ரவி, மகிமாவோடு அவளது பெற்றோர் வீட்டில் இருப்பதனால் அவனை பார்க்காமலேயே சென்றுவிட்டனர். கிளம்பும் போது தங்களால் முடிந்த அளவிற்கு நந்தினிக்கு நிறைவாகவே சீர்வரிசை செய்து அனுப்பி வைத்தனர். அதை பார்த்த வேணிக்கு முகத்தில் ஈயாடவில்லை. நாச்சிக்கு பெருமை பிடிபடவில்லை.
குறிஞ்சியூர் வந்ததிலிருந்து உதயா கல்யாண வேலைகளுக்கிடையில் நந்தினியையும் கவனமாக பார்த்துகொண்டான். மேலே படிக்க வைக்கிறேன் என்று சொன்னதற்கு ஒரேடியாக மறுத்தவளின் பிடிவாத குணம் அறிந்து வேறு வகையில் திசைதிருப்பினான்.
தங்களின் கார்மெண்ட்ஸில் வேலை பார்க்கும் டிஸைனர் லேகாவிடம் பழகவிட்டவன் அவளே ஆர்வம் வந்து வரையும் அளவிற்கு அவளை உருவாக்கவேண்டும் என்று லேகாவிடம் கேட்டுக்கொண்டான். லேகாவும் உதயாவின் திட்டத்திற்கிணங்க கொஞ்சம் கொஞ்சமாக நந்தினியின் மனநிலையை மாற்ற ஆரம்பித்தார்.
அந்த அவளது ஓவியத்திறன், எம்ப்ராயிடரிங் என அனைத்தையும் உதயாவின் தொழிலுக்கு பயன்படுத்தும் படி லேகா கூறவும் மறுக்கமுடியாமல் கொஞ்சம் நேர்த்தியாக தனக்கு தோன்றும் டிஸைன்களை வரைந்து கொடுக்க ஆரம்பித்தாள். அதில் பல டிஸைன்கள் தவிர்க்ககூடியதாகவும், சில டிஸைன்ஸ் ஏற்றுக்கொள்ள கூடியாதாகவும் இருந்தது.
ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதற்காக வரைந்து கொடுக்க ஆரம்பித்தவள் பின் தானே முழுமனதோடு விருப்பத்தோடு செயலில் இறங்கினாள். அவளுக்கே தெரியாமல் அவளை மெருகேற்றி கொண்டிருந்தான் அவள் கணவன்.
அவள் பாதையிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக அவனது தொழிலிலும் அவளை ஒரு அங்கமாக்க அவன் எடுத்த முயற்சிகளில் சிறு வெளிச்சம் பரவ தொடங்கியது.
அவனது ஒவ்வொரு செயலும், தன் மீதான அளப்பறியா காதலும் உதயா மீதிருந்த அவளின் மனக்கிலேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துகொண்டிருந்தது.
தன்னை மாற்றும் அவனது முயற்சிகள் புரியாமல் இல்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனின் கரம் பிடித்து அவன் கூட்டிசென்ற பாதையில் விருப்பத்தோடு தன் கால் தடங்களை பதித்தாள்.
கௌரியின் திருமணத்திற்கு இன்னும் ஒருவாரமே இருக்கயில் அன்று முகூர்த்தக்கால் ஊற்றிய பின் வீட்டில் செய்த ஸ்வீட்ஸ்களை வாங்கிக்கொண்டு கௌரியை பார்க்க வந்தான் விஷ்ணு. கெளரி வீட்டிலும் அன்றுதான் முகூர்த்தக்கால் ஊன்றியிருந்தனர்.
வயலிலிருந்து வீட்டிற்கு சாப்பாட்டிற்கென அரிசி மூட்டை கொண்டு வந்து இறக்கினார்கள். வாசலிலேயே விஷ்ணுவை பார்த்துவிட்ட கெளரியின் மூளை வேகவேகமாக சிந்தித்தது. மூட்டையை அங்கேயே வைக்க சொல்லிவிட்டு அவர்களை உடனடியாக அனுப்பிவிட்டவள் விஷ்ணு நெருங்கும் போது வேண்டுமென்றே கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.
