நட்சத்திர விழிகளிலே வானவில் – 20 (1)

நட்சத்திர விழிகள் – 20

            சிவாவின் போனில் கோசலைக்கு அழைத்து அனைவரையும் கூடிக்கொண்டு கோவிலின் வெளியே வருமாறு கூறினான் விஜி.

கோசலையும், “நந்தினியோடு தான் விஜி வருகிறான், இனி தைரியமாக ஏழுமலையிடம் செல்லலாம், ஆனால் ஏன் வெளியே வர சொல்கிறான்…” என எண்ணிக்கொண்டு லேசான நிம்மதியாக பூரணியோடு கோவிலை அடைந்தார்.

ஏழுமலையிடம் விஷயத்தை கூறவும் நந்தினிக்கு அடியேதும் பட்டுவிட்டதோ அதனால் தான் தங்களை அழைக்கிறானோ என்று நினைத்து அனைவரும் கவலை கொண்டனர்.

வெளியே எங்கே சென்றாலும் எங்காவது விழுந்து வைத்து காயம் உண்டாக்கி கொள்வதே நந்தினிக்கு வாடிக்கை என்பதால் அனைவருமே அப்படிதான் நடந்திருக்கும் என்று நினைத்தனர்.

சிவாவோடு நந்தினி இல்லாமல் விஜி மட்டுமே தனித்து வந்து நின்ற கோலம் அனைவரது மனதிலும் பீதியை உண்டாக்கியது. கலக்கத்தோடு அவனை பார்த்தார்கள்.

“விஜி, என்னடா ஆச்சு? ஏன் இப்படி உனக்கு அடிபட்டிருக்கு? நந்தினி எங்கடா?…”என்று பரிதவிப்போடு கேட்ட பூரணியிடம் பதில் கூறாமல் அவரை கட்டிகொண்டு அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கத்தில் வெடித்து அழுதான்.

அவனது அழுகையில் அனைவரது பயமும் அதிகரிக்க ஏழுமலை விஜியை பூரணியிடமிருந்து பிரித்து தன் புறமாக இழுத்து அவனை உலுக்கினார்.

“எங்கடா என் பொண்ணு, அழாம சொல்லித்தொலையேன்…” என்று மிரட்டும் தொனியில் கூறவும் இன்னும் பயந்து விட்டான்.

ஏழுமலையின் முன்னால் வந்த சிவா, “சார் நடந்ததை நான் சொல்றேன். அவனால இப்போ எதுவுமே பேச முடியலை. அந்த அளவிற்கு உடைந்து போய் இருக்கிறான்…” என்றவனை கேள்வியாக பார்த்த ஏழுமலை,

“நீங்க யார்? என்ன ஆச்சு என் பொண்ணுக்கு?… என்று கண்ணீரோடு சிவாவிடம் ஏழுமலை கேட்கவும் சிவா அனைத்தையும் கூறினான். அவன் பேச பேச அவர்களை உயிரோடு தீவைத்து கொளுத்துவது போன்ற ஒரு வேதனை அனைவரின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

“ஐயோ மித்ரா… என்று கதறிய சந்திராவை அனைத்த ஏழுமலை, “என் பொண்ணு போகும் போதே என் பொண்டாட்டி முகத்துல ஒரு சஞ்சலம் இருந்துச்சு. நான்தான் அதை கண்டுக்காம விட்டுட்டேன். நான் மட்டும் அனுப்பாம என்னோடவே வச்சிருந்தா இந்த நிலை அவளுக்கு வந்திருக்குமா?…” என்று கண்ணீர் வடித்தார்.

“நீங்க பதட்டப்படாதீங்க சார். என்னோட ப்ரெண்ட்ஸ் உங்க பொண்ணை எப்படியாவது காப்பாத்திடுவாங்க. கண்டிப்பா உங்க பொண்ணு நல்லபடியா உங்களை வந்து சேருவாங்க…” என்று அவர்களை ஆறுதல் படுத்த முயல,

“மாப்ள, இப்போ பேச நேரமில்லை. வாங்க நம்ம மித்துக்குட்டியை தேடுவோம். தம்பி எங்களுக்கு கொஞ்சம் வழிகாட்டுங்களேன்…” என்று சிவாவையும் கூட அழைத்துகொண்டு ஏழுமலையோடு வேகமாக தோப்பு இருந்த பக்கமாக சென்றார்.

பூரணியும் கோசலையும் தான் மிகவும் துடித்துப்போயினர். தாங்கள் தானே ஏழுமலை மறுக்க மறுக்க மித்ராவை அழைத்துசென்றோம் என்ற குற்ற உணர்வில் குமைந்தவர்களை மேலும் குன்ற செய்தது ஏழுமலை நேசமணியின் பாராமுகமும் ஒதுக்கமும்.

தங்களுக்கு முன்னால் நந்தினியை தேடி சென்றவர்களை பின்தொடர்ந்து தாங்களும் சென்றனர் நந்தினிக்கு எந்த ஒரு துன்பமும் நேர்ந்துவிட்ட கூடாதென்று கடவுளை வேண்டியபடி.

