அவளின் தாக்குதலில் உதயாவே சற்று மிரண்டான். அவனே வெறிபிடித்து போய் இருக்கிறான். இன்னமும் அவனை சீண்டிவிடுறாளே? என நினைத்தான். ஆனாலும் பிரசாத்திற்கு இது தேவைதான் எனவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
விஷ்ணுவோ, “பார்க்க பச்சை பிள்ளையாட்டம் இருந்துக்கிட்டு இந்த நிலையிலும் கூட எவ்வளோ துணிச்சலா அவனோட சண்டை போடுது?..” என வாய் பிளந்தான்.
“என்னடா சின்ன பொண்ணு? சின்னபொண்ணுன்னு சும்மா சும்மா அதையே சொல்றீங்க? அவ பொண்ணுன்னு எனக்கு மட்டும் தெரியாமலா இருக்கு?…” என்று மேலும் அவளை பார்வையிட அதில் வெகுண்ட உதயா இனியும் பொறுமை ஆகாது என்று பிரசாத்தை நெருங்கினான்.
உதயா வருவதை பார்த்த பிரசாத் நந்தினியை ஒரு கையில் பிடித்துக்கொண்டே மறுகையால் கீழே கிடந்த கூரான மரக்கட்டையை எடுத்து நந்தினியின் கழுத்தில் குறிபார்த்து வைத்தான்.
“போதும் பிரபா. உன் சாகசத்தை எல்லாம் என் கிட்ட வச்சுக்காதே? இன்னும் கொஞ்சம் என்னை நெருங்கின இவளை இங்கயே பிணமாக்கிடுவேன். ஜாக்கிரதை…” என்ற அவனின் அனல் தெறிக்கும் குரலே அவன் சொன்னதை செய்துவிடுவான் என உரைத்தது.
என்ன செய்வது என புரியாமல் முழித்தனர். ஆனால் நந்தினியோ அதற்கும் அசராமல்,
“குத்தி தொலைடா. செத்துப்போறேன். உன் கைப்பிடிக்குள்ள இருக்கிறதுக்கு சாவதே மேல். நீ என்னை தொட்டுட்டு இருக்கிறது எனக்கு தீயா எரியுது. அந்த வேதனைக்கு நான் இந்த உலகத்தை விட்டு போய் சேரலாம்…” என்றவள் சற்று மூச்சு வாங்கினாள்.
அவளது உறுதியில் உதயாவும். விஷ்ணுவும் தான் நிலைகுலைந்தனர். தன்னை யாரோ காக்க வந்திருக்கின்றனர் என்பது மட்டுமே தெரிந்த நந்தினிக்கு அது யாரென்று தெரியாமல் போய்விட்டது.
நந்தினியின் நிலையை பார்க்க பார்க்க உதயாவிற்க்கு யாரோ வாளால் தன் இதயத்தை ஆழ கீறுவது போன்ற ஒரு உணர்வு. அப்படி ஒரு சொல்லமுடியாத வலி உண்டாகியது. அந்த உணர்வை ஆராயகூட அவகாசமில்லாமல் ஆக்கியது நந்தினியின் நிலை.
“ஆனா நீ தப்பிக்க மட்டும் முடியாதுடா. நீயெல்லாம் நல்லா அனுபவிப்ப. என்னோட சாவுக்கும், நான் வடிச்ச கண்ணீருக்கும் நீ பதில் சொல்லித்தாண்டா ஆகணும். என்னை சேர்ந்தவங்க உன்னை சும்மா விடமாட்டாங்க…” என கழுத்தில் மரக்கட்டை அழுத்த அந்த வலியோடே திக்கி திணறி பேசினாள் நந்தினி.
அவளது பேச்சில் மேலும் சினமுற்ற பிரசாத் நந்தினியை ஓங்கி அறைவிட அதில் கலங்கி மயக்கத்திற்கு சென்றாள்.
