நட்சத்திர விழிகளிலே வானவில் – 20 (4)

“என்னடா நினச்சிட்டு இருக்க? பிரசாத்தையும் அவனோட ப்ரெண்ட்ஸ் எல்லோரையும் பிடிக்க வேண்டாமா? போலீஸ்ல சொல்ல வேண்டாமா?…” என கேட்ட விஷ்ணுவை கையாலாகாத ஒரு பார்வை பார்த்தான்.

“வேண்டாம்டா. தனம் சித்தி தாங்கமாட்டாங்க. அதுவும் இல்லாம அவனுங்களை பிடிச்சுட்டு போய் போலீஸ்ல என்னனு சொல்லுவ? ஸ்டேஷன் போனா அந்த பொண்ணும் வரவேண்டியது இருக்கும்…”

“அங்க நடந்ததை சொல்ல சொல்லி அந்த பொண்ணை கேள்வி கேட்டே கொன்னுடுவானுங்கடா. போதும் அவள் பட்ட கஷ்டம். சிவா கணேஷ் கிட்ட சொல்லிட்டான் அவன் நம்ம வண்டிக்கிட்ட காத்திட்டு இருக்கான் வா போகலாம்…” என கூறிவிட்டு முன்னால் நடந்தான்.

அவனது செய்கைகளை புரியாமல் பார்த்த விஷ்ணுவிற்கு தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. இனி நடப்பது விதி வழியிலேயே நடக்கட்டும் என்று விட்டுவிட்டு அவனோடு புறப்பட்டான்.

விதியாலே சேர்ந்த இருவரும் திசைக்கொன்றாக பிரிந்தாலும் என்றாவது ஒருநாள் விதியின் பாதையில் இணையத்தான் வேண்டுமென்ற நியதி இருந்தால் தடுக்கும் சக்திகளனைத்தும் சல்லடையாகிவிடும்.

விதியின் முன்னால் யாருமே தப்புவதற்க்கில்லை. இந்த எளிமையான உண்மையை உணரவிடாமல் கண்களுக்கு புலப்பட விடாமல் மனிதர்களின் சுயநலம் என்னும் மாயத்திரை மறைத்துவிடுகிறது.

ட்ரைவரிடம் மீண்டும் குலதெய்வம் கோவிலுக்கு வண்டியை விட சொன்னார் ஏழுமலை. ஏன் திரும்பவும் அங்கே என்பது ஒருவருக்கும் புரியவில்லை என்றாலும் அவரின் உக்கிரத்தின் முன்னால் எதற்கு என்று எதிர்த்து கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லாமல் போனது.

கோவிலுக்கு சென்றதும் நந்தினியை எழுப்பி அவளால் முடியாத நிலையிலும் தரதரவென இழுத்துசென்றார். அவரது வேகத்தில் மிரண்டவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்துக்கொள்ள  ஆரம்பித்தாள்.

“பூசாரி கோவிலை திறங்க…” என ஆவேசமான குரலில் கூறவும் பூசாரிக்கு புரிந்துபோனது அவர் எதற்காக கோவிலை திறக்க சொல்கிறார் என்று.

முதலில் தயங்கினாலும் கோசலையின் இறஞ்சுதலான பார்வையில் முடியாது என்று தீர்க்கமாக மறுத்துவிட்டார்.

“ஏழுமலை, நீங்க செய்ய போற பாவத்திற்கு என்னையும் துணைபோக சொல்றீங்க? இது நல்லா இல்லை. உங்க பொண்ணை நீங்க நடத்துற விதம் கொஞ்சம் கூட சரியில்லை…” என குரலை உயர்த்தி எச்சரித்தார்.

அவரது பேச்சில் திகைத்த ஏழுமலை, “ஓஹோ!!! இருக்கட்டும். இந்த கோவில் இல்லைனா என்ன? சொல்லிட்டீங்கள்ள. இவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். இனி இந்த கோவில் வாசல் படியை கூட மிதிக்க மாட்டேன்…” என்று உறுமிவிட்டு கிளம்பிவிட்டார்.

“ரொம்ப நன்றி சாமி…” என்று அவரை கண்ணீர் மல்க கையெடுத்து வணங்கினார் கோசலை. அவர் அருகில் இருந்த பூரணியும் சந்திராவும் கூட அதை ஆமோதித்தனர்.

“இங்க பாருங்கம்மா. என்னால இங்க மட்டும் தான் தடுக்க முடியும். ஏழுமலை ரொம்ப ஆத்திரத்தில் இருக்காரு. இப்போ யார் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. அவர்கிட்ட இருந்து அந்த பொண்ணை நீங்களும் அந்த ஆண்டவனும் தான் காப்பாத்தனும்…” என்றவரிடம் விடைபெற்று கிளம்பினார்கள்.

