நட்சத்திர விழிகள் – 26
உதயாவின் முகத்தை பார்த்த விஷ்ணு ஏதோ சரியில்லை என நினைத்து அருகில் வந்து, “டேய் பிரபா…” என அவனை உலுக்கினான். அப்போதுதான் உள்ளே நுழைந்தார் சுதர்சனம்.
விஷ்ணுவின் தொடுகையில் உணர்வுபெற்ற உதயா, “ஐயோ விஷ்ணு நந்தினிக்கு பிரசாத்தால் ஏதோ ஆபத்து. நான் அவளை காப்பாத்தனும். வீட்டுக்கு போகனும்…” என பிதற்றலோடு வாசலை நோக்கி ஓட,
“என்னடா சொல்ற? நந்தினிக்கு என்ன? புரியிறது போல பேசு. யார் போன் பண்ணினா? என்ன சொன்னாங்க?…” என உதயாவை பிடித்து நிறுத்தி கேட்கவும் பிரசாத் போனில் சொன்ன விஷயத்தை தடுமாற்றத்தோடு கூறி முடித்தான்.
விஷ்ணுவின் அதட்டல் குரலில் அனைவரும் என்னவென வந்து பார்க்க அந்நேரம் உதயா அவனிடம் கூறியதை கேட்டு அதிர்ந்து போயினர்.
அதற்குமேல் ஒருநிமிடம் கூட தாமதிக்காமல் வெளியில் ஓடியவன் தன் காரை எடுக்க நினைத்தால் கைகள் எல்லாம் அவனுக்கு ஒத்துழைக்காமல் நடுங்கியது.
ஓவென அவன் கத்த அவனை தொடர்ந்து வந்த விஷ்ணு அவனது நிலையறிந்து துடித்தவன் மறுபுறம் உதயாவை தள்ளிவிட்டு வேகமாக காரை கிளப்பினான். அவர்களோடு சுதர்சனமும் சேர்ந்துகொண்டார்.
அவன் பின்னாலேயே உதயாவின் பெற்றோரும், கெளரி, நாச்சியும் விஷ்ணுவின் பெற்றோரும் என அனைவரும் கிளம்பினார்கள்.
காரில், “ஐயோ பெருமாளே என் பேத்திக்கு ஒண்ணும் ஆகக்கூடாது. அவளை எப்படியாவது காப்பாத்தி எங்கக்கிட்ட குடுத்துருப்பா…” என இறைவனிடம் வேண்டியபடி நாச்சி பதறி தவிக்க அவரை தாங்கிக்கொண்ட பாக்கியம் என்ன செய்வதென புரியாமல் கண்ணீர் வடித்தார்.
விஷ்ணுவின் கைகளில் சீறிப்பாய்ந்த கார் உதயா வீட்டினுள் நுழைய அதற்கு சில நொடிகளுக்கு முன் பிரசாத்தின் காரும் நுழைந்தது. அவனை பார்த்த உதயா கார் நிற்கும் முன்னாலே வேகமாக வெளியில் குதித்தவன் பிரசாத்தை நோக்கி வெறிபிடித்தவன் போல ஓடினான்.
காரிலிருந்து இறங்கிய பிரசாத் வீட்டிற்குள் செல்ல அவனை பிடித்து பின்னால் தள்ளி தடுத்த உதயா, “ஏண்டா எங்க உயிரை வாங்குற? நந்தினியை விட்டுடு. ஒழுங்கா வீடு போய் சேரு பிரசாத்…” என உறும பிரசாத்தின் காரின் மறுபுறத்திலிருந்து தனம் இறங்கினார்.
அவரை பார்த்த உதயா, “சித்தி நீங்க…” என அதிர்ச்சியில் உறைந்து நிற்க அதே நேரம் மூர்த்தி குடும்பமும் வந்து சேர்ந்தது. அவர்களும் திகைத்துத்தான் போயினர்.
