ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீரை பார்த்ததும் தலைகீழாகத்தான் நடந்தாள் என்று சொன்னாலும் மிகையில்லை.
ஒரு இடத்தில் நிற்காமல் இங்குமங்கும் ஓடி விஜியின் பொறுமைக்கு பெரும் வேட்டு வைத்தாள்.
“போதும் மித்ரா. நாம வந்து ஒரு மணிநேரம் ஆச்சு. மாமாவும், அப்பாவும் தேடுவாங்க. உன் ஆசைக்கு வந்தாச்சுல. இப்போவாச்சும் போகலாமா?…” என்று கெஞ்சுதலாக கேட்டவனிடம் மறுக்காமல் சரியென்றாள்.
“ஹப்பாடா…” என்று மூச்சை இழுத்து விட்டவன் அனைவரோடு கோவிலை நோக்கி சென்றான். அவர்கள் செல்லும் போதே நேசமணி போனில் அழைத்துவிட்டார் விஜியை. அவரோடு பேசிக்கொண்டே நடந்தவன் நந்தினியை கவனிக்க தவறினான்.
கோசலையும், பூரணியும் விஜயோடு நந்தினி வருகிறாள் என்று அவர்களுக்கு முன்னால் நடந்துகொண்டே பேச்சு சுவாரஸ்யத்தில் அசட்டையாக விட்டுவிட்டனர்.
நடக்கும் போது தான் காலில் வித்யாசமாக உணரவும் பாவடையை லேசாக உயர்த்தி பார்க்க ஒரு காலில் கொலுசு இல்லாததை கண்ட நந்தினி பதறிவிட்டாள்.
“அச்சோ கொலுசை காணோமே? புதுசு வேற?. போச்சு தொலைஞ்சேன். அப்பா பிச்சிட்டாங்க இன்னைக்கு…” என நினைத்தவள் அம்மா கொலுசை போடும் போதே பத்திரம் பத்திரம் என்று ஒரு தடவைக்கு பலதடவை சொன்னது அப்போதுதான் மூளையில் உரைத்தது.
நந்தினி நின்றதை கூட உணராமல் கோவிலை நோக்கி விஜியோடு சென்றுகொண்டிருந்தனர் கோசலையும் பூரணியும்.
பதட்டத்தில் அவர்களை அழைக்காமல் கூட வேகமாக திரும்பி ஆற்றங்கரை பக்கம் ஓடினாள்.
சுற்றும் முற்றும் தேடி தேடி கொஞ்சம் நகர்ந்து சென்றுவிட்டாள். தண்ணீரில் எங்கே விழுந்தது என தெரியாமல் அழுதுகொண்டே தேட சிறிது நேரத்திலேயே கொலுசு கிடைக்கவும் தான் நிம்மதியானவள் கரையை விட்டு மேலே ஏறி அங்கிருந்த கடையின் அருகில் இருந்த கல்லில் வந்தமர்ந்து காலுக்கு கொலுசை மாட்டினாள்.
யாரோ சிரிக்கும் சப்தம் கேட்டதும் பின்னால் திரும்பி பார்த்தால் யாரோ மூன்று பேர் அமர்ந்து பேசி சிரிப்பது தெரிந்தது. முதலில் கண்டுகொள்ளாமல் எழ இருந்தவள்,
“அங்கே பாருடா, இன்னைக்கு எப்படியும் அவளை தூக்கிடனும்…” என்ற குரலில் விதிர்த்துப்போனவள் யாரை சொல்கிறார்கள் என்று கூர்ந்து கேட்கலானாள்.
“நான் பார்த்துக்கறேண்டா மாப்ள. நீ ஸ்கெட்ச் போட்டு குடு. பக்காவா நான் கடத்திடறேன்…” என்று சொல்லிகொண்டு சப்தமாக சிரித்தனர்.
“இந்த ஊர்ல இப்படி ஒரு பொண்ணா? படிச்சவ போல இருக்காளே? அவளை பார்த்தாலே தெரியுது. அவ கலருக்கு இந்த பச்சை கலர் சேலை எடுப்பா இருக்கு…” என்ற இது போன்ற வசனங்களை கேட்டதும் யாரை பேசுகிறார்கள் என்று தன் பார்வை வட்டத்தில் துழாவ ஆரம்பித்தாள்.
அங்கே பச்சை நிற புடவை கட்டி அழகிய இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.
“இவங்களை தான் சொல்றாங்களோ? ஐயோ அப்போ இன்னைக்கு இவங்களை நிஜமாவே கடத்த போறாங்களா?…” என்று வேகவேகமா சிந்தித்தது நந்தினியின் அவசரக்குடுக்கை மூளை.
