நந்தினிக்கு பதட்டத்தை பட்டா போட்டதுபோல வியர்க்க ஆரம்பிக்க, உதயாவோ “போச்சுடா இவங்க பண்ற அலம்பலுக்கு இவளை தூக்கிட்டுத்தான் போகணும் போலையே?, ஆவுனா வியர்க்க வேற ஆரம்பிச்சிடுது இவளுக்கு, எந்த நேரம் பொசுக்குன்னு விளுந்து வைப்பாளோ?….” என்று கருவியபடியே அசையாமல் இருக்க,
நாச்சி, “ராசா உன் கல்யாணத்தைதான் யாரும் பார்க்கலை. இதையாச்சும் பார்க்கட்டுமே!…” எனவும் அவர் மேல் கொலைவெறியான முகத்தை காட்டிகொள்ளாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டு கொண்டே வகிட்டில் குங்குமத்தை இடவும் உடனடியாக அவன் புறந்தள்ளிய உணர்வு நாலுகால் பாய்ச்சலில் வந்து அடைக்கலமானது.
“அடடா அதே பீலிங்க்ஸூ, ஏன் இப்டி வருது?..” என்று இதமான மனதை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முனைய,
உறவுப்பெண் ஒருத்தியோடு மாடியறைக்கு நந்தினியை அழைத்து சென்றார் பாக்கியலட்சுமி. சலசலத்துகொண்டிருந்தவர்களை நோக்கி,
“சரி சரி போய் வரவேற்புக்கு தயாராகுங்க. இன்னும் ஒருமணிநேரமே இருக்கு!…” கணீர் குரலில் விரட்டினார் நாச்சி. அனைவரும் கலையவும்,
முதலில் வரவேற்பு என்றதும் திகைத்து வாயடைத்து நின்றவன் கெளரி தோளை தொட்டு அசைக்கவும் சுயஉணர்வு பெற்று “என்னாதூஊஊஊஊ?????…” என்றலறினான் உச்சபட்ச அதிர்ச்சியில்.
“அண்ணே இது என்ன லேட் ரியாக்ஷன்?…” என்றாள் நக்கலாக.
“நீ கொஞ்சம் பேசாம இரு!…” அவளை கடிந்து விட்டு நாச்சி பக்கம் பார்வையை திருப்பவும் நழுவபோன நாச்சியை பிடித்து நிறுத்தி,
“என்ன கிழவி இதெல்லாம்?…”
“என்னைய்யா ராசா உனக்கு தெரியாதா?…” என்றார் நாச்சி சாவகாசமாக.
“கிழவி உன்னை கொல்லபோறேன் பாரு?…”
“ஏன்? நான் என்ன பண்ணினேன்?..”
“என்ன பண்ணலை நீ?…”
“கல்யாணத்தை பார்க்க முடியலைன்னு வரவேற்பு வைச்சாவது ஜோடியா பார்க்கலாம்னு இந்த வயசான கிழவி ஆசைப்பட்டது ஒரு குத்தமா?…” என மூக்கை சீந்தியபடி ஒப்பாரி வைத்து ஊரை கூட்ட தயாரானதை பார்த்து பதறியே விட்டான் உதய்.
“ஏன் கிழவி இப்டி கத்தி கூப்பாடு போடுற?…” என்றான் சுற்றிமுற்றி பார்த்தபடி.
“அப்படிதான் சொல்லுவேன்!…” என்று அதோடு விடாமல்,
“கெளரி நீ போய் எல்லோரையும் வரச்சொல்லு, இன்னைக்கு ரெண்டுல ஒன்னு நான் பார்க்கணும், பார்த்தே ஆகணும்!…”
“என்ன நினச்சிட்டு இருக்கான், நான் தூக்கி வளர்த்த பையன், என் பேரன்னு இறுமாப்பா இருந்தேனே?…”
“இதை கேட்க யாருமே இல்லையா? ஏய்யா கண்ணு இங்க வந்து உன்ற புள்ள பண்ற அழிச்சாட்டியத்தை என்னான்னு கேளேன்?…” என்றார் முகாரி பாடியபடி.
“நானா? நானா அழிச்சாட்டியம் பண்றேன்?அப்போ இது பண்றதுக்கு பேர் என்னவாம்? கிழவி வாய்கூசாம எப்படி பிராடு விடுது பாரு கெளரி?…” என்றான் அழமாட்டாத குறையாய்.