அவர்கள் ஆற்றங்கரைக்கு அருகில் செல்லும் போதே சிவாவின் மொபைலில் விஷ்ணுவின் அழைப்பு வந்து விட்டது. அந்த அழைப்பிற்கு காது கொடுத்தவன் மறுபுறம் உதயாவின் ஆவேசமான பேச்சை கேட்டு ஸ்பீக்கரில் போட்டான். திருவிழாவிற்கென அங்கே போடபட்டிருந்த கடைகளை கடந்து விட்டதால் உதயாவின் பேச்சு சுத்தமாக தெளிவாக கேட்டது.

உதயாவின் குரலில் இருந்த கோவத்தை எந்த அளவிற்கு கவனித்தனரோ அவன் பேசியதன் சாராம்சத்தையும் புரிந்துகொண்டனர். எல்லாம் முடிந்தது. தன் பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தானா என்று மனம் வெறுத்தே விட்டனர்.

ஏழுமலை மனமோ நந்தினியை எண்ணி உலைகளமாக கொதித்தது. “அனைத்து தன் பெண்ணால் விளைந்தது தானே, அவள் மட்டும் அமைதியாக தன வேலையை பார்த்துகொண்டு இருந்திருந்தால் இத்தனை வேதனை தங்களை அடைந்திருக்காதே?…” என்று நினைக்க நினைக்க தன் மகளின் மேல் உள்ள பாசத்தில் வெறுப்பு என்ற நெருப்பு சூழ்ந்துகொண்டு உள்ளத்தில் நிறைந்திருந்த அன்பை வெளியேற விடாமல் அடக்கியாண்டது.

இனி நந்தினியை மன்னிக்க ஏழுமலை தயாராக இல்லை. அதோடு இந்த விவகாரத்தை அப்படியே விடவும் மனமில்லை. கோவிலை நோக்கி வேகநடையில் கோவமாக சென்றவரை பார்த்து அஞ்சிய குடும்பத்தினர் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

பாதி வழியில் பூசாரியின் அழைப்பு ஏழுமலையின் மொபைலில் வர அதை யோசனையோடு எடுத்தவர் அவர் சொன்ன தகவலில் இன்னமும் இறுகிவிட்டார். பூசாரியை எதுவும் பேசவேண்டாம் என்றும், தாங்கள் அனைவரும் அங்கே வந்து கொண்டிருப்பதாகவும் அதுவரை அமைதியாக இருக்கும் படி கூறிவிட்டார்.

————————————————-

நந்தினியின் கழுத்தில் தாலி கட்டி முடிக்கும் வரைக்கும் தோன்றாத ஒரு விதமான புரியாத உணர்வும், வரையறுக்க இயலாத சிறு பயமும் உருவாகியது உதயாவின் உள்ளத்தில்.

முதல் முதலாக தான் செய்த ஒரு செயலுக்காக தடுமாறி நின்றான். அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற குழப்பத்தில் நிற்கும் போதே கூட்டத்தில் இருந்த மக்களும், ஊர்த்தலைவரும் நொடியில் உதயாவையும் நந்தினியையும் சுற்றி வளைத்து கொண்டனர்.

“ஏய் யார் நீ? எங்க ஊர் கோவில் திருவிழால இத்தனை பேர் கூடி இருக்குற இடத்துல இந்த புள்ளை கழுத்துல பொசுக்குன்னு தாலி கட்டிட்ட?…” என்று மீசையை முறுக்கிக்கொண்டு கேட்டார் ஊர்த்தலைவர்.

முதலில் நந்தினியை சேர்ந்தவர்களோ என்று நினைக்கும் பொழுதில்  அவர் சொன்ன எங்க ஊர் என்ற அடையாளத்தில் அவரை அந்த ஊர்க்காரன் என்று மட்டும் நினைத்த உதயா,

“உங்க ஊர்னா என்ன பெரிய இதுவா? போயா உன் வேலையை பார்த்துட்டு…” என பட்டென பேச அதில் அவமானம் அடைந்தவர் பேச ஆரம்பிக்கும் முன் அங்கிருந்த மற்றொருவன்,

“இந்தாப்பா, இந்த ஊர் பெரிய மனுஷன் இவர். எங்களுக்கெல்லாம் நல்லது கேட்டது எடுத்து சொல்லி தீர்ப்பு வழங்குற தலைவரைப்போய் வாய்க்கு வந்த படி பேசாத…” என கண்டித்து சொன்னான்.

விஜி சொன்ன தலைவர் இவர்தான் என்று நொடியில் புரிந்து போனது. உதயாவிற்குள் அதுவரை மட்டுப்படிருந்த கோவம் சுறுசுறுவென ஏற கண்டித்தவனை விடுத்து ஊர்த்தலைவரை கூர்மையாக பார்த்தவன்,

“வாய்யா பெரிய மனுஷா, இந்த லட்சணத்துலதான் நீ இந்த ஊருக்கு தீர்ப்பு சொல்லிட்டு இருக்கியா?…” என கோவமாக கேட்டான். அதில் திடுக்கிட்ட அவர்,

“தம்பி, மரியாதையாக பேசுப்பா. நான் இந்த ஊர்த்தலைவர். ஞாபகத்தில வச்சு பேசு…” என்று இறுமாப்பு குறையாமல் திமிராக தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார்.

