வீட்டின் முன்பாக கார் நின்றதும் மேளச்சத்தம் முழங்கவும் சரியாக இருந்தது. கண்ணை திறந்து பார்த்தவள் மிரண்டு பின்வாங்கினாள்.
“ஐயோ எவ்வளோ பேர் இருக்காங்க?….” என்றெண்ணியபடி உதயாவை பார்த்தவள் அவனது இறங்கு என்ற கட்டளையை ஏற்று இறங்க முற்பட்டவளது கால்கள் அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தது.
காரின் மறுபுறம் வந்தவன் கைபிடித்து “ம்ம், இறங்கு!…” என்றான் மீண்டும்.
தள்ளாடியபடி இறங்கியவளுக்கு பயத்தில் நாக்கு வறண்டு பூமி தட்டாமலை சுற்றியது.
கையை பிடிக்கவுமே அவளுக்கு நடுக்கம் அதிகமாகியதை உணர்ந்தவன், “ஆத்தீ இவ இங்க வச்சு மயக்கம் ஏதும் போட்டு மானத்தை வாங்கிருவாளோ?” என்று பயந்து அவள் தோளை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.
மிரள மிரள விழித்தபடி நோக்கியவளை, “மரியாதையா நடந்து வா, இல்லைனா உனக்கு தலைசுத்தி மயக்கம் வருதுன்னு சொல்லி எல்லோர் முன்னாலையும் அப்டியே தூக்கிட்டு போய்டுவேன். எப்படி வசதி நடந்து வரயா? இல்லை தூக்கிட்டு வரணுமா?…” என்று மிரட்டினான்.
அந்த மிரட்டலுக்கு பலன் இருந்தது. எங்க செய்தாலும் செய்துடுவானோ என்றஞ்சி முகத்தில் ஒரு வண்டி தண்ணீரை கொட்டியது போல தெளிய நின்றாள் அதுவும் அவன் சொன்னதால் உண்டான பயத்தினாலே.
அவளுக்கென்ன தெரியும் எங்கே தான் மிரட்டியதும் அதற்கே நந்தினி மயக்கம் போட்டு வைத்து தன்னை தூக்க வைத்துவிடுவாளோ அனைவரின் முன்னிலையிலும் தான் தூக்கவேண்டிவந்திருமோ என்று தன் பக்தியை பகவானுக்கு பகடையாக்கினான்.
அப்படி ஏதும் நடக்காமல் இருக்க அனைத்து கடவுள்களுக்கும் அரைநொடியில் அவசரமாக அழைப்பு விடுத்தான் அவனுக்கு துணையிருக்க.
அவனது அவசர வேண்டலுக்கு அசுர பலம் போல. கடவுள்களால் அவனின் கருணை மனு கச்சிதமான கையாளப்பட்டது.
வாசலில் நாச்சி குறும்பாக இவனின் பாவனைகளை பார்த்தபடியே இருப்பதை கண்டு “ஐயோ!…” அலறியது மனம்.
“சிக்கிட்டேனே!…” என்று நொந்தேவிட்டான்.
அனைவரும், “பொண்ணு மகாலட்சுமி போல இருக்குதுய்யா!….” என்று சில்லாகித்தபடி அவர்களுக்குள் உரையாடிகொண்டனர்.
கூட்டத்தினரை தள்ளிக்கொண்டு ஆரத்தித்தட்டோடு வந்தவள், “அண்ணி கொஞ்சம் நிமிர்ந்துதான் பாருங்களேன். அப்புறம் ஆரத்தி எடுத்தது நான் தான்னு உங்களுக்கு தெரியாமலேயே போய்டும்!….” என்றாள் சிநேகிதத்துடன்.
“என் தங்கச்சி, பேரு கெளரி!…” என்றான்.
அச்சிறுபெண்ணை லேசாக நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டவளை கண்டு அனைவருமே கொல்லென சிரித்துவிட்டனர்.
“போதும்,போதும் சிரிச்சது. ஏற்கனவே புள்ள பயந்து கிடக்குது. இப்டி சிரிச்சா அது இன்னமும் பயந்துக்கும். முதல்ல உள்ளே வரவிடுங்க, அப்புறமா மத்ததை பேசலாம். வேலை வேற தலைக்குமேல கிடைக்குதுல!…” என்று அவர்களை திசை மாற்றிவிட்டு நந்தினியை காப்பாற்றியவர் நாச்சியே.
நன்றியோடு பார்த்த உதயாவை நோக்கி, “வா ராசா உனக்கு தனியா இருக்கு!…” என பார்வையிலேயே அவனுக்கு கிலியை உண்டாக்கிவிட்டே உள்ளே செல்ல ஆயத்தமானார்.
“நாச்சி பார்வையே சரியில்லையே? உஷாருடா உதயா, சிக்கினா சிக்கன் பிரியாணிதான்!…” என தனக்குதானே சொல்லிகொண்டு நந்தினியோடு தனது வீட்டிற்குள் ஒன்றாக நுழைய விழைந்தவனை கண்டு,
“ஏப்பா பிரபா பொண்டாட்டி கையை பிடிச்சு கூட்டிட்டு போவியா இப்டியா போவ?…” என்று வினவி வைக்கவும் நந்தினியின் கையோடு தன் கையை கோர்த்தபடி,
“இதுக்கே முடியலையே. எப்டி சமாளிக்க போறேன்? கடவுளே இன்னும் என்னென்ன இருக்குமோ? நீதான் காப்பாத்தனும்….” மீண்டும் கடவுளை தொந்தரவு செய்ய,
அதுவோ, “உனக்கு வேற வேலையில்லை!…” என வெறியாகி தெறித்து ஓடியது இவனது திசையின் எதிர்பக்கமாக.
