“ஐயோ இவ அண்ணன் கண்ணுல படாம உள்ள போகனுமே? பார்த்தா டின்னு கட்டிடுவானே?…” என பத பதைத்துக்கொண்டே பின்பக்க தோட்டம் வழியாக உள்ளே சென்றுவிட்டான். அவனுக்கு தெரியாத வழியா உதயாவின் வீட்டில்.
மெல்ல உள்ளே நுழைந்தவன் ஸ்டோர் ரூமில் நுழைந்து கீழே மூட்டையை இறக்கி வைத்துவிட்டு கையை உதறிக்கொண்டவன், “யம்மா, என்னா வெய்ட்டு?…” என நினைத்துக்கொண்டே மூட்டையை அவிழ்க்க மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் மயங்கிய நிலையிலேயே இருந்த கௌரியின் அழகு அவனை மயக்கியது.
“சும்மா சொல்லக்கூடாதுடா விஷ்ணு. உன் சவுரி கூட கொஞ்சம் அழகாதான் இருக்கா. ஆனா வாய் கொஞ்சம் நீளம்…” என்று அவளின் கன்னத்தில் மெல்ல கௌரிக்கு இடித்தவன்,
“ஏய், யார்க்கிட்ட, உன்னை சொன்னது போலவே தூக்கிட்டேன்ல. இப்போ என்னா செய்யுவ? இப்போ என்னா செய்யுவ?…” என ராகம் போட்டு மெல்லிய குரலில் பாட அந்த அறையின் விளக்குகள் போடப்பட்டதும் திரும்பி பார்க்காமலேயே, “நான் இல்லை, நான் இல்லை…” என்று அலறிவிட்டான்.
வேகமாக அவனது வாயை அடைத்த உதயாவின் கரங்களை விலக்கிய விஷ்ணு, முதலில், “மச்சான்…” என அழைத்துவிட்டு பின் நாக்கை கடித்தவன் குரலை லேசாக கனைத்துக்கொண்டு, “ஏய் என்னை யாருன்னு நினச்ச?…” என்று மிரட்டும் தொனியில் மீசையை தடவிக்கொண்டே கேட்டான்.
அவனை கூர்ந்து ஒரு நிமிடம் பார்த்த உதயா பளாரென்று கன்னத்தில் அறையவும் தலை கிறுகிறுத்துப்போய் ஒரு சுத்து சுத்தி அவன் மேலேயே மோதி நின்றான்.
ரௌத்திரமாக நின்ற உதயாவை பார்த்து சர்வமும் நடுங்கியது விஷ்ணுவிற்கு. ஒரு கையால் கன்னத்தை பிடித்துகொண்டு நின்றவனுக்கு மூக்கின் மேல் ஒட்டியிருந்த நீளமான பெரிய மீசை பிய்ந்து தொங்கியதை பார்த்து உதயாவின் பின்னால் நின்றுகொண்டிருந்த நந்தினிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
ஆனாலும் அவளுக்கு கோவம். விடிந்தால் நாளைக்கு இந்த வீட்டு மாப்பிள்ளையாக வரப்போகிறவனை இப்படி அடிப்பது சரியில்லை என்பது அவளது எண்ணம்.
“என்ன இப்படி போட்டு அடிக்கறீங்க? அவங்க நாளைக்கு நம்ம வீட்டு மாப்பிள்ளை, மறந்திடாதீங்க?…” என கோவமாக பேசியவளை பார்த்தவன்,
“நாளைக்கு மணமேடை ஏறப்போகிறவன் செய்யற காரியமா? யாராவது பார்த்தா என்ன ஆகிருக்கும்?. தண்ணி குடிக்கலாம்னு எழுந்து கிட்சன் போக வெளில வந்தா ஒரே கூச்சல் யாரோ மூட்டையை தூக்கிட்டு ஓடுறாங்கன்னு. என்னனு பார்ப்போம்னு கீழே இறங்கி வந்தா இவன் இப்படி ஸ்டோர் ரூம்க்குள்ள போறதை பார்த்தேன்…”
“என்னது? என்னை பார்த்தியா? நான் தான் என் கெட்டப்பை சேஞ்ச் பண்ணிருக்கேனே? அப்டியும் எப்படி என்னை அடையாளம் தெரிஞ்சது?…” என்ற தன் அதி முக்கியமான சந்தேகத்தை கேட்டுவைத்து மீண்டும் தனக்கு பாதுகாப்பாக கன்னத்தில் கைகளை வைத்துக்கொண்டான்.
