ஆனால் அவனின் வன்மம் நிறைந்த உள்ளம் அகோர பசியோடு அவளின் அழுகுரல் பத்தவில்லை என கேட்டது.
“இவனை இங்கயே கட்டிவச்சிட்டு வாங்கடா. இனியும் இங்கயே இருந்தா யாராச்சும் இவங்களை காணலைன்னு தேடி வருவாங்க. நாம மாட்டிக்குவோம். இன்னைக்கு இவளோட திமிரை அடக்கலைனா நான் ஆம்பளை கிடையாது. நானும் பொறுமையா சின்ன பொண்ணுன்னு பார்த்தா ரொம்ப பன்றா…” என கொந்தளித்தவன் நந்தினியை கையை கட்டி தூக்கி தோளில் போட்டுகொண்டு கிளம்பினான்.
“டேய், அவளை விட்டுடுங்கடா…” என கதறியவனின் கதறல் சட்டென அடைக்கப்பட்டது.
விஜியின் கை, கால் வாய் என அனைத்தையும் முடக்கி அவனை கோணிப்பையில் கட்டி தூக்கி அங்கே இருந்த கட்டைகளுக்கு மத்தியில் போட்டுவிட்டு சிறிது தள்ளாடியபடி பாக்கெட்டில் இருந்த மதுவை குடித்துக்கொண்டே பிரசாத்தை பின் தொடர்ந்தனர்.
இவர்களின் நிலை இப்படி இருந்தால் இவர்களுக்காக காத்துகொண்டு கடையில் அமர்ந்திருந்த கோசலைக்கும் பூரணிக்கும் பயத்தில் நா வறண்டுகொண்டே இருந்தது.
நந்தினியை தேடி விஜி சென்ற சில நிமிஷத்திலேயே ஏழுமலை போன் செய்துவிட்டார். எங்கே இருக்கிறீர்கள் என கேட்டு. முதலில் ஏதேதோ சொல்லி சமாளித்தவர்கள் இன்னும் அரைமணி நேரத்தில் வந்துவிடுவோம் என வாக்களித்து விட்டு விஜி சென்ற பாதையை பார்த்தவாறே இருந்தனர்.
விஜியின் நிலையை கண்ணீரோடு பார்த்தவளால் குரல் எழுப்ப முடியவில்லை. இவ்வளவு போராட்டத்தில் மயக்கமே வந்துவிட்டது.
ஆனால் எங்கே மயங்கிவிட்டால் தப்பிக்கும் மார்க்கம் புலப்படாமல் போய்விடுமோ என அஞ்சியே தன்னை தைரியபடுத்தி விழிகளை அகல விரித்து கொண்டாள்.
பிரசாத்தின் தோளில் துவண்டுபோய் கிடந்தவள் பின்னால் வருபவர்களின் கவனத்தை ஈர்க்காமல் போகும் பாதையை மிக கவனமாக குறித்துக்கொண்டாள்.
இப்போது அவளின் நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தாலும் எப்படியும் யாராவது வராமலா போய்விடுவார்கள்? நான் நிச்சயம் காப்பாற்றப்படுவேன். அந்த ஆண்டவன் எனக்கு துணையிருப்பார். என்று திரும்ப திரும்ப தனக்குதானே சொல்லிகொண்டாள்.
அவளின் நம்பிக்கையின் கூவல் அந்த ஆண்டவனுக்கு எட்டியதோ என்னவோ? அதை வீண்போக விடாமல் உதயாவின் ரூபத்தில் செயலாற்ற ஆரம்பித்தார்.
விஜியின் திசை நோக்கி உதயாவும் அவனின் நண்பர்களும் பேசி சிரித்தவாறே அங்கே வந்துகொண்டிருந்தனர். கோவிலை விட்டு வெகு தொலைவில் அமைதியான இடத்திற்கு வந்துவிட்டோமென்று சிறிதுநேரம் ஓய்வெடுக்க அமர்ந்தனர்.
“கொஞ்சம் உட்காரலாம்டா மச்சான்…” என்ற விஷ்ணு மற்றவர்களை போல மணலில் அமராமல் அங்கே இருந்த மூட்டையின் மேல் அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததுமே வித்தியாசமாக தெரிய நன்கு அழுத்தமாக அமர்ந்தான். அந்த மூட்டை லேசாக குலுங்க ஆரம்பித்தது. விஷ்ணு பதறிபோய்,
“அடப்பாவிங்களா? அமைதியான இடத்துக்கு கூட்டிட்டு வரேன்னுட்டு பேய், பிசாசு இருக்கிற இடத்துல கொண்டு வந்து தள்ளிட்டீங்களே. உருப்படவேமாட்டீங்க..” என கத்தினான்.
