ஏழுமலையின் பேச்சால் நந்தினி தவறாக முடிவெடுத்திடுவாளோ என பயந்து அவள் அருகில் வந்து நின்றனர் சந்திரா, கோசலை. அவர்களை ஒதுக்கிவிட்டு விஜியை நெருங்கிய நந்தினி,
“விஜி ப்ளீஸ், எனக்காக நீ பேச வேண்டாம். எப்போ என் மேல அவநம்பிக்கை வந்திருச்சோ அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன். அப்படி போராடித்தான் நான் படிக்கனும்னா எனக்கு இந்த படிப்பு வேண்டாம். தான் பெத்த பொண்ணு மேல நம்பிக்கை இல்லாம பேசறார், அவர் கிட்ட போய் பிச்சை கேட்க சொல்றியா? இனிமே அவரே மனசு மாறி படிக்க சொன்னாலும் எனக்கு அது தேவை இல்லை…” என கல்லை போல இறுக்கமான முகத்தோடு கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
மூடிய கதவை வேதனையோடு வெறித்தவர்கள் ஏழுமலையை காறி உமிழாத குறையாக பார்த்தனர். ஏழுமலைக்கோ நந்தினி இனிமேல் படிப்பை பற்றி தன்னிடம் பேசமாட்டாள் என்பது தெளிவாகியது. அவருக்கு அதுதான் வேண்டுமாக இருந்தது.
“வா பூரணி போலாம். நம்ம பொண்ணை பேசியே கொன்னுடுவாங்க இந்த வீட்ல. சந்திரா உன் வீட்டுக்காரர் என் மருமவ மனசை கூறு போட்டு கொன்னுக்கிட்டு இருக்காரு. வெளியில சொல்லாட்டிலும் மனசுக்குள்ள அது தவிக்கிற தவிப்போட வலி இருக்கே? அந்த பாவம் நம்ம யாரையும் சும்மா விடாது. என்னால இவ்வளோதான் சொல்லமுடியும். என்ன மனுஷனோ? ச்சை…” என கத்திவிட்டு வெளியேறிவிட்டார்.
அறைக்குள் நுழைந்த நந்தினியின் மனமோ இன்னமும் ஆறாமல் அனலாக கொதித்தது. “தன் தந்தையா நம்பிக்கையில்லாமல் இப்படி பேசினார்?…” என அவளால் இன்னமும் நம்பமுடியவில்லை. “தன்னால் தானே இப்படி மாறிவிட்டார்…” என்று உள்மனம் இடித்துரைத்தது.
மறைவாக வைத்திருந்த தன் மாங்கல்யத்தை எடுத்துப்பார்த்தவள், “உன்னால் இன்னும் நான் என்னவெல்லாம் அனுபவிக்கபோறேனோ? எதுவானாலும் அதை தாங்கும் சக்தியை மட்டும் நீ எனக்கு கொடுத்தால் போதும்…” என வேண்டிவிட்டு எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு விதியின் கையில் சிக்கிய தன் வாழ்க்கை எத்திசையில் செல்லுமோ என எண்ணியபடி படுக்கையில் விழுந்தாள்.
வெளியே கோசலையும் சந்திராவும் அழுதுகொண்டிருக்க ஏழுமலை அடுத்த பிரளயத்திற்கான வேலையை பார்க்கும் முடிவோடு இருந்தார்.
நந்தினி விஷயத்தில் தான் நினைத்ததுதான் நிறைவேறவேண்டும் என்ற கண்மூடித்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அவரது முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாக போவதை அறியாமல்.
————————————————————————–
“இங்க பாரு டார்லிங், பிரபாவே அவனோட கல்யாணம் பத்தி சொல்லாதப்போ நான் மட்டும் சொல்றது சரியில்லை. அதனால இதோட அந்த பேச்சை விடு. அவனா என்னைக்கு சொல்றானோ அப்போ தெரிஞ்சுக்கோங்க எல்லோரும். இனிமே என் கிட்ட எப்படி கேட்டாலும் பதில் வராது…” என கூறிவிட்டு வெளியேறிய விஷ்ணுவை பார்த்தபடியே இருந்தார் நாச்சி.