கெளரிக்கு பாவமாக இருந்தது அண்ணனை காண, ஆனாலும் என்ன செய்ய? அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசினா கிழவி குதறிடும். பேசாம ஜகா வாங்கிடவேண்டிதான் என என்னும் போதே,
“இந்தா கெளரி என்ன யோசனையில நிக்கிறவ?…”
அதிர்ந்து சமாளித்தபடி, “ஒன்னுமில்லையே பாட்டி சொல்லு என்ன செய்யனும்?…” பம்மியபடி வினவ,
“இவன்கிட்ட கேளு என்ன முடிவுன்னு?…” என்றார் கறாராக.
“இனி நான் எங்க முடிவெடுக்க? அதான் எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டேல அப்புறம் என்னவாம்? வரவேற்புக்கு வரேன்!…” என்றான் கடுகடுவென முகத்தை வைத்துகொண்டு.
“இந்தா பாரு, இப்டி ஒன்னும் நீ சலிச்சுக்கிட்டு வரவேற்புல நிக்கவேண்டாம், சந்தோஷமா வரணும்னா வா!…” என்றார் விறைப்பாக.
“வேற யாருக்கோ வரவேற்புக்கு வேடிக்கை பார்க்க அழைக்கிறதுபோல இல்ல இது கூப்பிடுது? மாப்பிள்ளை நான்தானே? என்ற முக்கியமான சந்தேகம் வந்து ஒட்டிக்கொண்டது உதயாவிற்கு.
“என்ன யோசிக்கிற?…”என்றார் நாச்சி அதட்டலான குரலில் கூறியவர் வேகமாக முந்தானையை எடுத்து மீண்டும் ஒரு முகாரிக்கு மூக்கின் அருகே கொண்டுசெல்லவும் மனதிற்குள்ளேயே கதறினான்.
தலையெழுத்து எதுக்கெல்லாம் மிரட்டுது பாரு, உன்னை அப்றமா கவனிச்சுக்கறேன் என்று கருவியபடி உதடை இழுத்துவைத்து,
“ஹி ஹி ஹி நான் சந்தோஷமா தான் நாச்சி சம்மதிச்சேன்!…” என்றான்.
“என் ராசா!…” வழித்து நெட்டிமுறித்து.
“கெளரி நீ போய் உன் அண்ணனுக்கு அந்த புதுத்துணியை எடுத்தாந்து அவன் கைல குடு!…” என அதிகாரமாக.
“போய்யா போய் உடுத்திக்கிட்டு வெரசா வா!…” எனவும்,
கிழவி சாமர்த்தியத்தை எண்ணி கோவத்தை பிடித்துவைக்க முடியாமல் சிரித்துக்கொண்டே கன்னத்தை கிள்ளியபடி,
“கிழவி நீ இருக்கியே? சரியான எமகாதகி, என்ன பேச்சு பேசற, உன்னை சமாளிக்கவே முடியாது!…..” என ஐஸ் மழை பொழிந்தவனிடம்,
“பின்ன? உன் கிட்ட வேற எப்டி பேச? போய்யா சந்தோஷமா தயாராகி வா, எல்லோருமே காத்திருப்பாங்கள்ள?…” என்றனுப்பிவைத்தார்.
மீண்டும் பூஜை அறைக்குள் சென்று, “ஆத்தா மகமாயி, என்ற குழந்தைகள் ரெண்டுபேரையும் நூறு இல்ல இல்ல ஆயிரம் வருஷம் சந்தோஷமா வாழ வைக்கணும் தாயி!…” என்ற வேண்டுதலை கோரிக்கையாக வைத்துவிட்டு வெளியேறி தானும் புறப்பட தயாரானார்.
தயாராவதற்கு முன்பு நந்தினியை தேடியவன் கௌரியிடம் கேட்டு அவளிருந்த அறைக்குள் நுழைந்தான்.
ஆள் அரவமற்று வெறுமையாக இருந்த அறையை பார்த்தவன் கிளம்ப எத்தனிக்கையில் குளியலறயிலிருந்து வெளிவந்த நந்தினியை கண்டு மூச்சுவிடவும் மறந்தான். வரும்போதிருந்த அலங்காரம் அனைத்தையும் களைந்து எந்தவிதமான ஒப்பனையும் இன்றி முகத்தை பளிச்சென நின்றிருந்தவளின் வசீகரத்தில் அவன் மனம் லயித்துவிட்டது.