“இன்னைக்கு நைட் உன் மேல சத்தியமா இந்த புள்ளையை நாம தூக்கறோம்…” என்று திரும்ப திரும்ப குளரலான குரலில் கூறியவனை நன்றாக பார்த்தான். சற்று நெருங்கி சென்று அவர்கள் மூவரையும் அடையாளம் பார்த்துகொண்டவள் மனம் அவசரமாக திட்டம் தீட்டியது.
“வாடா மச்சான். சாயங்காலம் வந்து பார்த்துக்கலாம், இங்க தான் இருப்பா அவ…” என பேசிக்கொண்டே அவர்கள் ஒதுக்கமாக இருந்த ஆற்றங்கரையின் அருகில் இருந்த சவுக்கு தோப்பை நோக்கி சென்றனர்.
“அடப்பாவிங்களா? இன்னைக்கு நைட் தான் கடத்துறதா ப்ளான் போட்ருக்கானுங்க. நிஜமாவே கடத்த போறாங்க போல? விடக்கூடாது. இந்த அக்காவை காப்பாத்தியே ஆகணும்…” என்று எண்ணிய நந்தினியின் உள்ளே தூங்கிகொண்டிருந்த பெண் சிங்கம் திடுமென உயிர்த்தெழுந்தது.
வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றவள் அந்த பெண்ணை நோக்கி ஓடினாள்.
கொஞ்சமும் யோசிக்காமல் அப்பெண்ணை நெருங்கி, “அக்கா, நீங்க இந்த ஊரா?…” என கேட்டவளை புரியாமல் பார்த்த அந்த பெண்,
“ஆமாம். நீ யாருமா? ஏன் கேட்கிற?…” எனவும்,
“அதை விடுங்க அக்கா, உங்க அப்பாம்மா, கூட பிறந்தவங்க யாராச்சு இருந்தா கூப்பிடுங்களேன். அப்டியே இந்த ஊர் தலைவர் எங்க இருக்கார்? அவரையும் கூப்பிடுங்க…” என்று படபடவென பேசிய நந்தினியை புரியாமல் பார்த்த பெண்,
“உனக்கு என்னமா ஆச்சு? எதுக்காக இப்படி சம்பந்தம் இல்லாமல் பேசற? உன் கூட யாரும் வரலையா?…” என விசாரித்தாள்.
“ஐயோ அக்கா, உங்களை கடத்த போறதா மூணு ரவுடிங்க பேசிட்டு இருந்தாங்க. நான் அவனுங்களை பார்த்தேன். நீங்க நின்ன இடம், உங்க ட்ரெஸ் கலர் எல்லாமே சொன்னாங்க. நான் நல்லா பார்த்துட்டுதான் வந்தேன்…” என கோவமாக சொன்ன நந்தினியின் தகவலில் அப்பெண் பயந்துவிட்டாள்.
“யார்மா நீ என்னென்னமோ சொல்றியே?…” என படபடப்பாக கேட்டாள். அப்போதாவது இவள் யார், யாரோடு வந்திருக்கிறாள் என்ற தகவலை சொல்லியிருக்கலாமோ?
“ஐயோ அக்கா. இப்போ அதுவா முக்கியம். அந்த பொறுக்கியை பிடிச்சு குடுக்கணும். அதனால எல்லோரையும் கூட்டிட்டு வாங்க. அவங்க அந்த பக்கமாகத்தான் போனாங்க. சீக்கிரம்…” என்று அவசரபடுத்தியவளை நம்பாமல் பார்த்தாள்.
நந்தினிக்கு அது புரிந்ததோ என்னவோ, “அக்கா நான் சொல்றதை நம்பலையா நீங்க? நான் உங்களை ஏமாத்தலை. அவங்க பேசினதை வச்சுதான் உங்களை அடையாளம் தெரிஞ்சது. நான் உங்களை தனியாவா கூப்பிடறேன். உங்க ஊர்க்காரங்க எல்லோரயுமே தானே கூப்பிடறேன்…” என தவிப்புடன் பேசியவளை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
உடனே தன் தாயிடம் விவரத்தை சொன்னதுமே ஊரில் முக்கிய தலைகள் ஓன்று கூடி நந்தினியிடம் விசாரணையை ஆரம்பித்தனர். அவளது வாக்குமூலத்தின் படி அந்த மூவர் இருக்குமிடம் நோக்கி சென்றனர்.
ஊர்த்தலைவர், “டேய் பசங்களா நான் அங்க போய்ட்டு என்னனு பார்த்துட்டு பூசைக்குள்ள வந்திடறேன். எல்லாரும் அங்கன வந்து கூட்டம் போடவேணாம். நாங்க கண்டுக்கறோம். நீங்க போய் பூசைக்கு ஆவறதை பாருங்க…” என்று சிலரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டார்.
