நட்சத்திர விழிகளிலே வானவில் – 22 (3)

அதே போல தனக்கு தெரிந்த மேனேஜர் மூலமாக தானே சூரிட்டி கொடுத்து மகிக்கு லோன் கிடைக்கவும் ஏற்பாடு செய்தான். இந்த வேலைகளை எல்லாம் பிரசாத்தின் கவனம் தன் மீது படராமல் பார்த்து பார்த்து செய்தான்.

முதலில் ரவி மட்டுமே மீனாட்சிபுரம் சென்று வீடு பார்க்க ஆரம்பித்தான். ஊருக்குள் நுழைந்ததும் யார், என்ன ஏதென்று விசாரித்த ஊர்மக்கள் காலியாக உள்ள சில வீடுகள் இருக்கும் தெருக்களை சொல்லினர். உதயாவின் அதிர்ஷ்டம் அதில் ஒன்று நந்தினியின் வீடிருக்கும் தெருவிலேயே நிர்மலாவின் பக்கத்து வீடு காலியாக இருந்தது. முதலில் குடியிருந்தவர்கள் நிர்மலாவின் அழிச்சாட்டியம் தாங்காமல் காலி செய்து போய்விட்டனர்.

ரவி சமயோசிதமாக முதலிலேயே அந்த வீட்டை பற்றி கேட்காமல் யாருக்கும் சந்தேகம் வராமல் மற்ற வீடுகளை பார்த்துவிட்டு சில சில குறைகளை கூறி கடைசியாக நிர்மலாவின் பக்கத்து வீட்டை பார்த்து பேசி முடித்தான். ஒரு வழியாக மகிமாவும், ரவியும் மீனாட்சிபுரத்தை நோக்கி பயணப்பட்டனர்.

———————————————————

வேலையாக கிளம்பி கொண்டிருந்த ஏழுமலை வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

“யார்மா நீ? புதுசா இருக்க?…” என தன்னை துளைக்கும் பார்வையோடு அழுத்தமாக கேட்டவரை பார்த்து எச்சில் கூட்டி விழுங்கிய மகிமா,

“நான் இங்க பக்கத்துல அதோ அந்த வீட்டுக்கு குடிவந்திருக்கேன் சார். நேத்துதான் சாமான்களை எல்லாம் எடுத்திட்டு வந்தோம். இன்னைக்கு தான் பால் காய்ச்சறோம். அதுக்கு பக்கத்து வீட்ல உள்ளவங்களை எல்லாம் அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன் சார்…” என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொல்ல நினைத்ததை சொல்லி முடித்தாள்.

அவளை பார்த்து முறைத்தவர், “நீ என்ன பெரிய பங்களாவை  சொந்தமா கட்டி அதுக்கு பால் காய்ச்சவா அழைக்க வந்திருக்க? வந்திருக்கிறது வாடகை வீடு. இதுல பாவுசா பால் காய்ச்ச அழைக்க வந்துட்டாங்க. போமா இங்க இருந்து. அதெல்லாம் யாருமே வரமாட்டாங்க…” என்று முகத்திலடித்தது போல விரட்டவும் மகிமாவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

ஏழுமலையின் சத்தம் கேட்டு வெளியே வந்த சந்திராவும், கோசலையும் அதிர்ந்து போயினர். மகிமாவின் கலங்கிய முகத்தை பார்த்ததுமே பாவமாக போய்விட்டது இருவருக்கும்.

“டேய், புதுசா வந்திருக்கிற பொண்ணுக்கிட்ட இப்படியா கூறு இல்லாம பேசுவ. உன் வேலையை பார்த்திட்டு போ. நீ உள்ள வாம்மா. வீட்டு ஓனர் ஏற்கனவே சொல்லிருந்தாரு. புதுசா குடித்தனத்துக்கு ஆள் வராங்கன்னு. நீதானா?..” என்று இலகுவாக பேசியவாறே கோசலை மகிமாவின் கையை பிடித்து அழைத்து போனார்.