அவள் எதிர்பார்த்தது போல, “என்னடா சவுரி செல்லம்? இப்படி மாமனுக்காக வாசல்லையே காத்திட்டு இருக்க? ஸ்வீட்ஸ் குடுத்திட்டு வர சொன்னாங்க அம்மா. நான் வருவேன்னு உனக்கு தெரியுமா?…” என ஆசையாக கேட்டவனை பார்த்து,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்களேன் ப்ளீஸ். இந்த அரிசி மூட்டையை தூக்கிட்டு வந்து கொஞ்சம் கிட்சன்ல இறக்கி வையுங்களேன்…” என அப்பாவியாக கேட்டாள்.
தன்னை வம்பிழுக்கிறாளோ என அவளை சந்தேகமாக பார்த்தவன் அவளின் முகத்தில் எந்தவிதமான கள்ளத்தனமும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கையில் இருந்ததை கௌரியிடம் கொடுத்துவிட்டு மூட்டையை தூக்கினான்.
அவனால் ஐந்து நிமிடத்திற்கு மேல் அதை தூக்கிகொண்டு வரமுடியவில்லை. இறக்கிவைத்துவிட்டு, “முடியலைடா…” என்று மூச்சிரைக்க பரிதாபமாக சொல்ல,
“உங்களால இந்த இருபத்தைந்து கிலோ அரிசி மூட்டையையே தூக்க முடியலை. இதுல என்னை தூக்கிட்டு போவீங்களாக்கும்? எதுக்கு உங்களுக்கு வீண் ஜம்பமும், வெட்டிப்பேச்சும். போங்க பாஸ் போய் ஒரு பஞ்சுமூட்டையாவது தூக்க முடியுதான்னு பாருங்க. என்னா பார்வை? இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. போங்க போங்க…” என நக்கலாக கூறி விஷ்ணுவை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தாள் கெளரி.
“ஏய் என்ன லந்தா?. தூக்கிக்காட்டறேன் பாரு உன்னை?…” என விஷ்ணு எகிற, “ஆமான்னா என்ன செய்வீங்க?. முடிஞ்சா பார்த்துக்கோங்க…” என்று கேட்டவள் பாக்கியத்தின் குரலில் உள்ளே சென்று மறைந்தாள்.
இது அவ்வப்போது நடப்பதுதான். விஷ்ணுவை எப்போது பார்த்தாலும் வாரிக்கொண்டே இருந்தாள் கெளரி. இன்றும் அதுபோலவே பேசி வம்பிழுக்கவும்,
“டேய் விஷ்ணு, விடாத கல்யாணத்துக்குள்ள அவளை தூக்கி உன்னால எதுவும் முடியும்ன்னு நிரூபிச்சிடு, இல்லைனா கல்யாணத்துக்கு பின்னால இதை சொல்லியே உன் தலையில மிளகாய் அரைச்சிடுவா…” மனதிற்குள் கௌரியை தூக்குவது என்று உறுதி எடுத்துக்கொண்டான்.
ஏழுமலை வீட்டினருக்கும், நேசமணி குடும்பத்தினருக்கும் கிருஷ்ணமூர்த்தி, பாக்கியம், சுதர்சனம் மூவரும் நேரில் சென்று சம்பந்தி முறைப்படி திருமணப்பத்திரிக்கை வைத்துவிட்டு வந்தனர். குடும்பத்தோடு முன்பே வந்துவிடுமாறு வலியுறுத்திவிட்டே வந்தனர்.
