நட்சத்திர விழிகளிலே வானவில் – 19 (1)

நட்சத்திர விழிகள் – 19

          அனைவரும் வந்து தங்களை அடித்ததுமே அவ்வளவு போதையிலும் தன்னை நிதானமாக நிறுத்திகொண்டான் பிரசாத். ஆனாலும் உள்ளே சென்ற மதுவின் தாக்கம் அரைகுறையாக இருந்து அவனது மூளையை தவறான பாதையில் வழி நடத்தியது.

தான் உடன் அழைத்தும் வராமல் தங்களையும் செல்லவிடாமல் தடுக்கும் தலைவரை பார்த்த விஜி குழம்பினான்.

“ஏன் இவர் போகவிடாம தடுக்கிறார்?, இந்த கிராதகன் என்ன சொன்னானென்று தெரியவில்லையே…” என சிந்தித்தவன் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை என்பதை உணர்ந்து மீண்டும் பேச எத்தனிக்க,

ஊர்த்தலைவர், “நீங்க எல்லோரும் கிளம்புங்க. அவங்கவங்க வேலையை பாருங்க. இது அவங்க குடும்ப விவகாரம். இந்த புள்ளையை அதோட மாமன்காரன் பார்த்துப்பான்…” என கூறி அங்கிருந்த கூட்டத்தை கலைத்தார்.

அவரது வார்த்தையில் பதறிய நந்தினி, “ஐயோ தாத்தா, அவன் சொல்றதை நம்பாதீங்க. அவன் எனக்கு மாமனும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அவன் யாருன்னே எங்களுக்கு தெரியாது. எங்களை போக விடுங்க…” என ஆயாசத்தோடு சிறிது கோவமும் கொப்பளிக்க பேசினாள்.

“மித்து அமைதியா இரு…” என்றவன் அவர் புறம் திரும்பி, “தாத்தா  நீங்களே கொஞ்சம் யோசனை செஞ்சு பாருங்க. தப்பிச்சு போகணும்னு நினைச்சா எதுக்காக உங்க எல்லோரையும் இவன் கிட்டே மித்ரா கூட்டிட்டு வர போறா?…” என அவரை தூண்டிவிட பார்க்க,

“பெரியவரே, என் மேல உள்ள கோவத்துல என்னை உங்க எல்லோர்க்கிட்டையும் சிக்க வச்சிட்டு பழிவாங்க பார்க்கறாங்க. உங்க கிட்ட நான் மாட்டிக்கிட்டா அப்புறம் அவங்களுக்கு எந்த ஒரு தடையும் இருக்காதுன்னு நினைக்காங்க…” என்று கூறி விஜியை வாரினான் பிரசாத்.

“டேய், இந்த கதையெல்லாம் முதல்ல நிப்பாட்டு. இரக்கமே இல்லாம பேசறயேடா பாவி. அவ சின்னபொண்ணு. தெரியாம உன்னை மாட்டிவிட்டுட்டா. அதுக்கு போய் இப்டியெல்லாம் பேசறியே? நீ நல்லாவே இருக்க மாட்டடா…” என பொரிந்தான்.

“போதும் நிறுத்து தம்பி, அந்த பிரசாத்து சொல்றது சரிதான். நீங்க ரெண்டு பெரும் ஊரை விட்டு ஓட முயற்சி பண்ணிருக்கீங்க. அதுவும் மூளை கோளாறு இருக்கிற புள்ளையை ஆசை காட்டி ஏமாத்த பார்க்கிற. இதுக்கு பேரு காதல் இல்லை. கடத்தல்…” என்றதும் தான் தாமதம்,

“யாருக்கு காதல்? என்ன உளருறீங்க?…” என அதிர்ச்சியாக கேட்டான் விஜி.

“எல்லாம் தெரியும் தம்பி. பிரசாத்து போல நீயும் இந்த புள்ளைக்கு முறைமாமன். சொத்துக்காக இந்த புள்ளையை காதலிக்கிறதா பேசி நம்ப வச்சு அவளை கல்யாணம் செய்ய கடத்த வந்திருக்கீங்க. அதுவும் உங்க கூட்டாளிங்களோட?…” என பேச பேச நந்தினிக்கு உயிரே போய்விட்டது.

அவர் பேசிய பேச்சில் நிதானத்தை இழந்த விஜி இதற்கெல்லாம் காரணமான பிரசாத்தின் ஆக்ரோஷமாக மீது பாய்ந்தான். பிரசாத்தை அடிக்கும் முன்னே இரண்டுபேர் விஜியை இறுக்க பிடித்துக்கொண்டனர்.