“இங்க பாரு சந்திரா என் அக்காக்கிட்ட சொல்லி வை. இப்டிலாம் பழக்கவழக்கம் நமக்கு நல்லதில்லைன்னு. என் பேச்சை இப்போலாம் யாருமே மதிக்கிறதில்லை. உன் அண்ணன் வீட்ல என்னடானா நான் இருக்கும் போது யாருமே வரதில்லை. நான் அந்த பக்கம் போய்ட்டா உடனே எல்லோருமே கிளம்பி இங்க வந்திடறாங்க. இருக்கட்டும், எல்லோருக்கும் சேர்த்து ஒரு நாள் வச்சுக்கறேன்…” என கத்திவிட்டு விடுவிடுவென போய்விட்டார்.

வீட்டினுள் வந்த மகிமாவின் விழிகள் நந்தினியை காண அவளையறியாமல் பரபரத்தன. ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள் கோசலையும் சந்திராவும் கேட்கும்  கேள்விகளுக்கு மிக கவனமாக சுதாரிப்போடு பதில்களை கூறினாள்.

சிறிது நேரத்திலே நந்தினி அவள் அறையிலிருந்து வெளியே வரவும் சந்திராதான் அழைத்து மகிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சின்ன சிரிப்போடு மகிமாவை பார்த்தவள் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோசலை சொன்ன தகவல்களை மட்டும் உள்வாங்கிகொண்டாள்.

மகிமாவிற்கு ஆச்சர்யம் தாளவில்லை. பார்வைக்கு சிறுபெண்ணாக பாவாடை சட்டை, ரெட்டைஜடை என இருக்கும் நந்தினியின் முகத்தில் குழந்தைத்தனம் என்பது மருந்துக்கும் இல்லை. அப்படி ஒரு இறுக்கம் யாரையும் எட்டி நிற்க வைத்துவிடும் ஒட்டாத ஒரு பாங்கு என்று இருந்த நந்தினியின் இந்த பிம்பம் மகிமா சற்றும் எதிர்பார்க்காதது.

இன்னுமொரு குழப்பமும் மகிமாவை ஆட்டிப்படைத்தது. திருமணம் ஆனா பெண்ணிற்குரிய எந்தவிதமான மாற்றமும், கழுத்தில் மாங்கல்யமும் இல்லாமல் சாதாரணமாக இருந்தவளை குழப்பமாக பார்த்தாள்.

சிறிது நேரத்திலேயே பூரணியின் சத்தம் கேட்க உடனடியாக தன்  யோசனையிலிருந்து விடுபட்ட மகிமா வாசலை எட்டிப்பார்த்தாள். ஏழுமலை வெளியே சென்றதை பார்த்துவிட்டு நந்தினிக்கு பிடித்த சமையலை செய்து எடுத்துகொண்டு வந்திருந்தார் பூரணி.

மகிமாவிற்கு அவரையும் அறிமுகப்படுத்தி வைத்த சந்திரா காலையில் மகிமாவிடம் ஏழுமலை நடந்துகொண்ட முறையை சொல்லி புலம்ப ஆரம்பித்தார். அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் மரியாதைக்கு பூரணியையும் அழைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள் மகிமா.

நாட்கள் உருண்டோட மகிமாவிற்கு நந்தினி வீட்டினரையும் பூரணி, சந்திரா, கோசலை இவர்களது இயல்பான பேச்சும் மிகவும் பிடித்துவிட்டது.

அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஏற்பட தொடங்கியது. ஆனாலும் இந்த நெருக்கம் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை மகிமாவிற்கு. அதுவும் நந்தினியிடம் நெருங்க ரொம்பவே சிரமப்பட வேண்டியதாக இருந்தது.

இதையெல்லாம் முதலில் ஏழுமலை எதிர்த்தாலும் பின் ரவியின் தன்மையான பேச்சாலும் அணுகுமுறையாலும் தானும் அவர்களோடு சிறிது இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு அவ்வப்போது ரவியிடம் பேச ஆரம்பித்தார். ஆனாலும் அவரது கெத்தை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமலே இருந்தார்.

