நட்சத்திர விழிகளிலே வானவில் – 22 (2)

“நீயோ நானோ ஏன் சிவாவோ போய்ருந்தா நந்தினி குடும்பத்துல எல்லோருக்குமே தெரிஞ்சுபோய்டும். அவங்கதான் நம்மை பார்த்திருக்காங்களே?…” என கூறியவனுக்கு தெரியவில்லை நந்தினிக்கு தன்னை தவிர வேறு எவர் முகமும் அவளுக்குள் ஆழமாக பதியவில்லை என்று.

“அதனால அவளுக்கே பிரச்சனை வந்தாலும் வரலாம். அதான் அவங்க பார்க்காத, அவங்களுக்கு தெரியாத ஒருத்தரை அனுப்பனும்னு நினச்சேன். நான் கூட இந்த விஷயத்துல நேரடியா இறங்க முடியாம தான் அடுத்தவங்களை அனுப்பிருக்கேன்…” என ஆயாசமாக கூறினான்.

“உனக்கு ஏண்டா பிரபா இந்த கவலை. பேசாம நீ போய் அந்த பொண்ணை கூட்டிட்டு வா. யாரால தடுக்க முடியும்? இல்லைனா வீட்ல பேசு. நாச்சி டார்லிங் ஒரு ஆள் போதுமே. பத்து ஏழுமலையை கூட சமாளிப்பாங்க. பேசாம நான் சொல்றதை கேளுடா…” என்றவனை மறுக்கும் தொனியில் கோவம் கலந்த குரலில்,

“வாயை மூடு விஷ்ணு. சும்மா திரும்ப திரும்ப தேய்ஞ்ச ரெக்காடர் போல பேசாத. அந்த பொண்ணு மேல எனக்கு எந்த விதமான விருப்பமும், ஆசையும் இல்லைன்னு எத்தனை முறை சொல்றது உனக்கு?…அவ சின்னப்பொண்ணு. இப்போவே கல்யாண வாழ்க்கைனா, ஓ மை காட். அந்த பொண்ணே இதுக்கு சம்மதிக்காது…” என்றவன்,

“அந்த பையன் விஜி சொன்னதை கேட்ட தானே? ப்ளஸ் டூ முடிச்சு நல்ல மார்க் எடுத்திருக்காம். நல்ல காலேஜ்ல விரும்பின சீட் கிடைக்கனும்ன்ற வேண்டுதலுக்காக தான் குலதெய்வம் கோவிலுக்கே வந்திருக்காங்கன்னு. அவ நல்லா படிக்கட்டும்…” என முடித்துகொண்டான்.

“அப்பறம் எதுக்காகடா மகியை அவங்க ஊருக்கு அனுப்பி வேவு பார்க்கனும்னு சொல்ற? உன் மனசுல அந்த பொண்ணை பத்தின சின்ன தாக்கம் கூடவா உனக்கு இல்லை. காப்பாத்தினதோட அந்த பொண்ணை விட வேண்டியதுதானே? திரும்ப ஏன் அந்த பொண்ணோட வாழ்க்கையில தலையிடற?…” என்று எரிச்சலாக கேட்கவும்,

“பிரசாத்காக. அவன் பழி உணர்ச்சியில அந்த பொண்ணை ஒண்ணும் செய்ய கூடாதுன்றதுக்காக…”

“அவன் எங்க வந்தான் இதுல? அவன்தான் நினச்சது நடக்கலைன்னு அன்னைக்கே போய்ட்டானே?…” என யோசனையாக கேட்டான் விஷ்ணு.

“இல்லைடா, அவனோட கோவம் கொஞ்சமும் குறையலை. இன்னும் சொல்லபோனா அவன் ஆவேசம் அதிகமாகத்தான் ஆகிருக்கு…”

“பிரபா, அது உனக்கெப்டி தெரியும்?… கொஞ்சம் தெளிவா சொல்லுடா…” என பதட்டமான குரலில் கேட்டான் விஷ்ணு.

“ம்ம் நாம அருவியூர்ல இருந்து வந்த மறுநாள் நாம எக்ஸ்போர்ட் பண்ணவேண்டிய சில ட்ரெஸ் மெட்டீரியஸ்ல டேமேஜ் இருக்குன்னு சொல்லி அந்த பேக்கிங்க்ஸ் மட்டும் நாம தனியா நம்ம கார்மெண்ட்ஸ் குடோன்ல வச்சிருந்தோமே?… அது கூட தண்ணீர்ல நனைஞ்சு இருந்ததே?…”

“ம்ம் ஆமா. அதையும் அவன் தான் செய்திருப்பான். அவனை விட்டா வேற யார் செய்வா இந்த மாதிரி காரியங்களை எல்லாம்?…” என்று கடுப்பானான் விஷ்ணு பிரசாத்தை நினைத்து.