மீண்டும் தான் அமர்ந்த இடத்திலேயே தன்னை பொருத்தியவர் பழைய நிலையிலேயே இருந்தார்.

ஒருவரும் பேசாமல் வந்தனர். விஜியை பார்த்தாலே விழிகளில் நெருப்பை கக்கினார். அதனால் அவனை தன் அருகிலேயே வைத்துகொண்டார் நேசமணி.

அவருக்கும் தெரியும் நந்தினியை அழைத்து சென்று அவளை கவனிக்காமல் விட்டதை தவிர விஜியின் மேல் எந்த தவறும் இல்லையென்று. இது அனைவரின் கையை மீறி நடந்த ஒரு சம்பவம் என்று. ஆனால் அதை இப்போது ஏற்றுக்கொள்ளும் நிலையில் ஏழுமலை இல்லையே. அதுதான் அவரது வருத்தம்.

நந்தினியிடம் அவர் காட்டும் கடுமை பார்வையாளர்களாக தங்களுக்கு அதிகமாக தெரிந்தாலும் பெண்ணை பெற்ற தகப்பனின் இடத்தில் இருந்து பார்த்தால் அது சரியாகத்தான் தோன்றியது நேசமணிக்கு.

மாலை வரை யாருமே உண்ணவும் இல்லை உறங்கவும் இல்லை. ஊரை நெருங்க இன்னும் சில மணிநேரங்களே இருக்கும் பொழுது ஊரை விட்டு வெகு தொலைவில் இருந்த ஒரு கோவிலை பார்த்த ஏழுமலை எழுந்து சென்று ட்ரைவரை அழைத்தார்.

“தம்பி அதோ அந்த கோவில்கிட்ட கொஞ்ச நேரம் நிப்பாட்டுப்பா…” என்றார்.

அவர் நிறுத்த சொல்லவுமே நந்தினிக்கு உடல் தூக்கிவாரி போட்டது. மற்றவர்கள் நடுங்கியவாறு அமர்ந்திருந்த நந்தினியை பார்த்தனர். பெண்ணாக அவளது உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது அங்கிருந்த மற்ற பெண்களுக்கு.

“தம்பி இங்க எல்லோகிட்டையும் கொஞ்சம் தனியாக பேச வேண்டியது இருக்கு. நீங்க கொஞ்சம்…”

“பரவாயில்லைங்கய்யா. நான் கொஞ்சம் போய்ட்டு வரேன்…” என்று நாசூக்காக நகர்ந்த ட்ரைவர் கொஞ்சம் தூரமாக செல்லும் வரை பார்த்திருந்தவர் பின் நந்தினியின் எதிர்ப்புறமாக அமர்ந்தார்.

ஆனால் அவளை பார்க்காமல், “இதோ பாரு சந்திரா. உன் பொண்ணு செஞ்ச காரியம் என்னால அவ்வளோ சீக்கிரமா மறக்க முடியாது. என்னை உயிரோட கொன்னுட்டு வந்துட்டா. மிச்சம் இருக்கிற கொஞ்ச உயிரையாவது காப்பாத்தனும்னா அவ கையாலையே அந்த கருமத்தை கழட்டி எறிய சொல்லு. இல்லைன்னா….” என்று கடுமையாக கூறினார்.

“அவ சின்ன பொண்ணுங்க. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க? கோவம் தனியாவும் கொஞ்சம் ஆற அமர யோசிச்சு செய்யலாமே? அவசரப்படாதீங்க…” என்று அவரை சாந்தமாக்க நினைத்தால் அவர் இன்னமும் எரிமலையாக வெடித்தார்.

“என்ன உன் பொண்ணை அந்த அடுத்த குலத்தவனுக்கே தாரை வார்த்திடலாம்னு முடிவு பண்ணிட்டியோ? அப்படி ஏதாவது எண்ணமிருந்தா அதை இத்தோட அழிச்சிடு. மீறி இந்த விஷயத்துல நீ ஏதாவது என்னை மறுத்து பேசின, ஜாக்கிரதை…” என்று அவரிடம் தீயாய் காய்ந்தவர் நந்தினியின் புறம் திரும்பினார்.