பின்னே இத்தனை வருடங்களாக வராத தனம் இன்றைக்கு வந்திருக்கிறார் என்றால் என்னவாக இருக்கும் என்று குழம்பினார்கள். பிரசாத் அவர்களை எல்லாம் சட்டை செய்யாமல் மீண்டும் வீட்டிற்குள் செல்ல உதயா தடுக்க வர,
“பிரபா, என்னை மிருகமாக்காத…” என விஷ்ணுவின் புறம் உதயாவை தள்ளியவன் வேக எட்டுக்களோடு உள்ளே நுழைந்தேவிட்டான்.
அவன் பின்னால் அனைவரும் உள்ளே வர பிரசாத், “வள்ளி, வள்ளி!!!…” என கூக்குரலிட அவனது செய்கைகள் புரியாமல் மற்றவர்கள் பார்த்தனர். உதயா நந்தினியை தேடி தன் அறைநோக்கி செல்ல அடியெடுத்து வைக்கவும் அவனை பிரசாத்தின் குரல் தடுத்தது.
“பிரபா, உன் பொண்டாட்டி உன்னோட ரூம்ல இல்லை. வா இங்க…” என்று அதிகாரமாக அழைக்க, “டேய் என் நந்தினியை என்னடா பண்ண?…” என்று அவன் மீது பாய்ந்து சட்டையை பிடித்து உலுக்கினான் உதயா.
அவன் கைகளை விலக்கிய பிரசாத், “கொஞ்சம் பொறுடா…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே பின் வாசலில் இருந்து கையில் தடிமனான கம்பியோடு வேகமாக ஓடிவந்த வள்ளி,
“பிரசாத் தம்பி அந்த ரூம்ல இருக்காங்க. கதவை உடைக்கத்தான் இதை எடுத்துட்டு வந்தேன்…” என்று பக்கவாட்டில் இருந்த அறையை காண்பிக்க ரௌத்திரமாக அந்த அறையின் வெளியே போட்டிருந்த தாழ்ப்பாளை நீக்க அது உட்புறமாகவும் பூட்டியிருந்தது. வேகமாக கதவை தட்டினான் பிரசாத்.
“வேணி அத்தை, இப்போ நீங்க கதவை திறக்க போறீங்களா இல்லையா?…” என்று அந்த வீடே அதிரும்படி குரல் கொடுக்க அனைவருக்குமே தலைசுற்றியது. வேணி எப்போ, எப்படி இங்கே வந்தார்? என்று யாருக்குமே தெரியவில்லை.
பிரசாத் கதவை உடைக்கும் நிலைக்கு செல்ல அவனது உக்கிரத்தை பார்த்து திகைத்த உதயா, விஷ்ணு பிரசாத்தை பிடித்து இழுக்க அது முடியாமல் போனது.
“இப்போ வெளில நீங்க வரலைனா நான் கதவை உடைச்சிட்டு உள்ளே வருவேன்…” என கர்ஜிக்கவும் அதற்கு மேல் தப்பிக்க வழியின்றி மெல்ல கதவை திறந்தார் வேணி.
நொடியில் அவரை பிடித்து வெளியே இழுத்த பிரசாத் சுவற்றோடு சாய்த்து கழுத்தை நெறித்தான். “சாவி எங்க? சொல்லுங்க…” என தன் கைகளுக்குள் சிக்கிய வேணியின் குரல்வளைவில் அழுத்தம் கொடுத்தவாறு கேட்கவும்,
அவனது செய்கையில் கோபம் கொப்பளிக்க, “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு பிரசாத்?. விடு அவங்களை…” என அவனிடமிருந்து வேணியை காக்க முயன்றான் உதயா.
அனைவரும் பிரசாத்தின் ருத்ரதாண்டவத்தில் செய்வதறியாது விக்கித்துப்போய் நின்றிருந்தனர். பிரசாத் கோவம் கொள்பவன் தான் ஆனால் இது போல அக்னி பிழம்பாக நிற்பவன் அல்ல. அவனை நெருங்கவே அனைவரும் அஞ்சினார்கள்.