நண்பனின் ஊர் திருவிழா என சென்றவன் மாலை வீட்டிற்கு வந்த பொழுது வேணியின் ஆர்பாட்டம் சகிக்கமுடியாத அளவிற்கு சென்றது. அவளை அடக்கமுடியாமல் தவித்த நேரத்தில் புயல்போல உள்ளே வந்த உதயா தனக்கு திருமணம் ஆகிவிட்டதென்றும் இனிமே அதைப்பற்றி யாருமே பேசகூடாதேன்றும் கடுமையாக சொல்லிவிட்டு சென்றதிலிருந்து அனைவருக்குமே குழப்பம்.
அதுவும் உதயா ஆதாரமாக காட்டிய புகைப்படம் வேறு அவர்களுக்கு மேலும் பயத்தை கொடுத்தது. பெரிய பிரச்சனையில் தான் அந்த திருமணம் நடந்திருக்கிறது என்பதை நந்தினி, உதயாவின் கலைந்த கோலமே தெளிவாக சொல்லியது.
திரும்ப திரும்ப விசாரிச்சதால ஏற்பட்ட கோவத்தில் வெளியூர் சென்றவன் இனிமே அதை பற்றி பேசவோ கேட்கவோ மாட்டேன் என்று சொன்ன பின்பு தானே திரும்பவும் வந்தான். அந்த பயத்திலேயே அந்த ஊருக்கு சென்று விசாரிக்க கூட நினைக்கவில்லை. அவர்களுக்குள் என்ன சங்கடமோ சீக்கிரம் தீர ஆண்டவனிடம் பிராத்திக்க மட்டுமே முடிந்தது அவர்களால்.
“என்ன கிழவி, உன் விசாரணை முடிஞ்சதா? எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாதா?…” என பொறுமையான குரலில் கூறிய உதயாவை பார்த்த நாச்சி,
“எனக்கெதுக்குய்யா உன் வம்பு?… நானே பொழுது போகாம அவன் கூட பேசிட்டு இருந்தேன். நீ சம்சாரி ஆனா என்ன?… சாமியாரா போனா என்ன?… உன் பொண்டாட்டி உனக்கு எப்போ கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தனும்னு தோணுதோ அப்போ நடத்து. இல்லைனா வாழ்க்கை முச்சூடும் நீ வாழாவெட்டியாவே இரு…” என்று படபடவென பற்றில்லாதது போல பேசிவிட்டு உள்ளே விரைந்துவிட்டார்.
விஷ்ணுவிடம் நாச்சி விசாரித்ததும், அதற்கு விஷ்ணு அளித்த பதிலையும் கேட்ட பாக்கியம் பெருமூச்சோடு உள்ளே சென்றுவிட்டார்.
உதயாவிடம் நாச்சி பேசியதை கேட்டவர் தன் காதுகளை கூர்மையாக்கி கொண்டு உதயாவின் பதில் என்னவாக இருக்கும் என்று தவிக்கும் நெஞ்சத்தோடு காத்திருந்தார்.
“ஹே கிழவி, நான் ஏன் சாமியாரா போகபோறேன்? நீ வேணா பார்த்துக்கிட்டே இரு. உன் கண்ணு முன்னாலேயே முத்துமுத்தா பிள்ளைகளை பெத்துக்கிட்டு என் பொண்டாட்டியோட சந்தோஷமா தான் இருக்க போறேன். நீயும் பார்க்கத்தான் போற…” என சத்தமாக கூறிவிட்டு வெளியே காத்திருந்த விஷ்ணுவை நோக்கி சென்றுவிட்டான்.
உள்ளிருந்து உதயா பேசியதை கேட்ட நாச்சிக்கும் பாக்கியத்திற்கும் தேவையான பதில் கிடைத்துவிட்டது. தன்மையாக பேசினால் தானே கோவத்தில் முறுக்கிக்கொள்வான்.
அதனால் தான் அவனை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார் நாச்சி. அவர் எதிர்பார்த்தது போல உதயாவின் பதில் அவருக்கு சாதகமாகவே வந்தது.
அவருக்கு தெரியாத ஒன்று. நாச்சிக்காகவும் தன் குடும்பத்தின் நிம்மதிக்காகவும் தான் உதயா வேண்டுமென்றே இவ்வாறு கூறினான் என்பது.
அவனுக்கு தெரியாததா நாச்சி பற்றி. வேண்டுமென்று தான் அவர் இந்த பேச்சை ஆரம்பித்ததும், தன்னை வம்பிழுத்ததும் என்பதை நன்கு அறிந்த உதயா அவர் விரும்பியவாறே தன் பதிலை அவர் பாணியிலேயே கூறினான்.
