நட்சத்திர விழிகள் – 22
உதவியென்று உதயா கேட்டதுமே எதற்காக, என்னவாக இருக்கும் என விஷ்ணு குழம்பினான். மகிமா என்ன, ஏதென்று ஒரு நொடி கூட யோசிக்கவே இல்லை.
“சொல்லுங்கண்ணா, என்னால முடியும்னா கண்டிப்பா உங்களுக்காக செய்வேன்…” என வாக்களித்தவளை நெகிழ்வாக பார்த்தவன்,
“உனக்கு இப்போ இங்க வேலை இருக்கா மகி?…” என்றான் உதயா.
“இல்லைங்கண்ணா, என்னை நாளைக்கு வரசொல்லிட்டாங்க. இப்போகூட அதை பத்திதான் போன்ல அவர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்…” என மகிமா சொல்ல அப்போதுதான் விஷ்ணுவிற்கும் உதயாவிற்கும் உரைத்தது.
மகிமாவின் கணவனின் நலத்தை பற்றி இன்னும் தாங்கள் விசாரிக்கவில்லை என்று. தங்களுக்கு தானே மனதிற்குள் ஒரு கொட்டுவைத்து கொண்டவர்கள்,
“ஓ ரவி நல்லா இருக்காரா?, எங்களையாவது நீ கான்டெக்ட் பண்ணிருக்கலாமே?…” என்று வருத்தம் தோய்ந்த குரலில் மாறி மாறி கேட்டனர் மகிமாவிடம்.
“பரவாயில்லைண்ணா, எங்க கல்யாணத்தால தான் நீங்களும் அண்ணாவும் பிரியவேண்டியதாயிற்று. அதான் இன்னும் உங்களை எதுக்கு தொந்தரவு கொடுக்கனும்னு தான். அவருக்கு இப்போ இருக்கிற ஜாப் டெம்பரவரி தான். அவர் வேலை பார்க்கிற மில்லுல நிறைய பேரை வேலை நீக்கம் செய்துட்டு வராங்க போல. இந்த லோன் போட்டு பார்லர் ஆரம்பிக்கணும் நினச்சது கூட அதனால எடுத்த முடிவுதான்…”
“ஓ அப்படியா?. இருந்தாலும் நீ முன்னாலேயே சொல்லிருக்கலாம். சரி அதை விடு. வா வெளில போய் பேசலாம். பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க போய்டலாம்…” என கூறி மகிமாவை அழைத்துகொண்டு முன்னால் நடந்தான் உதயா.
“இவன் என்னைத்தானே கூட்டிட்டு வந்தான். கூட வந்த பாவத்துக்கு என்னை கண்டுக்காம அம்போன்னு விட்டுட்டு போறானே? இவனோட என்னன்னு நான் குப்பைக்கொட்ட போறேனோ?…” என வானத்தை பார்த்து புலம்பியவனின் தலையில் சுரீரென வலிக்க குட்டிய உதயா,
“ஏண்டா? கொட்றதும் தான் கொட்டுற? ஒரு மல்லிகை, முல்லப்பூன்னு கொட்டேன். வாசமாவது இருக்கும். வந்துட்டான் பெருசா பேச. உனக்கு தனியா வெத்தலை, பாக்கு, கெட்டிமேளம்லாம் வச்சா கூப்பிடுவாங்க?… அடச்சீ வா பின்னால…” என அவனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நடந்தான்.
பார்க்கில் நுழைந்தவர்கள் அங்கிருக்கும் காலி இருக்கையில் அமர்ந்தனர்.
உதயாவிற்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. வேகமாக அழைத்து வந்துவிட்டானே தவிர இந்த உதவியை கேட்டால் மகிமா தன்னை பற்றி எப்படி எடுத்துக்கொள்வாளோ என கவலை கொண்டான்.
“என்னடா பிரபா, பேசணும்னு கூப்பிட்டு வந்துட்டு அமைதியா இருக்க?…” என சிந்தனைவயப்பட்டிருந்தவனை கலைத்தான் விஷ்ணு.
“ம்ம் பேசணும். அதான் எப்டி சொல்லன்னு தெரியலைடா? மகி எப்டி புரிஞ்சுப்பான்னும் தெரியலை?…” என தவிப்போடு கூறியவனை புரியாமல் பார்த்தனர் விஷ்ணுவும், மகியும்.
