அவரது எண்ணம் புரிந்தவராக, “அதை தனம் பாத்துக்குவா, நீ விசனபடாத, வந்தவங்களை கவனி, ஏற்கனவே உன் சீமந்தபுத்திரன் ஆட்டமா ஆடிருக்கான், உன் முகத்தை வேற பார்த்தான் அவ்வளோதான். நல்ல காரியம் நடக்கும் போது சில சங்கடங்கள் வரத்தான் செய்யும். அதுக்காக இப்டியா நொடிஞ்சு போவ?…. போ கண்ணு….” என்று கிருஷ்ணமூர்த்தியை அனுப்பியவர் மருமகளின் புறம் திரும்பி,
“பாக்கியம் நீ போய் புறப்படு. நம்ம வீட்டுல நடக்குற முத காரியம் இது. அது நல்லபடியா சந்தோஷமா நடக்கணும் தாயி. போம்மா, நம்ம வீட்டுக்கு மகாலட்சுமி வந்த நேரம் எல்லாமே நல்லதாவே நடக்கும் பாரேன்!….” எனவும்,
“சரிங்கத்தை, நான் போய் ஆகவேண்டியதை கவனிக்கிறேன்….” என்று பரபரப்பானார்.
மாப்பிள்ளையாக அட்டகாசமாக தயாராகி வந்தவனின் விழிகளில் விழுந்தது நந்தினியின் பிம்பம்.
அவளை நெருங்க கழுத்து கொள்ளாமல் நகைகளை சுமந்தவாறு அவஸ்தையாக நெளிந்துகொண்டிருந்தாள்.
அவளது முகத்தில் தெரிந்த அசாதாரணநிலையை கண்டு என்னவென பார்வையிலேயே வினவினான்.
கழுத்தை நோக்கி, “பாரு இதை, சுமக்க முடியலை,காப்பாத்தேன்?…” என்று இறைஞ்சிய பார்வை சிரிப்பை வரவழைத்தாலும் அடக்கிக்கொண்டு அவளை முழுமையாக பார்த்தவனின் கண்களில் கடுமை குடியேற,
“நாச்சி……….” உச்சஸ்தானியில் குரல் எழுப்பியபடி
இதுக்கெல்லாம் அசந்தால் நாச்சி கெத்து என்னாவது?
“என்னைய்யா ராசா?” என்றபடி வந்தார் ஆடி அசைந்துகொண்டு.
“என்ன இது?” என்றான் நந்தினியை காண்பித்து.
“ஹா ஹா ஹா ஹா ஏன்யா அதுக்குள்ளே மறந்துபோச்சா? உன் பொண்டாட்டி!……”என்றார் ஈஈஈ என இளித்தபடி.
“அவ என் பொண்டாட்டின்னு எனக்கே சொல்லி தரவேண்டாம், எதுக்கு இப்டி மொத்த நகையவும் அவ மேல அள்ளி போட்ருக்க?…” என வெடுவெடுத்தவன்,
“வீட்ல நகையை வைக்க இடமில்லாம இவ மேல பூட்டினா போல இருக்கு….” என்றான்.
“பின்ன வரவேற்புக்கு நகை போடாமலா கூட்டிட்டு போய் நிப்பாட்ட?” – நாச்சி
“நகை எதுக்காக போடுவாங்க கிழவி? ஒரு நெக்லஸ், ஒரு ஆரமும் போதாதா?…..”
“கல்யாண பொண்ணுக்கு நகைகள் தான் அம்சத்தை குடுக்கும் அதான் போட்ருக்கு, இதுல என்னை குத்தம் சொல்லுற?…” என்றவர் நந்தினியிடம்,
“ஏன் தாயி நான் உனக்கு நகைபோட்டு பார்க்க ஆசை படறேன் அது ஒரு தப்பா? உன் புருஷன் ரொம்பத்தான் ஆடுறான், அவன் கிட்ட நீயே சொல்லு….” எனவும் நந்தினிக்கு சங்கடமாகி விட்டது.
அவளது மனமோ, “வந்தன்னைக்கே வாய்க்கா தகறாரா?…” என்று இதை எப்படி சமாளிக்க குழம்பிப்போய் உதயாவை பார்க்க அவனோ கண்களை மூட்டி திறந்து அவளை அமைதியாக இருக்க செய்தவன் நாச்சி புறம் திரும்பி,
“நாச்சி, நகை அழகுக்காக போடறதா? இல்லை பகட்டுக்காக போடறதா?” என்றான் பொறுமை இல்லாத குரலில்.
“அழகுக்குத்தேன், பாரு என்ற பேத்தி எம்பூட்டு அழகா சாமி சிலையாட்டம் இருக்குன்னு…”என்றார் நந்தினியை ரசித்து அவளது முகத்தை தடவி நெட்டி முறித்தபடி.
“நாச்சி இதை பார்த்தா அழகா தெரியலை பயங்கரமா இருக்கு அவளை பாரேன் சுமக்க முடியாம இப்போவே கிறங்கிட்டா, இப்டியே மேடைக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள ஒடிஞ்சு விளுந்திருவா, அப்புறம் ரிஷப்ஷன் நடந்தா போலதான்?……”என்றான்.
நாச்சியோ, “நம்மை இப்டி மடக்குறானே? இதுக்கு என்ன சொல்வது?..” என அவனை முறைத்தபடியே கோவமாக அங்கிருந்து அகல போக இழுத்து பிடித்து நிறுத்தி,
“நாச்சி, கொஞ்சம் சொல்றதை கேளேன்!….”
“என் பொண்டாட்டி அழகா இருக்கணும்னா நான் சொல்றதை செய்!..”
