நட்சத்திர விழிகளிலே வானவில் – 21 (2)

அவரை பார்த்து வாசலுக்கு வந்தவள் மனதில் பொருமிக்கொண்டே, “ஒன்னுமில்லைங்க அண்ணே, கோவிலுக்கு போய்ட்டு வந்தாச்சான்னு பார்க்க வந்தேன்…” என வழிந்தபடி கூறவும்,

ஒரு கண்டனப்பார்வையை அவள்மீது வீசி, “வந்தாச்சுன்னு தெரியுதுல? அப்புறம் என்ன பார்வை? எல்லோருமே சோர்வா இருக்காங்க. நாளைக்கு பார்க்கலாம். நீ கிளம்பு…” என அவளை விரட்டாத குறையாக விரட்டியடித்தார்.

எப்போவுமே ஏழுமலைக்கும் நிர்மலாவுக்கும் ஆகவே ஆகாது. வீட்டினுள் ஒன்று பேசுவதும் அதை அப்படியே பத்தாக்கி வெளியில் பரப்புவதும் என பண்பான வேலையை செய்யும் நிர்மலாவை அங்கே யாருக்குமே பிடிப்பதில்லை.

பக்கத்துவீட்டு பெண், தானே வந்து பேசுவதால் பட்டும் படாமலும் தான் பேசுவார்கள் ஏழுமலை வீட்டுப்பெண்கள். அதற்கே ஏழுமலையிடம் அவ்வப்போது மண்டகப்படியை பெற்றுகொள்வதும் சந்திரா கோசலைக்கு வாடிக்கையான ஒன்றுதான்.

இன்றும் அதுபோல் வம்பு கிடைக்குமா என துழாவியபடி வந்தவளை வாசலோடு விரட்டிவிட்டார் ஏழுமலை. இரவு உணவை வாங்கி வந்துகொண்டிருந்தவர் கண்ணில் தன் வீட்டின் புறம் நிர்மலா செல்வதை தெருமுனையிலேயே பார்த்து பயந்துவிட்டார்.

அவளை உள்ளே விட்டால் அனைவரது அழுது சிவந்த கண்களையும், வாடிய முகத்தையும் வைத்தே ஒரு கதை புனைந்துவிடுவாள் என்று எண்ணி அவளை தடுத்து அனுப்பவும் தான் அவருக்கு மூச்சே வந்தது.

அவர் எப்போது நிர்மலாவிடம் கோவமாகவே நடந்துகொள்வதால் அவளுக்கும் இவரது பேச்சில் எந்த வித்யாசமும் தெரியவில்லை. அதனால் அமைதியாக சென்றுவிட்டாள். செல்லாமல் அங்கேயே நின்றால் இன்னும் கத்துவார் என பயந்து.

நிர்மலா சென்றதும் உள்ளே வந்தவர், “இந்தா பூரணி எல்லோருக்கும் சாப்பாட்டை எடுத்துவை. நானும் போய் முகம் அலம்பிட்டு வரேன்…” என கையிலிருந்த கவரை கொடுத்துவிட்டு பின்னால் சென்றார்.

சிறிதுநேரத்தில் திரும்பி வந்தவரிடம் யாருமே பேசவில்லை. அவரும் அதை கண்டுகொள்வதாக இல்லை. நந்தினி குளித்துவிட்டு வந்ததை பார்த்தவர் மனதின் ஓரத்தில் சிறு குளுமை பரவியது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்,

“வா, வந்து சாப்பிடு…” என அதட்டும் தொனியில் அழைத்தார். நந்தினியும் மறுப்பே சொல்லாமல் வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் சாப்பிடவும் தான் அனைவருமே சாப்பாட்டில் கையை வைத்தனர். அதுவரைக்கும் யாருமே அதை தொடவில்லை, ஏழுமலை உட்பட.

“விஜி காயத்தை பத்தி டாக்டர் என்ன சொன்னாங்க மச்சான்?…”என பேச்சை திசைதிருப்பினாலும்,

“ம்ம், சொன்னாங்க, சொன்னாங்க. அங்கேயே ஏதாவது வைத்தியம் பார்த்திருக்கலாம்னு சொன்னாங்க. எல்லாம் உள்காயமாம். மாத்திரை குடுத்திருக்காங்க. அவ்வளோதான்…” என்று நறுக்குதெறித்தது போல எண்ணி எண்ணி வார்த்தைகளை விடுதலை செய்தார் நேசமணி.

அவரது ஒட்டாத பேச்சிலேயே புரிந்துகொண்ட ஏழுமலை அடுத்து எதுவும் பேசாமலேயே சாப்பிட்டார். அவருக்கு தன் மகள் தன் கட்டுப்பாட்டில் தான் வரைந்த கோட்டுக்குள் வந்துவிட்ட ஒரு சந்தோஷம். மற்றவர்கள் எப்படி இருந்தால் என்ன என்று எண்ண வைத்துவிட்டது.