“அடச்சீ, நீயெல்லாம் ஒரு மனுஷன், உனக்கு ஊர்த்தலைவர் பதவி ஒரு கேடா?…” என ஆங்காரமாக உருமிய உதயாவை எங்கே கோவத்தில் அடித்துவிடுவானோ என்ற அச்சத்தோடு மெல்ல பின்னால் தள்ளி நின்று பார்த்தார் அவர்.

மீண்டும் கூட்டத்தில் இருந்து ஒருவன், “இதோ பாருப்பா, நீ ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்து தாலிகட்டுவ?… அதை தட்டிக்கேட்ட எங்க ஊர்த்தலைவரை கண்டபடி பேசுவ?… அதை பார்த்திட்டு நாங்க அமைதியா இருக்கனுமா?… இதுபோல அடாவடித்தனம் செஞ்சுட்டு நீ முழுசா ஊர்போய் சேரமுடியாது பார்த்துக்கோ?…” என்று எச்சரிக்கை குரலில் கூறினான்.

அங்கே குழுமியிருந்த ஊர்க்காரர்கள் அனைவரும் உதயாவின் மீது கடும் கோவத்தில் பாய இருந்தனர். அனைவரையும் அஞ்சாமல் பார்த்த உதயா ஒரு நிமிடம் என்ன பேச வேண்டும் என யோசித்து பார்த்து  விஷ்ணுவிற்கு கண் சமிஞ்சை செய்துவிட்டு சட்டென ஆரம்பித்தான்.

“உங்க ஊர்த்தலைவர் செஞ்ச காரியம் இங்க யாருக்காவது தெரியுமா?. எங்க வீட்டு பொண்ணை கடத்த உதவி செஞ்சு எங்க குடும்பத்தையே நிர்மூலமாக்க பார்த்த அவரை வேற எப்படி பேசனும்னு சொல்றீங்க?…” என ஆத்திரமாக கேட்டவன் நந்தினியையும் கைத்தாங்கலாக வைத்துக்கொண்டே தான் பேசினான்.

மற்றவர்கள் பிரச்சனை என்னவாக இருக்கும் என யோசிக்கும் போது, “என்னது உங்க வீட்டு பொண்ணா?. இதை நம்ப சொல்றியா? எத்தனை பேருடா இதையே சொல்லுவீங்க?. நீ இந்த பொண்ணை இழுத்துட்டு வந்து தாலிகட்டிட்டு அதிலிருந்து தப்பிக்க பார்க்கிறாயா?….”என்று கேலியாக கேட்டவரை பார்த்தவன் தன் கட்டுபாட்டை இழந்து,

“யோவ்!!… இன்னும் ஒரு வார்த்தை நீ பேசின அடிச்சு மூஞ்சியை பேத்துருவேன் பார்த்துக்கோ. செய்றதையும் செஞ்சுட்டு எகத்தாளமாவா பேசற? பேச வாயில்லாம பண்ணிடுவேன். ஜாக்கிரதை…” என கைநீட்டி எச்சரிக்கவும் அவமானத்தில் தலைகுனிந்து கப்பென வாயை மூடிக்கொண்டார்.

“யார் என்னனு கூட விசாரிக்காம கண்ணீர் விட்டு கதறின இந்த பொண்ணையும், பையனையும் துள்ளத்துடிக்க அந்த அயோக்கியன் கிட்ட ஒப்படைக்கிறதுக்கு முன்னால அவங்களோட பக்க நியாயத்தை அவங்க என்ன சொல்ல வராங்கன்றதை காது குடுத்து கேட்டீங்களா?…” என்றவனின் கேள்விக்கு உதயா எதை பற்றி பேசுகிறான் என்று அங்கே அறிந்தவர்கள் சிலரில் ஒருவரிடத்தும் பதில் இல்லை.

மற்றவர்கள் புரியாமல் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அங்கிருந்த ஒருவன் மட்டும் மெல்ல, “அவங்க எங்க குலசாமி மேல…” என்று இழுக்கவும் முழு அக்னி பிழம்பாக மாறிவிட்டான்.

“இப்படி சொல்ல உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?…. இப்படி சாமி மேல பழியை போட்டு செஞ்ச பாவத்தில இருந்து தப்பிக்கலாம்னா நினைக்கிறீங்க?… நீங்க எத்தனை திருவிழா எடுத்தாலும் இன்னைக்கு நீங்க பண்ணின பாவத்தால உங்க சாமி கூட இனிமே உங்களை மன்னிக்காது…” என பொரிந்து தள்ளினான்.

அவனது ஆவேசத்தில் விஷ்ணு கூட பயந்துவிட்டான். “பிரபா என்னடா இது? அமைதியா பேசுடா…” என அவனை அமைதியாக்க முயற்சித்தும் அதற்கு பயனில்லை.

error: Content is protected !!