தன்னால் அவனை ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமை கண்ணீராக வெளி வந்தது. அவர்களது பேச்சில் அருவருத்த நந்தினி விஜியை ஓடிவந்து கட்டிக்கொண்டு,

“வாடா, இங்க இருந்து போய்டுவோம். எல்லோருமே தப்பா பேசறாங்க. என்னால கேட்கவே முடியலை. என்னால்தான இப்படியெல்லாம்…” என கதறினாள்.

அவளது கண்ணீர் யாரின் கல் மனதையும் கரைத்துவிடும். ஆனால் இங்கே அதையுமே அவர்கள் தவறாகத்தான் பார்த்தார்கள். காதலித்து பிரியப்போவதால் உண்டான வேதனை, அதனால் அழுகிறார்கள்  என்று சரியாக தவறாக நினைத்தனர். நந்தினியின் கண்ணீரை பார்த்த பிரசாத் இது தனக்கு போதாது என நினைத்தான்.

நந்தினியோடு சேர்ந்து தானும் அழுதவன் ஊர்த்தலைவரை பார்த்து, “அவன் பொய் சொல்றான் தாத்தா. நம்பாதீங்க. இவ என்னை விட இரண்டு வயது பெரியவ. தப்பா பேசறான். தாங்க முடியலை தாத்தா…” என கேவலோடு கூறிய விஜியின் தோற்றம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.

“உன்னை பார்த்தால் அப்படி தெரியலை தம்பி. பாரு அந்த பொண்ணு உன்னை விட ரொம்பவே சின்னபொண்ணா தெரியுறா. எப்டி நம்ப முடியும்?…” என்று நம்ப மறுத்துவிட்டனர்.

“ஐயோ தாத்தா, நான் எப்படி உங்களுக்கு புரியவைக்கிறது? என்னோட கோவிலுக்கு வாங்க. என்னோட அப்பாம்மா, இவளோட அப்பாம்மா எல்லோருமே ஒன்னாதான் வந்திருக்கோம். அங்க வந்தா உங்களுக்கு யார் மேல தப்புன்னு புரிஞ்சிடும்…” என்று கண்களில் கடைசி சொட்டு நம்பிக்கையை தேக்கி வைத்து கொண்டு கேட்டான்.

“பொட்டபுள்ளையை களவாண்டு போக வந்திருக்கும் உன் பேச்சை நான் கேட்கணுமா?…” என்றவர் பின்னால் திரும்பி அங்கே நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவர்களை பார்த்து,

“உங்களுக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா? கிளம்புங்க முதல்ல…” என சற்று கடினமாக கூறம் போது நந்தனி காப்பாற்ற வந்த அந்த பெண் வாயை திறந்தாள்.

“அய்யா நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த புள்ளைங்க சொல்றதுபோல கோவிலுக்கு போய் பார்க்கலாமே? அதனால என்னவாகிடும்?…” என்று பொறுமையாக தயங்கி தயங்கி கூறவும் தலைவரின் முகம் யோசனையில் சுருங்கியது.

“நீ சொல்றதும் சரியாதான் தாயி தோணுது. நம்ம கோவில்ல நம்மை மீறி என்ன நடந்திடும்? போய்த்தான் பார்ப்போம்…” என்று கூறவுமே பிரசாத்தின் முகம் வெளிறியது.

அதை கேட்டதுமே போன உயிர் திரும்பி வந்தது விஜிக்கும், நந்தினிக்கும். இனி கவலையில்லை என பெருமூச்சு விட்டனர். நொடியில் இருந்த கலக்கம் போய் முகம் நிம்மதியானது.

“மாட்டிக்கிட்ட. இப்போது உன்னால் என்ன செய்துவிட முடியும்…” என்பது போல அப்போதும் சும்மா இல்லாமல் பிரசாத்தை எள்ளலாக ஒரு பார்வை பார்த்தாள் நந்தனி. அந்த பார்வையே பிரசாத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.

“தம்பி பிரசாத்து, நீங்க சொல்றது உண்மையா தான் இருக்கும்னு நான் நம்பறேன். இருந்தாலும் சந்தேகம்னு வந்திருச்சுல. அதான் விசாரிச்சிடலாம்னு தோணுது. வாங்க அங்க போய் பார்த்துப்போம்…” என கூறி அழைக்கவும்,

“பெரியவரே, இந்த பையனோட அப்பா அடியாளுங்க எல்லோரோட வந்திருக்காங்கன்னு தகவல். அங்க கோவிலுக்கு போனா என் கண்ணை மறைச்சு எங்கயாச்சும் இவளை கடத்திட்டு போய்ட்டா நான் என்ன பண்ணுவேன்? மித்ராதான் என்னோட உயிர். அவ இல்லாம நான்?…” என போலியாக தேம்பினான்.

