“என்ன மேடம், கல்யாணத்திற்கு கிளம்பறதா ஐடியா இல்லையா?, இப்படி இங்கயே மயங்கிப்போய் இருக்க?…” என்று அவளை சீண்ட அதில் சுதாரித்தவள்,
“ஆமாமா நீங்க அப்படியே என்னை மயக்கி, அதில் நான் மயங்கி ம்ஹூம். நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…” என கூறிக்கொண்டே தனக்கு தேவையானதை சரிபார்த்தாள்.
“என்னது? என்ன சொல்ற நீ? எனக்கு மயக்க தெரியாதுன்னா சொல்ற?…”
“ஹ்ம், சரியான ட்யூப்லைட் நீங்க மாமா. இவ்வளோ லேட்டா புரியுது…” என்றவளின் மாமா என்ற வார்த்தையில் தானே அவளிடத்தில் மயங்கி நின்றான்.
“மாமாவா?…” என விழிகள் குறும்பில் மின்ன நந்தினியை நெருங்க,
“ஆமா மாமா. உங்களைத்தான் என்னை மயக்க தெரியலைன்னு சொன்னேன்…” என்று மீண்டும் வம்பிழுக்க,
“யாரு நானா? அப்டியே நான் மயக்கி நீ மயங்கிட்டாலும்? இரண்டு மாசமா என்னை தள்ளிவச்சுட்டு குறை வேற சொல்ற?…” என்று சலிப்பாக கூற அவனை பார்த்து சிரித்தவள் பேசிக்கொண்டே மெல்ல மெல்ல அறையின் வாசலுக்கு அவனை கொண்டுவந்து நிறுத்தி,
“உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க. நான் மயங்க தயாரா தான் இருக்கேன், என்னை புரிஞ்சுக்க உங்களுக்கு சாமர்த்தியம் பத்தலை மாமா…” என்றவள் அவன் சுதாரிக்கும் முன்னே அவனை வெளியே தள்ளி கதவை அடைத்துகொண்டாள்.
“ராட்சசி. படுத்தறாளே?…” என புலம்பியவன் அவள் மீதான நேசம் நிறைந்த நெஞ்சத்தை நீவிவிட்டவன் கதவை ஒரு முறை ஓங்கி ஒரு குத்துவிட்டு, “சிக்காம எங்க போய்டுவ, நைட் பேசிக்கறேன்…” என கூறி சிரித்தபடி கீழே இறங்கிச்சென்றான்.
நந்தினியும் கிளம்பி வரவும் அனைவருமே சேர்ந்து மண்டபத்தை அடைந்தனர்.
இரவு நடந்த சம்பவத்தை சிலர் கிசுகிசுத்துகொன்டாலும் யாரும் எதுவும் களவுபோனதாக தெரிவிக்கவில்லை என்று அத்தோடு அதை முடித்துகொண்டனர்.
சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கப்பட்டு அனைத்துமே செவ்வனே நடந்துகொண்டிருக்க நந்தினியோ வேண்டுமென்றே ஒவ்வொரு முறையும் உதயாவை நெருங்கி மாமா மாமா என்று அழைத்து அவனையே சுற்றி சுற்றி வந்து அவனை கிறங்க வைத்தாள்.
அவளின் இந்த செய்கையால் உதயாவின் பார்வை முழுவதும் நந்தினியை சுற்றிக்கொண்டே இருந்தது. திருமண மண்டபத்தில் மகளும் மருமகனும் அனைவரின் கண்படும் அளவிற்கு ஜோடிப்பொருத்தத்தில் அன்றைய மணமக்களை மிஞ்ச அதை சிலர் வாய்விட்டு புகழ்ந்தும் விட அதை பார்த்து பார்த்து ஏழுமலையும் அவரது குடும்பத்தினரும் பூரிப்பில் திக்குமுக்காடினார்கள்.
மணமேடையில் கௌரிக்கு அண்ணனாக விஷ்ணுவிற்கு செய்யவேண்டிய அனைத்து சடங்கையும் உதயாவே செய்தான். அதேபோல விஷ்ணுவின் தங்கையாக இருந்து கெளரியின் கழுத்தில் மங்களநாணை விஷ்ணு அணிவிக்க அதற்கு நாத்தனார் முடிச்சிட்டு தன் உரிமையையும் விட்டுகொடுக்காமல் நடந்தாள் நந்தினி.
