நட்சத்திர விழிகளிலே வானவில் – 23 (2)

இப்படி விட்டேற்றியாக பேசும் உதயாவை ஒன்றும் செய்ய முடியாமல் கோவத்தில் அங்கிருந்த பைலை தூக்கி வீசிவிட்டு விடுவிடுவென போய்விட்டான் விஷ்ணு.

—————————————————————–

கோசலை கூறிய விஷயத்தை கேட்ட நேசமணி, “இங்க பாருங்க மதினி. உங்க தம்பி இப்போ யார் பேச்சையும் கேட்கிற நிலமையில இல்லை. ஏற்கனவே எங்களுக்குள்ள வருத்தம் உண்டாகிருக்கு. கொஞ்சம் யோசிங்க. இந்த மாப்பிள்ளை நல்லவரா இருந்து நம்ம மித்ராவை நல்லா பார்த்துக்கிட்டா அதைவிட சந்தோஷம் நமக்கு என்ன இருக்கு?…” என்றவரை ஏமாற்றமாக பார்த்துவிட்டு சிறிது நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

எல்லாம் தன் கைமீறி நடக்கிறது என்பதை உணர்ந்தவரால் தெய்வத்திடம் மட்டுமே முறையிட முடிந்தது.

மறுநாள் நேசமணி வீட்டினரும் வந்துவிட வீடே தடபுடலாக ஏற்பாடுகளை கவனித்துகொண்டிருந்தது. நிமிஷத்திற்கொருதரம் நந்தினி ரெடியா என அவஸ்தையோடு பார்த்துக்கொண்டே இருக்க,

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதுக்கு கொஞ்சம் முன்னால ரெடி பண்ணிடுவோம். அப்போதான் முகம் களைப்பில்லாம இருக்கும்…” என சந்திரா கூறவும் தான் அமைதியானார்.

இன்னும் ஒருமணி நேரத்தில் அனைவரும் வந்துவிடும் நிலையிலும் நந்தினி தயாராகாமல் இருக்க ஆவேசத்தில் ஆடியேவிட்டார் ஏழுமலை.

“இப்போ அவ ரெடி ஆக போறாளா இல்லையா? முதல்ல இந்த பாவாடை சட்டை எல்லாத்தையும் தீ வச்சு கொளுத்துறேன். எப்போ பாரு ரெட்டை ஜடையும் பாவாடை சட்டையுமா இதையே போட்டுக்கிட்டு. வயசு பொண்ணா லட்சணமா புடவை கட்டி தலைநிறைய பூவச்சு தயாரா இருக்கணும் சொல்லிட்டேன்…” என உறுமிவிட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

சந்திராவும் பூரணியும் எவ்வளவோ எடுத்து சொல்லி காலில் விழாத குறையாக கெஞ்சி அவளை தயார் செய்தனர். அதன் பின்னரே ஏழுமலை இயல்பானார்.

நேரம் நெருங்க நெருங்க படபடப்போடு வாசலுக்கும் வீதிக்குமாக நடைபயின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தரகர் மட்டும் வரவும் அவரை வரவேற்று உள்ளே அழைத்துவந்தார்.

“வாங்க தரகரே, என்னாச்சு மாப்பிள்ளை வீட்ல வரதா சொன்னாங்களே? கிளம்பிட்டாங்களா?…” என ஆவலாக கேட்டவரை இயலாமையோடு பார்த்த தரகர்,

“அது வந்து ஏழுமலை, அவங்க வரலைன்னு சொல்லிட்டாங்க…” என்று தயங்கி தயங்கி சொல்லவும் ஏழுமலைக்கு குழப்பமாக இருந்தது.

நேசமணி முன்னால் வந்து, “வரலையா?. அப்போ என்னைக்கு வராங்க? அதை சொன்னாங்களா?…” என கேட்டார்.

“இல்லைங்க அவங்க இனிமே வரமாட்டாங்க. இந்த இடம் வேண்டாம்னு சொல்லி வேற பொண்ணை பார்க்க சொல்லிட்டாங்க…” என கூறியதுதான் தாமதம் என்ன செய்கிறோமென உணராமல் ஏழுமலை தரகரின் சட்டையை பிடித்துவிட்டார்.

“என்னது? என் பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டாங்களா? என்னய்யா சொல்றீங்க?…” என்று தரகரை பிடித்து உலுக்க அந்த சத்தத்தில் உள்ளே இருந்த அனைவருமே ஜமுக்காளம் விரித்து அலங்கரிக்கபட்டிருந்த வரவேற்பறைக்கு வந்துவிட்டனர்.

