மூக்கில் ரத்தம் வழிய நின்ற அவர்களை பார்த்த நந்தினி, “ஆமா தத்தா. விடுங்க இன்னும் நல்லா அடிக்கட்டும். குடிச்சிட்டு என்னவெல்லாம் ப்ளான் போடுறாங்க. அண்ணா இன்னும் நல்லா அடிங்க அண்ணா…” என சும்மா இல்லாமல் அவர்களை உசுப்பேத்த அம்மூவருக்கும் புரிந்துவிட்டது. இந்த பெண் தான் தங்களை சிக்க வைத்தது என்று.
அனைவரின் முன்னால் அடிவாங்கிய மூவரும் அவமானத்தில் கூனி குறுகி நின்றனர். அவர்களது குன்றலை குதூகளிப்போடு பார்த்தாள் நந்தினி. அதை கண்டு இன்னும் கொலைவெறி கிளம்பியது அவள் மேல்.
அவர்களில் ஒருவன் நந்தினியை கடுமையாக முறைத்த நேரம் விஜி வந்துவிட்டான். “மித்ரா கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா? உன்னை எங்கல்லாம் தேடுறது? இங்க என்ன பன்ற?…” என எரிந்து விழவும்,
“சும்மா இரு விஜி, இவனுங்க மூணு பெரும் இந்த அக்காவை இன்னைக்கு நைட் கடத்த ப்ளான் பண்ணி பேசிட்டு இருந்தாங்க. கொலுசை காணலைன்னு தேடிட்டு இருந்தேனா? அப்போதான் இவங்க பேசினதை கேட்டேன். அதான் எல்லோரயும் கூட்டிட்டு வந்து இவங்களை மாட்டிவிட்டுட்டேன். இனிமே இந்த தாத்தா பார்த்துப்பாங்க…” என்றவள்,
“தாத்தா இவனை விடாதீங்க. போலீஸ்ல புடிச்சு குடுங்க…” என்று சொல்லிவிட்டு அனைவரும் உடன் இருக்கும் தைரியத்தில் அசட்டு துணிச்சலில் அந்த காரியத்தை செய்துவிட்டாள்.
“டேய் பொறுக்கி ராஸ்கல்…” என்று அழைத்த நந்தினியை கொலைவெறியோடு பார்த்தான் அம்மூவரில் ஒருவன்.
அவனை நெருங்கி பளாரென அறைந்தவள், “என்னடா முறைப்பு உனக்கு? பொண்ணுங்கன்னா என்னனுடா நினச்ச? நீதானே வேணும் வேணும்னு கேட்ட? அதான் பளார்னு குடுத்தேன். பார்த்தியா எப்டி சிக்குன நீ? இனி உனக்கு ஜெயில் தாண்டா. போய் களி தின்னுட்டே ப்ளான் பண்ணு உன் கூமுட்டை ப்ரெண்ட்ஸ் கூட…” என்று எகத்தாளமாக பேசிய நந்தினியை பார்த்து அவனது மனம் ஏதோதோ வேகமாக கணக்கிட்டது.
நந்தினியின் அதிகபிரசங்கித்தனமாக செயலில் அதிர்ந்து நின்ற விஜியை பார்த்து, “இப்போ போகலாம் விஜி, இவனை இனி அவங்க பார்த்துப்பாங்க. வா வா நேரமாகுதுல போகலாம்…” என அங்கிருந்து நகர போக,
“மித்ரா…” என பரிதாபமாக அழைத்தான் அவன். விஜியோடு சேர்ந்து நந்தினியுமே திடுக்கிட்டாள். அங்கிருந்தவர்கள் குழப்பமான பார்த்தனர்.
“ஏன் தம்பி, நீ யாரு? இந்த பொண்ணை உனக்கு தெரியுமா?…” என ஊர்த்தலைவர் அவனிடம் கேட்டதும்,
நந்தினியை கூர்மையோடும், வில்லங்கமாகவும் பார்த்துக்கொண்டே, “ஆமாங்க பெரியவரே, என் பேர் பிரசாத். இது என்னோட அத்தை பொண்ணுதான். என்னை சிக்க வைக்க இவ சொல்ற பொய்யை நம்பாதீங்க. ஏனா மித்ராவுக்கு கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லை…” என கூறி அவளை பார்த்த பார்வையில் நந்தினிக்கும் விஜிக்கும் முதுகுத்தண்டு ஜில்லிட்டது.
விஜிக்கு மீள முடியாத ஏதோ ஒரு குழியில் விழுந்துவிட்டோமோ என மனம் அடித்துகொண்டது. செய்வதறியாது திகைத்த நந்தினி,
“டேய் யாரை பார்த்து பைத்தியம்ன்னு சொல்ற. உன்னை கொன்னுடுவேண்டா…” என்று வெறிகொண்ட மட்டும் அவனை அடி அடியென அடித்து தீர்த்துவிட்டாள். அவளை தடுக்காமல் அவள் கொடுத்த அடிகளை ஒரு விதமான குரூரத்தோடு வாங்கிகொண்டான்.