“இங்க பாரு குடும்பமானத்தை அடுத்த ஊர்ல அள்ளி இறச்சிட்டு வந்த உன்னை கொன்னு புதைக்காம அமைதியா பேசிட்டு இருக்கிற என் பொறுமையை சோதிக்காத. அதை கழட்டி அங்க இருக்கிற உண்டியல்ல போட்டுட்டு வா. கோவில்ல கிடச்சதை கோவில்லையே தலை முழுகிட்டு வா…” என்று கோவத்தை அடக்கிய குரலில் கூறினார்.

அவரது குரலே நந்தினியை நடுங்க செய்தது. வரவழைத்துகொண்ட தைரியத்துடன்,

“வேண்டாம்ப்பா, தாலியை கழட்டகூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்கள்ள. எனக்கு மனசு வரலைப்பா. ப்ளீஸ்ப்பா இதை செய்ய சொல்லாதீங்க. வேற என்ன சொன்னாலும் கேட்பேன்ப்பா. நான் முன்ன மாதிரி இல்லை. நிஜமாவே சொல்றேன்ப்பா. பழைய மித்ராவா நான் சொல்லலை. நம்புங்கப்பா…” என்று கதறியவளை கூர்ந்து பார்த்தவர்,

“என்னமோ அவன் காப்பாத்தத்தான் கல்யாணம் செய்ததா சொல்றான். ஆனா நீ அவன் கட்டின தாலியை கழட்டமாட்டேன்னு பிடிவாதம் செய்யற? அவன் தான் உன்னை யாருக்கு வேணும்னாலும் கட்டி கொண்டுங்க, நான் தலையிட மாட்டேன்னு வாக்கு குடுத்துட்டானே? நீ இந்த தாலியை வச்சு என்ன செய்ய போற? ஊருக்குள்ளயும் போய் என் மொத்த மானத்தையும் ஏலம் போடவா?…” என்று வார்த்தையில் அனலை வீசினார்.

“ஐயோ, தப்பா எதுவும் சொல்லிடாதீங்கப்பா. எனக்கு அவங்க யாருன்னே தெரியாது. திடீர்னு எனக்கு தாலி கட்டுவாங்கன்னும் தெரியாது. சம்மதம் இல்லாம நடந்த கல்யாணமாகவே இருந்தாலும் இதை கழட்டி போட எனக்கு மனசு வரலையே? புரிஞ்சுக்கோங்கப்பா…” என்று மன்றாடினாள்.

பெற்ற மகளின் அவ நிலை பொறுக்க முடியாமல் சந்திரா கூட நந்தினிக்கு ஆதரவாக பேச முயல ஏழுமலை பார்த்த ஒற்றை பார்வையில் அடங்கிவிட்டார்.

ஏழுமலையின் பேச்சால் விஜி தான் மிகவும் கொந்தளித்தான். அவனால் நந்தினியின் கண்ணீரை காண முடியவில்லை. நேசமணி அவனை பேசவிடாமல் தடுத்துவிட்டார். இருக்கும் பிரச்சனை போதும் என்று.

அனைவருக்குமே நந்தினியின் கண்ணீரில் மனம் கரையத்தான் செய்தது. ஆனாலும் அவர்களால் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியுமா?

“இப்போ இதை கழட்ட போறியா இல்லையா?…” என்று உச்சக்கட்ட கடுப்பில் கேட்டவரின் காலடியில் மண்டியிட்டு,

“அப்பா வேண்டாம்ப்பா, ப்ளீஸ்ப்பா. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கப்பா. தாலியை மட்டும் கேட்காதீங்க. என்னால நீங்க சொல்றதை செய்ய முடியாதுப்பா. என்னை மன்னிச்சிடுங்க. தாலியை கழட்டுறது பெரிய பாவம்ப்பா. என்னோட கைய்யெல்லாம் நடுங்குதே?…” என்று அவரின் காலை பிடித்துகொண்டு கதறியும் கூட நந்தினியின் மீது அவருக்கு இரக்கம் சுரக்கவில்லை.

“அப்போ என் பேச்சை கேட்க மாட்ட. உன்னால நான் சொல்றதை செய்ய முடியாது. அப்படித்தானே?…” என்றவருக்கு பதில் சொல்லாமல் கண்ணீரோடு பார்த்தாள்.

“சரி, நீ உன் விருப்பபடியே இந்த தாலியோடவே ஊருக்கு வா. ஆனா நாங்க பொணமா தான் ஊருக்குள்ள வருவோம். புரிஞ்சதா?…” என்றவரது பேச்சில் உன் தகப்பன் சொன்னதை செய்வேன் என்ற உறுதி தொனித்தது.

பிரம்மை பிடித்தது போல செய்வதறியாது தவித்து நின்றாள். அவளது விழிகள் நிலைகுத்தி நின்றன.

error: Content is protected !!