“எப்பவும் இல்லாம அன்னைக்கு எனக்கு போன் பண்ணி வேற பேசினான். நேத்து என் கண்ணுல மண்ணை தூவி அவளை காப்பாத்தி அவ குடும்பத்துல ஒப்படைச்சுட்ட திமிர்ல இருக்கிற உன்னை நான் சும்மா விடமாட்டேன்…”

“நீ அவளை காப்பாத்த தான் அவளுக்கு தாலி கட்டினன்னு அவ குடும்பத்தோட திருப்பி அனுப்பினன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவளை எப்படி என் கால்ல வந்து விழ வைக்கன்னும் எனக்கு தெரியும். நீ தலையிட்டு காப்பாத்தின அவ அழிஞ்சான்னு நீ நினச்சுக்கோ. இதை நினச்சு நினச்சே நீ கொஞ்சம் கொஞ்சமா தவிச்சு துடிக்கனும்டா…”

“இதுல உங்க ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல பழிவாங்கின திருப்தி எனக்கு பரிபூரணமா கிடைக்கும். நீ இனிமே அவளை எப்படி காப்பாத்துறன்னு நானும் பார்க்கறேன். உங்க ரெண்டுபேரோட நிம்மதி சந்தோஷம் அத்தனையையும் சர்வநாசம் பன்றேன் பாரு…” அப்டின்னு பைத்தியம் போல வெறிபிடிச்சு பேசறவன்கிட்ட நான் என்னடா சொல்ல?…” என ஆற்றாமையோடு கேட்டான் உதயா.

இதையெல்லாம் கேட்ட விஷ்ணு கொலை வெறியானான் பிரசாத் மேல். “அவன் அடங்கவே மாட்டானா பிரபா? இதை அப்போவே என் கிட்ட சொல்லிருக்கலாமே?.. சாரிடா. நீயா மனசுக்குள்ளயே வச்சு தவிக்கிறதுக்கு பதிலா தனம் சித்திக்கிட்ட சொல்லேன். அவங்களாவது கண்டிக்கட்டும்…” என்றவனை கசந்த புன்னகையோடு பார்த்தவன்,

“உனக்கு தெரியாதாடா, சித்திக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் நிம்மதி எல்லாமே பிரசாத் தான். ஏற்கனவே அவன் என்னோட பன்ற பிரச்சனையால ரொம்பவே மனசு நொந்து போய் இருக்காங்க. என் பங்குக்கு நான் வேற அவங்களை கஷ்டபடுத்தனுமா?…”

“இதுதாண்டா அவனுக்கு ரொம்பவும் துணிச்சல். எதுவானாலும் நீயும் உங்கப்பாவும் பொறுமையா போறீங்க பாரு. அன்னைக்கு டேமேஜ் மெடீரியல்ஸ்ல வெறும் தண்ணியை ஊத்தினதால நமக்கு அந்த அளவுக்கு பாதிப்பில்லாம போச்சு. அந்த கிறுக்கன் வெறுப்புல மொத்த குடோனுக்கும் நெருப்பு வச்சிருந்தா என்ன பண்ணுறது? கொஞ்சம் யோசிடா…”

“விடுடா பார்த்துக்கலாம். இப்போதைக்கு அந்த பொண்ணை காப்பாத்தனும். பிரசாத் நடவடிக்கைதான் ஓரளவுக்கு தனம் சித்தி மூலமா நமக்கு தெரியுதே?… இந்நேரம் ஏழுமலை எங்க இருக்கார் அப்டின்றதை பிரசாத் கண்டுபிடிச்சிருப்பானான்னு தெரியலை. ஆனா அவனுக்கு முன்னாடி நாம முந்திக்கனும். எந்த வகையிலையும் நந்தினியை நெருங்க விடக்கூடாது அவனை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுற வரை…” என தன் நெஞ்சம் வலிக்க வலிக்க கூறியவன்,

“என்னால அன்னைக்கு முடிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான். அருவியூர்ல இருந்து வெளியேற இருக்கிற இரண்டு வழியில எந்த வழியிலையும் அவனால வெளியேற முடியாத படி கணேஷ், சிவா ப்ரெண்ட்ஸ் வச்சு பார்த்துக்கிட்டேன். இல்லைனா அவனும் நந்தினியை ஃபாலோ பண்ணி இடத்தை கண்டுபிடிச்சிருப்பான். அந்த அளவுக்கு வன்மம் வச்சிட்டு இருக்கான்…”