அதன்பின் நடந்ததுதான் விஷ்ணுவின் பொறுமையை மிகவும் சோதித்தது. மந்திரங்கள் ஓதி அதன் பின் சில சடங்குகள் நடைபெற போட்டோகிராபர் கவனத்தை தன் பக்கம் பக்கம் வேண்டுமென்றே திருப்பிய உதயா மேடையிலேயே நந்தினியோடு விதவிதமாக போஸ் கொடுக்க கேமராவால் அதை உள்வாங்கிக்கொண்டார் அவர்.
அதை பார்த்து விஷ்ணுவின் காதில் புகை வராத குறைதான். போட்டோகிராபரை அழைத்த விஷ்ணு, “இங்க நான் மாப்பிள்ளையா இல்லை அவன் மாப்பிள்ளையா?…” என சிலிர்த்துக்கொள்ள,
“சார் அவங்களை பார்த்தாதான் அப்படி தெரியுது. அவங்க கூப்பிட்டு எடுக்க சொன்னாங்க, நான் என்ன செய்ய?…” என்றவரை முறைத்துக்கொண்டு உதயாவின் புறம் திரும்பியவன்,
“மச்சான். உன் காலை காமியேன். இன்னைக்காவது எனக்கு கொஞ்சம் சான்ஸ் குடுடா…” என கேட்ட நிமிடம்,
“அப்கோர்ஸ்டா மாப்ள. நீ கேட்டு இல்லைன்னு சொல்லுவேனா?, இந்தா. தாமதிக்காம என் கால்ல விழுந்திடு…” என லேசாக காலை நீட்ட விழி பிதுங்கியது விஷ்ணுவிற்கு.
“உங்களுக்கு இது தேவையா?…” என கெளரி முணுமுணுக்க, “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் சவுரி…” என்று விஷ்ணுவும் தன் கெத்தை விடாமல் சமாளித்தான்.
“ஏன் மாமா இந்த அலும்பு? இன்னைக்காவது விஷ்ணு அண்ணாவுக்கு லீவ் குடுங்க…” என கேட்டவளிடம்,
“கண்டிப்பாடா, ஆனா ஒண்ணு, நீ ஏன் நேத்துல இருந்து என்னை மாமா மாமான்னு கூப்பிடற? அதை சொல்லிட்டேன்?…” என ஆசையாக, ஆர்வமாக கேட்க,
“அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை மாமா. மரமண்டைன்னு உங்களை நீட்டிமுழக்கி கூப்பிட கஷ்டமா இருந்துச்சு. அதான் ஷாட்டா கூப்பிடனும்னு நினச்சு அந்த லெட்டர்ஸ்ல ரெண்டே லெட்டர் நானே கண்டுபிடிச்சேன். அதான் மாமா. எப்டி?…” என்ற பதிலில் உதயாவின் முகம் விளக்கெண்ணெய் குடித்ததுபோல ஆகிவிட்டது.
“உன்னை…” என்று அவள் காதை பிடித்து திருக, அதை பார்த்து குடும்பத்தில் அனைவரும் சிரிக்க என அந்த அழகான தருணம் எப்போதும் அழியாமல் இருக்க தனக்குள் பத்திரப்படுத்திக்கொண்டது கேமரா.
வேணிக்குத்தான் உதயா, நந்தினியின் சந்தோஷத்தை பார்த்து பொறுக்க முடியவில்லை. எனினும் தன் மகளது திருமணம் சிறப்பாக நடந்ததில் உண்டான திருப்தியில் அப்போதைக்கு அமைதியாக இருந்துவிட்டார்.
கல்யாண கலாட்டாக்கள் அனைத்தும் ஓய்ந்து மண்டபத்தை காலிசெய்துவிட்டு அனைவரும் வீடு வந்து சேர மாலை நெருங்கிவிட்டது. நந்தினி குடும்பத்தார் மண்டபத்திலிருந்தே அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர்.
சாந்திமுகூர்த்ததிற்க்கான அனைத்து ஏற்பாடுமே விஷ்ணுவின் வீட்டிலேயே நடைபெறுவதால் அங்கேயே இருந்து கௌரியை தயார்செய்து அனுப்பிவிட்டே வீடு வந்து சேர்ந்தனர் நந்தினியும் உதயாவும்.