அவனது இந்த தடுமாற்றம் தயக்கம் எல்லாமே அவர்களுக்கு புதிதாக இருந்தது. எதை சொல்ல இந்த அளவிற்கு வருந்துகிறான் என குழம்பினர்.
“அண்ணா, நான் ஏன் உங்களை தப்பா நினைக்க போறேன்?… உங்களை பத்தி எனக்கு தெரியாதா?… எதுவானாலும் என் கிட்ட தாராளமா சொல்லுங்க அண்ணா…” என மகிமா சொல்லவும் தான் கொஞ்சம் தெளிவானான்.
“எனக்காக கொஞ்ச நாள் நீ மீனாட்சிபுரம்ன்னு ஒரு ஊர்ல போய் குடும்பத்தோட தங்க முடியுமா?…” என்றவனிடம்,
“டேய் பிரபா? அது எந்த ஊர்டா?… கேள்விபட்டது போல இல்லையே?.. அங்க எதுக்காக நம்ம மகி குடும்பத்தோட போய் தங்கணும்?… கொஞ்சம் புரிகிறது போல சொல்லேன்?…” என கேட்ட விஷ்ணுவை முறைத்தவன்,
“கொஞ்ச நேரம் அமைதியா இருடா. படுத்தாத. அதான் சொல்லிட்டு இருக்கேனே? அப்பறம் என்ன அவசரம் உனக்கு?…” என அவனிடம் கடுப்படித்தான் உதயா.
அவனது கோவத்தில் விஷ்ணு கப்பென வாயை மூட்டி அதில் ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டே உதயாவை பார்க்க அவனை முறைத்து விட்டு தான் மகியின் புறம் திரும்பினான் உதயா.
“இங்க பாருமா மகி. இப்போ நான் சொல்றதை கேட்டு நீ அதிர்ச்சியாகிடாத. முதல்ல நான் ஒரு போட்டோ காட்டுறேன் பாரு…” என்றவன் தன் மொபைலில் இருந்த போட்டோவை மகிமாவிற்கு காட்டினான்.
அதை பார்த்தவளுக்கு மூச்சே அடைத்தது. அது அருவியூரில் நடந்த, உதயாவால் நடத்தப்பட்ட நந்தினி உதயா திருமணப்புகைப்படம்.
மகிமாவின் அதிர்ந்த முகத்தை பார்த்த விஷ்ணு எந்த போட்டோவை அவளிடம் காட்டியிருப்பான் என யோசனைக்குள்ளானவன் அதை திரும்ப வாங்கி பார்த்தான்.
“இது தனக்கும் கூட கணேஷ் அனுப்பியதாச்சே? எதுக்காக இதை மகி கிட்ட காண்பிச்சிட்டு இருக்கான்?…” என்ற குழப்பத்தில் தலை வெடிக்கும் போல இருந்தது விஷ்ணுவிற்கு.
“அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா? அதுவும் இப்படி ஒரு…. ஒரு…” என்று முடிக்க முடியாமல் வார்த்தைகளை தேடியவளை பார்த்து புன்னகைத்தவன்,
“ஆமாம் மகி. எனக்கு கல்யாணம் ஆகிருச்சு. என் மனைவி பேரு மித்ராநந்தினி. அவளோட ஊர் தான் மீனாட்சிபுரம். இப்போ சூழ்நிலை சரியில்லாததால நாங்க பிரிஞ்சிருக்கோம். அதனாலதான் நான் உன் கிட்ட இந்த உதவியை கேட்கிறேன். எனக்காக செய்வியா?…” என்று இறைஞ்சுதலுடன் கேட்ட உதயாவை திறந்த வாயை மூட கூட தோன்றாமல் திகைத்துப்போய் ஆவென பார்த்தபடி இருந்தான் விஷ்ணு.