அமைதியை கலைக்கும் பொருட்டு, “அம்மாடி சந்திரா, நான் எங்க வீட்டுக்கு கிளம்பறேன்மா. நாளைக்கு வந்து பார்க்கறேன்…” எனவும்,

“என்னங்கண்ணே நீங்க விஜிக்கு வேற முடியலை. இந்நேரம் புள்ளையை கூட்டிட்டு கிளம்பறேன்னுட்டு பேசறேங்க?…” என படபடத்தார் சந்திரா.

“பக்கத்து தெருதானே, போய்டுவோம்மா. மித்ராவை பக்குவமா பார்த்துக்கோ. நாங்க காலையில வரோம்…” என்றவர் கோசலையிடமும் நந்தினியிடமும் விடைபெற்று விஜி, பூரணியை அழைத்துகொண்டு கிளம்பினார்.

தன்னிடம் சொல்லாமல் சென்றது ஏழுமலைக்கு பெரிய வருத்தமெல்லாம் இல்லை. கோவம் குறைந்தால் தன்னால் தேடிவருவார் என்று நினைத்துகொண்டார்.

கோசலை தன் கணவன் குழந்தைகளை ஒரு விபத்தில் ஒரேசேர பறிகொடுத்துவிட்டதால் ஏழுமலையின் வற்புறுத்தலில் அங்கேதான் சில வருடங்களாக தங்கி இருக்கிறார்.

கோசலை நந்தினியோடு தங்கிக்கொள்ள போவதாக சொல்ல சந்திராவும் அவரோடு சேர்ந்துகொண்டார். அனைவரும் தன்னை தனிமைப்படுத்துவதை புரிந்துகொண்டாலும் அதை கண்டுகொள்ளாமல் இருக்க தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

எங்கே மனைவி, மகள் பேச்சை கேட்டு அவர்களின் அன்பால் தான் பலவீனமாகிவிடுவோமோ என எண்ணி தன்னையே தனிமைக்கு இரையாக்கினார். விரைவில் அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கையோடு.

அடுத்துவந்த நாட்களிலும் அனைவரும் இப்படியே தேவைக்கு மட்டும் பேசி மற்றவற்றில் மௌனம் காத்தனர் ஏழுமலையிடம்.

ஆனால் நந்தினி யாரும் தன்னை நெருங்காமல் தனக்குத்தானே வட்டம்போட்டுக்கொண்டு அனைவரை விட்டும் ஒதுங்கியே இருந்தாள். அவளின் ஒதுக்கத்தை கூட இவர்களாகவே இப்போதைக்கு அவளுக்கு தனிமைதான் தேவை என்று அப்படியே விட்டுவிட்டனர்.

நந்தினி ஆசைப்பட்ட கல்லூரியில் இடம் கிடைத்த தகவலை கூறியும் அவளை அங்கே சேர்க்க வேண்டிய நேரம் நெருங்கியும் ஏழுமலையின் அமைதி உறுத்த நேசமணி தன் குடும்பத்துடன் ஏழுமலை வீட்டிற்கு வந்தார்.

இப்போது ஏழுமலையின் மேல் உள்ள கோவமும் வருத்தமும் கொஞ்சம் மட்டுப்பட்ட தொடங்கியிருந்தது நேசமணியிடம். அதனால் நந்தினியின் எதிர்காலத்திற்காக பேச வந்தார்.

திண்ணையில் அமர்ந்து பேப்பர் வாசித்துகொண்டிருந்த ஏழுமலை, “அடடே வாங்க மச்சான். சந்திரா இங்க வா. யார் வந்திருக்காங்கன்னு பாரேன்?…” என மனைவியை அழைத்துக்கொண்டே வந்தவர்களை உள்ளே அழைத்துவந்தார்.

“மித்ரா எங்க?…” என விஜி கேட்கவும்,

“இங்க தான் உள்ள இருக்கா, அக்கா அவளை கூப்பிடு…” என கோசலையிடம் கூறிவிட்டு,

“அப்பறம் சொல்லுங்க மச்சான். என்ன விஷயம்?… ஏதோ ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான் வந்திருக்கீங்கன்னு உங்க முகமே சொல்லுதே?. அதான் கேட்டேன்…” என நேசமணியை ஆழம் பார்த்துக்கொண்டே கேட்டார் ஏழுமலை.

நந்தினியும் விஜியின் குரலில் வெளிவந்து கோசலையின் அருகில் நின்றுகொண்டாள். விஜி அவளின் பக்கத்தில் வந்து மென்குரலில் ஏதோ பேசிகொண்டிருக்க அவளோ வெறுமையான முகத்தோடு எந்தவிதமான பாவங்களும் இல்லாமல் அதற்கு காது கொடுத்துகொண்டிருந்தாள்.

பூரணிக்கோ கை, காலெல்லாம் வெடவெடத்தது. சந்திரா பூரணியின் வியர்த்த முகத்தையே ஆராய்ச்சியோடு பார்த்தவர் என்னவென்று கண்களால் கேட்டார். பூரணி நேசமணியின் கைகளில் இருந்த கவரை காண்பித்தும் சந்திராவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

“இந்தாங்க மாப்ள…” என கவரை நீட்டிய நேசமணியை பார்த்துக்கொண்டே அதை வாங்கி பிரித்துபடித்த ஏழுமலை முகத்தில் ருத்ரம் குடியேற கோவமாக அதை கிழித்தெறிந்தார்.