“நீயும் உன் கன்றாவி கெட்டப் சேஞ்சும். சிலுக்கு ஜிப்பாவும், உன் மீசைக்குமேல இன்னொரு பெரிய மீசையும் ஒட்டி இருந்தா கண்டுபிடிக்க முடியாதா? கையில நான் கிப்ட் பண்ணின வாட்சை மறந்துட்டியே? அதை விடு. அதென்னடா மீசைக்கு மேல கன்னத்துல கருப்பா?…” என உதயா கேட்க,
“அதுவா மச்சான். அம்மாவோட ஸ்டிக்கர் பொட்டு. மரு இருக்கறதுக்கு பதிலா பொட்டு வச்சேன். கொஞ்சம் பெரிய சைஸ்தான். அடையாளம் தெரியாம இருக்கனுமே?…” என்று பரிதாபமாக கேட்டவனை மீண்டும் அடிக்க கையை ஓங்கிக்கொண்டு நெருங்க,
“வேணாம் மச்சான், நீ ஏற்கனவே அடிச்ச அடியில இந்த பச்சப்பிள்ளையோட பிஞ்சு நெஞ்சு பாதிக்கு மேல பஞ்சு பஞ்சா பறந்து போய்டுச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்ச ஹார்ட்டையும் நீ அடிச்சு துரத்திட்டா அங்க குடியிருக்கிற உன் தங்கச்சியை நான் வேற எங்கன்னு குடிவைப்பேன்?…” என்று அப்பாவியாக கேட்கவும் உதயாவால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
விஷ்ணுவை நெருங்கி கட்டிக்கொண்டவன், “ஏண்டா உனக்கு இந்த கோமாளி வேஷம் எல்லாம்?…” என கேட்க,
“ஆமா உன் தங்கச்சியை போல ஒரு டெரர் பொண்ணை கல்யாணம் கட்டிக்கனும்னா இப்படித்தான் செய்யணும். மனுஷனை கேலி செய்தே கொலைவெறியாக்குறா. லவ் பண்ண சொன்னதுக்கு மாட்டேன்னா. சும்மா பந்தாவுக்காக தூக்கிட்டு போய்டுவேன்னு மிரட்டினேன். அதையே சொல்லி சொல்லிக்காட்டி என்னை காலி பன்றா. அதான் பொறுக்கமாட்டாம தூக்கிட்டேன்…” என்றவன்,
“கொஞ்சம் பொறு…” என்று உதயாவை விடுத்து கௌரியின் அருகில் வந்து வேகமாக பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தவன் தன்னையும் கௌரியையும் சேர்த்து செல்பி எடுத்தான். அவனின் அட்டகாசம் பொறுக்காமல்,
“ஏண்டா இந்த அநியாயம் செய்யற? அவ மட்டும் முழிச்சா செத்த நீ…”
“அதுக்குதாண்டா மச்சான் இப்போவே செல்பி. நான் தூக்கிட்டு வந்தேன்னு உன் தங்கச்சி நம்பித்தொலைய மாட்டாளே?. நாளைப்பின்ன என் பிள்ளைகள்க்கிட்ட இதை ஆதாரமா காட்டி இந்த வீரதீர சாகசத்தை சொன்னா எனக்கு பெருமைதானே?…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே நந்தினி தண்ணீர் எடுத்து வந்து கௌரியின் முகத்தில் தெளிக்கவும் கெளரி கண்விழித்தாள்.
அவள் முழித்து சுற்றிலும் கண்களை சுழட்ட விஷ்ணு உதயாவின் பின் ஒளிந்தான்.
“நீயேண்டா ஒளியிற? நீதான் கெட்டப் சேஞ்ச் பண்ணிருக்கியே?…” என்று நக்கலாக கூற அவனை நம்பி விஷ்ணுவும்,
“ஆமால…” என்று கேட்டுவிட்டு கௌரியின் முன்னால் தில்லாக வந்து நின்றான்.
மயக்கத்திலிருந்து விழித்தவள் விஷ்ணுவை பார்த்து, “யோவ், உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இன்னைக்கு என்னை தூக்கிட்டு வந்திருக்கீங்களே? எங்கம்மாக்கும் உங்க வீட்டுக்கும் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?…” என்று சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் வாட்டி எடுத்தாள் கெளரி.
