நட்சத்திர விழிகளிலே வானவில் – 25 (1)

நட்சத்திர விழிகள் – 25

        பத்திரகாளியாக நின்றவளை எப்படி சமாளிக்க என்று பேந்த பேந்த விழித்தான் உதயா. சமாதனம் செய்ய வாயெடுத்தவனை,

“என்னால ஊருக்கு வரவே முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. பெருமையா மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போய் அங்க உள்ளவங்களுக்கு நம்மை காமிக்கறதோட எல்லாம் முடிஞ்சதா?. என்ன நினச்சிட்டு இருக்க நீ?…” என்று பொரிந்து தள்ளினாள்.

“மறுவீடுன்னா என்ன? ஊருக்கு போய்ட்டு மாப்பிள்ளை கெத்து காமிச்சு வயிறுமுட்ட விருந்து சாப்பிடறது மட்டும்னு நினைச்சியா?.. அந்த ஊர்க்காரங்க எல்லோரும் ஒவ்வொருத்தரா நமக்கு முதல் எப்போ கல்யாணம் ஆச்சு, எப்படி, என்னனு, அவங்க நாக்குன்ற தேள்கொடுக்கால வளைச்சு வளைச்சு நம்மை கேள்வி கேட்டு கொட்டுவாங்க பாரு. அந்த கேள்வி ஒண்ணொண்ணும் எப்படிப்பட்ட வலியை கொடுக்கும்னு உனக்கு தெரியுமா?…”

“அவங்க கிட்ட பதில் சொல்லமுடியாம நான் தவிச்சுப்போய் நிக்கிறதை பார்க்கிறதுதான் உன்னோட ஆசையா?…” என ஆத்திரமாக பேசியவளை பார்த்தவன் இப்போதைக்கு எது பேசினாலும் அது சண்டையில் தான் முடியும் என்பதால்,

“நந்து இப்போ எதுவும் பேச வேண்டாம்டா. நைட் பேசிக்கலாம்…” என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து நந்தினி தடுப்பதற்குள் தப்பித்தோம் பிழைத்தோமென அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

அடுத்த இரண்டுநாட்களுக்குள் நந்தினியை பேசி பேசியே கரையாய் கரைத்து மீனாட்சிபுரத்திற்கு அழைத்துவந்து விட்டான்.

காரில் வந்து இறங்கிய உதயா நந்தினியை அந்த ஊரே வியப்பாக பார்த்தது. பார்த்ததோடு இல்லாமல் தங்களுக்குள் ஏதோ முணுமுணுக்க அதை பார்த்த நந்தினி தன் கணவனை முடிந்தமட்டும் முறைத்தாள்.

ஆரத்தி தட்டோடு வாசலுக்கு வந்த தன் குடும்பத்தார் அனைவரையும் பார்த்தவுடன் சடுதியில் மென்மையான சின்ன சிரிப்பை முகத்தில் பூசிக்கொண்டு தன்னை நெருங்கி நின்றவளை விசித்திரமாக பார்த்தான் உதயா.

“இவளால் எப்படி இப்படியெல்லாம் இருக்கமுடியுது?…” என ஆச்சர்யப்பட்டு போய் நின்றவனை விஜிதான் நனவுலகத்திற்கு திருப்பினான்.

நந்தினி தன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த நிமிடம் அங்கே தான் பட்ட வேதனைகளும், வலிகளும் வரிசையாக படையெடுத்து மனதில் உள்ள ரணத்தை மேலும் கீறிவிட்டு வலியை அதிகப்படுத்தியது. ஆனால் அதை வெளிகாண்பித்துக்கொள்ளாமல் சிரித்தமுகமாகவே இருந்தாள்.

அங்கே ஏகபோக கவனிப்புதான் உதயாவிற்கு. தன்னை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியவர்களை பார்த்து அகமகிழ்ந்து போயிருந்தவனை பார்த்தவள், “ஓவரா பாசத்தை பொழியாதீங்க. இவங்கதான் இரண்டரை வருஷமா உன்னை கரிச்சுக்கொட்டினாங்க. ஞாபகம் இருக்கட்டும்…” என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள். அதை அவன் சட்டைபண்ணாமல் இருந்தது மேலும் கோபத்தை தூண்டியது.

இவர்களின் ஆர்ப்பரிப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாகவே இருந்த நந்தினியின் மௌனம் இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது பூதாகாரமாக தெரிந்தது அவளின் குடும்பத்தாருக்கு.

எப்போதும் சலசலத்துக்கொண்டும் வம்பு வளர்த்துகொண்டும் உலா வரும் தங்களின் பழைய மித்ராவை பார்க்கமாட்டோமா என்று ஏங்கத்தான் செய்தது அவர்களின் உள்ளம். ஆனால் அதை வெளிப்படையாக நந்தினியிடம் கூற குற்றவுணர்வு தடுத்தது.