“பாப்பா அந்த பயலுவ எந்தால போனானுவ. நீ கண்டையா?…” எனவும் முதலில் புரியாமல் விழித்தவள் பின் புரிந்தவுடன்,
“அந்த பக்கம் போனாங்க தாத்தா. வாங்க நான் காட்டுறேன்…” என்று தோப்புப்பக்கமாக அழைத்து சென்றாள்.
நேசமணியுடன் பேசியவன் கோவிலை நெருங்கிவிட்டதாக கூறி விட்டு தொடர்பை துண்டித்து திரும்பி பார்த்தவன் தன்னோடு வந்து கொண்டிருந்த நந்தினியை காணாது நொந்துவிட்டான்.
“இந்த அறுந்தவாலு இப்போ எந்த கடைக்குள்ள போய் நுழைஞ்சாளோ?…” என ஆயாசமடைந்தவன் பூரணியையும் கோசலையையும் முன்னால் போக சொல்லி நந்தினியை கூட்டி வருவதாக கூறினான்.
அவளை காணவில்லை என்றதுமே கலவரமாகிவிட்டது இருவருக்கும். தாங்களாவது சற்று கவனமாக இருந்திருக்கலாம் என இப்போது எண்ணி வருந்தினர்.
“அவள் இல்லாமல் தாங்கள் மட்டும் போனால் ஏழுமலை சும்மா விட்டுவிடுவாரா?…” என அஞ்சி அவர்கள் நின்ற கடைக்கு முன்னாலே அமர்ந்திருப்பதாக கூறி நந்தினியை அழைத்துவர விஜியை அனுப்பினர். மொபைலை அவர்களின் கையில் கொடுத்துவிட்டு சென்றான்.
அவளை கடைகடையாக தேடியவன் முகத்தில் இப்போது பயமும், கவலையும் அதிகரித்தது. “அவளோட வாய்க்கும், புத்திசாலித்தனத்துக்கு வழி தெரியாம போகமாட்டா. அந்த அளவுக்கு அவ ஒண்ணும் தெரியாத பெண் இல்லை. நிச்சயம் ஏதோ பிரச்சனை போல….” என எண்ணிய அவனது மனம் அவள் எந்த சிக்கலிலும் மாட்டக்கூடாது என பிராத்தனை செய்துகொண்டே இருந்தது.
அவனது வேண்டுதலுக்கு முன்பாகவே சிக்கலை தானே உருவாக்கி அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு வாகாக போய் அமர்ந்துவிட்டாள் என்பது தெரியாமல் போனது விஜிக்கு.
கொஞ்சம் தூரத்தில் ஒரு கூட்டத்தில் நந்தினியின் உருவம் இவனது கண்களில் பட்டு விலகி மீண்டும் பார்வை வட்டத்தில் தெரிய அதை கூர்ந்து கவனித்தான்.
“அவளேதான் இத்தனை பேரோடு எதுக்காக தோப்புக்குள்ளே போறா?…” என பதட்டமாக எண்ணிக்கொண்டே அவளை பிடிக்க ஓடினான்.
அவன் அவளை நெருங்குவதற்குள் அவள் அந்த கிராம மக்களோடு அந்த மூவரையும் நெருங்கிவிட்டாள்.
“இவனுங்கதான் தாத்தா, இவங்கதான் இந்த அக்காவை கடத்தபோறதா பேசிட்டு இருந்தாங்க…” என கோவம் கொந்தளிக்கும் முகத்தோடு கூறியவளை திடுக்கிட்டு போய் பார்த்தனர் அம்மூவரும். அவர்களிடமிருந்து கிளம்பிய மது நெடி அவர்கள் குடித்திருந்ததற்கு அடையாளமாகியது.
ஊர்த்தலைவர் என்ன ஏதென்று விசாரிக்கும் முன்னே அவர்களோடு வந்திருந்த இளைஞர்கள் சிலர் ஒரே பாய்ச்சலில் மூன்றுபேரையும் அடித்து நொறுக்கினர்.
பெரியவர்கள் தான் அவர்களை விளக்கி விட்டனர். “பொறுங்கப்பா, என்ன எதுன்னு விசாரிக்கிறதுக்குள்ள கை நீட்டுறது தப்பு…” எனவும்,
அடித்தவர்களில் ஒருவன், “நீங்க வேற தலைவரே, நம்ம ஊர் பொண்ணை தூக்கனும்னு சொல்லிருக்கான். அடித்து துவைக்காம அவன் கிட்ட என்ன சமாதானமா பேச போறீங்க?…” என்று கோவத்தோடு மீண்டும் அவர்கள் மீது பாய காத்திருந்தான்.