“ஏனா நான் தலையிட்டு அந்த பொண்ணை காப்பாத்தினது, என் முன்னால அவன் இருந்த சூழ்நிலை, அவனோட தப்பான இன்னொரு பக்கத்தை நான் தெரிஞ்சு என் முன்னால தாழ்ந்து நிக்கவேண்டியதா போச்சே அப்டின்ற அவமானமும் அவனை மிருகமா மாத்திருச்சு. என் மேல உள்ள கோவமும் இப்போ மொத்தமா நந்தினியை பழிவாங்குறதால தீரும்னு அவன் நினைக்க ஆரம்பிச்சுட்டான்…”

“நான் எப்படிடா சும்மா இருக்க முடியும். ஏதோ என் மனசுல ஏற்பட்ட நெருடலால அன்னைக்கு அவங்க போகும் போதே ஃபாலோ பண்ண ஆள் அனுப்பினது நல்லதா போனது. இல்லைனா நானும் அவளோட அட்ரெஸ் தெரியாம அலைய வேண்டியதா இருக்கும். சரி விடு வா நாம மகிமா வீட்டுக்கு கிளம்புவோம்…” என விஷ்ணுவை சமாதானம் செய்து மகிமாவின் வீடு நோக்கி புறப்பட்டனர்.

இவர்கள் இருவரும் வரும் முன்னரே ரவியிடம் உதயா சொன்ன எல்லா விஷயத்தையும் சொல்லியிருந்தாள் மகிமா. ரவிக்கும் உதயாவின் நிலை புரியத்தான் செய்தது. ஆனாலும் இந்த விஷயத்தில் ஆழம் தெரியாமல் காலை விட அவன் விரும்பவில்லை. வரட்டும் பேசிவிட்டு பின் முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டான்.

ரவி வாசலிலேயே காத்திருந்து உதயா விஷ்ணு வரவும் வீட்டினுள் அழைத்துசென்றான். வீடு சிறியதாக இருந்தாலும் அம்சமாக அழகாக இருந்தது.

இருவரும் நலம் விசாரித்து மற்ற விஷயங்களை பேச ஆரம்பித்தவர்களை சாப்பிட்டு பொறுமையாக பேசலாம் என்று கூறிவிட்டான் ரவி. இவர்கள் வருவது தெரிந்து மகிமா ஏற்கனவே சமைத்து முடித்திருந்த படியால் உடனே சாப்பிட அமர்ந்தனர்.

பொறுமையாக இருந்தாலும் உதயாவிற்கு எல்லாம் நல்லவிதமாக நடக்கவேண்டுமே என்ற படபடப்பு அவனது இதயத்துடிப்பை பலமடங்கு அதிகமாக்கியது. அவனுக்கு உணவு கூட அவ்வளவு எளிதாக இறங்கவில்லை.

சாப்பிட்டு முடிக்கவுமே விஷ்ணுதான் பேச்சை தாமதிக்காமல் தொடங்கினான். உதயாவின் அவஸ்தையை கண்கூடாக கண்டவன் ஆயிற்றே.

“ரவி, மகி உங்க கிட்ட எல்லாம் சொன்னாளா?…” என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“ம்ம் சொன்னா சார். உதயா சார் வொய்ப் பத்தி, அவங்க அங்க ஏதோ சிக்கல்ல இருக்கிறது பத்தியும் சொன்னா. ஆனா தப்பா நினைக்காதீங்க. எங்களுக்கு நீங்க செய்தது பெரிய உதவி. இந்த ஜென்மத்துல நாங்க அந்த நன்றியை மறக்க மாட்டோம்…” என்றவன்,

“ஆனா எனக்கு உதயா சார் விஷயம் பத்தி கொஞ்சம் தெளிவா சொன்னா தான் இதுல நாங்க என்ன உதவி செய்ய முடியும்னு பார்க்கணும்…” என பளிச்சென கூறியவனை பார்த்து புன்னகைத்த உதயா,

“உங்களுக்கு இதுல எந்த பிரச்சனையும் வராது ரவி. அதுக்கு நான் பொறுப்பு. நாங்க உங்களை வற்புறுத்தலை. எங்க மேல நம்பிக்கை இருந்தா நீங்க…” என பேசும் போதே இடைபுகுந்த ரவி,

“ஐயோ என்ன சார் நம்பிக்கை அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு. சரி விடுங்க. நாங்க என்ன செய்யணும் அங்க போய். அதை சொல்லுங்க முதல்ல…” என்ற ஒப்புதலில் விஷ்ணுவிற்கும் உதயாவிற்கும் சந்தோஷம் தாளவில்லை.

“ரவி அதுக்கு முன்னால நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. இந்த போட்டோவை பாருங்க…” என்று மகிமாவிடம் காட்டிய அதே புகைப்படத்தை ரவியிடம் காட்ட அவன் அதை பார்த்து துணுக்குற்றான்.