கல்யாணவீடு மூன்று நாளைக்கு முன்பே களைகட்டத்தொடங்கியது. சொந்தபந்தங்கள் அனைத்தும் ஒன்றுகூட அங்கே மகிழ்ச்சியும் ஆராவாரமும் பொங்கி ததும்பியது. நந்தினியின் குடும்பத்தினர் கூட திருமணத்திற்கு முதல்நாளே வந்துவிட்டனர்.
முதல்நாள் பெண் அழைப்பு வரை அனைத்துமே சரியாக போய்க்கொண்டிருந்தது. நந்தினிக்கு உதயாவோடு பேசக்கூட நேரமில்லாமல் அலைச்சல் வாட்டி வதைத்தது. அந்த வீட்டின் மருமகளாக அனைத்து பொறுப்புக்களும் நந்தினியிடம் ஒப்படைத்தனர்.
வேணிக்கு தன் மகள் திருமணம் இவ்வளவு சிறப்பாக நடக்கிறதே என்று சந்தோஷத்தில் பெருமை தாளாமல் வந்தவர்களிடம் கௌரியின் அழகை பற்றி சொல்லிச்சொல்லியே மாய்ந்து போனார்.
ஆனாலும் அவருக்கு தனக்கு ஒரு பொறுப்பையும் கொடுக்காமல் தன்னை பொம்மை போல டம்மி ஆக்கிவிட்டதாகவும் எண்ணம் வலுக்கவே செய்தது. அனைவரிடமும் நந்தினியை புகழ்வதும் அனைத்திற்கும் நந்தினியையே தேடுவதும் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அந்த குடும்பமே நந்தினியை சார்ந்து இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை நந்தினியும் உதயாவும் சேர்ந்து உருவாக்குவதாகவே அவர் எண்ணி, வேண்டுமென்றே தன்னை ஒதுக்கிவைப்பதாக நினைத்து ஆத்திரம் கொண்டு திருமணம் முடியட்டும் பின் பார்த்துக்கலாம் என நினைத்துகொண்டார்.
பெண்ணழைப்பு முடிந்து அனைவரும் இரவு விருந்து உண்டுமுடித்து மண்டபத்தில் உறங்கத்தொடங்கினர். நந்தினி வீட்டினரை மண்டபத்தில் தங்க வைப்பது மரியாதையாக இருக்காது என எண்ணிய நாச்சியும் அவர்களை வீட்டிலேயே தங்கச்செய்துவிட்டு கௌரிக்கு துணையாக பாக்கியத்தை இருக்க வைத்துவிட்டார்.
மற்றவர்களை கவனிக்க வீட்டு ஆளுங்க இருக்கவேண்டும் என்ற மூர்த்தியின் யோசனைப்படி வேணியும், சுதர்சனமும் கூட மண்டபத்திலேயே தாங்கிக்கொண்டனர்.
ஏழுமலை வீட்டினருக்கு சகல வசதிகளையும் செய்துகொடுத்துவிட்டு நந்தினியும், உதயாவும் அவர்களோடு வீட்டில் தங்க நாச்சியும் உடன் வந்துவிட்டார். அன்றைய அலுப்பிலும் அசதியிலும் போல அனைவரும் ஆழ்ந்து உறங்க, மண்டபத்தில் கெளரி மட்டும் தூக்கம் வராமல் தவித்துகொண்டிருந்தாள்.
விஷ்ணுவின் கோவமான முகமே மனதில் வந்து வந்து போனது. முகூர்த்தக்கால் ஊன்றிய அன்று வந்து வாங்கிக்கட்டிக்கொண்டு போனவன் அதன் பின் வீட்டிற்கே வரவில்லை. இன்று பார்த்தும் பாராமுகத்தோடு இருந்ததோடு இல்லாமல் சிலநேரங்களில் முறைத்துகொண்டும் நின்றான்.
புரண்டு புரண்டு படுத்தவள் பாக்கியத்தை திரும்பி பார்க்க அவரோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மெல்ல உறக்கத்திற்குள் செல்ல ஆரம்பித்தவளை கதவு தட்டும் ஓசை விழிக்கச்செய்தது.