“பிரபா நீ தள்ளி போடா, நந்தினி உயிருக்கு போராடிட்டு இருப்பா. இவங்க சாவியை குடுத்தாதான் காப்பாத்த முடியும். யாராச்சும் இவங்களை காப்பத்த என் பக்கத்துல வந்தீங்க ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு இவங்க கழுத்தை திருகி போட்டுடுவேன்…” என பிரசாத் சொன்ன நிமிடம் அனைவருமே உறைந்துவிட்டனர்.
“தான் கேட்டது உண்மையா? வேணி அத்தையா என் நந்தினியை கொல்லத்துணிந்தது?…” என பிரம்மை பிடித்தவன் உதயா போல நிற்க அந்த நேரத்தில் வேணி வலி பொறுக்கமாட்டாமல் எங்கே நிஜமாக கொன்றுவிடுவானோ என அஞ்சி, “பிரசாத்…. பிரசாத்… என்னை… விடு… தரேன்…” என திணறி திணறி சொல்லவும் தான் அவரை விட்டான்.
அறைக்குள் சென்றவர் பின்னாலேயே வள்ளியும் சென்று சாவியை வாங்கிக்கொண்டு வர அதை அவசரமாக வாங்கிய பிரசாத் உதயாவை இழுத்துக்கொண்டு அரங்கு அறை நோக்கி செல்லவுமே என்ன நடந்திருக்கும் என அனைவருக்கும் புரிந்துவிட்டது.
உதயாவின் கால்கள் அறையை நோக்கி முன்னேற மறுத்தது. அவனது மொத்த நிம்மதியும் சந்தோஷமும் தொலைந்துவிட்டதோ என எண்ணி கலங்கினான்.
அவனின் நிலையறிந்த பிரசாத், “வா பிரபா, எனக்கு இதை திறக்க தெரியாது. நீதான் உன் மனைவியை காப்பாத்தனும். நீ தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நந்தினி நம்மை விட்டு போய்ட்டே இருப்பா…” என கூறியதும் இத்தனை நாள் இந்த அறைப்பக்கமே வரக்கூடாது என்று எடுத்த முடிவை தன்னவளுக்காக மாற்றிக்கொண்டு அறைக்கதவை திறந்தான்.
அங்கே அறையின் ஓரத்தில் கௌரியின் படத்தின் முன்பு விளக்கு ஏற்றப்பட்டிருக்க அதன் கீழே நந்தினி மயங்கிய நிலையில் கிடந்தாள்.
புழுக்கத்திலும் பயத்திலும் வேர்வையில் முழுவதுமாக நனைந்து கிடந்த அவளை வேகமாக நெருங்கி அள்ளி தன்மீது போட்டுகொண்ட உதயா ஒரு நொடி கௌரியின் படத்தை விழிகளில் நிறைந்த கண்ணீரோடு பார்த்தவன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
ஹாலில் இருந்த சோபாவில் கிடத்தியவன் நந்தினியை எழுப்பினான். அனைவரும் வேகமாக அவர்களை சூழ்ந்துகொள்ள வேணி மெல்ல அங்கிருந்து வெளியேற முயன்றார். அதை கண்ட வள்ளி அவரது கையை பின்பக்கமாக பிடித்து முறுக்கி நகராமல் தன் அருகில் நிறுத்திகொண்டு நடப்பதை துக்கத்தோடு வேடிக்கை பார்த்தாள்.
எத்தனை எழுப்பியும் மூர்ச்சையாகி இருந்தவளை பார்த்த மூர்த்தி, “அய்யோ நந்தினி கண்ணு திறக்காம இருக்காளே? பிரபா நீ முதல்ல ஹாஸ்பிடல்க்கு போய் நந்தினிக்கு என்னன்னு பாரு. இதுக்கு காரணமானவங்களை நான் இங்க கவனிச்சுக்கறேன்…” என பரிதவிப்பும் பதட்டமுமாக உதயாவிடம் கூறினார்.