“பகட்டா பார்க்கறவங்க கண்ணுக்கு காட்சிபொருளா இருக்கணும்னு நினச்சா இப்படியே நீயே கூட்டிட்டு வா. நான் கீழ போறேன்!…” என்று கிளம்பியே விட்டான்.
தீவிரமான யோசனைக்கு ஆளான நாச்சிக்கு கெளரி துணை வந்தாள். தான் பார்த்துகொள்வதாகவும் அளவான நகைகளோட இருந்தால் தான் அழகு எனவும் பொறுமையாக விளக்கி சொல்லி சமாதான படுத்திவிட்டு தேவையில்லாத அதிகபடியான நகைகளை தவிர்த்துவிட்டு வரவேற்பிற்கு செல்ல கிளம்பினர் அனைவரும்.
குடும்பம் மொத்தமும் குதூகலமாக செல்ல அதை காண காண ஒரே ஒருவரது மனம் முழுவது கொதிக்கும் அனலை அள்ளி கொட்டிகொண்டிருந்தது.
நல்லவர்கள் வாழும் உலகத்தில் நயவஞ்சகர்களின் நாட்டாமை தனம் தான் ஓங்கியுள்ளது. தோற்றத்தை வைத்து அவர்களை இனம்கண்டுகொள்ள இயலாமல் தான் அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி போகிறனர். பொழுதுபோக்கிற்காகவும் வீண் வம்புக்காகவும் மனித வேட்டையாடும் நயவஞ்சக நரிகள்.
நல்லவர்களாக பிறந்தாலும் அப்படியே வாழவேண்டுமே!. மொத்த வாழ்நாளின் முக்கால்வாசியை அமிர்தமாக கழித்தவரின் மனதில் மீதி வாழ்க்கையை விஷமாக மாற்ற அவர் மனதில் நஞ்சை ஊற்ற அது வேரூன்றி விருட்சமாக தொடங்கியுள்ளது, குடும்பத்தில் கொலுவீற்றிருக்கும் சந்தோஷத்தை குலைக்க.
அவர்??????????
———————————————————-
அந்த மண்டபத்தின் வாயிலில் அழகான தோரணங்களுடன் கூடிய அமைப்பு அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருந்தது.
உறவினர்கள் அனைவரும் வந்த வண்ணமாக இருந்தனர். அனைவரையும் உபசரித்து அமரவைத்துகொண்டிருந்தனர் கிருஷ்ணமூர்த்தியின் அங்காளி பங்காளிகள்.
காலையிலேயே மதியின் மதியால் உதயாவின் திருமண தகவல் தெரிந்ததும் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்த அனைவருக்கும் தகவல் தெரிவித்தாகிவிட்டது. அருகில் இருந்தவர்கள் உடனே புறப்பட்டு வந்துவிட்டனர்.
சொந்தபந்தம் முழுமையும் கூடுமிடத்தில் சந்தோஷத்திற்கு குறைவேது?
ஆட்டமும் பாட்டமும் அமர்க்களமாகவும், ஆராவாரமாகவும் இருந்தது.
ஊரில் அனைவரும் உறவினர்களாக நண்பர்களாக இருந்தமையால் அவர்கள் வீட்டு நிகழ்ச்சி போல அனைவருமே பங்குபோட்டு வேலைகளை பகிர்ந்துகொண்டனர்.
வரவேற்புக்கு பொண்ணும் மாப்பிள்ளையும் வருவதற்கு முன்னமே மாப்பிள்ளை பற்றி சில தகவல்கள்:
உதய் பிரபாகரன் குறிஞ்சியூர் கிருஷ்ணமூர்த்தி பாக்கியலட்சுமியின் செல்ல புதல்வன். ஊரிலேயே மதிப்பும் மரியாதையும் மிக்க செல்வாக்கான நாச்சியார் குடும்பத்தை சேர்ந்தவன். அவர்களின் குடும்பத்தை அவ்வாறே அடையாளமிட்டு சொல்லுவர். சென்னையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிப்பை முடித்துகொண்டு படிப்பறிவோடு, வடிவமைப்பு தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் படைப்பாற்றல் அதிகம் இருப்பதால் சொந்தமாகவும் சின்னதாகவும் ரெயின்போ என்ற பெயரில் கார்மெண்ட்ஸ் வைத்து நடத்த ஆரம்பித்திருக்கிறான்.
ஊரில் விவசாய நிலபுலங்கள் தோப்புகள், பருத்திக்காடு என அனைத்தையும் தனக்கு பின் தனது மகன் தான் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றாலும் படிப்பில் அவன் தேர்ந்தெடுத்த துறை அவருக்கும் மிக பிடித்தமானதாகவும் இருந்தது எல்லையில்லா மகிழ்ச்சி.
படிப்பை முடித்து வந்தவனது எண்ணமெல்லாம் பருத்திகாட்டை பற்றியே இருந்தது. வெறும் ஏற்றுமதி மட்டுமே செய்துகொண்டிருந்த எண்ணத்தை மாற்றி தன் படிப்பிற்கும் திறமைக்கும் தீனி போட கார்மெண்ட்ஸ் நடத்தினால் என்ன என்ற எண்ணம் முளைவிட தொடங்கியதும் அதை பற்றிய வேலைகளில் இறங்கி நண்பனின் துணையோடு.
முதலில் சறுக்கினாலும் லேசான தடுமாற்றத்தோடு மீண்டும் தெளிந்து இப்போது நஷ்டமில்லாமல் ஓரளவு லாபத்தில் நடத்தி கொண்டிருக்கிறான். அத்தோடு தந்தைக்கு துணையாகவும்.
ஆடைகள் வடிவமைப்பதில் ஆர்வம் மிகுந்தவனாதலால் இவனது நிறுவனம் இப்போதுதான் வெளி உலகை சென்றடைய துவங்கி உள்ளது.