இந்நேரம் யாராக இருக்கும் என்று யோசிக்காமல், நம் மண்டபத்திற்குள் குடும்பத்தினரை தவிர வேறு யார் வரப்போகிறார்கள் என்ற அலச்சியத்தில் கதவை திறந்தவளின் நொடியில் நாசியில் மயக்கமருந்து தெளிக்கப்பட்ட கர்ச்சீப் கொண்டு முரட்டுக்கரங்களால் அழுத்தப்பட்டது.
சடுதியில் மயக்கத்திற்கு சென்றவளை தூக்கி தோளில் போட்டவன் யார் கண்ணிலும் ஒரு ஓரத்தில் கையில் கொண்டுவந்திருந்த சாக்குமூட்டையில் கௌரியை திணித்து அடைத்து மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு வேகமாக மண்டபத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தான்.
வேக வேகமாக அந்த தெருவை கடக்க முயல அங்கே ஒருவன், “ஏய் யாருப்பா அது?. இந்நேரம் எங்க இருந்து வர?…” என சத்தமாக குரல் எழுப்பிக்கொண்டே அருகில் வர வெலவெலத்துப்போனான்.
அவன் நெருங்குவதற்குள் ஓட்டம் பிடித்தான் விஷ்ணு. விஷ்ணு பதட்டமாக ஓடுவதை பார்த்தவன், “டேய், களவாணிப்பயலா நீயி?…” என கேட்டுக்கொண்டே, “டேய் யாராவது ஓடிவாங்க திருடன் திருடன்…” என கூப்பாடு போட்டபடி ஊரைக்கூட்டிக்கொண்டே விஷ்ணுவை விரட்ட ஆரம்பித்தான்.
“அய்யய்யோ விஷ்ணு இப்படி வசமா சிக்கிட்டியேடா? உசுர காப்பாத்த தப்புச்சு ஓடிடு. நல்ல வேலை மாறுவேஷத்தில வந்த. புத்திச்சலிட்டா நீயி. உன் ப்ரைனை ஒபாமா கடனா கேட்டா கூட குடுத்திடாத…” என தன்னை தானே மெச்சிக்கொண்டு மூச்சிரைக்க ஓட அதற்குள் ஓலமிட்டவனின் குரலில் சிலபேர் ஓன்று கூடி விஷ்ணுவை துரத்த ஆரம்பித்தனர்.
“அப்போவே சொன்னாளே கேட்டியாடா நீ?.. இந்த கனம் கனக்குறாளே, இவ சாப்பிடற அரிசியதானே நானும் சாப்பிடறேன். நான் மட்டும் எப்படி காத்தா இருக்கேன். இப்படி ஒரு பிரச்சனைனா ஆத்திர அவசரத்துக்கு பொசுக்குன்னு தூக்கிட்டு ஓடமுடியுதா நம்மால? இதைத்தான் சொல்லுறாங்க போல பொண்டாட்டி சுமைன்னு. என்னா கனம்?…” என தனக்குள் புலம்பிக்கொண்டே என்னதான் சுத்தினாலும் மாற்றி மாற்றி ஒரே இடத்தில் சுத்திட்டு இருக்கிறதை போலவே தான் இருந்தது.
“பாவிப்பயளுங்க நான் என்ன அடுத்தவன் பொண்ணையா தூக்கிட்டுப்போறேன், நாளைக்கு கட்டிக்கபோற என் பொண்டாட்டியை இன்னைக்கு தூக்கிட்டு போறேன். அதுக்கு ஏண்டா இந்த அக்கப்போரு? இப்படி வளைச்சு வளைச்சு தேடுறதை பார்த்தா என்னை களி திங்க வைக்காம விடமாட்டாங்க போல?…” என்றவன் அடுத்த தெருவில் இருந்த உதயாவின் வீட்டிற்கு பின்பக்கமாக உள்ளே நுழைந்துவிட்டான்.