அதை பார்த்த உதயா, “மனுஷனாடா நீ. சின்ன பொண்ணை போட்டு இப்படி அடிக்கிறியே? வெக்கமா இல்லையா?…” என கோவத்தில் சீற பிரசாத்தை அது இன்னமும் சீண்டியது. தன் நிலையை தாழ செய்த நந்தினியை இன்னமும் எதாவது செய்துவிட துடித்தான்.
“இவ என்ன உன் பொண்டாட்டியா? இப்படி துடிக்கிற?, நீ வராம இருந்திருந்தா கூட பரிதாபப்பட்டு இவளை விட்ருப்பேனோ என்னமோ. நீ இவ விஷயத்துல தலையிட்டுட்டல. இனி இவ நாசம் தாண்டா…” என ஆக்ரோஷமாக கத்தினான். உணர்வில்லாமல் இருந்த நந்தினியை பார்த்து,
“நான் தொட்டா எரியுதா? இனிமே தினம் தினம் ஒவ்வொரு நொடியும் உனக்கு உடம்பெல்லாம் பத்தி எரிய வைக்கிறேன். உன் கழுத்துல ஒரு தாலியை கட்டி என் பொண்டாட்டியாக்கி உனக்கு நரகத்தை காமிக்கலை பிரசாத் இல்லை…” என சவால் விட,
“டேய் இதுக்கு மேலயும் உன்னை விட்டுவைக்க கூடாதுடா. அப்டி செஞ்சா தனம் சித்தி கூட என்னை மன்னிக்க மாட்டாங்க…” என்றவன் தனத்தின் பெயரில் அதிர்ந்து நின்ற பிரசாத்தின் அசைவற்ற நிலையை பயன்படுத்தி விஷ்ணுவிற்கு கண்ணை காண்பிக்க நொடியில் காலுக்கடியில் கிடந்த மண்ணை பிரசாத்தை நோக்கி எட்டி உதைத்தான் விஷ்ணு.
அவனின் கண் முழுவதும் மணல் நிறைந்து விட நந்தினியை விட்டுவிட்டு கண்களை தேய்க்கவும் வேகமாக சென்று நந்தினியை அள்ளிகொண்டான் உதயா.
உதயாவின் பதட்டமும், பரிதவிப்பும் கலங்கிய கண்களும் விஷ்ணுவிற்கே ஆச்சர்யம் அளித்தது. ஆனாலும் அதை விடுத்து பிரசாத்தை நகரவிடாமல் பின்னாலிலிருந்து பிடித்துகொண்டான். போதையின் பிடியில் இருந்ததால் விஷ்ணுவிற்கு தன பிடியில் பிரசாத்தை நிறுத்த கொஞ்சம் இலகுவாகவே இருந்தது.
“அவளை இப்போ நீ காப்பாத்தலாம். ஆனா இங்க ஊர் எல்லையை விட்டு தாண்டும் போது என் பொண்டாட்டியாத்தான் போவா. பிரபா, நான் நினச்சதை சாதிக்கிறவன். தெரியுமில்ல. எங்க போனாலும் அவளை விடமாட்டேன்…” என்று கண்ணை கசக்கிகொண்டே கத்தினான்.
உதயாவின் மனமோ, “இந்த கிறுக்கன் கோவத்துல என்ன வேணும்னாலும் செய்வானே? இவளை எப்படி இவன்கிட்ட இருந்து காப்பாத்துறது. கடவுளே எனக்கு ஒரு வழி காட்டு…” என மன்றாடிகொண்டே நந்தினியின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினான்.
அவளுக்கு மயக்கம் தெளியும் முன்னே உதயாவின் உள்ளம் ஒரு முடிவெடுத்துவிட்டது. “சரியோ தவறோ இதுதான் நடக்க வேண்டுமென்று இருக்கிறது போல. இப்போதைக்கு அவளை காப்பாத்தியே ஆகணும். வேற வழியில்லை…” என்று தனக்குள்ளே யோசித்து நொடியில் முடிவெடுத்தான்.
நந்தினிக்கு தண்ணீரை குடிக்க குடுத்தவன் அவள் குடித்து முடிக்கவும், “உன்னால நடக்க முடியுமா?. கோவிலுக்கு போகணும்…” என கேட்டான்.
