நட்சத்திர விழிகளிலே வானவில் – 19 (2)

அவர்களின் பலவீனத்தை வைத்து பகடையாடிவிட்டான் பிரசாத். இனி நந்தினியை தன்னிடமிருந்து யாராலும் காப்பாற்ற இயலாது என்ற இறுமாப்பில் அவளை திமிராக பார்த்தான்.

“சரி சரி. எல்லோரும் கிளம்புங்க கோவிலுக்கு போங்க. நான் பின்னாடியே வந்திடறேன்…” என்று அவர்களை அனுப்ப,

அதை பார்த்த விஜியும் நந்தினியும் அவர்களோடு தாங்களும் நகர முயல, “தம்பி எங்க போறீங்க? அந்த புள்ளையை ஒப்படைச்சிட்டு உன் வீட்டாளுங்களை கூட்டிட்டு உன் ஊரை பார்த்து  போற வழியை பாரு. படிக்க வேண்டிய வயசில காதாலாம், கத்தரிக்காயாம்…” என முகச்சுழிப்போடு விஜியை பார்த்து கூறியா அவரை பார்த்து முறைத்தான் விஜி.

நந்தினிக்கு இனி இங்கிருந்து யாரும் தங்களுக்கு உதவபோவதில்லை என உறுதியாக தெரிந்துபோனது. எப்படி இதிலிருந்து மீள போகிறோம் என புரியாமல் தவித்தாள்.

இவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என நினைத்தவன் நொடியில் நந்தினியை இழுத்துக்கொண்டு கோவிலை நோக்கி வெறிபிடித்தவன் போல வேகமாக ஓடினான் விஜி.

“கோவிலுக்கு போய்விட்டால் இவர்களால் என்ன செய்யமுடியும் அங்கே வைத்து பார்த்துக்கறேன் ஒவ்வொருத்தனையும்…” என சூளுரைத்துக்கொண்டே ஓடினான்.

“மித்ரா சீக்கிரமா வா, என்னோட. கோவிலுக்கு போய்ட்டா. போதும்…” என கூறிக்கொண்டே தன் வேகத்திற்கு அவளையும் இழுத்தான்.

கோவிலை விட்டு ஆற்றங்கரையோரம் தொலைவில் இருந்த தோப்பில் இந்த பிரச்சனை நடந்ததால் கோவிலை நெருங்க சிறிது நேரம் பிடிக்குமே? அதுவரை சிக்காமல் அதற்குள் தப்பிவிட நினைத்தார்கள்.

இருவரும் ஓடுவதை பார்த்த ஊர்த்தலைவர், “டேய், பிடிங்கடா அவங்களை…” என தன்னோடு இருந்த இளவட்டங்களுக்கு உத்தரவிட அவர்களும் துரத்தினார்கள்.

தன்னை துரத்தியவர்களை கண்ட விஜி நொந்தே போனான். அவர்களின் வேகத்திற்கு தடைபோடும் விதமாக நந்தினி, விஜியின் முன்னால் இருவர் மறித்து நின்று அவர்களை கைப்பற்றி பிரசாத்தை நோக்கி தூக்கி சென்றனர்.

விடுபட எத்தனை முயற்சித்தும் அவர்களின் பலத்தின் முன்னால்  அனைத்தும் விழலுக்கு இழைத்த நீராகியது.

மீண்டும் அவர்களிடத்தில் சிக்கிவிட்டதில் அவர்களது தப்பும் எண்ணம் நிராசையானது. தங்களை தேடி யாராவது வந்துவிடமாட்டார்களா என தேடி தேடி அலைபாய்ந்தே கண்கள் களைத்தன.