சுதர்சனம், மூர்த்தி ஹாலில் உதயாவின் வரவிற்காக காத்திருந்தார். அவரை பார்த்ததும் நந்தினியை மேலே அனுப்பிவிட்டு அவரோடு பேசிக்கொண்டிருந்தவன் வெகுநேரம் கழித்தே அறைக்குள் வந்தான். அவன் வரும் போது அசதியில் நந்தினி நன்றாக உறங்கியிருந்தாள். அவளது தூக்கத்தை கலைக்காமல் தானும் அவளின் அருகே படுத்து உறங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலையில் மறுவீட்டிற்கான பலகாரங்களும் சீர்வரிசை பொருட்களும் தயாராக இருக்க அனைவரும் கிளம்பி கீழே வந்துவிட்டனர். நாச்சி, மூர்த்தியும், பாக்கியமும் கிளம்பி வந்ததும் உதயா மட்டும் அமர்ந்திருந்ததை பார்த்து, “என்னப்பா பிரபா நந்தினி எங்க?…” என வினவ,
“அவளுக்கு கொஞ்சம் முடியலைம்மா, ஒரே அலைச்சலும் அசதியும் எழுந்துக்கவே முடியலை. அதான் தூங்கசொல்லிட்டேன். நாம போகலாம் இன்னும் கொஞ்சம் அவ நல்லா தூங்கி எழுந்திரிக்கட்டும். மத்யான விருந்துக்கு நானே அவளை கூட்டிட்டு வந்திடறேன். அதுக்குள்ளே சரியாகிடுவா…” என தயக்கமாக கூற,
“இதுல சங்கடப்பட என்னைய்யா ராசா இருக்கு?, பாவம் அவ எவ்வளோ வேலையை ஒருத்தியா இழுத்துப்போட்டு செஞ்சா, சரி சரி வெரசா போகலாம். எல்லோரும் காத்துக்கிட்டு இருப்பாங்க. இந்த வேணி எங்க போனா?…” என கூறிய நாச்சி வள்ளியை அழைத்து நந்தினியை பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு வாசலுக்கு அனைவரோடும் விரைந்தார்.
வாசலில் வேணி மட்டும் காரின் அருகில் நிற்க அதை பார்த்த மூர்த்தி, “எங்க உன் மாமாவை காணும்?… என சுதர்சனத்தை கேட்க,
“அவங்க தோப்புக்கு போயிருக்காங்கப்பா, நேரா விஷ்ணு வீட்டுக்கு வந்திடுவாங்க. நாம கிளம்பலாம்…” என்று கூறியவன் காரை கிளப்பி விஷ்ணுவின் வீடு நோக்கி சென்றான்.
புதுப்பெண்ணுக்கே உரிய பொலிவோடு வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த கெளரி கார் வரும் சத்தத்தில் வேகமாக ஓடினாள்.
அனைவரும் காரை விட்டு இறங்கவுமே பாக்கியத்தை, “பாக்கிம்மா…” என்று கட்டிக்கொண்டாள் கெளரி. “பெத்தவ நான் இங்க இருக்கேன், என்னை விட்டுட்டு இந்த கழுதை அவங்களை கட்டிக்கிட்டு நிக்குது பாரு…” என பொருமியபடி நிற்க அவரது ஆத்திரத்திற்கு தூபம் போடும் விதமாக,
“அண்ணி எங்க காணும்? கூட்டிட்டு வரலையா?…” என கேட்டுவைக்கவும் வேணிக்கு கோபம் இன்னும் கொப்பளித்தது. ஆனாலும் அடக்கிவாசித்தார்.
பெண்கள் அனைவரும் உள்ளே செல்ல ஆண்கள் சீர்வரிசைகளை இறக்கி எங்கே வைக்கவேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதில் உதயா தன் கவனத்தை சிதறவிட்டான்.
ஒன்றரை மணிநேரம் கடந்திருக்கும் போது உதயாவின் போன் சிணுங்கியது. டிஸ்ப்ளேயில் மின்னிய பெயரை பார்த்ததுமே உதயா துணுக்குற்றான். “இப்போ எதுக்காக பிரசாத் கூப்பிடறான்?…” என யோசனையோடு போனை காதுக்கு கொடுக்க,
“டேய், பிரபா இன்னும் பத்துநிமிஷத்தில நீ உன் வீட்ல இருக்கனும். நான் உன் வீட்டுக்குத்தான் போய்ட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி உயிரோட வேணும்னா ஒழுங்கா சீக்கிரமா வந்துசேரு…” என உறுமிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டான்.
“நந்தினி உயிருக்கு ஆபத்தா?…” என உணர்வற்று நின்றான் உதயா.