“இதுல நான் செய்ய சென்ன அண்ணா இருக்கு? எனக்கு ஒண்ணுமே புரியலையே?…” என்ற மகியிடம்,
“சொல்றேன்மா. நீ மனசு வச்சா முடியக்கூடிய விஷயம் தான் அதனாலதான் உன்கிட்ட கேட்கிறேன்…”
“அடப்பாவி, அந்த பொண்ணு எந்த ஊர், அட்ரெஸ் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?… பெருசா சீன் போட்ட. மனிதாபிமானம் அது இதுன்னு…” என பொரிந்து தள்ளிய விஷ்ணுவை கண்களால் மகிமாவை காட்டி அமைதியாக இருக்கும்படி அடக்கியவன் மெல்லிய தவிப்போடு மகிமாவின் பதிலை வேண்டி எதிர்பார்த்து நின்றான்.
“சரி சொல்லுங்க அண்ணா. என்ன பிரச்சனை உங்களுக்கும் அண்ணிக்கும் நடுவில்?…”
உடனடியாக நந்தினியை அண்ணி என்று உரிமையாக விளித்த மகியை எண்ணி மனதினுள் மெச்சிக்கொண்டான். ஏனோ அந்த வார்த்தை உதயாவின் இதயத்திற்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
“நீ அவங்க ஊருக்கு போகணும். அங்கேயே ஒரு வீட்டை பிடிச்சு குடியிருக்கணும். எவ்வளோ நாள்ன்னு சொல்ல தெரியலை?… ஆனா அவளுக்கு அங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கணும். நீ உடனே கூட சொல்லவேண்டாம் ரவிக்கிட்ட பேசிட்டே சொல்லு. இல்லைனா நானே பேசிப்பார்க்கறேன்…”
“அண்ணா நாங்க அங்கேயே தங்கனும்னா அவருக்கு இங்கே பார்த்திட்டு இருக்கிற வேலை?… நானும் எப்படி அங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா. நீங்க எதையும் யோசிக்காம சொல்லமாட்டீங்க…” என கொஞ்சம் பயத்தோடு கூறிய மகிமாவை அடுத்த வார்த்தை பேசவிடாமல் தன் யோசனையையும் திட்டத்தையும் படபடவென கூற ஆரம்பித்தான்.
“அங்கேயே அவங்க வீட்டுக்கு பக்கதிலோ இல்லை அடுத்த தெருவிலோ?, ம்ம் இல்லை அது சரிப்படாது. அதே தெருவில் வீடு கிடைக்குமான்னு முயற்சி பண்ணனும். வீடு பார்க்கிற உங்களுக்கு தேவைப்படற வசதி, வேலை நான் பார்த்துக்கறேன்…”
“ரவிக்கும் அங்கேயே இல்லை பக்கத்து ஊர்லையோ வேலை வாங்கிடலாம். நான் விசாரிக்கிறேன் அது பற்றி. உனக்கும் லோன் ஏற்பாடு பண்ணிடறேன். அங்கேயே நீ பார்லர் வச்சுக்கோ…” என கடகடவென மனப்பாடம் செய்து ஒப்பிப்பவன் போல சொல்லியவன்,
கொஞ்சம் தயங்கி, “இது என்னோட சுயநலம் தான். ஆனா மறுக்காத மகி. இப்போ அவ எப்படி இருக்கான்னு கூட தெரிஞ்சுக்க முடியாம நான் இருக்கேன். என்னால நேர்லயும் போகமுடியாது. அது கூட அவளுக்கு பெரிய பிரச்சனையை தான் குடுக்கும்…” எனவும் அவனை பாவமாக பார்த்தாள்.
“உங்களுக்கு ஏன் அண்ணா இந்த கஷ்டம்? பேசாம அண்ணியை கூட்டிட்டு வந்திடவேண்டியதுதானே?…” என்று சாதாரணமாக சொன்னவளை வெறுமையோடு வேறு திக்கில் பார்த்துகொண்டு,
“அதெல்லாம் நடக்காது. உன்கிட்ட இப்போ என்னோட நிலையையும் எங்க கல்யாணம் நடந்த சூழ்நிலையையும் விளக்கி சொல்ல முடியாது மகி. ஆனா அங்க யாராவது அவ பக்கத்துல இருக்கணும். சரி அதை விடு உன் வீடு எங்க இருக்கு?… ரவி எப்போ வீட்டுக்கு வருவாரு?… நான் நேர்ல பார்த்து பேசணும். அவர்கிட்ட பேசாம உன்கிட்ட வந்து இதுபத்தி சொன்னது தப்பு இல்லையா?…”
“நீங்க அப்டில்லாம் நினைக்காதீங்க அண்ணா. இங்க இருந்து ஒரு கால் மணிநேரத்துல வீட்டுக்கு போய்டலாம். ஒரு மணி நேரத்துல மதிய சாப்பாட்டுக்கு வருவாங்க. நீங்க வாங்க அண்ணா…”
“கண்டிப்பா வரேன்மா. நீ அட்ரெஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டு முன்னால போ. ஒரு சின்ன வேலை இருக்கு இங்க. நாங்க ரெண்டு பேரும் அதை சீக்கிரமா முடிச்சிட்டு வரோம்…” என்று கூறியவன் மகிமாவின் மொபைல் நம்பர் அட்ரெஸ் இரண்டையும் வாங்கிவிட்டு அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்தான்.