“யோவ், ஆஆ? ஆஹா விஷ்ணு, இவ பிரபாவோட தங்கச்சின்றதை ஒரு நிமிஷம் மறந்துட்டியே. இப்படி இவங்க ஈஸியா கண்டுபிடிக்கிற மாதிரி ஒரு கெட்டப்பை போட்டுட்டியே? உன்னை சொல்லியும் குத்தமில்லை. உன் வெள்ளை மனசு அந்த மாதிரி. சிக்கவச்சிட்டு தங்கச்சி பேசறதை பார்த்து ரசிக்கிறானே. இவனெல்லாம் ஒரு ப்ரெண்ட். துரோகி…” என மனதினுள் நினைத்து கண்ணீர் வராமல் அழுதவன்,
“போதும் கெளரி. பாவம் அண்ணன். ஏற்கனவே உன் அண்ணா வேற அடிச்சிட்டாங்க…” என்று நந்தினி கடிந்துகொள்ள,
“தங்கச்சி தேங்க்ஸ். தங்கச்சி நான் இதை இப்ப இங்க சொல்லியே ஆகணும். அருவியூர்ல இருந்தே நான் உங்களோட பெரிய ஃபேன். ஆனா அந்த ஃபேனை சுதந்திரமா சுத்தவிடாம சுவிட்சை ஆப் பண்ணி ப்யூஸ் புடுங்கி வச்சுட்டான் உங்க வீட்டுக்காரன்…” என்று நந்தினிக்கு ஐஸ் மழை பொழிந்தான்.
“ஐயோ, இன்னைக்கு இது போதும் அண்ணா, விடுங்க…” என்று சிரித்தபடி விஷ்ணுவிடம் கூறியவள்,
“இங்க பாருங்க, இதுவே கடைசியா இருக்கட்டும். அண்ணாவை கைநீட்டி அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க. புரியுதா?…” என்று சுட்டுவிரலை நீட்டி உதயாவிடம் மிரட்டலாக நந்தினி கேட்ட தோரணையை பார்த்த கெளரி வாயை பிளந்தாள். இதுவரை சாந்தமாக இருக்கும் நந்தினியையே பார்த்து பழக்கப்பட்ட கௌரிக்கு அவளது இந்த பேச்சும் அழுத்தமான குரலும் புதியதாக இருந்தது.
தன் அண்ணாவை பார்த்தால் அவனோ அதை ரசனையோடு கேட்டுக்கொண்டு தலையாட்டினான்.
அவளது திகைப்பை பார்த்த விஷ்ணு அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, “சவுரிச்செல்லம், அவசரப்பட்டு ஒரு ஷாக் ரியாக்ஷனை வேஸ்ட் பண்ணாத. உன் அண்ணன் ப்ளாட் ஆனதே இந்த பேச்சில்தான். அவங்களை கண்டுக்காத. அதனால நோ ஷாக், வா போகலாம்…” என கௌரியை அழைக்க,
“எங்க போறீங்க? நீங்க உங்க வீட்டுக்கு கிளம்புங்க. கௌரியை நாங்க நாளைக்கு மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்திடுவோம். ம்ம் கிளம்புங்க…” என்று அதட்டலாக கூறியவுடன் விஷ்ணு ஓடியேவிட்டான்.
“நீங்க ரூம்ல போய் தூங்குங்க. லக்ஷ்மிம்மாக்கு போன் பண்ணி கெளரி இங்க இருக்கிற விஷயத்தை சொல்லிடுங்க. நான் கௌரிக்கு துணையா அவளோட ரூம்ல தூங்கிடறேன்…” என்று உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு கௌரியோடு அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.
ஒரு பெருமூச்சோடு தன் அறைக்கு சென்றவன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தான். நந்தினியின் நினைவுகள் அவனை இம்சித்துகொண்டிருந்தன. எப்போதடா விடியும் என்று காத்துக்கொண்டிருந்தான்.
அதிகாலை மூன்று மணிக்கே பாக்கியத்தை போனில் அழைத்து, கௌரிக்கு அங்கே தூக்கம் வரவில்லை என்று தன்னிடம் கூறியதாகவும், அதனால் இரவு தானே வந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டதாக கூறியவன் அவர்களை மற்றவர்களை கவனிக்கும் படி கூறி பாக்கியத்தை அமைதிப்படுத்திவிட்டு நந்தினியை எழுப்பச்சென்றான்.
அவன் அழைப்பதற்குள் அவர்கள் எழுந்து குளித்து கிளம்ப ஆரம்பித்திருந்தனர். நந்தினி வீட்டினரும் அனைவருமே தயாராகிவிட்டிருந்தனர். அவர்களை முன்னால் அனுப்பிவிட்டு கௌரிக்கான அலங்காரம் எல்லாமே செய்தவள் தானும் தன் அறைக்கு சென்று தயாராக சென்றாள்.
அங்கே அவளுக்கு தேவையான அனைத்தையும் கட்டிலில் பரப்பியிருந்தவன் அவளது வருகைக்காக காத்திருந்தவன் போல பட்டு வேஷ்டி, சட்டையில் அவனே மாப்பிள்ளை போல அமர்ந்திருந்தான்.
முதன்முதலாக அந்த உடையில் அவனை பார்த்ததுமே அசந்துபோய் நின்றாள் நந்தினி. அவளது திகைப்பை பார்த்தவன் சொடுக்குப்போட்டு அழைத்தான்.