அதை அறியாமல் நாச்சியும், பாக்கியமும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயினர்.
தங்களின் கவலைகள் எல்லாம் விரைவில் தீர்ந்து உதயாவின் வாழ்வில் வெளிச்சம் கொண்டுவர வேண்டிய மகாலட்சுமி சீக்கிரமே தங்கள் இல்லம் தேடி வரப்போகிறாள் என்று நிம்மதிகொண்டனர். உதயாவிற்கும் இதுதானே வேண்டும். இதைத்தானே அவனும் விரும்பினான்.
வெளியில் நின்றுகொண்டிருந்த விஷ்ணுவிற்கு சந்தோஷம் தாளவில்லை. இப்போதாவது அவனது மனதை உணர்ந்துகொண்டானே என எண்ணியவன்,
“பிரபா, ரொம்ப சந்தோஷமா இருக்குடா…” என்று கூறியவனை புரியாமல் பார்த்தவன்,
“என்ன திடீர்னு சந்தோஷம்? ம்ம் சரி. இருந்துக்கோ. இப்போ டவுன்ல பேங்க் மேனேஜரை பார்க்க போகணும். அங்க கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு அடுத்ததை பார்க்கலாம்…” என கூறிக்கொண்டே பைக்கை உதைத்து கிளப்பியவன் பின்னால் விஷ்ணுவும் ஏறி அமர்ந்தான்.
“என்னடா மச்சான் இப்டி பேசற? நான் டார்லிங் கிட்ட நீ பேசினதை கேட்டு சந்தோஷமா இருக்குன்னு சொன்னேன்…”
“அதைத்தாண்டா நானும் சொல்றேன், அவங்களை போல நீயும் தாராளமா சந்தோஷமா இரு. நான் அவங்களுக்காக அவங்க வருத்தபடாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கனும்ன்றதுக்காக சும்மா சொல்லிவச்சேன். அவ்வளோதான்…” என்று கூலாக பைக்கை ஓட்டிக்கொண்டே சொன்னான்.
“அடப்பாவி, நம்ப வச்சு ஏமாத்த நினைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லைடா. அந்த பொண்ணு பாவம். இந்நேரம் அந்த என்கவுண்டர் ஏகாம்பரத்துக்கிட்ட மாட்டிக்கிட்டு என்னவெல்லாம் பாடுபடுதோ?…” என கூறவும் ஒரு நொடி நந்தினியின் முகம் மின்னி மறைந்தது உதயாவின் விழிகளுக்குள்.
மனதில் எழுந்த சுருக்கென்ற வலியை மறைத்து, “ஆமா யார் அந்த என்கவுண்டர் ஏகாம்பரம்?…” என்ற அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டான் உதயா.
“அதாண்டா பிரபா, அந்த பொண்ணோட அப்பா. வாய்ல இருந்து வர்ற வார்த்தை ஒன்னொன்னும் தோட்டா மாதிரி எதிரே இருக்கிறவங்களை குத்திக்கிழிக்குது…” என உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு கூறியவனை முன்பக்க கண்ணாடி வழியாக பார்த்தவன் கடகடவென சிரித்தான்.
“நல்லா வச்சிருக்கடா பேரு…” என வெளியில் சிரித்தாலும் உதயாவின் முகம் வேதனையை பிரதிபலித்தது. அது ஏனென்று உணரத்தான் அவன் விரும்பவில்லை.
பேங்க் வந்ததும் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர் இருவரும்.
தாங்கள் வந்திருப்பதாக மேனேஜரிடம் தகவல் தெரிவிக்கும் படி ப்யூனிடம் கூறியவன் அங்கே போடபட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான். உடன் விஷ்ணுவும்.
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா பிரபா…”
“நீ என்ன பேசப்போறன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால நீ அமைதியா இரு. திரும்ப திரும்ப அதையே பேசி என் மூட் ஸ்பாயில் பண்ணாதே…” என கூறி முடிக்கவும் மேனேஜர் அழைக்கவும் சரியாக இருந்தது.
வந்த வேலை நல்லவிதமாக முடிந்ததுமே கிளம்பி வெளியில் வரும் போது அங்கே நின்று போனில் பேசிகொண்டிருந்த பெண்ணை பார்த்தவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
அவளருகில் சென்று “மகிமா…” என ஆவலாக அழைத்தான்.