விஷ்ணு அமர்ந்த இடத்திலேயே இருக்கவும் தன் தலையில் அடித்து கொண்டு அவனை நெருங்கி அவன் தோளில் கைவைத்தான் உதயா.
வேகமாக கையை தட்டிவிட்டவன், “ஏண்டா? அந்த ஜான்சிராணி பத்தியும், அதோட ஊர், இருக்கிற இடம்னு இவ்வளோ விஷயம் தெரிஞ்சிருக்கு உனக்கு. அதை எனக்கிட்ட சொல்லனும்னு தோணவே இல்லைல. அப்புறம் ப்ரெண்ட்டுன்னு நான் எதுக்குடா?…” என கோவமாக கேட்டான் விஷ்ணு.
“அப்டிலாம் நினைக்காதடா மச்சான். சொல்ல கூடாதுன்னு இல்லை. ஏற்கனவே வீட்ல நாச்சி நந்தினி பத்தி உன்கிட்ட துளைச்சி துளைச்சி கேள்வி கேட்குது. அப்டி இருக்கும் போது உன்கிட்ட இந்த நேரத்துல எப்டி சொல்றது?…” என்று பேசி மீண்டும் விஷ்ணுவிடம் மாட்டிக்கொண்டான்.
அவன் முறைத்த முறைப்பில் தன் நுனிநாக்கை கடித்துக்கொண்ட உதயா, “மறுபடியும் சாரிடா. ப்ளீஸ்…” என்று கெஞ்ச கொஞ்சமாக மலை இறங்கினான் விஷ்ணு.
“சரி சரி ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணாத. உனக்கு அவங்களை பத்தின விஷயம் எப்டி தெரியும்னு சொல்லு?…” என கெத்தாக கால்மேல் கால் போட்டு வசதியாக அந்த பெஞ்சில் சாய்ந்து அமர்ந்துகொண்டு கேட்ட விஷ்ணுவை பார்த்த உதயா,
“எல்லாம் என் நேரம்டா. அன்னைக்கு அவங்க வேன் கிளம்பவுமே சிவாவை கூப்பிட்டு தனியா பேசினேனே, ஞாபகம் இருக்கா?…”
“ஆமா!! இருக்கே?…” என சாவாகாசமாக கேட்டான் விஷ்ணு.
“சிவாவோட ப்ரெண்ட் கிட்ட சொல்லி அவங்க வண்டியை ஃபாலோ பண்ண சொன்னேன். அதுமில்லாம மிஸ்டர் ஏழுமலையோட வேன்ல போன பூசாரி ஒரு இடத்துல இறங்கிட்டதா போன்ல சிவாக்கிட்ட சொல்லிருக்கான் அந்த பையன். எதுக்கும் இருக்கட்டும்னு அவரை பத்தியும் விசாரிக்க சொல்லி சிவாக்கிட்ட சொன்னேன். அதுல கிடைச்ச தகவல் தான் இதெல்லாம்…”
“அது இருக்கட்டும், நீ ஏன் சிவா ப்ரெண்ட அனுப்பின? நம்மல்ல யாராவது போய்ருக்கலாமே?…” என்றவனை பார்த்து முறைத்த உதயா,
“நீயென்ன லூசாடா?…”
“உன் கூட சேர்ந்ததிலிருந்தே எனக்கும் அந்த சந்தேகம் தான். மேல சொல்லு…”