“மாப்ள, கொஞ்சம் பொறுமையா இருங்க. என்னனு கேட்போம். முதல்ல அவரை விடுங்க..” என்று ஏழுமலையை இழுத்து தன்பக்கம் நிறுத்திக்கொண்ட நேசமணி,

“என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சார். எங்களுக்கு பதட்டமா  இருக்குதே?…” என கேட்கவும்,

“சொல்றதை கேட்டு கோவப்படவோ ஆத்திரப்படவோ வேண்டாம். பொறுமையா இருங்க. நீங்க குடுத்த ஜாதகத்தை அவங்க வேற ஒரு ஜோசியர்க்கிட்ட காண்பிச்சிருக்காங்க. நான் சொன்னது போலவே பொருத்தம் நல்லா பொருந்திருக்கு. ஆனா உங்க பொண்ணோட ஜாதகத்துல தோஷம் இருக்குதாம். அதனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க…”

“என்ன சொல்றீங்க? என்ன தோஷம் இருக்கு? ஏன் நீங்களும் தானே ஜாதகத்தை பார்த்தீங்க. அப்போ உங்களுக்கு அந்த தோஷம் பத்தி தெரியாதா?…” என்று கோவமாக கேட்டார் ஏழுமலை.

“தெரிஞ்சது, ஆனா பரிகாரம் பண்ணினா கழிய கூடியதுதான் அந்த தோஷம். அதையும் நான் சொல்லிட்டேன். ஆனா மாப்பிள்ளை வீட்ல பயப்படறாங்க…” என தரகர் கூறவும்,

“அப்படி அவங்க பயப்படற அளவுக்கு என்னய்யா தோஷம்?…” என்ற நேசமணியை பார்த்து,

“உங்க பொண்ணுக்கு இரு தாலி தோஷம். அவங்க கழுத்துல இரண்டுதடவை தாலி ஏறனும்னு விதி. உங்க பொண்ணை கல்யாணம் செய்தா அவங்க பையனுக்கு எதுவும் ஆபத்து வந்திடுமோன்னு அதனாலதான் அவங்க பயப்படறாங்க…” எனும் அனைவருமே திக்பிரம்மை பிடித்ததுபோல அசைவற்று நின்றுவிட்டனர்.

ஏழுமலைக்கு திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிவிட்டது. தன் பெண்ணிற்கு ஏற்கனவே ஒருமுறை தாலி ஏறி இறங்கிவிட்டது என்று தரகரிடம் சொல்ல முடியுமா? இதற்கு என்னதான் வழி என்று திகைத்து நிற்க,

“என்னது மித்ராவுக்கு தாலி தோஷமா? அப்போ அவளுக்கு கல்யாணமே ஆகாதா?…” என்ற அலறலில் அனைவரும் திகைப்பிலிருந்து திரும்பி வாசலை பார்த்தால் அங்கே நிர்மலா நின்றுகொண்டிருந்தாள்.

காலையிலிருந்து ஏழுமலை வீட்டில் தெரிந்த பரபரப்பில் என்ன விஷயம் என அறிந்துகொள்ள முடியாமல் நிலையில்லாமல் தவித்த நிர்மலா ஏழுமலை ஒரு பெரியவரை அணைவாக அழைத்துக்கொண்டு வீட்டினுள் செல்ல என்ன விஷயம் என அறிய தானும் ஒரு கிண்ணத்தை எடுத்துகொண்டு சக்கரை வாங்கவென்று பேர் பண்ணிக்கொண்டு பின்னாலேயே சென்றாள்.

தரகர் பேச ஆரம்பித்ததுமே அனைவரும் வாசலில் கவனமில்லாமல் தரகர் பேச்சிலேயே கவனத்தை வைத்திருக்க அனைத்து விஷயமும் நிர்மலாவின் காதில் தேனாக பாய்த்து.

கேட்டதை அப்படியே விடாமல் வாசலில் வைத்து சத்தமாக கூற அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள். ஒரு சிலர் நிர்மலாவிடம் நெருங்கி என்ன விஷயமென்று கேட்டு தெரிந்துகொண்டனர்.

“சக்கரை தீர்ந்துபோச்சேன்னு கொஞ்சம் நம்ம சந்திரக்காக்கிட்ட வாங்கலாம்னு போனேன்க்கா. நான் என்ன கனவா கண்டேன்? இப்படி நம்ம மித்ராவை பொண்ணு பார்க்க வரப்போறாங்கன்னு? நான் எதார்த்தமா தான் உள்ள போனேன். அப்போதான் அந்த தரகர் இந்த விஷயத்தை சொல்லிக்கிட்டு இருந்தாரு…” என்று பக்கத்து வீட்டு பெண்மணியிடம் நீட்டிமுழக்கிகொண்டிருந்தாள்.