“பேய், பிசாசா? உளறாத. இப்போ உனக்கு என்னடா பிரச்சனை?…” என உதயா கேட்டதும்,
“பாருடா, இந்த மூட்டை அசையுது…” என இன்னும் பீதியான குரலில் சொல்லவும் அனைவருமே மூட்டையை தொட்டு பார்த்தனர். சந்தேகம் கொண்டு அதை பிரிக்க போகையில்,
“டேய் வேண்டாம்டா. வாங்க ஓடிறலாம்…” என விஷ்ணு அழைக்கவும் அவனை தள்ளி நிறுத்துவிட்டு அந்த மூட்டையை பிரித்தவர்கள் மூச்சற்று நின்று விட்டனர். விஷ்ணு இப்போது நெருங்கி வந்து எட்டுப்பார்த்து அவனும் பதறிவிட்டான்.
“தண்ணி, தண்ணி ப்ளீஸ்…” என மெல்லிய குரலில் முணங்கினான் விஜி.
“சிவா. நீ போய் இங்க பைக் கொண்டு வர முடியுமான்னு பாரு…” என உதயா கூறியவுடன் நாலுகால் பாய்ச்சலில் வேகமெடுத்தான் சிவா.
விஜியின் கட்டுகளை கணேஷ் அவிழ்க்க கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவனுக்கு புகட்டினான் விஷ்ணு. அதில் சிறிது தெளிந்தவன்,
“அய்யோ மித்ரா. அந்த குடிகார பாவிங்க அவளை எங்க கொண்டு போனானுங்களோ? கடவுளே நான் எங்க போய் தேடுவேன்?…” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினான்.
பெண்ணோட பெயரையும், எங்க கொண்டு சென்றார்களோ என்ற வார்த்தையையும் சொல்லவும் விஷயம் விபரீதமானது என்று உணர்ந்தனர். எந்த விதமான தவறும் நடக்கும் முன் அந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே என்ற பதட்டம் அனைவரையும் தொற்றிக்கொண்டது.
“யார் நீ? மித்ரா யாரு? உன்னை யார் இப்படி கட்டி போட்டாங்க?…” என்று அவன் மீது சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்கவும் திணறிப்போனான் விஷ்ணு.
“கொஞ்சம் அமைதியா சொல்லுங்க. என்ன நடந்துச்சு?…” என கேட்கவும் அழுதுகொண்டே நடந்தவற்றை கூறினான் விஜி.
விஜிக்கு எப்படி சமாதானம் சொல்வதென்றே அம்மூவருக்கும் தெரியவில்லை.
தலைகுனிந்து அமர்ந்திருந்தவனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. எப்படியெல்லாம் ஏமாற்றி பொய்யாக ஒரு நாடகம் நடத்தி அந்த பெண்ணை கடத்தியிருக்கிறார்கள் என எண்ணி எண்ணி வேதனை கொண்டனர்.
“இங்கே பாரு விஜி. அவனுங்க குடிச்சிருந்ததா சொல்ற. கண்டிப்பா இப்போதான் இங்க பக்கத்துல போயிருக்க முடியும். கணேஷ் இந்த ஊர்தான். அவனுக்கு இந்த இடம் அத்துப்படி. நீ பயப்படாத. நீ போய் உங்க அப்பாம்மாக்கிட்ட தகவல் சொல்லு. நாங்க சீக்கிரமா அந்த பொண்ணை கூட்டிட்டு வந்திடுவோம்…” என்று நம்பிக்கையாக பேசினான் உதயா.
“ஆமாம் தம்பி. இப்படி ஏமாத்தினவங்களை சும்மா விடக்கூடாது. கண்டிப்பா அந்த பொண்ணுக்கு எதுவுமே ஆகாது. சாமி பேரை சொல்லி எங்க ஊர் ஜனங்களை ஈஸியா ஏமாத்திடலாம். அதை யூஸ் பண்ணி உங்க வீட்டு பொண்ணை தூக்கிருக்கானுங்க. அவனுங்க மட்டும் கைல கிடைக்கட்டும்…” என்று கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு பேசினான் கணேஷ்.
சிறிது நேரத்தில் சிவா தன் நண்பனையும் அழைத்துகொண்டு இரண்டு பைக்கோடு வரவும் அதில் ஒன்றில் ஏறிக்கொண்ட உதயா கணேஷ், விஷ்ணுவை தன்னோடு அழைத்துகொண்டு விஜியை கோவிலில் அவர்களது வீட்டினருக்கு தகவல் சொல்லுமாறு சிவாவோடு அனுப்பினான்.
போகும் முன் விஜியிடம் நந்தினியின் உடையின் நிறம் மற்றும் அங்க அடையாளத்தை கேட்கவும் அவன் கூறிய தகவலில் உதயாவின் மனதின் ஓரத்தில் சுருக்கென ஒரு முள் தைத்தது போன்ற வலி உண்டாகியது.