“ஆமா பிரபா, நீ கிளம்பு முதல்ல, இவளுக்கு ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லு. அங்க போய்ட்டு போன் பண்ணு. நாங்க எல்லோருமே பின்னால வரோம். இவங்களை நான் பார்த்துக்கறேன்…” என கூறிய பிரசாத் வேணியை பார்த்த பார்வையில் அவருக்கு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.
“இவன் எப்போ நல்லவனா மாறினான்?…” என்ற குழப்பமும் அவரை ஆட்டிப்படைத்தது.
டாக்டர் பெருமாளுக்கு போன் செய்த விஷ்ணு விஷயத்தை கூறி விட்டு நந்தினி, உதயாவோடு தன் பெற்றோரையும் துணைக்கு அனுப்பிவைத்தான். விஷயம் பெரிதென்று தெரிந்துதான் தன் பெற்றோர் இங்கே இருப்பது சரிவராது என எண்ணி அனுப்பிவிட்டான்.
அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வர வேணி பயத்தில் நடுங்கி கொண்டிருந்தார். அவர் மீது அளவில்லாத கோவமிருந்தாலும் இப்போ அனைவருக்கும் தெரியவேண்டியது பிரசாத்தின் செயல்களுக்கான விளக்கங்கள். பிரசாத்தை கேள்வியாக பார்க்க அவனும் சொல்ல தொடங்கினான்.
மூர்த்தியை பார்த்தவன், “எல்லோருக்கும் குழப்பமா இருக்கும். எனக்கு இங்க நடந்த விஷயம் எப்படி தெரிந்ததுன்னு. எல்லாத்தையும் சொல்றேன். பிரபா நந்தினி கல்யாணம் முடிஞ்சு இங்கே வந்த சில நாட்களில் வேணி அத்தை எனக்கு போன் பண்ணிருந்தாங்க. உங்க மேலையும், பிரபா மேலையும் எனக்கிருந்த கோபத்தை கருவியாக்கிக்க பார்த்தாங்க. அவங்களுக்கு நந்தினியை பிடிக்கலை…”
“அவளை பழிவாங்கனும்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல அதிர்ச்சியா தான் இருந்தது. அவங்களோட திட்டம் என்னனு தெரிஞ்சுக்க நானும் அவங்களுக்கு துணை போறது போல வேணி அத்தையை நம்ப வச்சேன். அதுக்காக நான் அனுப்பின ஆள் தான் வள்ளி…” எனவும் அனைவருமே திகைத்து வள்ளியை பார்த்தார்கள்.
“வேணி அத்தைக்கு தெரியாத ஒண்ணு வள்ளியை அவங்களுக்கு சாதகமா நடத்திக்கத்தான் நான் அனுப்பினதா நினச்சாங்க. ஆனா நந்தினியை வேணி அத்தைக்கிட்ட இருந்து காப்பாத்தத்தான் நான் வள்ளியை அனுப்பிருக்கேன்னு தெரியாம போச்சு. இப்போ மட்டுமில்லை இதுக்கு முன்னாலையும் நிறைய தடவை முயற்சி பண்ணிருக்காங்க…” என வேணியை பார்த்துக்கொண்டே கூறியவன்,
“இங்க மீன்தொட்டி உடைஞ்சு நந்தினி கைல அடிபட்டதே அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உங்க யாருக்காவது தெரியுமா? அதையும் அவங்க வாயாலையே என்கிட்டே சொன்னாங்க…” என்றவன் தன் மொபைலில் இருந்த வாய்ஸ் ரெக்காடரை ஓடவிட்டான். அதில் வேணியின் இறுமாப்பான குரலில் அவர் செய்த சதிவேலையை அம்பலமானது. சுதர்சனத்திற்கு இப்போதே அவரை கொன்றுவிடும் வேகம் எழுந்தது.