நிர்மலாவிற்குத்தான் இத்தனை வருடங்களாக தன்னை அருகில் நெருங்க விடாமல் எட்டியே நிற்க வைத்த குடும்பம் இன்று புதிதாக வந்தவர்களிடம் குழைவது பொறுக்கமுடியாமல் ஏற்பட்ட கடுப்பில் அவ்வப்போது மகிமாவிடம் வேண்டுமென்றே சண்டையிட ஆரம்பித்தாள்.

நிர்மலா பேச்சு வீண் வம்பு என தெரிந்தும் மகிமா பொறுமையாகவே இருந்தது நிர்மலாவிற்கு மிகவும் வசதியாகிவிட்டது. அவளது நடவடிக்கையும் பேச்சுக்களும் எல்லை மீற ஏழுமலையே ஒரு நாள் நிர்மலாவை பிடிபிடியென பிடித்துவிட்டார்.

அவ்வளவுதான் நிர்மலாவிற்கு ஏற்கனவே ஏழுமலை என்றால் அப்படி ஒரு பயம். அதற்கு மேல் மகிமாவை நிர்மலா ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

ஏழுமலையின் செயல் அனைவருக்குமே ஆச்சர்யம். அதன் பின் ஓரளவு நல்ல விதமாகவே மகிமாவோடு பேச ஆரம்பித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக மகிமா அந்த குடும்பத்திற்கு இன்றியமையாதவளாக ஆகிவிட்டாள். நந்தினி முதலில் சிறிது ஒதுங்கியே இருந்தாலும் பின் மகிமாவை தவிர்க்காமல் தவிர்க்க முடியாமல் ஓரளவுக்கு மெல்ல நெருங்க தொடங்கினாள்.

மகிமா இங்கே நடப்பதை உதயாவிடம் சொன்னவள் திருமணமான அறிகுறி எதுவுமே இல்லாமல் நந்தினி இருப்பதையும் கூறினாள். நந்தினியின் வெறுமையும், எதிலுமே பற்றில்லா தன்மையும், இறுக்கமும், முகத்தில் சிரிப்பின்மையும் என அனைத்தையும் கூற கூற உதயாவின் உள்ளம் அவளுக்காக அவளின் இந்த நிலைக்காக ரத்தகண்ணீர் வடித்தது.

அதை ஏனென்று அப்போதும் சிந்திக்க தோன்றவில்லை. நந்தினியின் இன்றைய நிலை தன்னால் நேர்ந்தது என்ற இரக்கம் மட்டும் தான் தன் மனதின் வேதனைக்கு காரணம் என்று அவனாகவே காரணத்தை கற்பித்து கொண்டான்.

ஏழுமலையின் அடக்குமுறையை பன்றி ஓரளவு தான் அறிந்ததை கூற அதை கேட்டவன் ஒரு நொடி தவித்து தெளிந்தான். பின் இது தான் எதிர்பார்த்ததுதான் என எண்ணிக்கொண்டவன் மகிமாவிடம் அதை பற்றி கவலைபட வேண்டாமென்று சொல்லி பின்னால் பார்த்துகொள்வதாக கூறி அதோடு முடித்துக்கொண்டான் உதயா.

ப்யூட்டி பார்லர் போய்விட்டு வந்து ரவியும் வீட்டிலில்லாத மிச்சமிருக்கும் சொற்ப நேரத்தை நந்தினியின் வீட்டிலேயே கழித்த மகிமா அத்தனை நாள் தான் கேட்கவேண்டும் என நினைத்ததை  கேட்டாள்.

“ஏன் மித்ரா, கேட்கிறேனேனு தப்பா எடுத்துக்காத. நீ நல்ல மார்க் எடுத்ததா விஜி அன்னைக்கு சொல்லிட்டு இருந்தான். நீ ஏன் மேல படிக்கலை? உன் மார்க்குக்கு இஞ்சினியரிங் எடுத்திருக்கலாமே?…” என தயங்கி தான் கேட்டாள்.

மகிமா கேட்டது சந்திராவிற்கு தான் திக்கென ஆகிற்று. ஆனால் அதை இயல்பாக எடுத்துக்கொண்ட நந்தினி,

“இதுல கோச்சுக்க என்னக்கா இருக்கு, எனக்கு மேல படிக்க விருப்பமில்லை. அதனாலதான்…” என மிக சாதாரணமாக கூறவும் தான் மூச்சே வந்தது.