அவனது முகம் இன்னமும் மனதில் பதியாமல் போக பாதி மயக்க நிலையில் இருந்தவள், “எங்கப்பாம்மாகிட்டையா? என்னை கூட்டிட்டு போறீங்களா?. முடியலைனாலும் பரவாயில்லை. நான் வரேன்…” என்று கெஞ்சுதலுடன் கேட்டாள்.
அவளின் வேண்டுதலை கேட்ட பிரசாத் இன்னமும் கொதித்துப்போனான். தன்னை மனிதனாக கூட மதிக்காமல் கெஞ்சாமல் தன்னிடம் மரியாதையில்லாமல் பேசியவள் இப்போது அவனிடம் மட்டும் உதவிகேட்கிறாளே என இன்னமும் அவள் மேல் கோவத்தில் கனன்றான்.
ஏற்கனவே உதயாவின் மேல் கொண்ட பகையும், இப்போது நந்தினியின் மேல் ஏற்பட்ட கோவமும் அவனின் பழிவாங்கும் எண்ணத்திற்கு தூபம் போட அந்த வெம்மையில் ராட்சஷனாக மாறினான்.
“பிரபா உன்னால இவளை காப்பாத்த முடியாது. இவளை கதற வைக்காம நான் ஓயமாட்டேன். என் பார்வையிலிருந்து தப்பவே முடியாது இவளால…” என கோவத்தில் கத்திகொண்டே இருந்தான்.
விஷ்ணு தாக்கியதில் உண்டான வலியில் பிரசாத் கொஞ்சம் நிலைகுலைந்து தான் போயிருந்தான். “பைக் எடுத்துட்டு சீக்கிரமா போடா. ஏன் நடந்து போகனும்?…” என்றவனிடம் வேறொரு திசையை காண்பித்த உதயா,
“பைக் கீயை காணலைடா. இந்த வழியில போய்டுவேன். சீக்கிரமா கோவிலை நெருங்கிடலாம். நீ இவனை பார்த்துக்கோ. விடாதே. அதனாலதான். நீ வா…” என நந்தினியை எழுப்பிக்கொண்டு வேகமாக கோவிலை நோக்கி ஓடினான்.
அவர்கள் செல்வதை பார்த்த பிரசாத் விஷ்ணுவிடமிருந்து திமிறிக்கொண்டு அவர்களை பிடிக்க நினைத்தான்.
சில நிமிட முயற்சிக்கு பின்னால பிரசாத் விஷ்ணுவை பிடித்து கீழே தள்ளிவிட்டு நந்தினியை விட்டுவிட கூடாதென உதயா சென்ற திசையை நோக்கி வெறிபிடித்தவனாட்டம் ஓடினான்.
கோவிலை நெருங்கியவன் வேகமா கூட்டத்தினரை விலக்கி உள்ளே செல்ல அங்கே உதயா நந்தினியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி மூன்று முடிச்சிட்டிருந்தான்.
அனைத்தையும் கெடுத்துவிட்டானே என ஆக்ரோஷமாக அவர்களை வெறித்தவாறே பார்த்தவன் ஊர்த்தலைவர் அதிர்ச்சியாக அவர்களை பார்த்துகொண்டிருப்பதை கண்டதும் இனியும் அங்கே இருப்பது சரியில்லை என்றுணர்ந்து அவ்விடம் விட்டு அகன்றான்.
அவன் செல்லுவதையே மனம் வலிக்க பார்த்துக்கொண்டிருந்த உதயாவின் மேலேயே அன்றைய நாளின் அதிர்ச்சிகளின் பாரம் தாளாமல் மொத்தமாக மயங்கி விழுந்தாள் நந்தினி.
அவளை தன்னோடு தாங்கியவன், “இனி இவள் குடும்பத்தை எப்படி சமாளிக்க போகிறோம்…” என திகைத்து நின்றான்.
இந்த திடீர் சம்பவத்தை அங்கிருந்த செல்போன் கேமராக்கள் அழகாக தங்களுக்குள் விளுங்கிகொண்டது.