பிரசாத்தின் நடிப்பில் அவன் மீது பரிதாபம் கொண்ட அவர் சிறிது தயக்கத்தோடு கோவிலை நோக்கி செல்லும் வேளையில் பிரசாத்தின் போனில் அழைப்புவர அதை பார்த்தவன் முகம் குரூரமாக மின்னியது.

உடனே மொபைலில் வந்த அழைப்பை ஸ்பீக்கரில் போட்டான். அதில் கேட்ட குரலில் அனைவருமே அப்படியே நின்றுவிட்டனர்.

“அய்யா பிரசாத்து, என் பொண்ணு மித்ரா எங்கய்யா இருக்கா? சீக்கிரமா கூட்டிட்டு வந்திடு. தப்பா நடந்துச்சுன்னா நம்ம குடும்ப மானமே போயிடும். அப்புறம் நாங்க யாரும் உயிரோட இருக்கிறதில அர்த்தமே இல்லை. வெரசா வந்திடுப்பா…” என சற்றே பதட்டமான குரல் மறுமுனையிலிருந்து கேட்டது.

“மித்ரா என் கூடதான் இருக்கா மாமா, நீங்க கவலைப்படாதீங்க. நான் வந்திடறேன்…” என கூறியவன் தொடர்பை துண்டித்து சட்டை பையில் போட்டுவிட்டு,

“கேட்டீங்கல்ல பெரியவரே? என்னோட மாமாதான் பேசினது. இவளை பெத்தவரு. என்ன சொல்றாருன்னு பாருங்க. பொண்ணை கூட்டிட்டு வரலைனா தற்கொலை பண்ணிப்பேன்னு சொல்றாரு. இதுக்கு மேலையுமா என் மேல நம்பிக்கை வரலை?…” என்று பரிதாபமாக கூறிவிட்டு நந்தினியிடம் திரும்பி அவள் பார்த்த எள்ளலான பார்வையை அவளுக்கே திருப்பி படித்தவன்,

கண்களில் லேசாக கண்ணீரை கசியவிட்டு ஊர்த்தலைவரை பரிதாபமாக பார்த்து, “பெரியவரே நீங்க திருவிழா எடுத்திருக்கும் உங்க குலசாமி மேல ஆணையா சொல்றேன். இந்த பொண்ணு என்னோட முறைப்பொண்ணுதான். அதுக்கு கொஞ்சம் புத்திசுவாதீனமில்லைன்னு நான் சொன்னதும் உண்மைதான். உங்களை, உங்க சாமியை, உங்க ஊரை நம்பி வந்திருக்கேன். எனக்கு உதவி செய்ங்க…” என கூறியதும் அனைவருமே அவனை முழுதாக நம்பிவிட்ட ஒரு முகபாவத்தை வெளிப்படுத்தினார்கள்.

விஜிக்கும், நந்தினிக்கும் அந்த ஒரு சத்தியத்தில் தங்களின் வாழ்க்கையே முடிந்தது போல அனைத்து சக்தியும் அடங்கி போய் நின்றனர்.

போனில் பேசியவன் யாராக இருக்கக்கூடும் என்று யோசிக்கும் திறன் கூட அவர்களை விட்டு சென்றிருந்தது. பேச ஒரு வார்த்தை கூட எழவில்லை.

கோவத்தில் பழிவாங்க ஒருவன் எந்த எல்லைக்கும் செல்லுவானா? இங்கே அப்படி ஒருவனை நேருக்கு நேராக கண்கொண்டு பார்க்கும் போது அதிர்ச்சியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரிதவிப்பில் ஆடிப்போய் இருந்தனர்.

“என் மித்ராவுக்கு புத்தி பேதலிச்சது கூட இவங்களால தான் பெரியவரே. எதையோ சாப்பிட குடுத்து இப்படி வசியம் பண்ணி வச்சிருக்காங்க. எங்க யாரையுமே இப்போ மித்ராவுக்கு பிடிக்கிறதில்லை. அந்த அளவுக்கு மாத்திட்டாங்க…” என வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு கூறினான்.

“தம்பி எங்க சாமி மேலயே நீங்க சத்தியம் செஞ்சுட்டீங்க. இனியும்  நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம் தம்பி. இதுக்கு மேலயும் உங்களை நம்பாம இருக்க முடியுமா?….” என்று ஊர்த்தலைவர் கூற அவருக்கு ஆமோதிப்பாக தங்களுக்கு எல்லாம் சாமி மட்டுமே என்று அதில் சரணாகதி அடைத்திருக்கும் அந்த கிராமத்து மக்களும்  அப்பாவியாக ஆமாம் சாமி போட்டனர்.

error: Content is protected !!