நட்சத்திர விழிகளிலே வானவில் – 24 (2)

“கண்டிப்பா போயிடறேன். அதுக்கு முன்னால இந்த கல்யாணத்தை நீங்க நிறுத்துங்க. அப்போதான் இந்த மண்டபத்தை விட்டு கிளம்புவேன்…” என சர்வசாதாரணமாக சொன்னவனை பார்த்து விக்கித்து நின்றனர்.

“உங்க பொண்ணோட நல்லதுக்குதான் சொல்றேன். வேற நல்ல பையனா பார்த்து வேணும்னாலும் கட்டிவையுங்க. அப்போ இது போல நான் தடுக்கமாட்டேன். இந்த மாப்பிள்ளை மட்டும் வேண்டாம். இவனும் இவன் கூட்டமும் சுத்த ப்ராடு…” என கூறயவன் தன்னை நம்பமறுக்கும் அவர்களது அறியாமையை எண்ணி கோவம் வந்தாலும் அதை காட்டவேண்டிய நேரம் இதுவல்ல என அடக்கிகொண்டான்.

“ப்ச்,,, அந்த பிரசாத் உங்க பொண்ணை பழிவாங்க ஏற்பாடு பண்ணின மாப்பிள்ளை தான் இவன். இவ்வளோ தூரம் சொல்லிட்டே இருக்கேன் நம்பாம உங்க பொண்ணை நீங்களே புதைகுழில தள்ள தயாரா இருக்கீங்களே?…” என்று அடக்கப்பட்ட கோவத்தோடு உதயா பொறுமையை விடாமல் ஏழுமலைக்கு புரியவைக்க முயன்றான்.

அவன் கூறியது புரியவே சில நிமிடங்கள் ஆனது. உலகமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது. அதற்குள் அறையின் வெளியே மணமேடையில் சடங்குகள் ஆரம்பித்ததன் அறிகுறியாக மேளங்கள் முழங்கியது. ஏழுமலை நேசமணியை மேடைக்கு கிளம்ப சொல்ல அவரோ மறுத்தார். இங்கே  யாரும் தேடி வருமுன்னே கிளம்புமாறு பரிதாபமாக கூறியதை மறுக்க இயலாமல் நேசமணியும் பூரணியும் மணமேடைக்கு சென்றனர்.

அவர்களை அனுப்பிய பின் உதயா சொன்னது முழுதாக உறைத்தது. பிரசாத் இன்னுமா தன் மகளின் மீது வஞ்சம் வைத்திருக்கிறான்? என்று நினைக்கவே நடுங்கியது. தாங்கள் தான் அவனை மறந்துவிட்டோமே. பின் ஏன்? என்ற கேள்வி உருவானதோடு உதயா மீதான சந்தேகமும் உருவானது.

அதனால் இன்னொரு மனம் உதயா சொல்வதை நம்பவேண்டாம் என்று தடுத்தது. பிரசாத் பேரை சொல்லிக்கொண்டு இந்த திருமணத்தை நிறுத்தி தன் பெண்ணை அழைத்துப்போக வந்திருக்கிறானோ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அப்படித்தான் இருக்குமென்று அடித்து கூறியது ஏழுமலையின் பிடிவாத குணம்.

“இங்க பாருங்க தம்பி, என் பொண்ணுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு எனக்கு தெரியும். அன்னைக்கு நீங்க இக்கட்டான சூழ்நிலையில என் பொண்ணை காப்பாத்தினதாலதான் நான் சும்மா வந்தேன். வாக்கு குடுக்கிறது போல குடுத்திட்டு இத்தனை வருஷம் கழிச்சு இப்போ கல்யாண வீட்ல வந்து கலாட்டா பண்ணனும்னே திட்டம் போட்டு வந்திருக்கீங்க? பேசாம போய்டுங்க…” என்று வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு உதயாவை பார்த்து எகிறினார்.

“ஏங்க நான் இவ்வளோ தூரம் சொல்றேன். அதை நம்பாம இப்படி சட்டு சட்டுன்னு பேசறீங்க? உங்க பொண்ணோட வாழ்க்கைக்காகத்தான் நான் இங்க வந்துபேசிட்டு இருக்கேன்…”

“நீங்க ஒண்ணும் எங்களுக்காகவும், எங்க பொண்ணுக்காகவும் எந்த நல்லது செய்ய வேண்டாம். என் பொண்ணுக்கு விதிப்படி என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும். உங்க வேலையை பார்த்துக்கிட்டு நீங்க போங்க…” என வெளியேற சொல்லவும் உதயா கொதித்துப்போனான்.