விஜிக்கோ தலையில் அடித்துகொள்ளலாம் போல ஆனது. ஊர்க்காரர்கள் நந்தினியின் கலைந்த தோற்றத்தையும் இப்போது பிரசாத்திடம் நடந்துகொண்ட முறையையும் பார்த்து அவள் நிஜமாகவே பைத்தியமோ என சந்தேக கண்களோடு பார்த்தனர்.
இதற்கு மேல் இங்கே இருப்பது சரியில்லை என நினைத்த விஜி, “சார் இவன் போய் சொல்றான். இவன் யாருன்னே எங்களுக்கு தெரியாது. நாங்க ஊருக்கு புதுசு…”
“இங்க கோவிலுக்கு குடும்பத்தோட வந்திருக்கோம். இவளோட தாய்மாமா பையன் நான். எங்கப்பாம்மா எல்லோருமே கோவில்ல தான் இருக்காங்க. சந்தேகம்னா வந்து விசாரிங்க…” என்று ஊர் தலைவரிடம் பிரசாத்தை முறைத்துக்கொண்டே கூறினான்.
அதை கேட்டதும் பிரசாத்தின் முகம் இன்னமும் பளிச்சிட்டது. அவனது முகமாறுதலை வைத்தே அவனின் திட்டத்திற்கு அவனோடு சேர்ந்து அவனின் நண்பர்களும் நடிக்க தயாராகினர்.
பிரசாத்தை பார்த்த விஜி தன் கைமீறி எதுவும் நடந்துவிடுமோ என நினைத்து நடுங்கினான். பிரசாத் எதுவும் சூழ்ச்சி செய்கிறானோ என பயந்தான்.
நந்தினியை இதிலிருந்து காப்பாற்ற வேண்டுமே? இப்படி வந்து குழியில் தானே சிக்கிவிடாளே என்று அவள் மீது அளவுகடந்த ஆத்திரத்திலும் ஆதங்கத்திலும் அவன் மனம் அலைபாய்ந்தது.
“பெரியவரே உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே…” என்ற பிரசாத்தின் அழைப்பை ஏற்றவர் அவனோடு பேச சென்றார்.
அவரிடம் என்ன சொன்னானோ அவரும் அவன் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டிகொண்டிருந்தார். பேசி முடித்து இருவரும் நெருங்க நெருங்க விஜிக்கும் நந்தினிக்கும் பயப்பந்து ஓன்று வயிற்றுக்குள் சுழன்றது.
பயத்தில் விஜியின் கைகை இறுக்க பற்றியவளை பார்த்த ஊர்த்தலைவர் பிரசாத்தை ஒரு பார்வை பார்த்தார்.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் “வா மித்ரா நாம போகலாம்…” என நந்தினியின் கையை பிடித்து நடந்தவனை மறித்த ஊர் தலைவர்,
“அப்டிலாம் நீங்க உடனே அந்த புள்ளையை கூட்டிட்டு போய்ட முடியாது தம்பி…” எனவும் நந்தினியும் விஜியும் ஸ்தம்பித்து நின்றனர்.
அவர்களை ஒரு வெற்றி பார்வை பார்த்தான் பிரசாத். அவர்களை தாண்டியும் அனைவருக்கும் பின்னால் ஒரு பார்வை பார்த்தவனின் கண்களில் இருந்த செய்தியை நொடியில் அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பினான் பிரசாத்.
விஜிக்கும் ஒரு நம்பிக்கை தன் குடும்பத்தை காண்பித்தால் எப்படியும் தப்பிவிடலாம் என்று. அதையும் தவிடுபொடியாக்க காத்திருந்தான் பிரசாத்.
விஜியும் நந்தினியும் நினைத்தது போல அவர்கள் மூவர் இல்லை ஐந்து பேர். இவர்களது கண்ணுக்கு சிக்காத பிரசாத்தின் நண்பர்கள் இருவரும் வெளியில் தங்களை சுற்றி சக்கர வியுகம் அமைத்ததை உணராமல் ஊர் தலைவரிடம்,
“தாத்தா, நீங்க கோவிலுக்கு வாங்க. எங்க வீட்டாளுங்க அங்கதான் இருக்காங்க. அவங்களை பார்த்தாலே உண்மையை நீங்க புரிஞ்சுப்பீங்க…”என பரிதவிப்புடன் அழைத்தான் விஜி.
அவனின் அழைப்பு அவரால் மறுக்கப்பட்டது. மறுக்கப்பட பிரசாத்தால் தூண்டப்பட்டது. விஜிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பிரசாத்திற்கு வந்த தொலைபேசியால் மொத்தமாக நந்தினியை தொலைக்க போவதை அறியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.