பிரசாத்தை நெருங்கியதும் நந்தினியை அவனின் கையில் ஒப்படைத்த பிரசாத்தின் நண்பர்களில் ஒருவன், “மச்சான், கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரதுக்குள்ள தங்கச்சி அவனோட ஓடிட்டு இருந்துச்சு. பெரியப்பா வேற மித்ராவை தேடிட்டு அழுதிட்டு இருக்காங்க அங்க. என்னன்னு பார்த்துட்டு வரலாம்னு வந்தோம். இவங்களை வர வழியில பார்த்துட்டோம்…” என்றவன்,

“எத்தனை தடவை டா சொல்றது. என் தங்கச்சி பக்கம் வராதன்னு. திருந்தவே மாட்டியா?…” என அவன் பங்குக்கு தன் நடிப்புத்திறனை காட்ட விஜியால் அவர்களது நடிப்பை சகிக்க முடியவில்லை.

பிரசாத்தின் கைப்பிடிக்குள் வெளிவரமுடியாமல் சிக்கியிருந்த நந்தினியை பார்த்து வாய்விட்டே அரற்றினான்.

“எங்களை விட்ருங்கடா. உங்களுக்கு புண்ணியமா போகும். அவ தெரியாம தப்பு பண்ணிட்டா. உங்க கால்ல வேணும்னாலும் விழறோம்டா…” என கெஞ்சினான். அவ்வளவுதான் பொங்கிவிட்டாள் நந்தினி.

“ஏண்டா விஜி, உனக்கு அறிவே இல்லை?… இவனுங்க கிட்ட போய் கெஞ்சுற?… சாமி பேரை சொல்லி பொய் சத்தியம் பண்ணின இவனையும், அதை கேட்டுக்கிட்டு நம்பிட்டு போற இந்த மூளையில்லாத முட்டாள் ஊர்த்தலைவரையும் அந்த சாமி கூட காப்பாத்தாதுடா…” என்றவள் அதோடு விடாமல்,

“யோவ் தாத்தா, கொஞ்சம் கூட புத்தியில்லாத உன்னையெல்லாம் ஊர்த்தலைவர்னு இந்த ஊர்க்காரனுங்க சொல்றானுங்க பாரு சரியான லூசுங்க. எது உண்மை எது பொய்யின்னு தெரிஞ்சுக்காம உன் மூட நம்பிக்கைய பயன்படுத்தி சத்தியம் செய்யுறவனை எல்லாம் நம்பி தீர்ப்பு சொல்ற நீ உயிரோட இருக்கிறதை விட இந்த ஊருக்கு நல்லது பண்ணனும்னு நினச்சா அந்த ஆத்துல விழுந்து செத்துப்போ…” என்று வெறிபிடித்தவள் போல கத்தினாள்.

“நீங்க சொல்லும் போது கூட நம்பலை தம்பி. என் கண்ணு முன்னாலேயே பொண்ணை இழுத்துட்டு ஓடுறான் இந்த ராஸ்கல். இந்த பொண்ணு என்னடானா வாய்க்கு வந்தபடி பேசுது. இதுக்கெல்லாம் காரணமான இவனை…” என்று கையை ஓங்கிக்கொண்டு அடிக்க பாய்ந்த ஊர்த்தலைவரை தடுத்த பிரசாத்,

“அவனும் என் தம்பி தானே பெரியவரே? விட்ருங்க. சின்னபையன் அவங்க வீட்டு பெரியவங்க பேச்சை கேட்டு தெரியாம தப்பு பண்ணிட்டான். அடிக்காதீங்க…” என அவனுக்காக பரிதாபப்படுவது போல பாசாங்கு காட்டினான்.

“நீங்க ரொம்ப நல்லவங்க தம்பி. சரி இந்த பொண்ணோட அப்பாம்மா எங்க இருக்காங்க சொல்லுங்க. நாங்களும் கூட வந்து ஒப்படைக்கிறோம்…” என கூறியதும் இதற்கென்ன பதில் சொல்ல போகிறானென அவனை நோக்கினான் விஜி.