“ஓ, அப்டியா? ஆனா வீட்லயே சும்மா இருக்கிறது உனக்கு போர் அடிக்கலையா?. எங்க வீட்டுக்கு கூப்பிட்டா கூட வரமாட்டிக்கிற?…” என லேசான சலிப்போடு மகிமா விடாமல் கேட்க,

“அதுக்கு என்ன பண்ணமுடியும்க்கா?…” என சிரித்துக்கொண்டே தானும் திருப்பி கேள்வி கேட்டவளை பார்த்து மகிமாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. கேட்டால் என்ன நினைப்பார்களோ என எண்ணிக்கொண்டே கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்து,

“மித்ரா, உன் கிட்ட கொஞ்ச நாளா ஒன்னு கேட்கனும்னு நினச்சுட்டே இருந்தேன். எனக்கு துணையா என்னோட பார்லர் வாயேன். நீயும் வீட்டுக்குள்ளயே தானே இருக்க? அங்க வந்தா உனக்கும் பொழுது போகும் தானே?…” என நந்தினியிடம் கேட்ட மகிமா உடனே சந்திராவிடம் திரும்பி,

“அனுப்பி வைங்கம்மா. பக்கத்து தெரு தானே? கூடவே கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்திடறேன்…” என கெஞ்சுதலாக கேட்டவளிடம் மறுக்க தோன்றவில்லை சந்திராவிற்கு. ஆனால் ஏழுமலை என்ன சொல்லுவாரோ என அவரை எண்ணித்தான் பயந்தார்.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த கோசலை, “மகிக்கண்ணு என் தம்பி வரவும் அவன் கிட்ட கேட்டுட்டு சொல்றோம். என்ன?…” என்று அன்பாக சொல்லவும் ஒரு நிமிடம் முகம் சுருங்கிய நந்தினி பின் இயல்பாகிவிட்டாள்.

பொதுவான விஷயங்களை பேசிகொண்டிருந்தவர்களை வாசலிலேயே உற்சாகமான குரலோடு ஆர்ப்பாட்டமாக வீட்டினுள் நுழைந்த ஏழுமலையின் முகத்தில் வெகுநாளைக்கு பின்னால் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

“என்னங்க முகமெல்லாம் ஒரே பூரிப்பா இருக்குது? என்ன விசேஷம்?…” என்ற சந்திராவை பார்த்து,

“ஆமாம் சந்திரா விசேஷம் தான். நாளைக்கு நம்ம மித்ராவை பொண்ணு பார்க்க வெளியூரில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க…” என அசால்ட்டாக குண்டை தூக்கி போட்டார்.

நந்தினிக்கு உலகமே தட்டாமலை சுற்றியது. அனைவருமே விக்கித்து நின்றனர் மகிமா உட்பட.

எப்படியும் உதயா வந்து நந்தினியோடு சேர்ந்துவிடுவான் என்ற கோசலையின் நட்பாசையில் ஒட்டுமொத்த நெருப்பையும் வாரிகொட்டினார்.

அனைவரது அதிர்ந்த முகம் ஏனென்று புரிந்த ஏழுமலையின் முகத்தில் பிடிவாதம் வந்தமர்ந்தது. தான் நினைத்ததை நடத்தியே தீரவேண்டுமென்று மீண்டுமொருமுறை உறுதி எடுத்துகொண்டார்.

ஏழுமலையின் முகம் திடீர் தீவிரமாகி அனைவரையும் கடுமையாக பார்த்த அழுத்தமான பார்வையில் மகிமாவின் முகம் யோசனையில் சுருங்கியது.

“ஏன் இந்த கடுமை? ஒரு வேளை அண்ணாவையும், அண்ணியையும் பிரிக்க பார்க்கிறார் போல?…” என எண்ணிக்கொண்டாள்.

தன்னை கூர்மையாக பார்த்துக்கொண்டே பேசிய ஏழுமலையை உறுத்து விழித்தவாறு கொதிக்கும் உள்ளத்தோடு விழிகள் இரண்டும் அக்னி பிழம்பாக ஜொலிக்க நின்றாள் நந்தினி.

error: Content is protected !!