குழப்பமாக உதயாவை பார்த்தவன், “இந்த கல்யாணம் எப்படி நடந்ததுன்னு நாங்க தெரிஞ்சுக்கலமா?…” என்றான்.

“இங்க பாருங்க ரவி. இப்போதைக்கு உங்ககிட்ட நாங்க சொல்ல வேண்டியது. எங்க கல்யாணம் ஒரு நிர்பந்தத்துல நடந்தது. அவங்க வீட்ல யாருக்குமே அதுல விருப்பம் இல்லை. நந்தினிக்கு இதில முழு சம்மதமான்னும் தெரியலை. அவளை காப்பாத்ததான் நான் கல்யாணம் செய்தேன். ஆனா அவளை அப்படியே விட மனசில்லை…”

“அவ இப்போதைக்கு படிப்பை முடிக்கட்டும். அதுக்கப்றமா எங்க வீட்ல நான் பேசறேன். அதுவரை நான் காத்திருப்பேன்…” என்று பொய் சொல்லும் போதே குற்றவுணர்வில் துடித்த தன் மனதை அடக்கி நல்லதுக்கு தான் பொய் சொல்றோம் தப்பில்லை என்று தனக்கு தானே சமாதானபடுத்திகொண்டான்.

“ரொம்ப நல்லது சார். நாங்க உங்க வொய்ப் கிட்டயும் அங்க உள்ளவங்க கிட்டயும் எப்படி நடந்துக்கணும். அதை சொல்லுங்க சார்…” என வார்த்தைக்கு வார்த்தை நந்தினியை உதயாவின் வொய்ப் என்று குறிப்பிட்ட ரவியை பார்த்து மிகவும் சங்கடமடைந்தான் உதயா.

“நான் ஓரளவு எனக்கு தெரிஞ்ச ஆளை வச்சு விசாரிச்சதுல அவங்க வீட்டோட நீங்க பழகுறது ரொம்ப கஷ்டம். அவங்கப்பா ஏழுமலை சரியான ஆள். அவர் கிட்டதான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். உங்களை நான் தான் அனுப்பினேன்னு எந்த சூழ்நிலையிலும் தெரியகூடாது…” என்றவனிடம்,

“ஏன் சார் அது கிராமம்னு சொல்றீங்க? நாங்க யார், அங்க எப்படி வந்தோம்னு என்னனு கண்டிப்பா விசாரிப்பாங்களே?…” என சந்தேகம் கேட்டான் ரவி. இவர்கள் இருவரும் ஆலோசித்துகொண்டிருக்க இவர்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர் மகிமாவும், விஷ்ணுவும்.

“அந்த புள்ளையை காப்பாத்த ஆயிரம் வழி யோசிப்பானாம், ஆனா பொண்டாட்டின்னு நினச்சு கூட்டிட்டு வந்து வாழ ஒரு வழி கூட யோசிக்க மாட்டானாம். இவனோட மனசு எப்போ புரிஞ்சு இவனுக்கு என்னைக்குதான் புத்திவர போகுதோ?…” என மனதினுள் நினைத்து பெருமூச்சு விட்டான் விஷ்ணு. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் ரவியிடம் பேசி கொண்டிருந்தான் உதயா.

“நீங்க ஊருக்கு குடி போகும் முன்னாலையே அங்க உங்களுக்கு ஒரு வேலையை ஏற்பாடு பண்ணிடலாம். நீங்க சாதாரணமா அந்த ஊருக்கு வேலைகிடச்சு போனதாகவே காட்டிக்கோங்க. எங்க யாரையும் பத்தி அவங்க கிட்ட மூச்சு கூட விடாதீங்க…”

“நம்மோட தொடர்பு போன் மூலமாகவே இருக்கட்டும். முக்கியமா மகி நீதான் அவங்க வீட்டோட நெருங்கி பழக வேண்டி இருக்கும். கவனம் மகி…” என இன்னும் அவர்கள் அங்கே சென்று நடந்துகொள்ள வேண்டிய முறைகளை பற்றி விளக்கினான் உதயா.

அனைத்தும் பேசி முடித்து ஒருவழியாக கிளம்பியவர்கள் அடுத்த ஒரு வாரத்தில் மீனாட்சிபுரம் பக்கத்தில் அரைமணிநேர பயண தொலைவில் உள்ள மில்லில் ரவிக்கு இப்போது பார்த்துகொண்டிருந்த வேலையை விட நல்ல சம்பளத்தில் தன் நண்பன் மூலமாக நல்ல ஒரு உத்தியோகத்தை பார்த்துக்கொடுத்தான்.

error: Content is protected !!