“அப்போ நான் சொல்றதை நம்பலைனா நானே இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டியதாக இருக்கும். உங்க பொண்ணை பார்த்து பேசவேண்டியதாக இருக்கும். எது நல்லதுன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க…” அதற்கு மேல் கெஞ்சிகொண்டிருந்தால் வேலையாகாது என்று நினைத்து கடுமையை கையிலெடுத்துக்கொண்டான்.

அவனின் மிரட்டல் கலந்த கோவத்தில் கொஞ்சம் மிரளத்தான் செய்தனர் ஏழுமலையும் சந்திராவும்.

“தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க தம்பி, இது என் கௌரவ பிரச்சனை. இந்த கல்யாணம் நின்னுபோனா ஊர்ல இருக்கிறவங்க வாய்க்கு வந்தபடி பேசுவாங்க. எங்க மானம் மரியாதையே போயிடும்…” என்று கெஞ்சுவதுபோல பேசியவரை பார்த்து இரக்கம் வருவதற்கு பதில் கோவம் தான் எழுந்தது.

“என்ன சார் பேசறீங்க? உங்க பொண்ணோட வாழ்க்கையை விட உங்க குடும்ப கௌரவமும், மரியாதையும் தான் முக்கியமா? அவளை பெத்தவங்க தானே நீங்க? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசறீங்க? ஊருக்கு பயந்து ஒரு தப்பானவன் கையில ஒப்படைக்க தயாராக இருக்கீங்க? நீங்கலாம் என்ன தகப்பனோ?…” என கோவத்தில் வார்த்தைகளை கொட்டினான்.

“எனக்கு நம்பிக்கை இருக்கு. அவர் தப்பானவராகவே இருந்தாலும் என் பொண்ணு அவரை மாத்திடுவா…”

“அடச்சீ, இப்படி பேசறதுக்கு நீங்க அசிங்கபடனும் சார். ஊர்ல உள்ள ஊதாரியையும், பொறுக்கியையும் திருத்தத்தான் பொண்ணு பெத்து வளர்த்திருக்கீங்களா? உங்ககிட்ட இனியும் பேசி பிரயோஜனம் இல்லை. எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு எனக்கு தெரியும். நான் பார்த்துக்கறேன்…” என கூறியவன் கதவை திறந்துவிட்டு வேகமாக மணமேடையை நோக்கி சென்றான்.

அங்கே மணமேடையில் முகூர்த்தப்புடவை வாங்குவதற்காக நந்தினி வரவழைக்கப்பட்டு சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. புடவை வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தை கையில் ஏந்தியபடி மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க ஏனென்று தெரியாமலேயே உள்ளம் கொதித்தது.

வேகமும் ஆவேசமும் எதற்கென உணராமல் நந்தினியை காப்பாற்றுவதில் தனக்கு ஏன் இப்படி ஒரு ஆக்ரோஷம் என்று தெரியாமல் அந்த கணம் ஒரு சூறாவளியாக மாறியிருந்தான். இனி நடப்பது நடக்கட்டும் என்று தன் மனதிற்கு தானே கூறிக்கொண்டான்.

“இந்த கல்யாணத்தை நிறுத்துங்க…” என கத்தியவனின் குரல் அங்கே இருந்த சலசலப்பில் கேட்காமல் போயிற்று. அங்கே உள்ள வரிசைத்தட்டில் மஞ்சள் பூசி அடுக்கபட்டிருந்த தேங்காய்களில் இரண்டை எடுத்தவன் ஓங்கி தரையில் போட்டு உடைத்தான்.

அனைவரும் உதயாவின் செயலில் திடுக்கிட்டு அமர்ந்திருந்தவர்கள் எழுந்துவிட்டனர். நேசமணி அதிர்ந்துபோய் பார்த்தார். விஜிக்கோ உதயாவை பார்த்ததுமே சந்தோஷம் தாளவில்லை.

உதயா சென்றதும் அவன் பின்னாலேயே ஓடிவந்த ஏழுமலை அவனின் இந்த செயலில் மீண்டும் முருங்கைமரம் ஏறினார். கோவத்தில் வார்த்தைகளை சிதறவிட்டார்.

“என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த நீ யார்?…..” என்று கேட்டுவிட்டு அவசரப்பட்டு சீண்டிட்டோமே என்ன சொல்ல போறானோ? என்று அவனையே பார்த்தபடி பரிதவித்து நின்றார் ஏழுமலை.

இப்படியாக அவர்களது வாக்குவாதம் நீண்டுகொண்டிருக்க சத்தமே இல்லாமல் குணாவை சேர்ந்தோர்கள் பின்பக்க வழியாக வந்தவரை லாபம் என்று கிடைத்ததை சுருட்டிக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்.