அவரது முனைப்பில் சுதாரித்த பிரசாத், “அவங்களை கார் எடுத்துட்டு வர சொல்லியிருக்கோம் பெரியவரே. இப்போ வந்திடுவாங்க. நாங்க தோப்புக்கு அந்த பக்கம் இருக்கிற வழியில போய்டுவோம். நீங்க கோவில்ல நிறைய வேலை இருக்குமே அதை பாருங்க. ரொம்ப நன்றி பெரியவரே…” என்றவனை பார்த்து பெரிதாக சிரித்தார் ஊர்த்தலைவர்.

“இருக்கட்டும் தம்பி. நல்லபடியா போய்ட்டுவாங்க. இங்க பாரு பாப்பா. உங்கப்பாம்மா சொல்றதை கேட்டு நடக்கணும். இப்படி ஓடிப்போறதெல்லாம் ரொம்ப தப்பு…” என்று உபதேசம் செய்துவிட்டு அவளின் தீயான பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் எஞ்சி இருந்தவர்களை அழைத்துகொண்டு வந்த வழியே புறப்பட்டார்.

கண் விட்டு மறையும் வரை அவர்களையே பார்த்திருந்த பிரசாத், “டேய் அவனை இழுத்துட்டு கொஞ்சம் தள்ளி ஒதுக்கு புறமா வாங்கடா…” என கூறிவிட்டு நந்தினியை இழுத்துக்கொண்டு முன்னால் நடந்தான்.

அவர்கள் போட்ட கூச்சல் யாருக்குமே கேட்காத தொலைவிற்கு வந்துவிட்டனர். பலம்கொண்ட மட்டும் போராடி போராடி ஓய்ந்த விஜி இனி அவர்களிடம் போராட தெம்பில்லாமல் சோர்ந்தான்.

“அண்ணா, ப்ளீஸ். எங்களை விட்ருங்க. அவ சின்ன பொண்ணு தெரியாமல் பேசிட்டா. இப்போதான் ப்ளஸ்டூ முடிச்சிருக்கா. அவ இன்னும் நல்லா படிக்கனும். பாவம் அண்ணா. அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். ப்ளீஸ் அண்ணா விட்ருங்க…” என்ற விஜியின் மன்றாடல் போதை என்ற அரக்கனின் பிடியில் இருந்த அந்த அரக்கர்களிடம் செல்லுபடியாகவில்லை.

அந்த இருவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானபடுத்தி அடிவாங்க வைத்த நந்தினியே.

ஆனால் பிரசாத்திற்கோ தன் கன்னத்தில் சிறிதும் பயமின்றி அறைந்ததோடு மட்டுமில்லாமல் தன்னை இகழ்வாக பேசிய நந்தினி மட்டுமே.

தன்னை மிக சாதாரணமாக எடைபோட்டு தரமிறங்க வைத்துவிட்டாளே என்ற கோவம் தன்னிடம் கெஞ்சாமல் முறைத்துக்கொண்டே நின்றவளை பார்த்து மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது.

தன் காலில் விழுந்து கெஞ்சுவாள், கதறுவாள் என எதிர்பார்த்தால் அவனை துச்சமாக நோக்கி கொண்டிருந்தாள் நந்தினி. அதுவே அவளோ துவம்சம் செய்துவிடும் வெறியை கிளப்பியது.

இப்படி ஒரு சூழ்நிலையிலும் அஞ்சாமல் தன்னை எதிர்ப்பவளை என்ன செய்யலாமென்ற யோசனையில் உழன்றவனை,

“டேய் பொறுக்கி. நீ திருந்த மாட்டியாடா? எங்களை இப்படி தப்பா பேசின உன்னை பழிவாங்காம விடமாட்டேன் இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா. உன்னை போலீஸ்ல பிடிச்சுக்கொடுத்து கம்பி என்ன வைக்கலைன்னா பாரு…” சகட்டுமேனிக்கு வார்த்தையால் காய்ந்தவள்,

