்த இரும்பு பைப்பால் தன் தலையில் தானே சரமாரியாக அடித்துக்கொண்டு ரத்தம் கொட்ட கொட்ட மயக்கம் வரும் வரைக்கும் வெறியடங்காமல் அடித்துக்கொண்டே இருந்தார்.
கல்யாணத்தால் அங்கே உள்ள வேலைக்கார்களுக்கு விடுமுறை கொடுத்திருந்தபடியால் தோட்டத்தில் யாருமில்லாமல் அனாதையாக மயங்கிக்கிடந்தார் வேணி. வள்ளியுமே வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தால் இது அவளது கவனத்திற்கு கூட செல்லவில்லை.
————————————————————