அதுவும் ஒரு கணமே. தன்னை சுதாரித்துகொண்டவன், “நந்தினி உனக்கு வரவேற்புக்கு ட்ரெஸ்?….” என அதற்குமேல் பேசமுடியாமல் தடுமாறினான்.
“கெளரி கொண்டுவந்து குடுத்தாங்க இதோ இருக்கு பாருங்க?….” என கட்டிலில் வீற்றிருந்த புடவையையும் நகைகளையும் காட்டினாள். அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளை கண்டவன்,
“இன்னும் ரெண்டு வார்த்தை பேசினா வாயில இருக்கிற முத்து உதிர்ந்திருமாக்கும்….” என முனங்கிவிட்டு ஏதாவது பேசுவாளா என எதிர்பார்த்தான். அவளோ வாயை திறக்காமல் அவனின் செய்கைகளை புரியாமல் பார்த்தாள்.
“ஏன் இப்டி பார்க்கா? அதுசரி உதயா கல்யாணமான அன்னைக்கே நீ பொண்டாட்டிகிட்ட லூஸுன்னு பேர்வாங்க போற. இதுக்குமேல நின்னா சரியா வராது….” என எண்ணியவன், “சரி நீ தயாராகு, நானும் போய் கிளம்பறேன்….”என்று உரைத்துவிட்டு மனமே இல்லாமல் கிளம்பினான்.
தன் அறைக்குள் நுழைந்தவனிடமிருந்து எகிறி குதித்த மனசாட்சி அவன் முன் வந்து சுற்றுமுற்றும் நமக்கு ஆப்பைத்தான் தேடுதுவென அமைதியாக நின்றான்.
“கார்ல வரும்போது ஒரு மவராசனுக்கு அந்த பொண்ணை பார்க்கும் போது வெறும் இரக்கம் மட்டுமே தோணுச்சாம். அதான் எத்தனை சென்டிமீட்டர் இரக்கம்னு கேட்டுட்டு போலாம்னு தேடுறேன். அந்த மானஸ்தன கண்டேபிடிக்க முடியலை…” என்றது படுகேவலமாக பார்த்துக்கொண்டே.
“இப்போ யோசிக்க டைம் இல்லை. உன்ன வெளில விட்டது தப்பு…” என்று தப்பிக்க பார்த்த இழுத்து பிடித்து மனதிற்குள் கட்டிவைத்து புறப்பட தயாரானான்.
கீழே பாக்கியத்திடம் பேசிகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் கவலை அப்பிய முகத்தை கண்ட நாச்சி,
”என்ன கண்ணு? ஏன் இப்டி கலங்கி நிக்கிற?…” என்றார்.
“தனத்துக்கு போன் பண்ணினேன்மா….”என்று தயங்கி தயங்கி சொன்னதுதான் தாமதம் என்ன நடந்திருக்குமென தெளிவாக புரிந்துகொண்டார்.
“அவ விசேஷத்துக்கு வரலைன்னு சொல்லியிருப்பா, இதென்ன புதுசாய்யா?…” என்று சமாதானபடுத்தும் குரலில் சொல்லவும்,
“பிரபாக்காக வருவான்னு நினச்சேன், என் பிள்ளைக்கு என்னோட ஆசிர்வாதம் எப்போவும் உண்டுன்னு சொல்லிட்டாம்மா, நான் என்ன செய்ய?…” என துயரமான குரலில் கூறினார்.
மகனின் வேதனையை பொறுக்கமாட்டாது யோசனையில் ஆழ்ந்தவர் நிமிடத்தில் அதற்கு ஒரு வழிகண்டுபிடித்தார் நாச்சி.
“இப்போ என்ன அவ தானே ஊருக்குள்ள வரமாட்டேன்னு வீம்புல இருக்கா, விசேஷம் எல்லாம் முடியவும் புள்ளைகள அனுப்பி நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லலாம், உனக்கு இப்போ திருப்தி தானே?…” எனவும் அப்போதும் முழுமையாக தெளிவடையாத முகத்துடன்,
“பிரசாத்……” என இழுத்தார்.