“விஜி, நம்மை காப்பாத்த யாரும் வராமலா போய்டுவாங்க. நம்பிக்கயோட இருடா. இவனுங்க கால்ல விழாதே. மனசாட்சி இல்லாத ஜென்மங்கள். இதுங்க கிட்ட தராதரம் இல்லாம கெஞ்சினா நமக்குதான் அசிங்கம்…”என மூச்சுவாங்க பேசியவளை கோவத்தில் கோவத்தில் கண்கள் சிவக்க பார்த்தவன்,

“இவ்வளோ பட்டும் நீ அடங்க மாட்ட. என் கிட்ட கெஞ்ச மாட்ட. அப்டிதானே?…”

“ஆமா,ஆமா. நீ ஒரு குடிகாரன். உன் கிட்ட நான் எதுக்காகடா கெஞ்சனும்? நான் ஒரு தப்பும் பண்ணலை. ஓ!!! நான் உன் கால்ல விழனும், கிட்ட கெஞ்சனும்னு வேற நீ எதிர்பார்க்கிறயா? அது இந்த ஜென்மத்துல நடக்காதுடா…” என்று அவனின் பிடியிலிருந்து திமிறியபடியே முகம் பார்த்து வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“சரியான ராங்கிக்காரிதான் நீ. எவ்வளோ திமிரா பேசற. நீ என்கிட்டே இருந்து மிஞ்ச மிஞ்ச தான் உன்னை என் கால்ல விழுந்து கெஞ்ச வைக்கனும்னு ஆவேசம் வருது. உன்னை இதோட விடவே மாட்டேன்…” என்று உள்ளுக்குள் கனன்ற கோவத்தை கண்களில் தேக்கி கர்ஜித்தான்.

அந்த குரலில் நந்தினிக்கு உள்ளூர நடுக்கம் பிறந்தாலும் வெளியில் அதை காட்டிகொள்ளாமல் விறைப்பாகவே இருந்தாள்.

விஜிக்குதான் நந்தினியின் மீது கோவம் அதிகமாகியது. சும்மாவே பழி உணர்ச்சியில என செய்யறோம்னு தெரியாம ஆடிட்டு இருக்கான். அவன் கிட்ட இன்னமும் இப்டி பேசறாளே? என் மனம் குமைந்தான்.

“மித்ரா ப்ளீஸ் அமைதியா இரேன்…” என்று அவளிடம் கூறிவிட்டு,

“இதோ பாருங்க, நீங்க நடந்துக்கிறது கொஞ்சமும் சரியில்லை. நாங்கதான் மன்னிப்பு கேட்கோமே. அப்றமும் இப்டி…” என விஜி சொல்லி முடிக்கும் முன்னே அசட்டையாக கேட்டுகொண்டு இருந்த பிரசாத்தின் கையை பலமாக கிள்ளிவிட்டு விஜியை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடப்பார்த்தாள்.

அவளது நேரமோ என்னவோ விஜியை பிடித்திருந்தவன் நந்தினியின் திருட்டுமுழியை அடையாளம் கண்டுகொண்டு தன் பிடியை இறுக்கினான்.

கணபொழுதில் சுதாரித்த பிரசாத் அவளின் குரல்வளையை நெருக்கி, “என்னை விட்டு அவ்வளோ சீக்கிரம் தப்பிடலாம்னு நினச்சுட்டியே. விட்ருவேனா நான். என்னை பத்தி சரியா தெரியாம ரொம்ப லேசா எடை போட்டுட்ட இல்ல. அது தப்பாச்சே?…” என வெறி மின்னும் கண்களோடு நந்தினியின் கையை பின்னாலிருந்து வளைக்க வலியில் கண்ணீரோடு,

“விடுடா…” என கத்தினாள். அவளின் வேதனை கலந்த குரல் பிரசாத்தின் காதில் தேனாக பாய்ந்தது.

error: Content is protected !!