ஏழுமலையின் ஏக்கம் தேங்கிய முகத்தை பார்த்த கோசலை கூட மறைமுகமாக சொல்லிப்பார்த்தார். “ஏண்டா மித்தும்மா உனக்கு இந்த அமைதி? எப்போவும் போல நீ இருடா…” என கெஞ்சலாக கேட்க அவளோ புன்னகை மாறா முகத்தோடு,

“நான் எப்பவும் போலதான் அத்தை இருக்கேன். இரண்டரை வருஷமா நான் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கேன். அதுல என்ன தப்பு? இத்தனை நாள் உறுத்தாத விஷயம் இப்போ மட்டும் தெரியுதோ?… விடுங்கத்தை…” என அசால்டாக சொல்லிவிட்டு உதயாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிட்டாள்.

அங்கிருந்த அனைவருக்குமே அந்த பதில் சாட்டையடியாக இருந்தது. எந்த அளவிற்கு அவளது மனம் வருந்தியிருந்தால் இப்படி பேசுவாள். தாங்களாக உருவாக்கிகொண்டதுதானே?.. எப்படியும் நந்தினியின் மனம் மாறும். அதுவரை பொறுத்திருக்கலாம் என நினைத்துகொண்டனர்.

கோவிலுக்கு வந்து சாமிக்கும்பிட்டு முடித்ததும் பிரகாரத்தின் ஒரு மூலையில் அமர உதயாதான் பேச்சை ஆரம்பித்தான்.

“உங்க வீட்ல எல்லோரும் எவ்வளோ வருத்தப்படறாங்க. இன்னும் ஏன் அவங்களை தள்ளியே வச்சிருக்க நந்து?… நீ பேசற தான். அதுல பாசம் இருக்கே தவிர ஒரு உரிமை, அந்நியோனியம் இல்லை. அவங்க கூட பழையமாதிரி பேசறதுல என்னடா கஷ்டம் உனக்கு?. எனக்கே தெரியுது உன்னோட ஒட்டாத பேச்சு…” என்று தன்மையாக கேட்டவனை முறைத்தாள் நந்தினி.

“என்ன முறைக்க?.. அன்னைக்கு நம்ம வீட்டுக்கு எல்லோரும் வந்தப்போ மட்டும் உன் அப்பாவை கட்டிப்பிடிச்சிட்டு அழுதியே?…”

“ஆமா, அழுதேன். புதுசா புகுந்த வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணு ரொம்ப நாள் கழிச்சி பிறந்த வீட்டு மனுஷங்க வந்ததும் பாசத்தில அழத்தான் செய்வா. அதுவும் நான் இந்த ஊரை விட்டு வந்த விதம் வேற. எங்க என்னை பெத்தவங்களை பார்க்காமலே இருந்திருவேனோன்னு அழுதேன். போன்ல விஜிக்கிட்ட பேசினதும் அப்படித்தான். மண்டபத்தில் என்னால எங்கப்பாக்கு அவமரியாதை ஆகிடுச்சேன்னு தான் பேசனும்னு சொல்லி அழுதேன்….”

“அதுக்காக நான் பட்ட எல்லா கஷ்டங்களும், வேதனைகளும்  இல்லைன்னு ஆகிடாதே? என்னை அவங்க பேசினது எல்லாம் மறைஞ்சிடாதே. உடனே என்னால எதையுமே மறக்கமுடியாது. கொஞ்சம் அவகாசம் வேணுமே? முயற்சி பன்றேன். ப்ச் அதை விடு. இது என்னனு பாரேன்…” என உதயாவின் கையில் திணித்த மஞ்சள் கிழங்கு கட்டிய மங்கலநாணை பார்த்தவனுக்கு முதல் நொடி புரியவில்லை என்றாலும் அடுத்த ஷணம் உணர்ந்தான்.

அது தான் நந்தினிக்கு கட்டிய தாலி என்று. இன்று வரை இதை பத்திரமாக வைத்திருக்கிறாள் என்றால் இது என்ன மாதிரியான அன்பு, எதிர்பார்ப்பு? அவனுக்கு பேச்சே எழவில்லை. அமைதியாகவே இருந்தான் ஏனோ கண்கள் கலங்குவதை தடுக்கமுடியவில்லை. அவனது விழிகளில் நிறைந்த கண்ணீர் துளிகள் அந்த மஞ்சளில் பட்டு மினுமினுத்தது. அவனது உணர்வை புரிந்தவள் போல கரங்களை அழுத்திக்கொடுத்தாள்.

“என்ன நந்தினி, உன் வீட்டுக்காரர் கூட கோவிலுக்கு வந்திருக்க போல?. என்னையெல்லாம் அறிமுகப்படுத்தி வைக்க மாட்டியா?…” என நக்கலுடன் ஒலித்த நிர்மலாவின் குரலில் இருவரது மோனநிலை கலைந்தது.

அவளது கேலி புரிந்தாலும் அப்போதிருந்த மனநிலையில் பதில் பேச தோன்றாமல், “இவங்க நம்ம வீட்டுக்கு பக்கத்து வீடு, பேர் நிர்மலா…” என்று உதயாவிடம் கூறவுமே அவனுக்கு புரிந்தது மகிமா சொன்ன நிர்மலா இவள் தான் என்று.