“எதுக்காக இப்போ இதை கொண்டு வந்தீங்க?…” என உறுத்து பார்த்தவாறு கேட்கவும் நேசமணிக்கும் சுர்ரென கோவம் ஏறியது.

“எதுக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு வருவாங்க?… மித்ராவை படிக்க வைக்கத்தான். அதுகூடவா உங்களுக்கு புரியலை?…” என திருப்பி கொடுத்தார் நேசமணி.

“இவளுக்கு படிப்பு ஒண்ணுதான் குறைச்சல். ஒரு கருமமும் வேண்டாம். வீட்லயே கிடக்கட்டும். சொன்ன பேச்சு கேட்காம திமிரெடுத்து ஆடி இவ்வளோ நாளும் என் மரியாதையை குழி தோண்டி புதைச்சுட்டு இப்போ இவ பட்டம் வாங்குறதுதான் பெருசா?…” என்றவரின் பேச்சில் நந்தினிக்கு துளியும் அதிர்ச்சி இல்லை, தன் தகப்பனே இப்படி பேசுகிறாரே என்ற வருத்தமும் இல்லை.

ஏற்கனவே இப்படி நடக்குமென யூகித்து எதிர்பார்த்தாளோ என்னவோ? அப்படித்தான் நடந்துகொண்டிருந்தது. தன் தந்தையின் ருத்ரதாண்டவத்தை கைகட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.

நேசமணி கோவத்தை கைவிட்டு, “இன்னமும் எதுக்காக நடந்ததையே  பேசணும்? அதான் உங்க விருப்பபடி நம்ம மித்ரா நடக்கறாளே? உங்க பேச்சைத்தானே கேட்கிறா. உங்க கோவத்தால அவளோட எதிர்காலத்தை பாழாக்காதீங்க மாப்ள. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க….” என இறைஞ்சும் குரலில் கேட்டார்.

“எதுக்கு அனுப்பனும்? உங்க நாடகத்துக்கு நான் ஏமாந்து போக என்னை என்ன முட்டாள்னா நினச்சீங்க?…” என சம்பந்தமில்லாமல் பேசியவரை பார்த்து அனைவரும் துணுக்குற்றனர்.

“அன்னைக்கு அந்த ஊர்ல அவன் என்னடானா சும்மா சும்மா திரும்பி திரும்பி பார்த்துட்டே இருக்கான். அந்த கயிறை கழட்ட சொன்னதுக்கு துரை அப்படியே துடிச்ச துடிப்பென்ன?  இங்க இவ பங்குக்கு அதை கழட்டித்தரமாட்டேன்னு வேற பிடிவாதம் பன்றா…” என கூறவும் அனைவருக்குமே என்ன சொல்ல வருகிறார் என புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் உதயாவை ஏழுமலை அருவியூரில் நன்றாக கண்கொத்தி பாம்பாக கவனித்திருக்கிறார் என்பது மட்டும் தெள்ள தெளிவாகியது.

“எனக்கு என்னமோ அவன் திரும்ப இவளை தேடி வருவானோன்னு தோணுது? இங்க என் கண்பார்வையில இருந்து என்னை மீறி அவன் மித்ராவை நெருங்க முடியாது. இவளை நான் படிக்க அனுப்பினா அங்க நிச்சயம் என்னால காவல் இருக்க முடியுமா? முடியாதுல. அவன் இங்க கூட வந்தாலும் வருவான். ஆனா இவளை பார்க்க நான் விடமாட்டேன்…” என வெறிபிடித்தவர் போல பேச பேச அனைவரும் விக்கித்து நின்றனர்.

ஏழுமலையின் மனதில் இப்படி ஒரு கேவலமான எண்ணம் ஓடிக்கொண்டிருப்பதை அறிந்த நந்தினிக்கு இப்போதே பூமி பிளந்து தன்னை எடுத்துகொள்ளாதா என தோன்றியது. ஏழுமலையின் பேச்சு அவளை இன்னமும் இறுக்கியது.

அதற்குமேல் பொறுக்கமாட்டாமல், “மாமா போதும் கொஞ்சம் நிறுத்தறீங்களா?…” என கத்திய விஜி,

“கொஞ்சமாவது என்ன பேசறோம்னு யோசிச்சு பேசுங்க,. உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? நீங்க பெத்த பெண் மேல சேத்தை  வாரி பூசுறது போல இருக்கு உங்களோட பேச்சும், அசிங்கமான எண்ணமும். உங்களுக்கு முடியலைன்னா சொல்லிடுங்க மித்துவை நாங்க படிக்க வச்சுப்போம். என்னப்பா நான் சொல்றது?…” என தன் தந்தையிடம் கேட்கவும் நேசமணியும் இதையே ஆமோதித்தார்.

error: Content is protected !!