அதுவும் பிரசாத்தின் ஏற்பாடுதான். அவனது நண்பனை குணாவின் துணையாக அனுப்பியவன் அங்கே நடப்பவற்றை அவ்வப்போது போனில் அழைத்து கேட்டுகொண்டிருந்தான். அப்படி தகவல்களை கூற மண்டபத்தின் வெளியே வந்து பிரசாத்துடன் பேசிகொண்டிருக்கையில் தான் உதயா மண்டபத்தில் நுழைவது தெரிந்தது.

பிரசாத்திடம் சொன்னதுமே மறுமுனையில் இருந்த பிரசாத் சொன்னதை கவனமாக கேட்டு கொண்டான். அதன்படியே உதயா மேடையேறி திருமணத்தை நிறுத்த சொன்னதுமே குணாவையும் அவனை சேர்ந்தவர்களையும் அப்புறப்படுத்த தேவையானதை செய்துவிட்டான் பிரசாத் நண்பன். அனைவரும் அரைமனதோடு வெளியேறியும் விட்டனர்.

உதயவோடு வந்த மதிவாணன் உதயாவை யாரோ வேகமாக இழுத்துக்கொண்டு உள்ளே செல்லவதை பார்த்தவன், “இந்த கல்யாணத்துக்குதான் இவ்வளோ அவசர அவசரமா வந்தாரா? சொல்லிருக்கலாமே…” என நினைத்துக்கொண்டே கடைசி வரிசையில் அமர்ந்திருந்தான்.

கல்யாண வீட்டிலிருந்த ஒருவர் வந்து அவனை சாப்பிடுமாறு சொல்லவுமே பசியை உணர்ந்தவன், “ஹ்ம் அவருக்கு தனியா தடபுடலா கவனிப்பாங்களா இருக்கும். வரதுக்குள்ள நாம போய் சாப்ட்டு வந்திடலாம்…” என்று டைனிங்ஹாலுக்கு சென்றவன் நன்றாக சாப்பிட்டு வெளியே வந்தால் சரியாக உதயா தேங்காயை போட்டு உடைத்தான்.

“இப்போ எதுக்கு தேங்காயை தூக்கிப்போட்டு உடைக்கிராரு? ரிப்பன் கட் பண்ணி ஆரம்பிக்கிறது போல இங்க இவர் தேங்காய் உடச்சு ஆரம்பிக்கிறாரோ?…” என நினைத்துக்கொண்டே முன்னால் வர ஏழுமலையின் கோவமான குரலில், உதயாவின் எதிர்ப்பேச்சில் அதிர்ந்துவிட்டான்.

“என்னாது கல்யாணத்தை நிறுத்த வந்திருக்காரா? இதுதான் அண்ணியா?…” என நினைத்தவன் உடனே தன் மொபைலை எடுத்து உதயாவின் வீட்டிற்க்கு அழைத்து விஷயத்தை சொன்னான். அடுத்தடுத்து நடந்த அனைத்தையும் சொல்லிக்கொண்டே இருந்தான். தன மொபைலில் நடந்ததை போட்டோ எடுத்து அனுப்பியும் வைத்தான்.

ஒருவழியாக திருமணமும் முடிந்தது. நந்தினிக்கு இதில் மகிழ்ச்சியே என்றாலும் தன் குடும்பத்திற்கு இது அவமரியாதைதானே என்று மருகினாள்.

அதுவரை அவளிடம் இருந்த திடம் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரம் போல் ஆகிவிட்டது. இவனை பற்றி எதுவுமே தெரியாமல் எதை நம்பி நான் இவனை எதிர்பார்த்தேன்? இனி தன் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது? என்ற பயத்தில் இருந்தவளுக்கு உதயாவின் கிளம்புகிறோம் என்ற வார்த்தை மேலும் சஞ்சலத்தை கொடுத்தது.

ஏழுமலையை பார்த்து, “அப்பா நான் என்ன செய்யனும்?” என்று வினவ உதயா கோவமாக பார்த்தான் நந்தினியை.

ஏழுமலைக்கு துக்கமும் சந்தோஷம் சேர்ந்து வாட்டியது. இத்தனை நாள் வெறுமையான பார்வையோடு தன்னை எட்டவே நிறுத்தியிருந்த தன் மகள் இன்றைக்கு அத்தனை அன்பையும் கண்களில் தேக்கி கேட்கும் போது தன்னால் அவளை போகாதே என தடுக்கவா முடியும்?

நந்தினியின் கண்களில் இருந்த வெறுமையை விரட்டி அந்த இடத்தில்  கலக்கம் குடியமர்ந்தது.

ஏனோ இப்போது ஏழுமலையால் நந்தினியை தடுக்க முடியவில்லை. அப்படி ஒரு எண்ணம் தோன்றவும் இல்லை. அவளை கிளம்ப சொல்லிவிட்டு அங்கே நிற்கமுடியாமல் உள்ளே சென்றுவிட்டார்.

error: Content is protected !!