கைப்பிடித்து மனையாளோடு தனது இல்லத்திற்குள் அவளது புக்ககத்துக்குள் நுழையும் போது ஏற்பட்ட மெலிதான அதிர்வும் அந்த அதிர்வு உண்டாக்கிய உணர்வும் என்னதென்று வகைப்படுத்தமுடியாமல் இப்போது எதையும் சிந்திக்க நேரமில்லை என சாக்கிட்டு புறந்தள்ளினான்.
வீட்டினுள் வந்ததும், “எதுக்கு இவ்வளோ ஆர்ப்பாட்டம் பண்ணி வச்சிருக்காங்க?..” என்று கடுப்போடு இவன் இருக்க,
“ம்க்கும், பொண்டாட்டியை கூட்டிட்டு வந்தா மட்டும் போதாது ராசா, புள்ள இந்த முழி முழிக்குதே, அதுக்கு எல்லோரையும் உறவுமுறையை சொல்லி தெரியபடுத்தனும்னு தோணுதா உனக்கு?…” என்று நீட்டி முழக்கியபடி நந்தினியின் அருகில் வந்த நாச்சி,
“ஆத்தா உன் பேரு என்ன?..” என்றார் வாஞ்சையாக.
“மித்ரநந்தினி!…”
மிடறு விழுங்கிய படி தொண்டையில் சிக்கிகொண்ட வார்த்தைகளை ஒவ்வொன்றாக தோண்டி எடுத்து கேள்விக்கு விடை சொன்னாள்.
“இது சரிபடாது, ஒரு கேள்விக்கே பதில் சொல்ல இப்படி பயந்து சாகுறா? இவ இப்படி இருந்தா இதுங்ககிட்ட பொழச்ச மாதிரிதான்!…” என்று பெருமூச்சு விட்டான்.
“நாந்தேன் உன் புருஷனுக்கு பாட்டி. என் பேரு நாச்சியாண்டாள். உன் மாமனார பெத்தவ!…” என்றார்.
அவரது காலில் விழுந்து ஆசி வாங்கிகொண்டவளை அணைத்து, “என்ற ஆத்தா, நல்லா இரு தாயி!..” என்றார் மனமார.
“இது என்னோட பிள்ளை, உன்ற மாமனாரு. பேரு கிருஷ்ணமூர்த்தி!..” எனவும் அவரது காலிலும் விழுந்து எழுந்தாள்.
“நல்லாயிருமா!…” என்றபடி சாந்தமான புன்னைகையுடன்.
“இது தான் உன் அத்தை, என் மருமவ, பேரு பாக்கியலட்சுமி. இவ கிடைக்க நாங்க பாக்கியம் செய்திருக்கணும். நீயும் தான் ஆத்தா!…” என்றார்.
அவரது காலிலும் விழபோகையில் நந்தினியை நிறுத்தி நெற்றியில் முத்தமிட்டு, “இருக்கட்டும்மா, நீ நல்லா இருப்படா ராசாத்தி, வா வந்து முதல்ல விளக்கேத்து!…” என்று அழைத்துசென்றார் பாக்கியலட்சுமி நிறைந்த புன்னகையோடும் மனம் கொள்ளா பூரிப்போடும்.
ஆகமொத்தம் உதயாவை யாருமே கண்டுகொள்வதாய் தெரியவில்லை.
அவனுக்கு நடந்த சம்பவத்தில் நந்தினியை தான்தான் அழைத்துவந்தோமா என்ற சந்தேகமே வந்து அவனை மேலும் புகைய வைத்தது.
“என்னங்கடா நடக்குது இங்க?…” இப்டி தன்னை எல்லோரும் தனியா விட்டுட்டு போயிட்டாங்களே என்று புலம்பிய படி,
“எல்லாம் கிழவியால!…” என சபித்ததுவிட்டு பூஜையறைக்குள் சென்றவர்களை பின்பற்றி தானும் சென்று அவசரமாக நந்தினியின் அருகில் நின்றுகொண்டான்.
நாச்சிக்கும் கெளரிக்கும் இவனின் முகத்தை பார்த்து மர்மான சிரிப்பொன்றை இருவரும் பரிமாறிகொண்டனர்.
பூஜையறைக்குள் சென்று விளக்கை ஏற்றி முடித்து கண்களை மூடி பிராத்தித்து கொண்டிருந்தாள் நந்தினி.
கும்பிட்டு முடித்ததும் கெளரி குங்குமச்சிமிழை நீட்டி, “அண்ணா இதை அண்ணிக்கு வகிட்டில் வைங்க!…” என்றாள்.
சுற்றி இருந்தவர்களை கவனத்தில் கொண்டு குங்குமம் இட சென்றவனை நிறுத்தி கேலி பெண்ணொருத்தி, “என்னங்கத்தான் கல்யாணமானா இப்டியா வைப்பாங்க?கழுத்தை சுத்தி கையை கொண்டுபோய் நெத்தியில வைங்க!…”என்றாள்.