தரகரிடம் பேசி அவரை அனுப்பி விட்டு நிர்மலாவிடம் வருவதற்குள் ஊரில் பாதிக்கும் மேலே விஷயம் தெரியும் படி செய்துவிட்டாள்.

ஏழுமலை தன்னைத்தான் தேடி கோவமாக வருகிறார் என்பதை தெரிந்து அவசர அவசரமாக வீட்டிற்குள் போய் கதவை தாழ் போட்டுகொண்டவள் வெளியேறவே இல்லை.

அக்கம்பக்கத்தவர்களின் பரிதாபமான பார்வையை எதிர்க்கொள்ளவே முடியாமல் உடைந்த மனதோடு வீட்டில் வந்து தொப்பென தரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக்கொண்டார்.

தான் நேற்று கோவத்தில் சொன்னது இன்று நிஜமாகிவிட்டதோ? என குமைந்துபோனார். அவர் எண்ணியதை போலவே,

“இப்போ உனக்கு சந்தோஷமா? வாய்க்கு வாய் தோஷம் கழிஞ்சது, தோஷம் கழிஞ்சதுன்னு சொன்னியே நேத்து. இன்னைக்கு அது போலவே ஆகிடுச்சு பார்த்தியா?…” என்று எரிந்து விழுந்தார் கோசலை.

“அக்கா இப்போ அதை விட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. தரகர் சொல்லி நமக்கு தெரிஞ்ச நந்தினி தோஷம் பத்தின விஷயம் நமக்கு மட்டுமில்லாம இப்போ இந்த ஊர் மொத்தமும் பரப்பிட்டா அந்த புண்ணியவதி. நாளைக்கே வேற மாப்பிள்ளை ஏதும் வந்தாலும் ஊருக்குள்ள விசாரிக்காமலா இருப்பாங்க? நம்ம பொண்ணு வாழ்க்கைக்கு என்ன செய்யபோறோம் நாம?…” என்று பூரணி கேட்க சந்திரா வழக்கம் போல அழுதுக்கொண்டே புலம்பினார்.

ஏழுமலையை பார்க்கத்தான் பாவமாக இருந்தது அனைவருக்குமே. அவர் எப்படியெல்லாம் கனவு கண்டார். என்னென்ன சீர் கொடுக்க வேண்டும் என்பது வரைக்கும் நேற்று இரவு முழுவதும் தானாக பேசிகொண்டிருந்தாரே என எண்ணி கலங்கினர்.

“இங்க பாருய்யா ஏழுமலை, இப்போதைக்கு இந்த விஷயத்தை அப்படியே விடு. கல்யாணம் தானா கூடி வரணும். நாம நினச்சா அதை உடனே நடத்திர முடியாது. நீ வருத்தபடாத…” என ஆறுதலாக பேசியவரின் கையை பிடித்துகொண்டு கண்ணீர் வடித்தார்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நந்தினிக்கு வேறொரு எண்ணம் உதித்தது. தனக்கு இருதாலி தோஷம் அப்படினா அவங்களுக்கு ஏதும் ஆபத்து வருமா? என பயந்தாள்.

அவ்வளவு நேரம் இருந்த தைரியம் மொத்தமாக வடிந்துவிட்டது. தனக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனையோ? என்று எண்ணி மருகினாள்.

கோசலையின் ஆறுதலில் கொஞ்சம் தெளிந்தவர் இனி கல்யாண பேச்சை உடனே எடுக்க வேண்டாம் என்று அதை தள்ளி வைக்க முடிவெடுத்துக்கொண்டார்.

“அக்கா நீ சொல்றது போலவே நான் இப்போதைக்கு நம்ம மித்ரா கல்யாணம் பத்தி பேச்சை எடுக்க மாட்டேன்…” என வாக்களிக்க அனைவருக்குமே அது நிம்மதியை தந்தது.

நிர்மலாவின் கைங்கரியத்தால் ஊருக்கே தெரிந்த நந்தினியின் திருமண தோஷ விஷயம் மகிமாவின் காதுக்கும் போனது. அவளுக்கு இதில் பெரிய நிம்மதியே.

தன் அண்ணியை இனிமேல் பெண்பார்க்க யாரும் வரப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டே அந்த சந்தோஷத்தில் உதயாவிடம் அந்த தகவலை கூற அவனால் இதை நம்ப முடியவில்லை. மகியிடம் வேறென்ன சொல்ல. தனக்கு சந்தோஷம் என்று மட்டும் கூறினான்.

மகியும் அப்போதுதான் ஞாபகம் வந்து நந்தினி படிப்பு விஷயத்திலும் ஏழுமலை ஏதோ செய்திருக்கிறார் என்றும் அதனால் தான் நந்தினி படிக்க விருப்பமில்லாமல் இருப்பதாக கூறியதாகவும் சொன்னாள்.

error: Content is protected !!