“ம்ஹூம். நிச்சயம் அவளாக இருக்க கூடாது…” என கடவுளிடம் வேண்டுதல் விடுத்தவாறே பைக்கை அந்த மணலிலும் வேகமாக செலுத்தினான் உதயா.
கணேஷ் வழிகாட்டுதலின் பெயரில் விரைவாகவே அவர்கள் சென்றுகொண்டிருந்த திசையை நோக்கி சென்றன. தூரத்தில் நான்கைந்து பேர் செல்வதை கண்டதும் பைக் இன்னும் வேகமெடுத்தது.
அவர்கள் முன்னால் சென்று பைக்கை நிறுத்தியவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான். கடத்தியவன் பிரசாத் என்பது அதிர்ச்சியென்றால் கடத்தப்பட்டது தன்னோடு கொஞ்சம் முன் வழக்காடிய அந்த சிறு பெண் என்பது பேரதிர்ச்சி.
பிரசாத் இந்த அளவிற்கு தரமிறங்கி நடந்துகொள்வான் என்று எதிர்பாராத உதயா சுத்தமாக நொறுங்கி போனான். பிரசாத்திற்குமே இது எதிர்பாராத அதிர்ச்சிதான். ஆனாலும் அலட்சியமாக உதயாவை பார்த்தான்.
பிரசாத்தை இந்நிலையில் கண்ட உதயாவின் மனம் எந்த அளவிற்கு காயபட்டிருக்கும் என்பது நிச்சயம் விஷ்ணுவால் உணரமுடிந்தது.
இருவரும் ஸ்தம்பித்து நின்ற நேரத்தில் தங்களை தாக்க வந்த பிரசாத்தின் நண்பர்களை சிறுபெண்ணை போய் நாசம் செய்ய பார்த்திருக்கிறார்களே என்ற ஆத்திரத்தில் அடித்து நொறுக்கிவிட்டான் கணேஷ்.
விஷ்ணுவும் அவன் பங்கிற்கு கையில் சிக்கியவர்களை சல்லடையாக்கினான். அடியின் வேகம் தாளாமல் பக்கத்திற்கு ஒருவனாக தெறித்து ஓடினார்கள்.
அதை பார்த்த உதயா, “கணேஷ் ஒருத்தனையும் விடாதே. பிடி அவங்களை…” என தப்பி சென்றவர்களை பிடித்துகொண்டு வர அனுப்பினான்.
பிரசாத்தின் தோளில் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்த நந்தினியை பார்க்க சகிக்காமல் இறக்க முற்பட உதயாவை பிடித்து தள்ளினான் பிரசாத்.
அதை விட கோவத்தோடு நந்தினியை வேகமாக கீழே விட்டவன் சரிந்து கீழே விழுந்தவளை சட்டைசெய்யாமல், “இப்போ எதுக்காகடா இங்க வந்த? இவளை காப்பாத்தவா?. அது உன்னால் முடியாது…” என எகத்தாளமாக பேசினான் பிரசாத்.
“வேண்டாம் பிரசாத். அந்த பொண்ணை விட்டுடு. அந்த பொண்ணோட முகத்தை பாருடா. சின்ன பொண்ணுடா. நீ பன்றது தப்புன்னு தெரியலையா உனக்கு?…” என அவனுக்கு புரியவைக்கும் நோக்கில் அமைதியாக பேசினான்.
பிரசாத் நந்தினியின் முகத்தை கூர்ந்து பார்த்து வேகமாக இழுத்து தன் அருகில் நிறுத்தி பார்த்தான். அவனுக்கு அவள் சிறுபெண்ணாக தெரியவில்லை.
தன் மனக்கண் முன்னே வந்தது எல்லாம் தன்னை அவமானப்படுத்திய நந்தினி, தன்னை கைநீட்டி அடித்த நந்தினி, தன்னை மிக இகழ்வாக, கேவலமாக பேசிய நந்தினி. என அனைத்தும் கண் முன் உலா வர நந்தினியின் மேல் இருந்த வன்மம் அதிகமாகியது.
உருவம் கலங்கலாக தெரிந்தும் அது பிரசாத் தான் என உணர்ந்தவள் மீண்டும் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவனை அடித்து, கைகளை கடித்துவைத்தாள்.
தன்னால் தப்பிக்கத்தான் முடியவில்லை. அவனை சும்மா விடக்கூடாது என்ற ஆவேசம் முடிந்த அளவிற்கு அவனை காயப்படுத்தியாவது அவனை வேதனை பட வைக்கலாமென்று சிறுபிள்ளை தனமாக நினைத்தாள்.