உதயாவின் குரலில் திரும்பியவள் போனை அணைத்து தன் கைப்பையில் வைத்துக்கொண்டு, “பிரபாண்ணா. எப்டி இருக்கீங்க?…” என மகிழ்ச்சியோடு கேட்டவள் உதயாவின் அருகே நின்ற விஷ்ணுவை பார்த்து இரட்டை சந்தோஷத்தில்,
“விச்சு அண்ணா, நீங்களும் வந்திருக்கீங்களா? நல்லா இருக்கீங்களா?…” என கேட்டவளின் தலையில் நங்கென்று கொட்டியவன்,
“மக்கு மகி. கொன்னுடுவேன் உன்னை, என் பேர் விஷ்ணு. எவ்வளோ ஸ்டெயிலா இருக்கு. நீ கூப்பிடறது சாக்லேட்டை மிட்டாயின்னு சொல்றது போல இருக்கு…” என சண்டை போடவும் உதயாவோடு சேர்ந்து தானும் சிரித்தாள்.
“சரி இவனை விடு. நான் நல்லா இருக்கேண்டா. ஆமா, நீ எங்க இந்த ஊர்ல?…” என கேட்டான் உதயா.
“அதுவா அண்ணா, என் ஹஸ்பண்ட்க்கு இந்த ஊர்ல தான் ஜாப் கிடச்சது. அதான் இங்கயே வந்துட்டோம். நாங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. அவரோட சம்பாத்தியம் மட்டும் குடும்பத்துக்கு பத்தலை. அதான் நான் படிச்ச ப்யூட்டீஷியன் கோர்ஸ்க்கு லோன் ஏதாவது கிடைக்குமான்னு கேட்க வந்தேன். லோன் கிடைச்சா வாங்கி பார்லர் வைக்கலாம்னு நினைக்கிறேன். அதான் இங்க வந்தேன் அண்ணா….” என தயங்கி தயங்கி கூறியவளை பார்த்தவன்,
“நீ சந்தோஷமா இருக்கியாமா?…” என வருத்தமாக கேட்டவனை பார்த்து புன்னைகை சிந்தியவள்,
“ஏண்ணா பணகஷ்டம்னு சொல்லவும் எங்க சந்தோஷத்துல குறைன்னு நினச்சுட்டீங்களா? சம்பாத்தியம் குறைவுனாலும் நாங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கோம். காசு பணத்துக்கும் மனநிறைவுக்கும் சம்பந்தமே இல்லை அண்ணா. நான் வேலை பார்க்கனும்னு நினைக்கிறதுக்கு காரணம் அவங்களோட பொறுப்பில் பங்குபோட்டுக்கத்தான். இதுல என்ன தப்பு?…” என கலகலவென சிரித்தாள்.
“இன்னும் அப்பாம்மா உன்னை ஏத்துக்கவில்லையா? ஸ்ரீகர் என்ன சொல்றான்?…” என கவலையோடு கேட்டான் விஷ்ணு.
“இல்லைண்ணா, இன்னும் கோவமாத்தான் இருக்காங்க. அண்ணா, அப்பாம்மா இப்போ எங்க இருக்காங்கன்னு கூட எனக்கு தெரியாது. அவங்க ஏத்துக்கனும்னு நானும் நினைக்கலை. ப்ச் அதை விடுங்க…” என தன் சோகத்தை மறைத்து புன்னகைத்தாள் மகிமா.
உதயா, விஷ்ணு இவர்களது வகுப்புத்தோழன் ஸ்ரீகர். அவனது தங்கை மகிமா காதல் திருமணம் புரிந்ததால் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டவள். விஷ்ணு தான் முன்னிருந்து திருமணத்தை நடத்திக்கொடுத்தவன். அதனால் விஷ்ணுவையும் அவனுக்கு பரிந்து வந்த உதயாவையும் அறவே வெறுத்து விலகிவிட்டான் ஸ்ரீகர்.
பழைய விஷயங்களை ஒருமுறை எண்ணிப்பார்த்தவர்கள் அமைதியாக இருக்க உதயாவின் மனதில் ஒரு யோசனை உதித்தது.
“மகிமா, எனக்கொரு உதவி செய்யணுமே? உன்னால முடியுமாடா?…” என கொஞ்சம் தவிப்போடு கேட்டவனை கேள்வியாக பார்த்தனர் விஷ்ணுவும் மகிமாவும்.