“ஓ!!…” என்று மட்டும் சொன்னவன், “வா நாம கிளம்பலாம். வந்து ரொம்ப நேரம் ஆச்சு…” என நந்தினியை அழைத்துக்கொண்டு நிர்மலாவை சட்டைசெய்யாமல் போக அது நிர்மலாவிற்கு பெருத்த அவமானமாக போயிற்று. அதற்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என எண்ணி,

“ம்க்கும், நான் கூட உன்னை என்னவோ நினச்சேன் நீ ரொம்ப சின்னப்பிள்ளைன்னு. யாருக்கிட்டயும் சொல்லாம செலவே இல்லாம இந்த மனஷனை கல்யாணம் செய்து அங்க எப்ப என்ன பிரச்சனை நடந்ததோ? இவரை கழட்டி விட்டுட்டு நல்லா வசதியான புது மாப்பிள்ளை தேடிக்கிட்ட. உன் சாமர்த்தியம் சுட்டுப்போட்டாலும் யாருக்குமே வராதும்மா…” என்று குத்தலாக பேசினாள்.

“ஏய்…” என்று விரலை நீட்டி அவளை உதயா எச்சரித்த நேரம் நந்தினி தன் வலது கரத்தை நிர்மலாவின் கன்னத்தில் இறக்கியிருந்தாள்.

“ஏய் என்னையே அடிச்சிட்டியா நீ?…” என கோவமாக பார்த்தவளை, “ஆமாம் நிர்மலா, உன்னைத்தான் அடிச்சேன். அதுல சந்தேகம்னா சொல்லு இன்னொரு கன்னத்திலும் அறைஞ்சு புரியவைக்கிறேன்…” என்ற நந்தினியை பார்த்து பயந்தவள் இரண்டடி பின்வாங்கி நின்றாள்.

“என்ன நிர்மலா அப்படி பார்க்கற? உன் பேரை சொல்லிட்டேன்னு இந்த முறை முறைக்கிற? என்னைப்பத்தி தெரிஞ்சும் இந்த கேள்வியை கேட்க உனக்கு எவ்வளோ தைரியம்? கன்னம் பழுத்துடும் ஜாக்கிரதை. என்னை பத்தியும் என் ஒழுக்கத்தை பத்தியும் பேச உனக்கு கொஞ்சம் கூட அருகதை கிடையாது. மீறி பேசின அசிங்கப்பட்டு போவ சொல்லிட்டேன்…” என்று கண்களில் அனல் பறக்க பேசியவளை பார்த்து மிரண்டாள் நிர்மலா.

“அடுத்தவங்க வீட்டு கதை பேசி அதை திரிச்சு ஊர்முழுக்க பரப்பி மத்தவங்க வேதனையிலும், வலியிலும் குளிர்காயிற உன்னை போன்ற ஜென்மங்களுக்கு என்னை பத்தி பேச தகுதியே கிடையாது. உன் பொறுக்கி புருஷனை அடக்கிவைக்க தெரியலை. நீயெல்லாம் என்னை பத்தி பேசவந்துட்ட. ஒழுங்கா இதோட நிறுத்திடு. இல்லை என் அப்பாக்கிட்ட சொல்லவேண்டியது வரும். ஏற்கனவே அவர் உன்மேல கொலைவெறில இருக்காரு…”

எப்போதுமே தன்னை மதிக்காமல் வெட்டிவிடுவது போல பட்டென்று பேசிவிடும் நந்தினியை நிர்மலாவிற்கு பிடிக்கவே செய்யாது. இப்போது நந்தினி நிலை தான் கேலி செய்வதற்கு ஏதுவாக இருப்பதாக எண்ணிக்கொண்டு அவளை சீண்ட அதில் தானே மாட்டவும் தன்னை அறைந்ததோடு நில்லாமல் ஏழுமலையிடம் சொல்லுவேன் என்ற மிரட்டலையும் கேட்டு பயத்தில் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

“ம்ம். விஷ்ணு சொன்னது சரிதான் ஜான்சிராணி. சரியான லேடி கேடி நீ. என்னா அறை. என் காதுல கொய்ங்ன்னு கேட்குது இன்னமும்…” என கிண்டல் செய்தவனை முறைத்தவள்,

“போதும், போதும். வீட்டுக்கு கிளம்பலாம். ஊர்ல ஆயிரம் வேலை வச்சுக்கிட்டு இங்க வெட்டிப்பேச்சு…” என அவனையும் வாரிவிட்டே வீடு வந்து சேர்ந்தாள்.

இரண்டுநாளாவது தங்கிச்செல்லுமாறு கேட்ட ஏழுமலையிடம் கெளரி திருமணம் முடியவும் ஒரு வாரம் வந்து தங்குவதாக வாக்களித்து விட்டே அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். சந்திராவிற்கு தான் நந்தினியை உடனே அனுப்ப மனசே இல்லை. கெளரி கல்யாணத்திற்கு அவசியம் வரவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு தான் கிளம்பினார்கள்.

error: Content is protected !!